திராவிட இயக்கம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவானது என்றும், ஆர்.எஸ்.எஸ். தேச பக்தர்கள் இயக்கம் என்றும் சங்கிகள் பேசி வருவது வரலாற்றுப் புரட்டு.

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர், பெரியார் இயக்கத்தின் மீது தொடர்ந்து ஒரு குற்றச் சாட்டைச் சுமத்துவது வழக்கமாகிவிட்டது. திராவிட இயக்கம், பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தது அவர்கள். தேச விரோத சக்திகள் பிரிட்டிஷ் விசுவாசி என்று பேசி வருகிறார்கள். இது குறித்து இளைய தலைமுறைக்கு தெளிவான புரிதலை உருவாக்க சில வரலாற்றுக் குறிப்புகளை சுருக்கமாகப் பதிவிடுகிறோம்.

முந்தைய பகுதி: ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி இயக்கமா?

1942ஆம் ஆண்டிலிருந்து 1947ஆம் ஆண்டு வரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பிரிட்டிஷாருக்கு ஆதரவாகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை தீவிரப்படுத்துவதிலும் ஷாகாக்கள்; ஆபீசர் பயிற்சி முகாம்கள் நடத்துவதிலுமே தீவிர கவனம் செலுத்தி வந்தனர். நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பீடம் 1945ஆம் ஆண்டில் துவக்கி, ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டது. 1946ஆம் ஆண்டில் முகம்மது அலி ஜின்னா, முஸ்லீம்களுக்கு தனிநாடு கோரி, நேரடியான இயக்கத்தை நடத்த ஆரம்பித்தது இவர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்து விட்டது. முஸ்லீம் - இந்துக் கலவரங்கள், ஆங்காங்கே வெடித்துக் கிளம்பின. இந்தியாவில் ஒரு முஸ்லீம் சாம்ராஜ்யம் அமையப் போகிறது என்ற கற்பனைக் கதையை; இந்தக் கூட்டம் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்து, இந்துக்களை முஸ்லீம்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டது.

1947ஆம் ஆண்டு பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேற போகிற காலம்; பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறிய பிறர் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நிலை என்ன? இந்தக் கேள்விக்கு அப்போது ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்தில் கிடைத்த பதில் ஒரே குழப்பம்தான்! அதுவரை பிரிட்டிஷாருக்கு முழு ஆதரவு தந்து, முஸ்லீம்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்தி வந்தவர்கள் சுதந்திர இந்தியாவில் தங்களின் நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி தெரியாமல் குழம்பிப் போய்க் கிடந்தனர்.

பஞ்சாப் மாநிலத்தில் பக்வாரா என்ற இடத்தில் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் ஆர்.எஸ்.எஸ். அதிகாரிகள் பயிற்சி முகாம் ஒன்று நடந்தது. அந்தப் பயிற்சியின் நிறைவு விழாவில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கரிடம் இதே கேள்வியை நேரிடையாகவே கேட்கப் பட்டது. ‘இந்தியா இப்போது சுதந்திர நாடாக மாறப் போகிறது இப்போது ஆர்.எஸ்.எஸ். எப்படி செயல்படப் போகிறது?’ என்ற நேரடியான கேள்வியை கோல்வாக்கரிடம் கேட்கப்பட்ட போது, கோல் வாக்கர் வாய் விட்டு பலமாக குலுங்கி குலுங்கி சிரித்து விட்டுச் சொன்னார்.

பிரிட்டிஷார் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? இந்த அறிவில்லாக் கூட்டத்தாரிடம், பேதைகளிடம் ஆட்சியைக் கொடுத்தால் இரண்டு மாதங்கள்கூட இவர்களால் சமாளிக்க முடியாது. இவர்கள் மீண்டும் பிரிட்டிஷாரிடம் மண்டியிட்டு, தயவு செய்து ஆட்சியை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவார்கள். எனவே ஆர்.எஸ்.எஸ். அதன் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் என்று பதிலளித்தார். (ஆதாரம்: டி.ஆர். கோயல் எழுதிய ஆர்.எஸ்.எஸ். நூல் பக்கம் 9)

அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்.இன் நெருக்கமான வட்டாரங்களில் இன்னொரு கருத்தும் பேசப்பட்டு வந்தது. பிரிட்டிஷார், நாட்டை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கையிலே தந்து விட்டுப் போகப் போகிறார்கள்; அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று அவர்கள் பேசினார்கள் காரண காரியங்களின் அடிப்படையில் விவாதம் என்பதற்கு அந்த முகாமின் வரலாற்றில் எந்தக் காலக் கட்டத்திலும் இடம் இருந்ததில்லை.

இதுபற்றி பண்டிட் ஹேமேந்திரநாத் என்ற முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவர் குறிப்பிடுகிறார், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளில் ஒன்றான அகில பாரதிய பிரதிநிதிசா என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்து, பிறகு அதிலிருந்து வெளியேறியவர் ஹேமேந்திரநாத் அவர் ‘The end of a dream; An inside view of the R.S.S. Today’ என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலில் 44ஆவது பக்கத்தில் அவர் எழுதியிருப்பதை இங்கே எடுத்துக்காட்டுகிறோம்:

டில்லி ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தலைவராக இருந்தவர் லாலா ஹன்ஸ் ராஜ் குப்தா. இந்திய தலைநகரத்தில் நடக்கும் அரசியல் நடவடிக்கைகள் பற்றி கவனித்து முடிவெடுக்க வேண்டிய முழு பொறுப்பும், இவருக்கு அளிக்கப்பட்டிருந்தது. அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கூட்டத்திலே சில கட்டுக் கதைகளை எடுத்துச் சொன்னார். மத்திய இடைக்கால ஆட்சியில் இருக்கும் (காங்கிரஸ்) தலைவர்களால் அரசாங்கத்தை நடத்த முடியாது; எனவே அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமே, இந்தியாவை ஒப்படைத்து விடுவது பற்றி பிரிட்டிஷார் தீவிரமாக பரிசீலனை செய்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு இது பற்றி நம்பிக்கையான தகவல்கள் மேலிடத்திலிருந்து கிடைத்துள்ளது. ஒரு மாதத்துக்குள்ளோ அல்லது இரண்டு வாரத்துக்குள்ளோ இந்த அறிவிப்பு வெளியாகும் என்று அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நடத்திய இரகசிய கூட்டத்திலே எடுத்துச் சொன்னார். இந்தச் செய்தி கோல்வாக்கரிடம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

பெரியார், தனது கருத்தை வெளிப்படையாக அறிவித்தார். இந்தியாவுக்குக் கிடைத்த சுதந்திரம், பார்ப்பன-பனியாக்களுக்குத்தான்; அதிகாரம் ‘மேட் ஓவர்’ செய்யப்பட்டுள்ளது என்று கூறி துக்க நாள் என்று வெளிப்படையாக நேர்மையாக அறிவித்தார். அதற்காக பெரியாரை தேச துரோகி என்று முத்திரைக் குத்தி வரும் சங்பரிவாரங்கள் அந்த நேரத்தில் கபட நாடகமாடினார்கள்.

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி, அதாவது இந்தியாவுக்கு சுதந்திரம் வந்த அந்த நாளில் இவர்கள் என்ன செய்தார்கள்?

நாடெங்கும் மூவர்ண தேசியக் கொடி ஏற்றப்பட்ட அந்த நாளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நடத்திய நாடகம் என்ன? நாட்டுப் பற்றுக்கும் தேச பக்திக்கும் தாங்களே பிறப்பெடுத்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்வதால் இதை நாம் சுட்டிக்காட்டிக் கேட்கிறோம்.

இதோ பரபரப்பான ‘Freedom at Midnight' என்ற நூலிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக் காட்டுகிறோம்:

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, பூனா நகரத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அங்கும் கொடிதான் ஏற்றப்பட்டது; ஆனால் அது சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடி அல்ல; அது காவிக் கொடி, 500 ஆண்கள் அந்த இடத்திலே திரண்டிருந்தனர் அய்ரோப்பாவையே நடுங்க வைத்த ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடியைத்தான் அங்கே ஏற்றினார்கள்.

ஹிட்லர் கொடியிலிருந்து மிகச் சிறிய மாற்றம் மட்டுமே அதில் செய்யப்பட்டிருந்தது. அந்தக் கொடியில் பொறிக்கப்பட்டிருந்தது ஆரியச் சின்னம். அங்கே கூடியிருந்தவர்கள் R.S.S. என்ற வகுப்புவாத பாசிச அமைப்பைச் சார்ந்தவர்கள்' என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நாடெங்கும் தேசியக் கொடி உயர்ந்த அந்த நாளில் ஆரியக்கொடியை ஏற்றிய கூட்டம் தான் இந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டம்!

ஆம்! காந்தியாரை சுட்டுக்கொன்ற அதே நாதுராம் கோட்சே தான் அன்றைய தினம் (1947 ஆகஸ்ட் 15இல்) ஆர்.எஸ்.எஸ்.காரர்களோடு சேர்ந்து கொண்டு ஆரியக் கொடியை ஏற்றியவர்!

அந்தக் கோட்சே ஒரு பத்திரிகையின் ஆசிரியர். அந்த பத்திரிகையின் பெயர் ‘Hindu Rashtra’ என்பதாகும்.

“சுதந்திர நாளில் அந்தப் பத்திரிகையின் தலையங்கப் பகுதி, கறுப்பு மய்யினால் நிரப்பப்பட்டு வெளியே வந்தது.

ஆரியக் கொடி ஏற்றியபோது, முன் வரிசையிலே நின்று கொண்டிருந்த நாதுராம் கோட்சே உணர்ச்சி வசப்பட்டு அலறுகிறான்! ‘இந்துக்கள் கொலை செய்யப்படுகிறார்கள்; இந்துப் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்; இதை மறைப்பதற்கே சுதந்திரம் பேசுகிறார்கள் இத்தனைக்கும் காரணம் காங்கிரஸ்தான்; எல்லாவற்றிற்கும் மேலாக காந்திதான்’ என்று கோட்சே அப்போது அலறுகிறான். (ஆதாரம் மேற்குறிப்பிட்ட அதே நூல்) உடனே நாதுராம் கோட்சே, 500 தொண்டர்களோடு சேர்ந்து ஆரியக் கொடிக்கு சல்யூட்' செய்கிறான், குனிந்து தரையைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு, “என்னை வளர்த்த தாய் நாடே, உனக்காக எங்கள் உடல் சாகத் தயார்” என்று பிரகடனப் படுத்துகிறான்.

அதற்குப் பிறகு 5 மாதங்களில் 1948 ஜனவரி 30இல் அதே நாதுராம் கோட்சே என்ற பார்ப்பனரால் காந்தியார் சுட்டுக் கொல்லப் படுகிறார்

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்

Pin It