கீற்றில் தேட...

இந்திய ஒன்றியத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு பல வளரும் நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. பல நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6-12 விழுக்காடு நிதி ஒதுக்கும் நிலையில் இந்திய அரசு 1.02-1.28 நிதி மட்டுமே ஒதுக்கி வருகிறது. 2025-ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 விழுக்காடு நிதி ஒதுக்கவேண்டும் என்று தேசிய நலவாழ்வுத் திட்ட அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதை நோக்கிய சாதகமான நடவடிக்கைகள் ஏதும் இல்லை. 2019 - 20-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 65037.88 மட்டுமே சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்குவோம் என்று சொன்ன ‘நீடித்த வளர்ச்சி இலக்கை' நடுவண் அரசு அடைய வில்லை.

பெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் இவர்களைக் கருத்தில் கொண்டே ஒவ்வொரு திட்டத்தையும் கொண்டு வருவதாக நடுவண் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி சொல்கிறார். மருத்துவத்திற்காகத் தங்கள் கையிலிருந்து மக்கள் செலவு செய் வதை தடுத்து நிறுத்திவிடுவோம் என்கிறார். அதற்காகவே ஆயுஷ்மான் பாரத் யோஜனா, பிரதமர் ஜன ஆரோக்கிய யோஜனா என்கிற திட்டங்கள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் ரூபாய் சுகாதார காப்பீடு வழங்கப்படும் என்கிறது நடுவண் மோடி அரசு. இதன்மூலம் 50 கோடி ஏழை இந்திய மக்கள் பயனடைவார்கள் என்று சொல்கிறார்கள்.

சுகாதாரத் துறை நெருக்கடி நிலைமை

2014ஆம் ஆண்டு பா.ச.க. அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திலிருந்து சுகாதாரத் துறையில் உள்ள தடைக்கற்களை அகற்று வோம் என்று சொல்லிவருகிறார்கள். உள்கட்டமைப்பு வசதிக் குறைபாடு, சுகாதாரச் சேவைகளைப் பெறுவதில் உள்ள தடை, அதிகரிக்கும் மருத்துவச் செலவு இவற்றையெல்லாம் மாற்றுவோம் என்று பேசுகிறார்கள். ஆனால் நிலைமையோ கவலைக்கிடமாக உள்ளது. பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல் மருத்துவமனையில் குழந்தைகள் நூற்றுக்கணக்கில் இறக்கின்றனர். பீகார் மாநில முசாபர்பூரில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் சத்துக் குறைபாட்டால் மூளை அழற்சி நோயால் இறந்தனர். உலகிலேயே அதிகசத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் இந்தியாவில்தான் உள்ளனர். பேறுகால மரணங்கள் சிசுமரணங்கள் இன்னும் குறைக்கப் படவில்லை. இதுபோன்ற தவிர்க்கப்படக் கூடிய இழப்புகள் இறப்புகள் ஆண்டுதோறும் ஏராளமாக நடந்துகொண்டே இருக்கின்றன.

ஊரக சுகாதாரப் புள்ளிவிவரம் 2017-18-இன்படி இந்திய அளவில் இன்னமும், 32900 துணை சுகாதார நிலையங்கள் (5000 மக்கள் தொகைக்கு ஒன்று) 6430 ஆரம்ப சுகாதார நிலையங்கள் (30000 மக்கள் தொகைக்கு ஒன்று), 2188 சமூகநல மையங்கள் (80000-120000 மக்கள் தொகைக்கு ஒன்று) ஊரகப் பகுதிகளில் தேவைப்படுகின்றது. தற்போது செயல்படும் அரசு துணை சுகாதார நிலை யங்களில் ஏழு விழுக்காடும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 12 விழுக்காடும், சமூகநல மையங்களில் 13 விழுக்காடு மட்டுமே இந்தியப் பொதுச் சுகாதாரத் தர நிறுவனம் நிர்ணயித்துள்ள தரத்தில் செயல்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் : மக்கள் தொகை விகிதமானது உலக நல வாழ்வுக் கழகம் நிர்ணயம் செய்ததை விட 25 மடங்கு குறைவாக உள்ளது.

இந்தியாவில் மருத்துவக் காப்பீடு ஒரு பார்வை

மக்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகள் மக்களின் வறுமைக்குக் காரணமாக உள்ளது. வறுமை பல நோய்கள் ஏற்பட முக்கிய காரணி யாக உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியர்கள் 16 விழுக்காடு உள்ளனர். உலக அளவில் மருத்துவத்திற்காகச் செலவிடப் படும் தொகையில் ஒரு விழுக்காடு மட்டுமே இந்தியாவில் செலவிடப்படுகிறது. உலக வங்கி அறிக்கையின்படி 2003-04ஆம் ஆண்டு களில் 5.5 கோடி இந்தியர்களும், 2010ஆம் ஆண்டு முப்பது கோடி இந்தியர்களும் காப்பீடு பெற்றனர். இவர்களில் 18 கோடிபேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள். இந்திய அரசு அறிக்கைப்படி 2014ஆம் ஆண்டு 17 விழுக்காடு இந்தியர்கள் அதாவது 21.6 கோடி இந்தியர்கள் மட்டுமே காப்பீடு பெற்றி ருந்தனர். 2015ஆம் ஆண்டு 63 கோடிபேர் இந்தியாவில் ஏதேனும் ஒருவகை சுகாதாரக் காப்பீடு பெற்றிருப்பார்கள் என்று உலகவங்கி அறிக்கை கூறியது.

2009-10ஆம் ஆண்டுகளில் மொத்த மருத்துவச் செலவில் 6.4 காப்பீடு திட்டம் மூலமாக செலுத்தப்பட்டது. அது அதிகரித்து 2015ஆம் ஆண்டு 8.4 உயர்ந்துள்ளது. மோடி யின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம்; 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் நாள் இத்திட்டம் தொடங்கப்பட்டது. வருவாய் குறைந்த 40 விழுக்காடு மக்களுக்கு 10 கோடி குடும்பங்களுக்கு அதாவது 50 கோடிப் பேர் சட்டத்தால் பலன் கிடைக்கும் குடும்பத் திற்கு ஓர் ஆண்டுக்கு 5 இலட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும். 2011-ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட சமூக, பொருளாதார, சாதிப் புள்ளி விவரத்தின்படி பயனாளிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்.

ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலையில் பணி யாற்றும் தொழிலாளர்கள் அஸ்பெஸ்டோசிஸ் உள்ளிட்ட நுரையீரல் நோய்களுக்கு ஆளாவது பற்றி, அவர்களின் உடல்நலம் பற்றிய வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் 1995இல் வந்தபோது உச்சநீதிமன்றம் மருத்துவவசதி என்பது ஒவ்வொரு இந்தியரின் அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்தது. அதற்குப் பிறகு 23 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அரசு பொது மக்களுக்கான ஒரு காப்பீட்டுத் திட்டத் தைக் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத் தக்கது. நடுவண் அரசு காப்பீட்டுத் திட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் 8000 இணைக்கப்பட்டுள்ளன. பயனாளிகள் பற்றிய தகவல்கள் இணையம் மூலம் இணைக் கப்பட்டு மருத்துவமனைகளில் உள்ள காப்பீட்டு அலுவலர் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

காப்பீட்டுக்கு நிதி மூலம் இந்தியாவில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் மாநிலப் பட்டியலில் உள்ளது. மருத்துவசேவைகள் மற்றும் மருத்துவக் கல்விக்கு மாநில அரசு நிதி வழங்குகிறது. நடுவண் அரசின் மோடி காப்பீடு திட்டம் வேறு, மாநில அரசுகள் வழங்கும் காப்பீட்டு திட்டம் வேறு. இருப்பினும் இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளும் நடுவண் அரசு காப்பீட்டுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. தில்லி, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்கள் தங்களது கோரிக்கைகளைச் சரிசெய்யாவிட்டால் அதில் சேரப்போவ தில்லை என அறிவித்துள்ளன. நடுவண் அரசு காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் மாநிலங்களுக்கு 60 விழுக்காடு நிதியை நடுவண் அரசு வழங்கும் என்றும் மீதமுள்ள நிதியை மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் திட்டம் கூறுகிறது. மாநில அரசுகள் தனியார் காப்பீடு நிறுவனங் களுடன் இணைந்து திட்டத்தை செயல்படுத் தலாம் என்கிறது திட்ட அறிக்கை. நடுவண் அரசு, சுகாதார காப்பீட்டுக்கு முதலில் 2000 கோடி ரூபாய், பிறகு 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றது. 50 கோடி பேருக்கு 10 கோடி குடும்பங்களுக்கு இது எப்படிப் போதுமானது என்று நலவாழ்வுப் பொருளியல் ஆய்வாளர்கள் கேட்கின்றார் கள்.

நடுவண் அரசுக் காப்பீட்டுத் திட்டம்-2018 வருவதற்கு முன்பே பல மாநில அரசுகள் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. 2009ஆம் ஆண்டில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தமிழகத்தில் தி.மு.க. அரசு காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கியது. ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரம் வரை உள்ள வர்களுக்கு 51 நோய்களுக்கு ஆண்டுக்கு ஒரு இலட்சம் காப்பீடு அளிக்கப்பட்டது. அதற்குமுன்பே ஆந்திர மாநில அன்றைய ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆரோக்கியஸ்ரீ என்ற காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கி இருந்தது. அதில் பயனாளிகளே காப்பீட்டு பிரிமியம் தொகை யை அளிக்கவேண்டும். ஆனால், தமிழக அரசு காப்பீட்டுத் திட்டத்தில் அரசு காப்பீட்டுத் தொகையை அளித்தது. 2011 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. அரசு அமைந்த பிறகு, ஏற்கனவே இருந்த கலைஞர் காப் பீட்டுத் திட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு முதலமைச்சரின் விரிவாக்கப்பட்ட காப் பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் 1027 சிகிச்சை முறைகள் 154 தொடர் சிகிச்சை முறைகள் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் காப்பீடு அளிக்கப்படுகின்றன. 1.57 கோடி குடும்பங்கள் பயன் பெறுகின்றன. நடுவண் அரசு காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகத்தில் 77 இலட்சம் குடும்பங்கள்தான் இணைக்கப் பட்டுள்ளன. அதேவேளை நடுவண் அரசுத் திட்டத்தில் 1350 சிகிச்சைகள், மாநில அரசு திட்டத்தில் 1027 சிகிச்சைகள். தமிழக அரசு திட்டத்தில் 158 சிகிச்சைகள் அரசு மருத்துவ மனையில் மட்டுமே செய்ய முடியும். தமிழக அரசு காப்பீட்டுக்காக ஆண்டுதோறும் சுமார் 1360 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. தமிழகத்தில் நடுவண் அரசு மற்றும் மாநில அரசு 2 காப்பீட்டுத் திட்டத்திலும் ஒருவர் ஒரேநேரத்தில் பயன் பெற முடியாது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அரசு காப்பீட்டுத் திட்டம் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கும்கீழ் இருப்பவர் களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் நடுத்தட்டு மக்கள், கீழ்நடுத்தட்டுவர்க்க மக்கள் ஆகி யோருக்கு அரசு எந்தவித மருத்துவ வசதி அளிப்பதையும் உறுதிசெய்யவில்லை. நடுத்தர வர்க்கப் பிரிவினர் தனியார் காப்பீட்டு நிறுவனங்களில்தான் சுகாதாரக் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். அப்படி இல்லையேல், சொந்தச் செலவில் மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். மேலும், அரசு காப்பீடு, தனியார் காப்பீடு எந்தக் காப் பீடாக இருப்பினும் வரையறுக்கப்பட்ட நோய்கள், வரையறுக்கப்பட்ட சிகிச்சை முறைகளுக்கு மட்டுமே பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் காப்பீடு கிடைக்கும். அதிலும் 100 விழுக்காடு காப்பீடு கிடைக்குமா என்றால் உறுதியாகச் சொல்ல முடியாது. மக்களுக்கு அவ்வப்போது ஏற்படுகின்ற காய்ச்சல், வயிற்றுப் போக்கு மற்றும் சிறு சிறு நோய்கள், சிறு காயங்கள் போன்றவற்றிற்கு காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாது. தொடர் மருத்துவம் செய்ய வேண்டிய சர்க்கரை நோய், மிகைக் குருதி அழுத்தம், இதய நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், வலிப்பு நோய் உள்ளிட்ட வாழ்நாள் முழுவதும் மருத்துவம், மருந்துகள் எடுக்க வேண்டிய நோய்களுக்கு மருந்து மாத்திரை மற்றும் ஆய்வகச் செலவுகளுக்கு நடப்பிலுள்ள காப்பீட்டுத் திட்டங் கள் உதவுவதில்லை. மேற்கண்ட நோய் களுக்கு மக்கள் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவிட்டு மருத்துவம் செய்து கொள்ள வேண்டியதுதான்.

காப்பீட்டுத் திட்டங்கள் அரசு மருத்துவ மனைகளை மெல்லமெல்லத் தனியார் மருத்துவமனைகள் போல ஆக்கிவருகின்றன. காப்பீட்டு அட்டை இல்லாமல் இன்று அரசு மருத்துவமனைகளில் எந்த ஒரு அறுவை சிகிச்சையும் செய்ய முடியாது. சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற அறிதல் முறை களையும் செய்யமுடியாது என்ற நிலைமை உருவாகியுள்ளது. இதனால் காப்பீடு இல்லாத மக்கள் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற முடியாது என்ற நிலைமை ஏற்பட்டு வருகிறது. துணை சுகாதார நிலையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழக சுகாதாரக் கட்டமைப்பின் முதுகெலும்பு போன்றவை ஆகும். இன்று நடுவண் அரசு துணை சுகாதார நிலையங்களையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும் நலவாழ்வு மையங்கள் என்ற பெயரில் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் நடக்கின்றன. அவற்றைத் தனியார் நிறுவனங்கள் மூலம் நிர்வாகம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனெவே நடுவணரசு மாநில அரசு மருத்துவமனைகளில் 30 விழுக்காடு படுக்கைகளைத் தனியாருக்கு அளிக்க வற்புறுத்தி வருகின்றது.

நாட்டிலுள்ள 70 விழுக்காடு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிகிறார்கள். 70 விழுக்காடு மருத்துவ சேவை வசதிகள் நகர்ப் புறங்களில்தான் உள்ளன. 70 விழுக்காடு நோயாளர்கள் தங்கள் கைப்பணத்தில்தான் இத்தனை காப்பீட்டு திட்டங்கள் இருந்தும் மருத்துவம் பார்த்துக் கொள்கின்றனர். ஏழை எளிய மக்கள் நகர்ப்புற கார்ப்பரேட் மருத்துவமனையில் நுழையக்கூட முடியாது என்ற நிலைமைதான் உள்ளது. தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் மோடி கேர் திட்டத்தில் இணைவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். காரணம் என்னவெனில் நடுவண் அரசு மருத்துவ சிகிச்சைகளுக்காகத் தருவதாக உறுதி செய்துள்ள தொகை மிகவும் குறைவாக உள்ளதாகக் கூறி, திட்டத்தில் இணைய மறுக்கின்றனர். இங்கிலாந்து நாட்டில் தேசியச் சுகாதாரச் சேவை செயல்படுகிறது. இத்திட்டத்தில் அந்நாட்டு மக்கள் அனை வருமே பயன் பெற முடியும். ஆனால் இந்தியாவில் மோடி கேர் திட்டம் நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்காகவும் தொடங்கப் படவில்லை. ஏழை மக்களுக்காக மட்டுமே தொடங்கப் பட்டுள்ளது. அதுவும் குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு மட்டுமே பலன் பெற முடியும். அமெரிக்காவில் ஒபாமா கேர் குடிமக்கள் அனைவருக்கும் சுகாதாரக் காப்பீட்டை கட்டாயம் ஆக்கியது. மக்கள் முதலில் காப்பீட்டுத் தொகையைக் கட்ட வேண்டும். பிறகு அரசு அதை மானியமாக வழங்கும் என்பது ஒபாமா கேர் திட்டமாகும்.

140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் போதுமான நவீன மருத்துவர்கள் இல்லை. உலக சுகாதாரக் கழகம் ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு நவீன மருத்துவர் இருக்க வேண்டும் என்கிறது. இந்த இலக்கை தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மட்டுமே அடைந்துள்ளன. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இன்னும் அடையவில்லை. மேலும் செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் போதுமான அளவிற்கு இல்லை. அரசு மருத்துவமனை களில் போதுமான அளவு மருத்துவப் படுக்கைகள் மக்கள் தொகைக்கு ஏற்ப உருவாக்கப்படவில்லை. இந்தியாவில் 11072 மக்களுக்கு ஒரு நவீன மருத்துவர், 1744 பேருக்கு ஒரு மருத்துவப் படுக்கை 55591 பேருக்கு ஒரு அரசு மருத்துவமனை மட்டுமே உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அனைவருக்கும் நலவாழ்வு என்ற இலக்கை அடைய வேண்டும் என்றால், அரசு சுகாதாரத் துறைக்கு நிறைய நிதி ஒதுக்க வேண்டும். அனைத்து வகையான மருத்துவ சிகிச்சை முறைகளும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஈடான வகையில் தரமாகவும் விரைவாகவும் மக்கள் வாழ்விடங்களுக்கு அருகாமையிலும் கிடைக்கச் செய்திட அரசு முயற்சிக்க வேண்டும். அதற்குப் பொது மருத்துவத் துறையையும் அரசு மருத்துவக் கட்டமைப்புகளையும் மேற்சொன்ன வகையில் உயர்த்தி மேலும் வலுப்படுத்த வேண்டும். வெறுமனே காப்பீடு அட்டைகளை அளித்துவிடுவதால் மட்டுமே நிலைமை மாறிவிடாது.

- மரு.சா.மா. அன்புமணி