75-ஆம் விடுதலை நாள் விழா நாடெங்கும் கொண்டாடப்பட்ட போது சாவர்க்கரின் படம் விடுதலைப் போராட்ட வீரர்கள் நடுவே காணப்பட்டது மக்கள் இடையே பெரும் நகைப்பை ஏற்படுத்தி உள்ளது. சாவர்கருக்கும் விடுதலைக்கும் என்ன தொடர்பு என்று பலரும் கூகுள் பொறியில் தேடத் தொடங்கி விட்டனர். ஆனால் இருந்தால்தானே கிடைப்பதற்கு?

savarkkarசாவர்க்கரைப் பொறுத்தமட்டில், விடுதலைப் போராட்டம் என்பது, அவர் சிறையில் இருந்த போது தன் சொந்த விடுதலைக்காக ஆங்கிலேய அரசிடம் தொடர்ந்து ஆறு மன்னிப்புக் கடிதங்களை எழுதிக் கொடுத்தது. தன் பணிவான விசுவாசத்தைக் காட்ட வாய்ப்பு வழங்கக் கோரியும், மன்னிக்காவிட்டால் ஆங்கில இராணுவ அதிகாரிகளின் கால்களை விடமாட்டேன் என்ற அளவிற்குப் பணிந்து குனிந்து, இறுதியில் தண்டனைக் காலம் முடியும் முன்பே சிறையை விட்டுப் பறந்தோடியவர் அவர். மேலும், ஆங்கிலேய அரசிடம் மாதம் ரூ.60 ஓய்வூதியமாகப் பெற்றார். இதுதான் சாவர்க்கரின் ‘தியாகம்’.

1910ஆம் ஆண்டிற்குப் பிறகு சாவர்க்கர், அரசியல் என்பது மத அடிப்படையில் தான் என்று மக்களைப் பிரிக்கும் அரசியலுக்கு வழிவகுத்தார், மாறாக விடுதலை அரசியலுக்கும், அவருக்கும் எந்தக் தொடர்புமில்லை. இந்த நாட்டில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து போகும் அளவுக்கு இஸ்லாமியர்களைத் தள்ளியதில், சாவர்க்கர் வகையறாக்களுக்கு முக்கியப் பங்கு இருந்தது.

 இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயப் படைகள் உலகின் பல்வேறு இடங்களில் சிதறி இருந்த காலம். இந்தியாவில் ஆங்கிலப் படை சற்றுக் குறைவாக இருந்தது. இந்நிலையில் நேதாஜி அவர்கள் சிங்கப்பூர், மலேசியாவில் வீரர்களைத் திரட்டி, ஜப்பானின் ஆதரவுடன் இராஷ் விகாரி போஸ் உருவாக்கிய இராணுவத்திற்குத் தலைமையேற்று ஆங்கிலேயப் படையை எதிர்த்துப் போராடி சிரப்புஞ்சி வரை முன்னேறி வந்தார். அப்போது சாவர்க்கர், கோல்வார்கர் போன்றோர் இந்திய இந்து இளைஞர்களை ஆங்கில அரசின் படையில் சேர்க்கும் வேலையில் ஈடுப்பட்டு இருந்தனர். அத்துடன் நிதி திரட்டியும் கொடுத்தனர். இறுதியில் நேதாஜியின் இந்தியப் படை தோல்வியைத் தழுவியது. இதுதான் சாவர்க்கரின் ‘தியாகம்’!

 காந்தியார் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை அறிவித்த போது அதனைக் கண்டித்தும், அதில் இளைஞர்கள் இணைய வேண்டாம் என்றும் அறிக்கை வெளியிட்டவரும் இதே சாவர்க்கர்தான்.

விடுதலை இந்தியாவில் முதல் பயங்கரவாதம் காந்தியாரின் படுகொலை. பட்டேல் நேருவிற்கு எழுதிய கடிதத்தில், சாவர்க்கரின் கட்டுப்பட்டில் இருந்தவர்களே காந்தியாரைப் படுகொலை செய்துள்ளனர் (Sardar Patel’s Correspondence, Volume 6, Page 56) என்றும், காந்தியாரைப் படுகொலை செய்த கோட்சே, ஆப்தே ஆகியோரை வெற்றியுடன் திரும்பி வாருங்கள் என்று வாழ்த்தி அனுப்பினார் சாவர்க்கர் (Sardar Patel’s Correspondence, Volume 6, Page 323) என்றும், நீதிபதி ஜே.எல்.காபூல் கமிஷன் சாவர்க்கரின் பங்கை ஆதாரங்களுடன் விளக்குகிறது.

இப்பொழுது சொல்லுங்கள் சாவர்கர் தியாகியா? இல்லையா?

மதிவாணன்