மக்கள் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புதிய அறிவிப்புகளுக்கு மக்கள் பேராதரவை வழங்கி வரும் நிலையில் சமச்சீர் கல்வித் திட்டத்தில் முதல்வர் எடுத்த முடிவு கடும் விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. 

அனைத்து திட்டங்களிலும் ‘சுய பெருமைகளை’ திணித்துக் கொண்டிருப்பவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்நாடு என்றாலே அது காலம் முழுமைக்கும் கலைஞர் கருணாநிதி அதிகாரத்தின் கீழ் தான் என்று கருதியே அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார். சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டத்திலும் தன்னை புகுத்திக் கொண்டார். அதில் ஜெயலலிதா ஆட்சிக்கு மாறுபாடு இருந்தால் அதை நீக்கி விடலாம். அதற்காக சமச்சீர் கல்வித் திட்டத்தையே நிறுத்தப் போய், அது மக்களிடையே கடும் அதிருப்தியையும் எதிர்ப்பை யும் உருவாக்கிவிட்டது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திலும், அ.தி.மு.க. ஆட்சி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. 

சமச்சீர் கல்வியை ஒழிப்பதற்குப் பின்னால் பார்ப்பனர்கள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இதற்கு முதல்வர் ஜெயலலிதாவும் துணை போவது பார்ப்பனியத்துக்கு உயிரூட்டுவதேயாகும். உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ள குழுவில் 9 பேரில் 6 பேர் பார்ப்பனர்கள். தேவேந்திரநாத் சாரங்கி (தலைமை செயலாளர் - பார்ப்பனர்), ஜி.பாலசுப்பிரமணியன் (முன்னாள் கல்வி இயக்குனர் - பார்ப்பனர்), விஜயலட்சுமி  சீனிவாசன் (முன்னாள் முதல்வர் - லேடி ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளி - பார்ப்பனர்), ஜி. ஜெயதேவ் (நிறுவனர்-டி.ஏ.வி. பள்ளிகள் குழுமம் - பார்ப்பனர்), திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி (இயக்குனர் - பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளிகள் குழுமம் - பார்ப்பனர்), பேராசிரியர் தி.கே. திரிபாதி (பார்ப்பனர்), பேராசிரியர் அனில் சேத்தி, பேராசிரியர் டி. சபீதா (பள்ளிக்கல்வித் துறை செயலாளர்), வசுந்தரா தேவி (பள்ளிக் கல்வி இயக்குனர்). 

கல்வியாளர் என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ள சி. ஜெயதேவ், திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி - இருவருமே கல்வியாளர்கள் அல்ல. கல்வி வியாபாரம் நடத்துகிறவர்கள். இவர்கள் எப்படி கல்வியாளர்கள் பட்டியலில் இடம் பெற முடிந்தது? 

அண்மையில் லயோலா கல்லூரி மாணவர்கள் எடுத்துள்ள கருத்துக் கணிப்பில் ஈழத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ள முவுகளுக்கு அமோக வரவேற்பும், சமச்சீர் கல்வித் திட்டத்தில் எடுத்துள்ள முடிவுக்கு கடும் எதிர்ப்பும் வெளிப்பட்டுள்ளதை தமிழக முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 

சமச்சீர் கல்விப் பிரச்சினையில் பார்ப்பனர்களின் ஆலோசனைகளை முதல்வர் ஜெயலலிதா பின்பற்றத் தொடங்கினால் அது கடும் எதிர்ப்புகளையே கொண்டு வந்து சேர்க்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 

‘துக்ளக்’, ‘தினமலர்’ போன்ற பார்ப்பன நாளேடுகள், சமச்சீர்கல்விக்காக நஞ்சை கக்கி எழுதி வருகின்றன. பார்ப்பனர்கள் ‘தகுதி திறமை’ என்று கூப்பாடு போடுவது ஒரு பெரிய மோசடி! ‘தரமான’ பாடத் திட்டம் என்பதற்கு இவர்களிடம் உள்ள விளக்கம், மாணவர்களின் சிந்தனை சக்திக்கு மீறிய கடுமையான பாடங்களை சுமக்க வைப்பதுதான். இது, சுய திறமை, ஆற்றல் திறன், சிந்திக்கும் தன்மையை வளர்த்துவிடாது. பார்ப்பன மேட்டுக்குடி சூழலில் வாழும் மாணவர்களுக்கு வேண்டுமானால் வசதியாக இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான ஏழை நடுத்தர குடும்பங்களிலிருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு இது சுமையாகி வளர்ச்சியைத் தடைப்படுத்திவிடும். 

இலவச அரிசி, இலவச மிக்சி, திருமண கடன் உதவி என்று ஏழை எளிய மக்களை முன்னிறுத்தி திட்டம் போடும் ஆட்சி, கல்விக் கொள்கையிலும் அதே சமூகப் பார்வையில் திட்டங்கள் தீட்ட வேண்டுமே தவிர, ‘தகுதி, திறமை, தரம்’ என்ற பார்ப்பன ‘மந்திரத்தை’ ஓதிக் கொண்டிருப்பது சமூக நீதிக்கு இழைக்கும் துரோகமேயாகும். 

பெரியார் திராவிடர் கழகம் - கொள்கைகளுக்காக போராடும் இயக்கம், ஈழப் பிரச்சினை, அரசு ஆடம்பர விழாக்கள் நிறுத்தம், ஏழை எளிய மக்களின் துயர் துடைப்பு திட்டங்களில் இந்த ஆட்சியை உறுதியாக ஆதரிக்கும் நாம், சமச்சீர் கல்வித் திட்டத்தில் இந்த ஆட்சியின் செயல்பாடுகளை உறுதியாகவே எதிர்க்கிறோம். ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகளான இடதுசாரி கட்சிகளே சமச்சீர் கல்வித் திட்டத்தில் இந்த ஆட்சியின் நிலையை எதிர்த்து வருவதை தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு, தமது முடிவை மறுபரிசீலனை செய்யக் கோருகிறோம்.

Pin It