ராஷ்டிரிய சுவயம்சேவக் சங்க் (இனிமேல் “சங்க”) 1925-ஆம் ஆண்டு தசரா தினத்தன்று தொடங்கப்பட்டது. அந்தத் தினத்தில் சர்சங்க்ஜாலக் (Sarsanghchlak) என்று அழைக்கப்படும் சங்கின் தலைவர் சங்க் உறுப்பினர்களுக்குத் தன்னுடைய ஆண்டுரையை நிகழ்த்துவார்.

Sarsanghchlak 350 1990-கள் வரை இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஏன், வாஜ்பாய் காலத்திலும் இந்த நிகழ்வு அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படவில்லை. எனினும் மோடி அரசு, 2014இ-ல் அமைந்த பிறகு, இந்த நிகழ்வு மிகவும் எதிர் பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது.

2014-ஆம் ஆண்டு முதன் முதலாக மோகன் பக்வத்தின் தசரா உரை அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தூர்தர்ஷனும், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் இந்த உரையை நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றன.

இதனை ஒட்டி இந்த ஆண்டும், அக்டோபர் 8ஆம் தேதி, மோகன் பகவத் இந்த ஆண்டின் தசரா உரையை நிகழ்த்தினார். HCL நிறுவனத்தின் தலைவர் ஷிவ்நாடார் அந்த கூட்டத்திற்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.

மோடி தலைமையில் பாஜக ஆட்சி அரியணையில் ஏறிய பிறகு அரசியல் பார்வையாளர்கள் இந்த உரையைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினர். இந்த உரை அரசிற்கும் சங்கிற்கும் இடையேயான உறவு எவ்வாறு உள்ளது என்பதை ஊகிக்கும் ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு சுமார் 64 நிமிடங்கள் இந்தியில் பேசிய மோகன் பக்வத், நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளைப் பிரித்தானியப் பேரரசி போல் தொட்டுக் காட்டி சங்கின் வழிகாட்டுதலில் நடக்கும் ஆட்சி எப்படித் தன்னுடைய பணியைச் செய்து வருகிறது என்று எடுத்துரைத்தார்.

2019 தேர்தலில் மிக உயரிய எண்ணிக்கையில் பாஜக வெற்றி பெற்றதைக் கோடிட்டுக் காட்டிப் பெருமிதம் அடைந்தார். கீழ்காணும் ஐந்து நிகழ்வுகளை அவர் விரிவாக விளக்கிக் கூறினார்.

(1) பிரிவு 370 நீக்கம் பற்றிமக்களின் நம்பிக்கையையும் நாட்டின் நலனையும் முன்னிறுத்தி கடினமான முடிவுகளை எடுக்கும் திறன் மோடி அரசிடம் உள்ளது. இதன் பொருட்டு, ஆகஸ்டு 5 அன்று ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்குச் சம்மந்தப்பட்ட பிரிவு 370-ஐ செயல்படாமல் ஆக்கியது மோடியின் அரசு. பகவத் அவர்கள் எவ்வாறு ஜனசங்க் நாட்களில் இருந்து சங்க் அமைப்புகள் இந்தப் பிரிவை எதிர்த்து வந்தன எனக் கோடிட்டுக் காட்டினார்.

ஜன் சங்கின் முதல் போராட்டமே இதனை ஒட்டி இருந்தது என்று நினைவு கூர்ந்தார். மக்களும் இதையே விரும்பினார்கள் என்பதும் மோடி அரசிற்குக் கிடைத்த 2019 தேர்தல் வெற்றி எடுத்துக் காட்டியது. அரசாங்கமும் ஜனநாயக முறைப்படி பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் தீர்மானங்களை முன் வைத்துவெற்றிப் பெற்ற பிறகே அந்தச் செயலிழப்பை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. பாஜக தவிர மற்ற கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன. இது பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் கிடைத்த வெற்றியாகும் என்று கூறினார்.

(2) கூட்டுப் படுகொலைகள் (''Lynching'') : இப்போது நாட்டில் ஏற்பட்டு இருக்கும் நம்பிக்கையான சூழ்நிலையை விரும்பாதபவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய நன்மைக்காக நாட்டிற்கு அவமானம் சேரும் வேலைகளைச் செய்ய முனைகிறார்கள். நாட்டில் சில இடங்களில் ஒரு சமுதாய மக்கள் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவரைப் பிடித்து அடித்து இருக்கிறார்கள். 10--, 15 பேருக்குள் நடக்கும் சச்சரவுகளை மிகைப்படுத்தி அதை ஒரு சமுதாயத்தின் மீது பழியாகச் சுமத்துகின்றனர்.

ஆனால் இந்த நிகழ்வுகளுக்கு (''Lynching'') என்று பெயர் வைத்து, சங்கிற்கும், இந்து மதத்திற்கும் கெட்ட பெயர் கொண்டு வர வேண்டுமென சிலர் விழைகிறார்கள். (''Lynching'') என்ற சொல்லிற்கு நமது மொழிகளில் ஏற்ற சொல்கூட கிடையாது. இது மேலை நாடுகளில் நடந்தேறிய பழக்கம். ஏசு கிருஸ்து ஒருமுறை ஒரு பெண்ணின் மீது ஒரு கும்பல் கல் எறிவதைக் கண்டு வேதனையடைந்து அந்தக் கும்பலை நோக்கி 'உங்களில் யார் ஒருவர் எந்த ஒரு பாவமும் செய்யாதவரோ அவர் மட்டும் கல் எறியலாம்" என்றார்.

இதற்கும் இந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சின்ன சச்சரவுகளை இவ்வாறு சொற்களை வைத்து நம் நாட்டின் புகழுக்கு உலகம் முழுவதிலும் களங்கம் ஏற்படுத்த விழைகிறார்கள் நம் உள்நாட்டு எதிரிகள். இந்த உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இந்தியாவைப் போல மக்கள் நல்லிணக்கத்தோடு இருப்பதை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? இவ்வாறான சம்பவங்களை எதிர்கொள்ளச் சட்டங்கள் உள்ளன. அவை போதவில்லை என்றால் புதுச் சட்டங்களை இயற்ற வேண்டும். அது ஆட்சி செய்பவர்களின் கடமையாகும்.

(3) பொருளாதாரம் பற்றிஉலகப் பொருளாதாரம் எப்பொழுதும் ஒரு சக்கரம் போல சுழழும். சில சமயம் ஏறுமுகமாகவும், சில சமயம் இறங்கு முகமாகவும் இருக்கும். பொருளாதார முடக்கம் என்பது நாட்டின் வளர்ச்சி விகிதம் 0% குறைவாக இருந்தால்தான் ஏற்பட்டுள்ளது என்று கூறலாம். தற்போது நம் நாட்டின் வளர்ச்சி 5%  உள்ளது.

இதற்காக நாம் வேதனைபடலாம், ஆனால் இதைப் பற்றி நாம் பெரிதாக வாதம் செய்யத் தேவையில்லை. அவ்வாறு வாதம் செய்தால், பொருளாதாரத்தில் பங்கு பெறுவர்கள் விரக்தி அடைவார்கள். இதனால் பொருளாதாரம் மேலும் இறங்குமுகத்திற்குச் செல்லும். இப்போது அமெரிக்காவுக்கும், சீனாவிற்கும் இடையே வர்த்தகப்  போர் நடைபெறுகிறது. திருப்பூர் போல நம் இந்தியர்களாலும் ஒரு நகரையே மாற்றி அமைக்க முடியும். அதற்கு உண்டான சக்தி நம்மிடம் உள்ளது.

சுதேசிக் கொள்கையை நாம் ஏற்கிறோம். ஆனால் எந்தப் பொருள்கள் நம் நாட்டில் உற்பத்தி செய்யவில்லையோ அப்பொருள்களை நாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். அந்த இறக்குமதிகள் நமக்கு லாபம் பயப்பதாகவும், நம் விதிகளுக்கு  உட்பட்டதாகவும் இருக்க வேண்டும். இதுவும்  சுதேசிக் கொள்கையின்  வேறு  பரிணாமம் ஆகும். மேலும் நிஞிறி என்பது மட்டும் நம் பொருளாதாரத்தை எடைபோடும் குறியீடாக இருக்க முடியாது.வேறு குறியீடுகளையும் நாம் ஏற்படுத்த வேண்டும்.

(4) கல்வி பற்றி: கல்வி என்பது வெறும் வயிறு வளர்ப்பதற்கு அன்று. கல்வியின் மூல காரணம், ஒரு மனிதனை சிறந்த மனிதனாக மாற்றுவதற்காக கொடுக்கப்படுகிறது. தன்னுடைய மொழி, தன்னுடைய பண்பாடு, சுதேசி, தன்னுடைய பரம்பரை போன்றவைகளை ஒருவனுக்கு எடுத்துக் கூறுவது கல்வியே. இதைத்தான் புதிய கல்விக் கொள்கை எடுத்து முன்வைக்கிறது. இது ஒரு நல்ல நடவடிக்கையாகும்.

(5) பெண்கள் பற்றிநம் நாட்டின் இல்லற வாழ்வியல் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. லஷ்மணன், சீதாவின் முகத்தைக் கூட பார்த்தது கிடையாது. இவ்வாறு இருந்த நம் சமுதாயத்தில் பெண்களுக்கு வீட்டிலும் பாதுகாப்பு இல்லை, வெளியிலும் பாதுகாப்பு இல்லை. இதனால் நாம் அனைவரும் வெட்கித் தலை குனிய வேண்டும். நம் பெண்களுக்கு நாம் பாதுகாப்பு மட்டும் கொடுத்தால் போதாது. நம் நாட்டையும், வீட்டையும் சமத்துவத்துடன் நடத்தி செல்லும் அதிகாரத்தையும் நாம் அவர்களிடம் கொடுக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் உதவி செய்ய வேண்டும்.

முடிவுரையில சங்க் எப்போதும் இந்தியா, ஒரு இந்து ராஷ்டரம் என்பதை மறைப்பது இல்லை என்று பகவத் கூறுகிறார். இந்து என்பவன் இந்த உலகத்தில் உள்ள ஒரே உண்மை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது என்பதை நம்புபவன். அதனால் நாம் அனைவரும் தத்தம் பாதையில் சென்று ஒன்றாகப் பரம்பொருளை அடையலாம் என்று முடிக்கிறார்.

மோகன் பகவத் உரையில் இருந்து கீழ்க்கண்டவை உறுதியாகிறது.

  1. சங்க் அமைப்பு பிரிவு 370-ஐ மோடி அரசு செயலிழக்கச் செய்ததில் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறது.
    2. கூட்டுப் படுகொலைகளும், பொருளாதார முடக்கத்தின் தாக்கத்தின் வீரியத்தை சங்க் அமைப்பு முழுமையாக உணர்ந்திருக்கவில்லை. மாறாக இவைகளை அரசுக்கு கெட்ட பெயர் கொண்டு வருவதற்கு எதிரிகளின்
    சூழ்ச்சியின் வெளிப்பாடாகக் கருதுகிறது.
    3. புதிய கல்விக் கொள்கையால் சங்க் அமைப்பு மகிழ்ச்சியில் உள்ளது.
    4. பெண்கள் பாதுகாப்புப் பற்றி சங்க் கவலை கொண்டு இருக்கிறது. அதனால் அரசு வரும் ஆண்டுகளில் சில நடவடிக்கைகள் எடுக்கக் கூடும்.
    5. சங்க் அமைப்பும், மோடி அரசும் தங்களுக்குள் நம்பிக்கையோடும், புரிதலோடும் சங்கின் கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றன.
    6. இப்போதைக்கு மோடி அரசுக்கு சங்கில் இருந்து எந்த ஆபத்தும் இல்லை. மோடியும், ஷாவும் அந்த அமைப்பின் நம்பிக்கைக்கு உரியவர்கள் ஆவர்.
Pin It