ஒருமுறை நாகப்பட்டினத்தில் கலைஞர் எழுதிய ‘சாந்தா அல்லது பழனியப்பன்’ நாடகம் நடைபெற்றது. நாடகத்திற்குத் தலைமை தாங்கியவர் தந்தை பெரியார். அப்போது பேசிய பெரியார் ”நாடகங்களையும் சினிமாக்களையும் பார்க்கக் கூடாது என்று சொல்லுபவனே இந்த நாடகத்திற்குத் தலைமை வகிக்கிறானே என்று நினைக்கலாம்……….. இதுபோன்ற நாடகங்களை நான் எப்போதும் வெறுத்தது கிடையாது. பார்க்கக் கூடாது என்று சொல்லவில்லை. இங்கு நடைபெற்ற இந்த நாடகம் நல்ல பல கருத்துகளைப் போதிக்கிறது. நம்முடைய சீர்திருத்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு மக்களின் இழிவு நிலையைப் போக்கவும், மூடக் கொள்கைகளை ஒழிக்கவும் பயன்படும் வகையில் அமைந்திருக்கிறது” என்று கலைஞரைப் பாராட்டினார். நாடகம், திரைப்படம் போன்ற கலைகள் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களைப் போதிப்பதாக இல்லாமல், அவை மக்களுக்குத் தேவையான கருத்துகளைப் பரப்புவதைப் பெரியார் வரவேற்கவே செய்தார் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்புரை செய்வதற்காக ஓர் இயக்கமாகவே செயல்பட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். ஏறத்தாழ எண்பதாண்டு காலம் எழுத்துலகில் இடையறாது இயங்கியவர். அவரது நூற்றாண்டைக் கொண்டாடிய தமிழக அரசு, அண்மையில் அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கி அவருக்குப் பெருமை சேர்த்தது. நூற்றாண்டு காணும் தமிழ் இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தொகுத்து வெளியிட்டு வருகிறது. பாடநூல் கழகத்தின் ஆலோசகர் மூ. அப்பணசாமி பொதுப் பதிப்பாசிரியராக உள்ள இத்திட்டத்தின்கீழ், எழுத்தாளர் இமையம் தொகுத்துள்ள கலைஞரின் எழுத்துகள் ”கலைஞரின் படைப்புலகம்” என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
தன்னுடைய 14 வயதில் எழுதத் தொடங்கியவர் கலைஞர். சிறுகதைகள், கவிதைகள், உரை நூல்கள், நாவல்கள், நாடகங்கள், திரைக்கதை வசனங்கள், திரையிசைப் பாடல்கள் என்று அத்தனை துறைகளிலும் தனது தடத்தைப் பதித்துச் சென்றவர். அவருடைய படைப்புகளில் சிலவற்றை மட்டும் தேர்வு செய்து இத்தகையதொரு தொகுப்பைக் கொண்டு வந்ததற்காகவே பாடநூல் கழகத்தையும், எழுத்தாளர் இமயத்தையும் பாராட்டலாம்.
மழை வேண்டி ஒரு ஊரில் மாரியம்மனுக்குப் பூசை செய்கின்றனர். அந்தக் கிராமத்திற்கு வரும் குமரன் “உங்கள் கண்ணீரைக் கண்டு கருணை காட்டாத மாரி – பன்னீரில் மயங்கி விடுவாள் என்றால் நீங்கள் அவளை ஏமாற்றுகிறீர்கள் என்றுதானே அர்த்தம்” என்று கேட்கிறான். கலைஞர் வசனம் எழுதிய ‘நாம்’ திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி. இவ்வாறான பகுத்தறிவுக் கேள்விகளைக் கலைஞரின் பல படைப்புகளில் காணலாம். இதே போல பக்தியை வைத்து மக்களை ஏமாற்றும் சாமியார் கதாபாத்திரம், ‘சங்கிலிச்சாமி’ என்ற சிறுகதையில்.
மத நல்லிணக்கத்திற்குத் தனது அரசியல் வாழ்க்கையில் மட்டுமின்றி, தன்னுடைய படைப்புகளிலும் முக்கியத்துவம் தந்தவர் கலைஞர். அணில்குஞ்சு என்ற சிறுகதையில், அணிலை முன்வைத்து நடக்கும் மதப் பூசலையும் இறுதியில் அணிலுக்கு நேரும் பரிதாப முடிவையும் அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்.
தமிழர் வாழ்வியலையும், வாழ்வியல் விழுமியங்களையும் தனது படைப்புகளின் வழியாகக் கொண்டு சேர்த்தவர் கலைஞர். அவருடைய தொல்காப்பியப் பூங்காவும், சங்கத் தமிழும், வரலாற்றுப் புதினங்களும் இதற்கான சான்றுகளாகும். சிலப்பதிகாரக் கதையில், மாடலமறையோன் தனது வேள்விக் கலாச்சாரத்தை செங்குட்டுவனை வைத்தே புகுத்தியதை தொல்காப்பியப் பூங்கா நூலில் பதிவு செய்திருப்பார். ரோமாபுரிப் பாண்டியனும், தென்பாண்டிச் சிங்கமும் தமிழர் வரலாற்றுப் பெருமிதங்களாகப் படைக்கப்பட்டவை.
கலைஞரின் தன்வரலாறான நெஞ்சுக்கு நீதி அவருடைய வரலாறு மட்டுமல்ல; தமிழ்நாட்டின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது. ஆறு தொகுதிகளாக வெளிவந்த நெஞ்சுக்கு நீதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
கலைஞரின் படைப்புகள் மட்டுமின்றி, கலைஞரது படைப்புகள் குறித்த பல்வேறு ஆளுமைகளின் பார்வை இந்நூலின்கண் உள்ளன. தந்தை பெரியார் தொடங்கி பேரறிஞர் அண்ணா, தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட பலருடைய கருத்துகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கலைஞருடைய படைப்புகளைப் பற்றிய அறிமுகத்தை அறிய வேண்டிய அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.
- வெற்றிச்செல்வன்