நீங்களே சிந்தித்துப் பாருங்கள்! பார்ப்பனர்கள் குறளுக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள் என்பதை? அவர்கள் பகவத் கீதையை அச்சுப் போட்டு இனாமாக வழங்கி வருவதும் உங்களுக்குத் தெரியாததல்லவே! இது ஏன் என்று நீங்கள் சிந்தித்தது உண்டா? கிருஷ்ணன் கதையின் மூலம் நாலு சாதி முறை உண்டென்பதையும், அதில் பார்ப்பனர்களே முதல் சாதியினர் என்பதையும் கடவுளுக்கும் பெரியவர் பார்ப்பனர் என்ற தத்துவத்தையும் கூறியிருப்பதோடு, எப்படியும் அதர்மம் செய்பவர்களுக்கு மன்னிப்பு உண்டு - வருணதர்மம் செய்பவர்களுக்கு மன்னிப்பு இல்லை என்று ஒப்புக் கொண்டிருப்பது தான் அதற்குக் காரணம் என்பதை உணருங்கள்!

periyar_330வேதாந்திகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் கீதையில் 1000 வரிதெரிந்திருப்பது ஏன்? குறளில் 2 வரி கூடத் தெரியாதது ஏன் என்பதையும் காவி வேட்டி கட்டிக் கொண்டு ஒரு சில திராவிடர்கள் கூட கீதைப் பிரச்சாரம் செய்து வருவது ஏன் என்பதையும் யோசித்துப் பாருங்கள்! கீதை எவ்வளவு அக்கிரமத்திற்கும் முக்காடு போட்டு விடும் - காவியுடையைப் போல். ஏன்? கீதைக்குத் தலைவனான கிருஷ்ணனே - அக்கிரமத்தின் தலைவ னான காரணத்தால்.

தோழர்களே! நாம் எதிர்க்கும் நான்கு சாதி முறையைக் கடவுளின் பேரால் வலியுறுத்தத்தான் கீதையும், கிருஷ்ண பஜனையும் என்பது நினைவிருக்கட்டும்.

கீதை படிப்பவர்கள் எத்தகைய தர்மத்தையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், பகவானே இதைச் செய்துள்ள போது சாதாரண மனிதனான நான் எம்மாத்திரம்? என்றோ, எல்லாம் பகவான் செயல் என்றோ - நான் ஏன் பார்ப்பான் என்று கிருஷ்ணனிடம் கேட்டுத் தெரிந்து கொள் என்றோ சுலபமாகப் பதில் கூறி விடலாம்.

ஆனால் குறளைப் படித்தாலோ- தர்மத்தின்படி நடக்க வேண்டும். பித்தலாட்டம் செய்ய முடியாது. பித்தலாட்டம் செய்பவரைக் கண்டா லும் பொறுத்துக் கொண்டிருக்க முடி யாது.

குறளிலும் இன்றைய நிலைக்குப் புறம்பான கருத்துகள் சில இருக்கலாம். அவற்றை மாற்றிவிட வேண்டியது தான். அத்தகைய மாற்றத்திற்கு இடம் தருவதுதான் குறள்.

குறளை முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். மாமிசம் சாப்பிடுவது மறுக்கப்பட்டிருக்கிறது எனலாம். காய்கறி, தானியம் இவை அபரி மிதமாகக் கிடைக்குமானால் மாமிசம் தின்ன வேண்டிய அவசியம் தான் என்ன இருக்கிறது?

முகமது நபியவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களைக் குறளில் அப்படியே காணலாம். முஸ்லீம்களுக்கு எதிராக அதில் ஒன்றுமே காண முடியாது. அது மனுதர்மத்துக்கு உண்மையான விரோதி நூல் என்றே திடமாகச் சொல்லலாம். மனு தர்மச் சூத்திரங்களுக்கு நேர்மாறான கருத்துகளைக் கொண்ட குறள் அடிகளை ஏராளமாகத் திருக்குறளிலிருந்து எடுத்துக்காட்டலாம்.

மனித சமுதாயத்திற்கே நல்வழிகாட்டி நன்னெறியூட்டி நற்பண்புகளையும் ஒழுக்கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப்பட்ட நூல்தான் திருக்குறள்.

-பெரியார்

Pin It