thiyagarayar 374தமிழக அரசியல் வரலாற்றில் சமூக நீதிக்கான அடித்தளத்தை அமைத்த மாமனிதர் சர்.பிட்டி தியாகராயர் அவர்கள். நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான இவருடைய மறைவின் 101 ஆவது ஆண்டு இது.

நீதிக்கட்சியின் தந்தை என அழைக்கப்படும் இவர், 1916 ஆம் ஆண்டு பார்ப்பனர் அல்லாதோரின் நலனுக்காகத் “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” (நீதிக்கட்சி) உருவாகக் காரணமாக இருந்தார். இதுவே பின்னாளின் தமிழ்நாட்டின் திராவிட இயக்கங்கள் வளர்ச்சியுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வித்திட்டது.

 எப்போதும் வெள்ளை உடையில் தோற்றம் தரும் இவ்வேந்தர் பெரும் செல்வந்தராகவும், ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்தபோதும், ஆடம்பரங்களைத் தவிர்த்து எப்போதும் தூய வெள்ளை நிற ஆடைகளையே அணிந்தார். இந்த எளிமையே அவருக்கு “வெள்ளை உடை வேந்தர்” என்று அழியாத பெயரைப் பெற்றுத் தந்தது.

'மதிய உணவுத் திட்டத்தின் தந்தை' சர்.தியாகராயர் சென்னை மாநகராட்சித் தலைவராக இருந்தபோது ஏழைக் குழந்தைகள் பசியின்றி கல்வி கற்க வேண்டும் என்பதற்காகத் தியாகராய நகரில் உள்ள பள்ளியில் முதன் முதலாக மதிய உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதுவே இன்றைய சத்துணவுத் திட்டங்களின் முன்னோடியாகும்.

வகுப்புவாரி இட ஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்புகளில் அனைத்துச் சமூகத்தினருக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக “வகுப்புவாரி அரசாணை” (communal G.O) கொண்டு வரப்படுவதில் மிக முக்கிய பங்காற்றினார்.

அதுபோல பெண்களுக்கு வாக்குரிமை என்பதில் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டதில் தியாகராயரின் பங்கு அளப்பரியது. இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் பெண்களுக்கு இந்த உரிமை கிடைக்க அவர் உறுதுணையாக இருந்தார்.

பதவி மோகமற்ற பண்பாளர் அவர். நீதிக்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றபோது, முதலமைச்சர் பதவித் தேடி வந்தபோதும் அதை ஏற்க மறுத்துவிட்டு மக்களுக்காகத் தொண்டாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டவர் சர்.பிட்டி தியாகராயர் அவர்கள்.

அவர் மறைந்து நூறு ஆண்டுகள் ஆனாலும் அவர் ஏற்றி வைத்த சமூக நீதிச் சுடர் இன்றும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒளியூட்டி வருகிறது. இடஒதுக்கீடு, கல்வி மற்றும் சமத்துவப் பாதையில் நாம் நடைபோடுவதே அந்த வெள்ளை உடை வேந்தருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

- அனுவர்ஷினி, திராவிடப் பள்ளி மாணவர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.