கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

raveendranathஇந்தியா முழுவதுமே கல்வியில் ஏராளாமான மாற்றம் கொண்டுவரப்படுகிறது. தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை - 2019 இன் அடிப்படையில் இது நடக்கிறது. இன்னும் அந்த வரைவு அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்படவில்லை. அதற்கு முன்னதாகவே எல்லா விஷயங்களையும் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். மாநில அரசுகள் நடத்தும் பல்கலைக்கழங்களின் அதிகாரத்தை மத்திய அரசே எடுத்துக் கொள்வதற்கான முயற்சிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து வருகிறார்கள். பெரிய பல்கலைக்கழகங்களை உருவாக்குகிறோம் என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் கையில் உயர்கல்வியைக் கொடுக்கிறார்கள். குறிப்பாக  'Jio கல்வி நிறுவனங்கள்'  என்று சொல்லி, நிதி ஆதாரத்தைப் பெருக்குவது, அங்கீகாரம் அளிப்பது என உதவி செய்து வருகிறார்கள். இந்த 'Jio' நிறுவனம் இதுவரை பள்ளி கூட நடத்தியதில்லை. 

அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசே நுழைவுத் தேர்வு, வெளியேறும் தேர்வு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். மருத்துவக் கல்விக்கு 'நீட்'மற்றும் 'நெக்ஸ்ட்' என நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் மூலம் மாநில அரசுகளிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்து கல்வியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். 

கல்வியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஓரே தேசம், அது இந்து ராஷ்டிரம் என்னும் தங்களுடைய கருத்தைப் பாடத்திட்டமாக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டுவருகிறார்கள். பிற்போக்கான கல்விமுறையைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் கண்கூடாகத் தெரிகின்றன.

கோமியத்தை மருந்தாக அறிவிப்போம் என்று மத்திய அமைச்சர் சொல்கிறார். பஞ்சகவ்யம் அதிக ஊட்டச்சத்து உடையது. அது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அதை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். பிசியோதெரபிக்குப் பதிலாக யோகாவைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதலாம் ஆண்டு மருத்துவத்தில் மாற்று மருத்துவ (ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்றவை) முறைகளைப் படிக்க வேண்டும் என்று கொண்டு வருகிறார்கள். 

வேத காலக் கல்வி முறையே சிறந்தது என்று சொல்லி அவற்றைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில் சொல்கிறார்கள். எல்லாத் துறைகளிலும் பிற்போக்கானவற்றைக் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.

உயர்கல்வி நிறுவனங்களில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டங்களில் செயல்படும் மாணவர்களை அச்சுறுத்துகிறார்கள். இப்படிக் கல்வியைக் கார்ப்பரேட்மயமாகவும், ஒரே தேசம் ஒரே கல்வி என்று காவிமயமாகவும் மாற்றுவது என்ற இலக்கோடு செயல்பட்டுவருகின்றனர்.

இதனால் இந்தச் சமூகம் கல்வியில் தேக்க நிலை அடையும் வாய்ப்புகள்தான் இருக்கின்றன.

டாக்டர் இரவீந்திரநாத், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்.