மூத்திரச் சந்தின்

முற்றிய நெடிகளில்

சுப்ரபாதம்

எங்களுக்குச் சாத்தியமாகிறது.

காமுகர்களின் ஆணுறைகளிலும்

கருவறையின் ‘நேப்கின்’களிலும்

எங்கள்

காலைக் கனவுகள்

கலைகின்றன.

எத்தனையோ மலக்குழிகள்

எங்களின்

மரணக்குழிகளாகி

இருக்கின்றன.

நிலவறையின் கல்லறைகளில்

எங்கள்

நிகழ்காலம் புதைக்கப்படுகின்றது.

உங்கள் குடல்குப்பை

அள்ளாமல்- எங்கள்

குடல்நிறைய

வாய்ப்பில்லை.

பாவங்களை ஏற்றுக்கொண்டு

பக்தர்களை ரட்சிப்பது

பரமபிதா மட்டுமல்ல...

எங்களை அழுக்காக்கி

உங்களைச்

சுத்தப்படுத்தும்

நாங்களும் தான்!