“என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது” - பழைய திரைப்படம் ஒன்றின் பாடல்வரி இது.
இப்பொழுது இந்த வரி தமிழக அரசுக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது.
என்ன நடக்கிறது என்பது விளங்காத புதிராக இருக்கிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சாதாரன காய்ச்சல் என்றார்கள். அப்பலோ மருத்துவமனையில் இருக்கிறார் என்றார்கள்.
பின்னர், சில நாள்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றார்கள்.
ஓரிரு நாளில் ஐ.சி.யூ&வில் இருக்கிறார் என்றார்கள்.
மூச்சுக்கோளாறு, இதயக்கோளாறு, செயற்கை சுவாசம், கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்றார்கள்.
இலண்டன் மருத்துவர், சிங்கப்பூர் மருத்துவர், எய்ம்ஸ் மருத்துவர் வந்தார்கள் என்றார்கள்.
அப்பலோ தலைமை மருத்துவர் ரெட்டி, முதல்வர் உடல் தேறிவிட்டார். எப்போது அவர் வீட்டுக்குப் போக வேண்டும் என்று அவர் நினைக்கிறாரோ, அப்போது அவர் போகலாம் என்றார்.
அடுத்தடுத்து அரை இட்லி சாப்பிட்டார், ஜூஸ் சாப்பிட்டார், காவிரி பற்றிப் பேசினார், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார் என்றார்கள்.
அடுத்தநாள் அவருக்குப் பேசுவதற்குப் பயிற்சிக் கொடுக்கப்பட்டது என்றார்கள்.
இப்படி எல்லாமே ‘என்றார்கள் என்றார்கள்’ தானே ஒழிய முதல்வர் என்படி இருக்கிறார் என்பது மர்மமாகவே இன்னமும் இருக்கிறது.
பல்வேறு அரசியல் தலைவர்கள் அப்பலோ மருத்துவமனைக்குச் சென்றார்கள், முதல்வரைப் பார்க்க.
யாரையும் அனுமதிக்கவில்லை முதல்வரிடம்.
மாநில ஆளுநரும் வந்தார் முதல்வரைப் பார்க்க, அவருக்கும் அதே கதிதான்.
இந்திய அரசியல் சாசன சட்டப்படி ஒரு மாநில ஆளுநருக்கு, அம்மாநில முதல்வரைப் பார்க்க முழு உரிமை அல்லது அனுமதி இருக்கிறது.
ஆனாலும் அவரும் திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், காவிரிப் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் இன்று தொய்வாகித் தூங்கிப்போய்க் கிடக்கிறது தமிழகத்தில்.
முன்னர் முதல்வாரால் மறுக்கப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் இப்பொழுது நடைமுறைக்கு வந்துகொண்டு இருக்கிறது.
இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள், யார் இயக்குகிறார்கள் என்பது புதிராக இருக்கிறது.
தளபதி ஸ்டாலின் அவர்கள் சொல்வது போல தமிழக அரசு இப்பொழுது செயல்படாத அரசாக இருக்கிறது.
இந்நிலை தொடர்ந்தால் என்னாகும் தமிழகம்.
தமிழ்நாடும் தமிழக அரசும் இப்பொழுது கேள்விக்குறியில் தொங்கிக்கொண்டு இருக்கிறது.
மர்மத்திரை விலகுமா அல்லது தொடருமா?