எதிர்வரும் 21,22 தேதிகளில், சிறீலங்கா அரசு தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது, ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைப் பாதுகாப்புக் குழுவில் (UNHRC) வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. சென்ற ஆண்டை விடக் கூடுத லான நாடுகளின் ஆதரவோடு, இவ்வாண்டு அத்தீர்மானம் நிறை வேறிவிடும் என்பதே பலரின் கணிப்பாகவும் உள்ளது. இந்நிலை யில், அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்னும் குரல் ஒரு புறமும், அத்தீர்மானத்தைக் கண்டிக்கிறோம் என்னும் குரல் மறுபுறமும் கேட்கின்றன. எனவே அமெரிக்கத் தீர்மானம் என்ன சொல்கிறது, அதனை ஆதரிக்க வேண்டுமா, கூடாதா என்பன போன்ற குழப்பங்கள் எங்கும் எழுந்துள்ளன.
கடந்த ஒரு மாதமாகவே அமெரிக்கத் தீர்மானம் குறித்த பேச்சுகள் நடைபெற்று வருகின்றன என்ற போதிலும், இவ்விதழ் அச்சுக்குப் போகும் தருணத்தில்தான் அதிகாரப்பூர்வமாக அத்தீர்மானம் மனித உரிமைக் குழு உறுப்பு நாடுகளிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது. எனவே, இன்று வரை பேசப்படுவதெல்லாம், இணையத்தளத்தின் வழி கசிந்த தீர்மான அறிக்கையே! எனினும், 90 விழுக்காடு அந்த அறிக்கையில் உள்ள பகுதிகள், அதிகாரப்பூர்வ அறிக்கையிலும் இருக்கவே செய்யும். ஒரு சில கூட்டல், குறைத்தல்கள் இருக்கலாம். எனவே நமக்குக் கிடைத் துள்ள வரைவுத் தீர்மான (Draft Resolution) அடிப்படையில் இங்கு சில செய்திகளை நாம் விவாதிக்கலாம்.
தீர்மானத்தை எதிர்ப்போர், பின் வரும் காரணங்களைச் சுட்டுகின்றனர்.
1.அமெரிக்கத் தீர்மானம் உப்புச் சப்பற்றதாக உள்ளது.
2.இலங்கையின் அனுமதியுடன்தான் விசாரணை என்பதால், இத்தீர்மானம் கொலைகாரனையே நீதிபதி ஆக்குகின்றது.
3.விசாரணைக்கான காலவரையறை கூறப்படவில்லை.
4.இனப்படுகொலை (Genocide) வெறும் போர்க்குற்றமாக (War Crimes) மட்டுமே காட்டப்பட்டுள்ளது.
மேலே உள்ள காரணங்கள் நியாய மானவை என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம், மேற்காணும் காரணங் களால், அமெரிக்கத் தீர்மானத்தை மறுப்போர், ராஜபக்சேவைத் தண்டிக்க வும், ஈழத்தமிழர் மறுவாழ்வு பெறவும் மாற்று வழி என்ன என்பதைச் சுட்ட வில்லை. எப்போதிருந்து தீர்மான எதிர்ப்பு முழக்கம் வேகம் பெற்றது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அண்மையில் ஜெனீவாவில் நடை பெற்ற பேரணியில் பங்கேற்ற, புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள், அமெரிக்கத் தீர்மானத்தை உலக நாடுகள் ஆதரிக்க வேண்டும் என்றே முழக்கமிட்டனர். இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற் றிய, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர் லிங்கம், அத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதைத் தான் வலியுறுத்திப் பேசினார்.
ஆனால், அதே நிலைப்பாட்டினை இங்கு ‘டெசோ’ எடுத்தபின், அதில் பலருக்கு நெருடல் ஏற்பட்டது. வாக் கெடுப்பில் இந்தியா ஆதராக வாக்களித்து விட்டால், அது டெசோவிற்குப் பெருமை தந்து விடுமோ என்ற ஐயம் வந்துவிட்டது. இங்கே பலருக்கு ஈழப்பிரச்சினையை விட டெசோ பிரச்சினையே பெரிதாகத் தெரிந் தது. ஈழ மக்களுக்கு எந்த ஒரு நன்மையும், கலைஞர் மூலமாக வந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் உள்ள ‘தலைவர்கள்’ பலரை நாம் அறிவோம்.
அவர்கள் உடனே முழக்கத்தை மாற்றினார்கள். அமெரிக்கத் தீர்மானத் தைக் கண்டிப்போம் என்றனர். ஐக்கிய நாடுகள் அவையே சரியாகச் செயல்பட வில்லை, அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் என்றனர்.
ஐக்கிய நாடுகள் அவையின் செயல் பாடுகளில் குறைகள் உள்ளன என்பது உண்மைதான். அதனை அந்த அவையின் உட்கட்டமைப்பு அறிக்கையே எடுத்துச் சொன்னதையும் நாம் அறிவோம். ஆனாலும் ஐ.நா. அவையை விட்டால், சென்று முறையிட வேறு எந்த அவை உள்ளது? அதனைக் குறை கூறுவோர், போட்டி ஐக்கிய நாடுகள் அவை ஒன்றைத் தொடங்கப் போவதில்லை. ஆதலால் அந்த அவையை அணுகியே நாம் நம் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை முதலில் மனம் கொள்ள வேண்டும்.
இனப்படுகொலை புரிந்த ஓர் அரசையும், அதன் ஆட்சியாளர் களையும் அனைத்துலக நாடுகளின் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனில், அதற்கெனச் சில நடை முறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றியே நாம் காய்களை நகர்த்த வேண்டியுள்ளது.
ராஜபக்சே மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இன்னமும் சிலர் கூறுகின்றனர். ஆனால், விசாரணை முடிந்து விட்டது என்பதுதான் உண்மை. ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீமூன், இந்தோனேசிய நீதிபதி தருஸ்மான் தலைமையில் நியமித்த மூவர் குழுவே விசாரணைக் குழு ஆகும். அந்தக் குழு, தன் விசாரணையை முடித்து, ஐ.நா.வில் அதனைத் தாக்கல் செய்து விட்டது. அதன் அடிப்படையில்தான் இப்போது, மனிதஉரிமைக் குழுவில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இனிமேல் தேவைப்படுவது விசாரணை அன்று; சுதந்திரமான பன் னாட்டுப் புலனாய்வே (Independent multinational Investigation). அத்தகைய புலனாய் விற்கு மனித உரிமைக் குழு மட்டுமே ஆணையிட முடியும்.
ஐ.நா. மனித உரிமைக் குழுவில் 47 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. சென்ற ஆண்டு அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தபோது, அதனை 24 நாடுகள் ஆதரித்தன. 15 நாடுகள் எதிர்த்தன. 8 நாடுகள் நடுநிலை வகித்தன. தீர்மானம் நிறைவேறிய போதிலும், இன்று வரை அதனால் எப்பயனும் ஏற்படவில்லை. அதற்கான காரணம், அத்தீர்மானம், ‘போர்ப்படிப்பினை மற்றும் மறுசீரமைப் புக்கான குழு’ (LLRC), என்னும் பெயரில் இலங்கை அரசே உருவாக்கிய ஒரு குழு புலனாய்வை நடத்தக் கோரியதுதான். இப்போது தன் நிலையிலிருந்து ஒரு மாற்றத்தை அமெரிக்கா சுட்டிக்காட்டி உள்ளது. மனித உரிமைக் குழு ஆணையத் தலைவர் நவநீதன்பிள்ளை முன்வைத் துள்ள அறிக்கையில் குறிக்கப்பட்டிருக்கும் சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு கருத்தில் கொள்ளப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் புலனாய்வு முடிய வேண்டும் என்பது குறித்தும் சிந்திப்ப தாகக் கூறியுள்ளது. இந்த மாற்றங்கள், இறுதியாக அவையில் முன்வைக்கப்படும் தீர்மானத்திலும் உள்ளனவா என்பதனைக் கூர்ந்து கவனிக்க வேண்டி உள்ளது.
ஒரு வேளை அவ்வாறு இல்லை யயனில், மீண்டும் மீண்டும் அதுபோன்ற தொரு தீர்மானத்திற்காகப் போராடு வதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி ஒரு தீர்மானத்தை இந்தியா இப்போதே கொண்டு வர வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். ஒரு அமர்வில், ஒரே சிக்கல் குறித்து இரண்டு தீர்மானங்களை வெவ்வேறு நாடுகள் கொண்டு வர முடியாது என்பதே ஐ.நா.கூறும் விதி. அடுத்த அமர்வு வரை காத்திருக்க வேண்டும். அதற்குக் குறைந்தது மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம். அப்போதும் இந்தியா அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருமா என்பது பெரிய கேள்விக் குறி. கொண்டு வந்தாலும், வல்லரசு நாடான அமெரிக்காவின் தீர்மானமே எதிர்க்கப் படும்போது, இந்தியா போன்ற வளரும் நாடு கொண்டு வரும் தீர்மானத்தை எத்தனை நாடுகள் ஆதரிக்கும் என்பது அதனை விடப் பெரிய கேள்விக்குறி. எனவே அமெரிக்காவின் தீர்மானத்திற்கு வலிமையான திருத்தங்களை இந்திய அரசு முன்மொழிய வேண்டும் என்று வலியுறுத் துவதே இத்தருணத்திற்கு ஏற்றதாகும்.
மனித உரிமைக் குழுவில், நாம் நினைக்கும் வண்ணம் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டாலும் கூட, உடனடியாகக் கொலைகாரன் ராஜபக் சேயைக் கூண்டில் ஏற்றிவிட முடியாது. மனித உரிமைக் குழு நிறைவேற்றிய தீர்மானம், ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவிற்கு (Security Council) அனுப்பப்படும். பாதுகாப்புக் குழு அதனை ஏற்றுக்கொண்ட பிறகே, அனைத்துலக நாடுகளின் நீதிமன்றத்தில் (International Court of Justice) வழக்குப் பதிவு செய்ய முடியும்.
பாதுகாப்புக் குழுவில் மொத்தம் 15 நாடுகள் உள்ளன. அவற்றுள் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய ஐந்து நாடுகள், நிரந்தர உறுப்பு நாடுகள் ஆகும். மற்ற 10 நாடுகள் இரண் டாண்டுகளுக்கு ஒருமுறை சுழல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவை. நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு ‘வீட்டோ’ (VETO) அதிகாரம் உண்டு. அதனைப் பயன்படுத்தி, எந்த ஒரு தீர்மானத்தையும், அவை பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் கூட, ரத்து செய்துவிட முடியும். எனவே, சீனாவும், ரஷ்யாவும் பாதுகாப்புக் குழுவில் நிரச்தர உறுப்பு நாடுகளாக உள்ளமையால், இலங்கை அரசுக்கு எதிராக எந்த ஒரு தீர்மானத்தையும் அவை அனுமதிக்க மாட்டா என்பதைத்தான் சு.சாமி போன்றவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அது மிகக் கொடூரமாக உள்ளது எனினும், உண்மையே என்பதை நாம் மறுக்க முடியாது.
பிறகு எதற்கு மனித உரிமைக் குழுவில் தீர்மானம் என்று ஒரு கேள்வி எழுகிறது. அதில் ஒரே ஒரு நன்மை மட்டும் உள்ளது. மனித உரிமைக் குழு ஒரு நாட்டின் அதிபரைப் போர்க்குற்ற வாளி என்று உரிய புலனாய்வுக்குப் பின் அறிவித்து விட்டால், அதன் பிறகு அவர் அந்நாட்டின் தலைமைப் பொறுப்பில் தொடர முடியாது. எனவே ராஜபக்சேயை அதிபர் பதவியில் இருந்து விலக்கி வெளியே கொண்டுவர மட்டுமே இத்தீர்மானத்தின் வெற்றி உதவும். அதற்கும் கூட குறிப்பிட்ட காலம் ஆகும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
உலக நாடுகளின் நீதிமன்றம் அந்தக் கொலைகாரனைத் தண்டிக்கப் போகிறதோ இல்லையோ, மக்கள் மன்றம் ஒரு நாள் தண்டித்தே தீரும்.