முன்பு ஒரு முறை பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்தில் இருந்து மாணவர்களின் பிரிவை உணர்த்தும் வகையில் கையில் கயிறு கட்டக்கூடாது என்று ஓர் அறிக்கை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது.
அதற்கு பாஜகவிடம் இருந்து எதிர்ப்பு வந்தவுடன் அப்படி ஒரு முடிவை நாங்கள் எடுக்கவில்லை என்று அத்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்தார்.
அதே போன்றதொரு கூற்று இப்பொழுது அரங்கேறியுள்ளது.
2009-ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு 1-4-2010 முதல் அதனை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.
அதில் செய்யப்பட்ட ஒரு திருத்தம், இனிவரும் ஓவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் 5, 8 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும். இத்தேர்வில் தவறும் மாணவர்கள் அடுத்த 2 மாதங்களில் மறுதேர்வு எழுதலாம். ஆனால், எந்த மாணவரும் அவரின் கல்விக் காலம் முடியும்வரை பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று சொல்கிறது.
இதற்கான சுற்றறிக்கை பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சார்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை எந்த மாணவரும் அவரின் கல்விக் காலம் முடியும்வரை பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று சொல்லும்பொழுது, இந்தப் பொதுத் தேர்வு ஏன் நடத்த வேண்டும்? தேவையே இல்லையே?
அண்மையில் பின்லாந்து நாட்டிற்குச் சென்று வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்கு 7ஆம் வகுப்புவரை மாணவர்களுக்குக் கட்டாயக்கல்வி புகுத்தப்படுவதில்லை என்று சொன்னார்.
ஆனால், ஒரு சில நாள்களுக்குள்ளாகவே 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்துவதாக துறை இயக்குநரகம் அறிக்கை அனுப்புகிறது.
கல்வியாளர்கள், பெற்றோர்கள், பொதுமக்களிடமிருந்து கடும் கண்டனங்கள் வந்தவுடன் திடீரென அமைச்சர் செங்கோட்டையன், அப்படி ஒரு திட்டம் எங்களிடம் இல்லை. அமைச்சரவை கூடித்தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுக்கிறார்.
அப்படியானால் அமைச்சருக்கே தெரியாமல் இதுபோன்ற அறிக்கைகளை இயக்குநர் அனுப்பிக் கொண்டிருக்கிறாரா?
இது ஒருபுறமிருக்க புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கொண்டு வரும் இந்தப் பொதுத்தேர்வு என்பது, பார்ப்பனர் அல்லாத ஏழை, நடுத்தர மாணவர்களின் கல்வியைப் பள்ளி வளாகத்திற்குள்ளேயே முடக்கிப் போடுவதாக அமைகிறது.
இந்தப் புதிய கல்விக் கொள்கை பார்ப்பனிய நலம் சார்ந்து, பார்ப்பனர் அல்லாத மாணவர்களின் கல்வி எதிர்காலத்தைப் பாதிக்கிறது என்பதால் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.