periyarr 450இம்மாதம் 5, 6-ந் தேதிகளில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நெல்லூரில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு என்னும் தென் இந்திய நல உரிமைச்சங்க இயக்கத்தின் 11-வது மாகாண மகாநாடு, கூடிக் கலைந்து விட்டது. இந்த மகாநாடானது 1927வது வருடம் ஜனவரியில் மதுரையில் கூடிய 10-வது மகாநாட்டுக்குப் பிறகும், அதையடுத்து கோயமுத்தூரில் கூடிய மாகாண விசேஷ மகாநாட்டிற்கு பிறகும், இரண்டு வருஷ காலம் பொறுத்து நெல்லூரில் கூட்டப்பட்டதாகும் என்றாலும் இந்த இரண்டு வருஷம் பொறுத்தாவது இம்மகாநாடு இப்போது கூட்ட வேண்டிய அவசிய மேற்பட்டதின் காரணம் முக்கியமாக இரண்டு விஷயத்தைப் பொறுத்ததாகும்.

அதாவது ஒன்று; பார்ப்பனரல்லாதார்களுக்குள் பிரிந்து நிற்கும் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்கின்ற கருத்துக் கொண்டு மந்திரி கட்சியாராகிய இன்டிபெண்டெண்டு என்னும் சுயேச்சைக் கட்சியையும், கான்ஸ்டிடியூஷனிலிஸ்ட் என்னும் டாக்டர் நடேசன் கட்சியாரையும் ஒன்று சேர்க்கவும்; இரண்டாவதாக:- கட்சிக்குத் தலைவராய் இருந்த பனகால் அரசர் இறந்து போய்விட்டதால் அவருக்கு பதிலாக ஒரு தகுதியான தலைவரை ஏற்படுத்தவும் கருதி மகாநாடு கூட்டப்படவும் வேண்டியதாயிற்று.

மேலும் பனகால் அரசர் காலமானதும், கட்சியின் தலைவர் காலமாய்விட்டதால் இனி கட்சிக் கொள்கையை ஒப்புக் கொள்ளும் பார்ப்பனரல்லாதார் எல்லோரும் தங்களுக்குள் இருக்கும் அபிப்பிராய பேதங்களை மறந்து ஒருவருக்கொருவர் சற்று விட்டுக்கொடுத்து (அதாவது தங்களுடைய முக்கிய கொள்கைக்கு விரோதமில்லாமல்) ஒன்று சேர வேண்டும் என்று கருதி மந்திரி கட்சியாரையும், திரு.நடேசன் கட்சியாரையும் கூப்பிட்டு பேசுவது என்கின்ற எண்ணத்தின் மீது தியாகராய ஞாபகக் கட்டிடத்தில் எல்லாக் கட்சியாரும் கொண்ட ஒரு பொதுக் கூட்டம் கூட்டி அவரவர்கள் கட்சிக் கொள்கைளையும் குறைகளையும் அறியவும், அவற்றிற்கு பரிகாரம் தேடி ரிபோர்ட்டு செய்யவும் என்று கட்சி ஒன்றுக்கு மூன்று பேர்கள் வீதம் மூன்று கட்சிக்கு ஒன்பது பேர்களைத் தெரிந்தெடுப்பதென்றும், அவர்கள் விசாரித்து அறிக்கை செய்ய ஒரு மாதம் வாய்தா கொடுப்பதென்றும் தீர்மானித்து 3 கட்சியின் சார்பாக ஒரு கமிட்டியும் நியமிக்கப்பட்டது.

அந்தக் கமிட்டி அவரவர்கள் கட்சிக்குறைகளை விசாரித்தறிந்து ஒரு முடிவுக்கு வந்ததின் பேரில் சுயேச்சைக் கட்சியார் என்னும், மந்திரிக்கட்சியார் நம்முடன் சேர்வதானால் பார்ப்பனர்களை நமது கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அது முடியாவிட்டால் குறைந்த அளவு இப்போது அவர்களுடன் கூட இருக்கும் பார்ப்பன மந்திரியாகிய கனம் சேது ரத்தினமய்யர், தாங்கள் மந்திரியாய் இருக்கும்வரை தங்களுடன் மந்திரியாயிருப்பதற் கனுகூலமாகவாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அதாவது சட்டசபை நடவடிக்கைகளைப் பொறுத்தவரை பார்ப்பனர்களுடன் கலந்து இருக்கும் படியான மாதிரியில், சட்டசபைக் கட்சியில் சேர்த்துக் கொள்ளும்படி இடம் கொடுக்க வேண்டும் என்றும், திரு.நடேசன் கட்சியார் நம்முடன் இருப்பதானால் அவர்கள் அபிப்பிராயத்திற்கு மதிப்பு இருக்கும்படியாக நிர்வாக சபையில் போதிய பிரதிநிதித்துவம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டு அவற்றை தென் இந்திய நல உரிமை நிர்வாக சபை கூடி கவனித்து சட்டசபைக் கட்சியில் மாத்திரம் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள சம்மதிப்பதாய் ஒப்புக்கொண்டு அதற்காக நிர்வாக சபையில் ஏக மனதாக ஒரு தீர்மானமும் செய்வித்து அதை மந்திரி கட்சியாருக்கு தெரிவித்து, அதை அடுத்த மகாநாடு கூட்டி நிறைவேற்றிக் கொடுப்பதாயும் ஒப்புக்கொள்ளப் பட்டது.

இதை நம்பியே மந்திரிகளும் தென் இந்திய நல உரிமைச் சங்கத்தில் நூறு நூறு ரூபாய் கொடுத்து ஆயுள் மெம்பராகவும் சேர்ந்தார்கள். இந்த நிலையில் இந்த மகாநாட்டை நெல்லூரில் போடப்பட்டது.

ஆனால் சட்டசபைத் தேர்தல் ஒத்திப் போய்விட்டதாலும், வேறு ஏதேதோ காரணங்களாலும் மகாநாடும் ஒத்திப் போட்டுக் கொண்டே வரப்பட்டது. என்றாலும் கடைசியாக ஊராரின் பழிப்புக்கு பயந்து மகாநாட்டை நடத்தியே காட்டப்பட்டுவிட வேண்டியதாயிற்று.

மகாநாட்டுத் தலைவர்

மகாநாட்டுத் தலைவராய் தெரிந்தெடுக்கப்பட்ட திரு.முனிசாமி நாயுடு அவர்கள் காங்கிரஸ் உணர்ச்சி உள்ளவர் என்பதையும், பார்ப்பனர்களை தென் இந்திய நல உரிமைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்ற மனப்பான்மை கொண்டவர் என்பதையும் தவிர மற்ற எந்த விதத்திலும் தகுதியானவரும் பனகால் அரசர் காலமானவுடன் இவரே அடுத்தபடியாக தலைவராகலாம் என்று பலரால் சொல்லப்பட்டவருமாவார்.

ஆனால், அவர் சித்தூரிலிருப்பதனாலும், “பெரீய பணக்காரராக இல்லை” என்பதனாலும் வக்கீல் தொழிலில் இருக்கிறபடியாலும், கட்சிக்குத் தலைவராயிருக்க மறுத்து விடுவார் என்று சிலர் பேசிக்கொண்டதும் உண்டு.

அது எப்படி இருந்த போதிலும் திரு. முனிசாமி நாயுடு அவர்களின் மகாநாட்டு அக்கிராசனப் பிரசங்கமானது பொது ஜனங்கள் நினைத்தது போலவே பார்ப்பனீய காங்கிரசு சார்பாகவும், பார்ப்பனர்களை தென் இந்திய நல உரிமைக் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே பூராவாகக் கொண்டதாகவும் தான் இருந்ததே தவிர பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் தத்துவத்தை அனுசரித்தோ அல்லது இப்போது உலகமெங்கும் கொழுந்துவிட்டெரியும் சமத்துவ உணர்ச்சியையும் சீர்திருத்த தத்துவத்தையும் அனுசரித்தோ ஒருவார்த்தையும் காணக்கிடைக்காத தாயிருப்பதற்கு எவரும் வருந்தாமல் இருக்க முடியாது.

உபன்யாசக் கடைசி பக்கத்தில் ஒரு வரியில் யதீந்தரதாஸ் மரணத்திற்கு அனுதாபம், கிராம புனருத்தாரணம், கதர், நிலத்தீர்வை, மதுவிலக்கு என்கின்ற காங்கிரஸ்காரர்களின் பரிபாஷைப் புரட்டு வார்த்தைகள் மாத்திரம் காணப்படுகின்றதே தவிர, இவற்றிற்கான வேலைத்திட்ட முறைகள் ஒன்றுகூட சொல்லப்படவே இல்லை.

அன்றியும் தீண்டாமை விலக்கு, ஜாதி வித்தியாசம் விலக்கு, ஆலயப்பிரவேசம், பெண்மக்கள் கொடுமை நீக்கம், தொழிலாளர் கஷ்டம், நிவாரணம் முதலாகிய முக்கிய சீர்திருத்த விஷயங்களான எதுவும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கே உயிராய் உள்ள கொள்கைகளைப் பற்றி ஒரு சிறிதும் குறிப்பிடவே இல்லை.

எனவே இவ்வளவு மோசமான அபிப்பிராயங் கொண்ட தலைமைப் பேருரை தென் இந்திய நல உரிமைச் சங்கம் தோன்றிய நாள் முதல் இதுவரை எந்த மகாநாடும் வழங்கி இருக்காதென்றே தைரியமாய்ச் சொல்லலாம்.

இந்தக் காரணத்தைக் கொண்டுதான், ‘இந்து’, ‘சுதேசமித்திரன்’ ‘சுயராஜ்ஜியா’ முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் தலைவர் பிரசங்கத்தை வானமளாவப் புகழ்ந்திருக்கின்றதென்பதே நமது முடிவு.

ஆயினும் திரு. முனிசாமி நாயுடு அவர்கள் பெருந்தன்மையும், யோக்கியப் பொறுப்பும் உடையவர் என்பதில் எவருக்கும் ஆட்சேபனை இருக்காது என்றே சொல்லுவோம். ஆதலால் இவரது தலைமைப் பதவி காலத்தில் எப்படியாவது தீண்டாமை விலக்கு, ஆலயப் பிரவேசம், பெண்ணுரிமை, தொழிலாளர் கஷ்டம், நிவாரணம், மூடப்பழக்க வழக்கங்கள் ஒழிதல் ஆகியவைகளுக்கு அனுகூலம் ஏற்படவேண்டும் என்கின்ற ஆசையின் பேரிலும் நம்பிக்கையின் பேரிலும் மனப்பூர்வமாய் பின்பற்றவும் ஒத்துழைக்கவும் தயாராயிருக்கின்றோம்.

ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டாவது பார்ப்பனர்களைக் கொண்டுவந்து இச்சங்கத்தில் சேர்த்து விடலாம் என்கின்ற எண்ணத்தை மாத்திரம் அடியோடு மறந்து விடும்படியும் அதற்காக தலைமைப் பதவியை உபயோகிக்கக் கூடாது என்பதையும் பலமாக எச்சரிக்கை செய்கின்றோம்.

வரவேற்புத் தலைவர்

திரு. ராமச்சந்திர ரெட்டியவர்கள் தன்னால் கூடியவரை பிரயாசை எடுத்து மகாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு வேண்டிய சவுகரியம் செய்து கொடுத்ததுடன் மகாநாட்டைப் பெருமையாய் நடத்திய பெருமையும் அவருக்கே உரியதாகும். அவரது வரவேற்பு உபன்யாசம் சுருக்கமாயிருந்தாலும் கட்சிக் கொள்கையை தைரியமாக நன்றாக விளக்கிக் காட்டி பல இடங்களில் உண்மையை எடுத்துக் காட்டி இருக்கின்றதற்கு நாம் அவரைப் பாராட்ட வேண்டும்.

அதாவது:-

“இந்தியாவில் எல்லா சமூகமும் சமூக விஷயத்திலும் அரசியலிலும் சமத்துவம் பெறவேண்டும். அரசியல் ஆதிக்கத்தை நேராய் பாமர மக்களுக்கு பிடுங்கிக் கொடுக்கவேண்டும். அதற்கேற்ற உணர்ச்சியையும் அறிவையும் அவர்களுக்கு உண்டாக்க வேண்டும்.

ஏகபோகமாய் எல்லா அதிகாரத்தையும் அனுபவிக்கும் கூட்டத்தாரின் ஆதிக்கத்தை அடியோடு அழித்து, எல்லோரையும் சமமாக்க வேண்டும். ஆகிய இவைகளே பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் கொள்கைகள்” என்றும், “சமுதாய சீர்திருத்தத்தில் பம்பாயில் திரு.ஜோதி ராவ்பூலே ஏற்படுத்திய சத்திய சோதக இயக்கக் கொள்கைகளும், சென்னையில் திரு.ஈ.வெ.ராமசாமி ஏற்படுத்திய சுயமரியாதை இயக்கக் கொள்கைகளும் சிலருக்கு அபிப்பிராய பேதமேற்பட இடந்தந்த போதிலும் அவ்விரு இயக்கங்களிலும் மக்களுக்குள் அன்பை உண்டாக்கி இருக்கின்றன” என்றும்,

“வகுப்பு நியாயம் கேட்பதாலும் வாழ்க்கையில் ஒரு பார்ப்பனனுக்கு உள்ள உரிமை ஒரு பார்ப்பனரல்லாதாருக்கும் இருக்கவேண்டும் என்று சொல்வதாலும் சுயராச்சியம் ஒருக்காலும் தடைபட்டு விடாது. அதிலும் பார்ப்பனரல்லாதார் தங்கள் மனித உரிமையைக் கேட்பது கூட தேசியத்திற்கு விரோதமென்றால் அவ்வித தேசியத்தின் தன்மையை என்னால் அறிய வில்லை” என்றும் பேசியிருக்கின்றார். இவ்வார்த்தைகள் பொன்னே போல் போற்றத்தக்கதாகும்.

தீர்மானங்கள்

தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சர்.பாத்ரோ கொண்டுவந்த தீர்மானமானது, திரு.ஆர்.கே.ஷண்முகத்தாலும், திரு.ஈ.வெ.ராமசாமியாலும் எதிர்த்துக் ‘கச கச’வென்று நசுக்கிக் கொல்லப்பட்டு விட்டதானது, மிகவும் பாராட்டக்கூடிய தாகும்.

பார்ப்பனர்களை தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் சேர்க்கப் போகின்றார்கள் என்கின்ற விஷயம் பரப்பப்பட்டதாலேயே மகாநாட்டிற்கு தமிழ்நாட்டிலிருந்து இவ்வளவு பிரதிநிதிகள் வந்து சேர நேர்ந்ததே ஒழிய மற்றபடி மகாநாட்டை உத்தேசித்தோ, தலைவர் தேர்தலை உத்தேசித்தோ பெரும்பாகம் அதாவது நூற்றுக்கு எழுபத்தைந்து பேர்கள் வரவில்லை என்றே சொல்லலாம்.

திரு.பாத்ரோ அவர்கள் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்கின்ற தீர்மானத்தை இங்கிலீஷில் பிரேரேபித்து, தெலுங்கில் ஒருவரை ஆமோதிக்கச் செய்து பின்பு தமிழில் ஆதரிக்க ஒரு தமிழரை அக்கிரா சனாதிபதி கூப்பிட்டபொழுது ஒரு தமிழராவது எழுந்து வரவேயில்லை.

இந்தச் சாட்சியானது மகாநாட்டில் இருந்த எல்லோருக்கும் வெகு ஆச்சரியமாகவே இருந்தது. ஆகவே இதிலிருந்து பார்ப்பனர்களை பார்ப்பனரல்லாதார் கட்சியில் அங்கத்தினர்களாய் சேர்த்துக் கொள்வது என்கின்ற பேச்சு இனிவெகு காலத்திற்கு மூச்சு காட்ட முடியாதென்ற உறுதி ஏற்பட்டுவிட்டது.

அடுத்த தீர்மானம்

திரு.பாத்ரோ அவர்களின் தீர்மானம் அடைந்த கதியினால் ஜனங்களுக்கு ஏற்பட்ட உற்சாகமானது அடுத்தத் தீர்மானமாகிய முதலில் சொல்லப் பட்ட ராஜித் தீர்மானமானது அதாவது நிர்வாக சபையில் ஏகமனதாக ஒப்புக் கொள்ளப்பட்ட தீர்மானமும், காரியத்தில் எவ்வித குந்தகமில்லாததும், இப்போதும் அமுலில் இருப்பதும் இதற்கு முன்னும் தனி ஜஸ்டிஸ் கக்ஷி மந்திரிகள் அதிகாரத்தில் இருந்த காலத்தில் அமுலில் இருந்ததுமான தீர்மானமும், மற்றும் பார்ப்பனரல்லாத தலைவர்கள், பிரமுகர்கள் ஆகிய எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு வாக்குக் கொடுத்திருந்த ஜஸ்டிஸ் பத்திரிகையில் கலம் கலமாய் ஆதரித்து எழுதிவந்த தீர்மானமும் ஆகிய “பார்ப்பனர்களை சட்டசபைக் கக்ஷியில் சேர்த்துக் கொள்வது” என்கின்ற தீர்மானத்தை யோசித்துப் பார்த்து முடிவு சொல்வதற்கில்லாமல் செய்துவிட்டதுடன், அளவுக்கு மீறின உற்சாகம் சில சமயங்களில் அறிவை மழுங்கச் செய்து விடுகின்றது என்பதற்கும் உதாரணமாயிருந்தது.

அன்றியும் இத்தீர்மானம் தோற்றுப்போனதானது தென்னிந்திய நல உரிமைச் சங்க நிர்வாக மெம்பர்களின் மீது ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றியதாக ஏற்பட்டு விட்டதோடு பொதுவாக தலைவர்கள் என்பவர்களின் நாணயப் பொறுப்பையே அடியோடு பாதித்துவிட்டது.

எப்படியெனில், சங்கத்தின் அங்கத்தினர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட நிர்வாக சபையாரால் சங்கத்தின் நன்மையைக்கோரி சங்கத்தின் பிரதிநிதிகளாக மற்றக் கட்சித் தலைவர்களுடன் ஒப்பந்தம் செய்து சங்க மெம்பர்களின் ஆமோதிப்பை எதிர்பார்த்து அமுலில் கொண்டு வந்துவிட்ட ஒரு தீர்மானத்தை சங்க அங்கத்தினர்களால் ஒப்புக் கொள்ள மறுத்துவிடுவதென்பது நிர்வாகச் சபையின் மீது அங்கத்தினர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதேயாகும்.

மேலும் மற்றக் கட்சியாருடன் ராஜி பேசி வாக்குக் கொடுத்து அவர்களைச் சேர்த்துக் கொண்ட தலைவர்கள் ராஜி நிபந்தனையை நிறைவேற்றிக் கொடுக்க முடியாமல் போனதும், அதற்கு அனு கூலமாயில்லாமல் போனதும், இவ்வளவும் போதாமல் எதிரிடையாய் பிரசாரம் செய்ததுமான காரியங்கள் அவர்களது நாணயத்தையே பாதிக்கத்தக்கதாகும்.

நிற்க, நாம் ஏன் பிரதிநிதிகளின் அறிவு மழுங்கிபோய் விட்டது என்று மேலே சொன்னோம் என்றால், பிரஸ்தாபத் தீர்மானத்தில் உள்ள கெடுதி என்ன என்பதையோ நமது உண்மையான கொள்கைக்கும் நடந்துவரும் அனுபவத்திற்கும் இதனால் விரோதம் என்ன என்பதையோ யாரும் உணர முடியாமற் போனதேயாகும்.

எப்படியெனில், பார்ப்பனர்களை கவுன்சில் பார்ட்டியில் சேர்த்துக் கொள்ளுவது என்பதில் உள்ள நிபந்தனைகள் என்ன யென்பதைப் பற்றி வெளிப்படையாகவும் விளக்கமாகவும் மகாநாட்டிலும் வெளியிலும் நன்றாக எடுத்துச் சொல்லப்பட்டது, எப்படியென்றால், பார்ப்பனர் களைச் சங்கத்தில் அங்கத்தினராகச் சேர்க்கக் கூடாது என்பது ஒன்று; பார்ப்பனர்களைச் சங்கத்தின் சார்பாக சட்டசபைக்கு நிறுத்தக் கூடாது என்பது இரண்டு; பார்ப்பனர்களை சங்கத்தின் சார்பாக சட்டசபை தேர்தலில் ஆதரிக்கவும் கூடாது என்பது மூன்று ஆகிய இம்மூன்று நிபந்தனைகளுக்கு அடங்கியது என்றும் சொல்லப் பட்டது.

மேலும். இப்போது திரு.சேதுரத்தினமைய்யர் மந்திரியாய் இருப்பதை ஜஸ்டிஸ் கட்சி சட்டசபை அங்கத்தினர்கள் ஒன்றரை வருஷ காலமாய் ஆதரித்து வருவதுபோலவும் முதல் ஆறு வருஷம் ஜஸ்டிஸ் மந்திரிகளே முழு ஆதிக்கமாயிருந்து வந்த காலத்தில் திரு.டி.எம். நரசிம்மாச்சாரியார், திரு.டி.சி.தேசிகாச்சாரியார் முதலிய பார்ப்பனர்களைத் தங்களுடன் சேர்த்து ஓட்டு வாங்கிக் கொண்டு அவருக்கும் ஜில்லா போர்டு பிரசிடெண்டு முதலிய பதவிகள் கொடுத்துக் கொண்டும் வந்தது போலவும் இருக்குமென்றும், இப்போது இருந்து வந்த நிலைமையைவிட வேறு எந்த விதத்திலும் மாற்றமுடையதல்ல என்றும் எடுத்துச் சொல்லப்பட்டது.

இன்னும் தெளிவாய் விளக்குவோமானால் ஒரு பார்ப்பனர் தனது தனி ஹோதாவில் சட்டசபைக்கு நின்று நாமும் அவருக்கு எதிராக ஒருவரை நிறுத்தி அவருடன் போட்டியும் போட்டு அதற்காக அவர் வேண்டிய பணம் தன் சொந்தத்தில் செலவழித்து நமது போட்டியையும் சமாளித்து வெற்றி பெற்று சட்டசபைக்கு வந்தபிறகு சட்டசபை யில் ஒத்துழைப்பதாகவோ நமக்குப் பின்னாலிருந்து கைதூக்குவதாகவோ அந்த பார்ப்பனர் சொல்லுவதாக இருந்தால் அதை ஒப்புக் கொள்வதில் நமது கொள்கைக்கோ, கட்சிக்கோ அல்லது நமது விரதத்திற்கோ ஏற்பட்ட அல்லது ஏற்படும் பங்கம் என்ன என்பதுதான்.

இதை ஏன் நாம் இவ்வளவு விளக்கி எழுதுகின்றோம் என்றால், மகாநாடு முடிந்து நாம் சென்னைக்கு வந்தவுடன் “என்ன அய்யா! நீர் பார்ப்பனர்களைக் கட்சியில் சேர்க்கக் கூடாது என்று பத்திரிகையில் கலம் கலமாய் எழுதிவிட்டு, மேடையில் வாய்வலிக்குமட்டும் சண்டப்பிரசண்டமாய் பேசிவிட்டு நெல்லூருக்குப் போய்ப் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமாய்ப் பேசினீர்களாமே! இது சரியா? இதன் இரகசியம் என்ன?” என்று கேட்பதுடன் நமது மரியாதைக்கும் பக்திக்கும் உரியவருமான பெரியார் ஒருவர் வந்து நம்மீது கோபித்துக் கொண்டதாலும், இதைப் பொது ஜனங்கள் அறிய வேண்டி விளக்க வேண்டியதாயிற்று.

கடைசியாக நாம் இது விஷயத்தில் சொல்வதென்னவென்றால், இவ்வளவு சங்கதியும் தெரிந்து எந்த விதத்திலும் பார்ப்பனர் சங்காத்தமே கூடாது என்பதாகக் கருதி யாராவது எதிரிடையாக ஓட்டுக் கொடுத்திருப்பார்களானால், அவர்களையெல்லாம், நாம் பாராட்டுவதுடன், இவ்வித உணர்ச்சிப் பெருகி இருப்பதற்கு நாம் மகிழ்ச்சியடைவதோடு அவ்வுணர்ச்சி அவ்வளவு தூரம் பரவி இருப்பதற்கு உண்டான பெருமையில் நமக்கும் ஒரு சிறு பங்காவது இருக்கட்டும் என்று பெருமையும் அடைகின்றோம்.

ஆனால், அர்த்தம் தெரியாமலும் கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டும் அலட்சியம், அசூயை, பொறாமை முதலிய வேறு காரணங்களைக் கொண்டும் வேண்டுமென்றே தோற்கடிக்கப் பட்டதாயிருந்தால் அது விசனப்பட வேண்டிய காரியமேயாகும்.

தலைவர் தேர்தல்

இந்த இயக்கத்திற்கு ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மகாநாட்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இயக்கத்தை நடத்த ஒரு கமிட்டி நியமிக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட திருத்தமானது காலநிலைமையை உணர்ந்து ஏற்கனவே முடிவு செய்து கொண்டு வரப்பட்ட தாகும்.

ஏனெனில், தலைவர் தேர்தலில் யாரையும் ஏகமனதாய் தெரிந்தெடுக்க முடியவே முடியாத நிலைமையில் இருந்ததோடு, யார் தெரிந்தெடுக்கப்பட்டிருந்தாலும் சிலர் தலைவர் தேர்தல் காரணத்தைச் சொல்லிக் கொண்டே கட்சியை விட்டு வெளியேறி கட்சிக்குக் கெடுதி செய்யக்காத்துக் கொண்டிருந்தார்கள் என்பதும் நாம் நன்றாய் அறிந்திருந்ததோடு, தலைவர் தேர்தலுக்கு ஆசைப் பட்டவர்களில் பெரும்பான்மையோர் தங்களுக்கு தலைமைப் பதவி கிடைக்கா விட்டாலும், வேறு ஒருவருக்கு ஆகக்கூடாது என்பதிலேயே அதிகக் கவலை வைத்திருந்தவர்களாகவும் காணப்பட்டார்கள்.

இவைகளையெல்லாம் உத்தேசித்தே கமிட்டியை வலியுறுத்தப்பட வேண்டியதாயிற்று. ஆனால், திரு.பி.டி.ராஜன் அவர்கள் தலைவர் ஸ்தானத்திற்கு அபேட்சகராய் தான் நிற்பதில்லை என்றும், மகாநாட்டுத் தலைவர் என்கின்ற முறையில் திரு.முனிசாமி நாயுடுவை தலைவராய் இருக்கட்டும் என்றும் மிக்க பெருந்தன்மையோடும், கட்சியின் நன்மையில் கவலை கொண்டும் சொல்ல முன் வந்ததே தலைவர் தேர்தல் சம்பந்தமாக ஏற்படக்கூடும் என்று எதிர்பார்த்த கஷ்டங்கள் எல்லாம் திடீரென மறைந்ததற்கு முக்கிய காரணமாகும்.

அந்த விஷயத்தில் திரு.ராஜன் அவர்களை யாரும் பாராட்டியே ஆக வேண்டும். பிறகு டாக்டர். சுப்பராயன் முதல் கொண்டு மற்ற தலைவர்களும் அந்த முடிவை ஒப்புக் கொண்டதும் போற்றக் கூடியதேயாகும். இவற்றால் மகாநாட்டுத் தலைவர் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதினாலும் எல்லாத் தலைவர்களும் ஒப்புக் கொண்டதாலும் பிரதிநிதிகள் எல்லோரும் இதை ஏகமனதாய் ஒப்புக் கொண்டு தீர்மானித்ததாலும், நெல்லூர் மகாநாட்டின் முடிவு எதிர்பாராத வெற்றியைக் கொடுத்ததோடு, நெல்லூர் மகாநாட்டில் ஏற்படப் போகும் பிளவினால் தமது காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்று கருதி எதிர்பார்த்துக் கொண்டு இருந்த நமது இயக்க எதிரிகளுக்கும் சுயநலக்காரர்களுக்கும் ஜீவ நாடி ஒடுங்கிப் போய் விட்டதுடன் இன்னது செய்வது என்று தோன்றாமல் ஸ்தம்பித்து போகும்படி நேரிட்டுவிட்டது.

எனவே நெல்லூர் மகாநாடானது பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்குப் பல விதத்திலும் ஒரு பெரிய வெற்றிக் குறியேயாகும்.

எல்லாவற்றையும் விட நமது கட்சிக்கு ஒரு பெரிய கவுரவம் என்னவென்றால், இதுவரை நமது கட்சியைப் பற்றி குறை கூறி ஜஸ்டிஸ் கட்சி தேசத்துரோக கட்சியென்றும் அதை எப்போதும் எதிர்த்தாக வேண்டும் என்றும் எப்படியாவது ஒழித்தாக வேண்டும் என்று எழுதி வந்த ‘தேசிய பத்திரிகை’ களாகிய பார்ப்பனப் பத்திரிகைகளும் “தேசிய வீரர்களாகிய” பார்ப்பனர்களும் மற்றும் அவர்கள் வால்களும் இன்று நமது கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வக்காலத்துப் பேசுவதும் கட்சியின் கொள்கைகளைப் பற்றி பேச்சு மூச்சுக் காட்டாமலிருப்பதும் கட்சியின் வெற்றியாகும்.

ஒரு சமயம் பார்ப்பனர்களில் சிலர் “எந்தப் பார்ப்பனன் ஜஸ்டிஸ் கட்சியில் சேரப் போகிறான். இவர்கள் கூப்பிட்டால்தான் யார் வரப்போகிறார்கள்” என்று சொல்லக்கூடும். அப்படியானால் இந்து பத்திரிகை முதல் திரு.சத்தியமூர்த்தி வரை பார்ப்பனர்களை இக்கட்சியில் சேர்த்துக் கொள்ளாததற்கு வருத்தப்படுவானேன்? மற்ற “தேசீயப் பத்திரிகை”களும் தலைவர்களும் பார்ப்பனர்களுக்கு வக்காலத்துப் பேசுவானேன்? என்பதுதான் நமக்கு விளங்கவில்லை.

(குடி அரசு - தலையங்கம் - 13.10.1929)