156 அகதிகள் கொல்லம் கடற்கரையிலிருந்து புறப்பட்டனர். புறப்பட்ட சற்று நேரத்தில், கேரள அரசின் காவல்துறை அவர்களைக் கைது செய்தது.

ஈழத்து அகதிகளுக்கு இந்தியாவில் வாழ்வுரிமை இல்லை. மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. திறந்தவெளிச் சிறைச்சாலை போன்ற முகாம்களுக்குள் 30 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறார்கள் அல்லது தடுப்பு முகாம்களுக்குள் கேட்பாரின்றி வாடுகிறார்கள்.

eelam_refugees_630

ஏறத்தாழ 70 ஆயிரம் அகதிகள், 112 முகாம்கள், 200 சதுர அடி கூடுகளுக்குள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வாழ்க்கை. இவர்களைத் தவிர தடுப்பு முகாம்களில் தனிமையில் வாடுவோர் நூற்றுக் கணக்கான ஈழத்தமிழ் இளைஞர்கள். ஓராண்டு அன்று ஈராண்டுகள் அல்ல, பல ஆண்டுகள் வழக்கு எதுவும் இல்லாமல், உணவு, உறையுள் மட்டுமே கிடைக் கின்ற வாழ்க்கை.

இவ்வாறு எவ்வளவு காலம் தொடர்வது? ஏன் பிறந்தோம்? ஏன் வளர்ந்தோம்? என்ன வாழ்க்கை இது? தமிழராய்ப் பிறந்தது இழிவா? அகதிகள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுவன இவ்வினாக்கள். இத்தகைய துயரத்துள் மாளும் எவருக்கும் இத்தகைய ஏக்கம் எழுவது இயற்கை.

அரசியல் பேச முடியாது, தொழிலுக்குப் போக முடியாது, உயர் கல்விக்கு இருந்த ஒதுக்கீடு களும் பறிக்கப் பட்டன. எந்த நாட்டுக்கும் பயணிக்க முடியாது. என்ன செய்யலாம் என்ற வினா எழும்போது, தப்பியோடுவதைத் தவிர வேறு வழி?

1983லிருந்து தமிழகத் தைத் தளமாகக் கொண்டு, மனிதக் கடத்தல் நடை பெற்று வருகிறது. இன்றைக்கு ஐரோப்பாவில், வட அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில், புகலிடம் தேடியோருள் 30 - 40 விழுக்காட்டினர் வரை தமிழகத்தைத் தளமாகக் கொண்டு புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் அகதிகளே.

கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் ஐந்து படகுகள் கரை ஒதுங்கின. அனைத்திலும் புகலிடம் தேடி வந்த ஈழத்தமிழர்கள். சில வாரங்களுக்கு முன்பு, காக்கிநாடா கரையோரத்தில் இருந்து ஒரு படகு ஆஸ்திரேலி யாவிற்குப் புறப்பட்டது. அதில் நூற்றுக் கணக்கான ஈழத்தமிழர்கள். அவர்கள் யாவரையும் ஆந்திரக் காவல்துறை கைது செய்தது.

இலங்கையில் நீர் கொழும்பு, அம்பாந் தோட்டை, கல்முனை ஆகிய கரையோரங்களில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கிப் பெரும் படகுகளில் ஈழத்தமிழர் புறப்பட்டுச் செல்கையில், இலங்கை அரசு அவர்களைக் கைது செய்தது.

இந்தக் கைதுகளை மீறி, மாதந்தோறும் 8 அல்லது 10 படகுகளில் ஈழத்தமிழர்கள் ஆஸ்திரேலியா வின் கிறிஸ்துமஸ் தீவைச் சென்றடைகின்றனர். இரு ஆண்டுகளுக்கு முன்பு கப்பல் ஒன்றில் 400க்கும் அதிகமான ஈழத்தமிழர் கனடாவின் மேற்குக் கரையோரமான வான்கூவரைச் சென்றடைந்தனர்.

இத்தகைய அகதிப் படகுகள் பல வளர்ச்சிய டைந்த நாடுகளின் கரைகளை அடைகின்றன. சில படகுகள் புறப்படும் போதே கைதாகின்றன. சில படகுகள் வழியிலேயே கவிழ்வதால், ஈழத் தமிழருக்குக் கடலே சமாதியாகின்றது.

காலத்தின் கோலம் இது. தமிழனாகப் பிறந்ததற்காக வெட்கப்படுகின்ற காலம் இது. தமிழ் நாட்டை விட்டு ஓடிவிட வேண்டும், இலங்கையை விட்டு ஓடிவிட வேண்டும் என ஈழத்தமிழருள் பெரும்பாலோர் நினைக்கிறார்கள். முடிந்தவர்கள் மட்டும் படகுகளில் ஏறுகிறார்கள்.

விமானங்களில் சென்றவர்களுள் சிலர் ஆப்பிரிக்க நாடுகளின் விமான நிலையங்களிலும், அங்குள்ள சிறைகளிலும் இருக்கிறார்கள். விமானங்களில் செல்பவர்களுள் 10 விழுக் காட்டினர் சிறைகளில் இருக்கிறார்கள். 90 விழுக்காட்டினர் புகலிடம் தேடும் நாட்டைச் சென்றடைந்து விடுகிறார்கள்.

கடலில் மூழ்கிச் சாவோம், வழியில் சிறைகளில் அடைக்கப்படுவோம் என்று தெரிந்த பின்புதான் இவர்கள் விமானங்களிலும், படகுகளிலும் ஏறுகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகளுக்கான ஆணையம், இவ்வாறு புகலிடம் தேடுவோரின் புள்ளிவிவரங்களைத் தொகுக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் புகலிடம் தேடுவோரின் மொத்த எண்ணிக்கையில், ஈழத்தமிழர் எண்ணிக்கை கடந்த ஆண்டில் எட்டாவது இடத்திலாம்!

ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்காள தேசம், மாலத் தீவு ஆகிய தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த புகலிடம் தேடும் மக்களின் எண்ணிக்கையை விட, பல மடங்கு எண்ணிக்கையினராக ஈழத்தமிழர்களே இருக்கின்றனர். இதற்கு அடிப்படைக் காரணம், இலங்கை அரசின் தொடர்ச்சி யான இன ஒழிப்புக் கொள்கை.

இந்திய நடுவண் அரசு ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க முயலுவதில்லை. தமிழகத்தின் குரல் தில்லியில் கேட்பதில்லை. தில்லியில் காதைச் செவிடாக்கிக் கொள்கிறார்கள், கண்களைக் குருடாக்கிக் கொள்கிறார்கள், வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள்.

முப்பது ஆண்டுகளாக வாழ்வுரிமை இல்லாமல், தொடர்ச்சியாக முள்வேலிக்குள், முகாம்களில் அடைபட்டுக் கிடப்பதை விட, உயிர் போனாலும் பரவாயில்லை, சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை, இந்தியாவை விட்டு வெறியேறுவோம் என ஈழத்தமிழ் அகதிகள் எண்ணுவது வியப்பன்று.

இந்தியாவில் திபெத்திய அகதிகளுக்குக் கொடுக்கப்படும் வசதிகளை ஈழத்தமிழ் அகதிகள் அறியாதவர்கள் அல்லர். நாடு கடந்த அரசு ஒன்றை அமைத்துக் கொண்டு, ஒவ்வொரு அகதிக்கும் பயண ஆவணத்தைக் கொடுத்து, இந்திய அரசின் துணையோடு திபெத்தியர்களின் நலன்களைப் பேணுகின்றார் தலாய்லாமா.

ஆப்கானிஸ்தான் அகதிகள் இந்தியாவிற்குள் வந்த உடனேயே, தில்லியில் மையம் கொண்டுள்ள ஐநாவின் அகதிகள் ஆணைய அலுவலகம் அவர்களுக்கு, மாதத் தொகை கொடுக்கிறது, பயண ஆவணம் கொடுக்கிறது. சுதந்திரமாக நடமாட, இயல்பு வாழ்க்கை வாழ வழிவகை செய்கிறது. வேற்று நாடுகளில் புகலிடம் தேடிக்கொடுக்கிறது.

வங்காள தேசத்திலிருந்து ஏறத்தாழ மூன்று அல்லது நான்கு லட்சம் வங்காள அகதிகள் அசாமுக்குள் புகுந்தனர். பல மாவட்டங்களில் மக்கள் தொகுப்பு விகிதாச்சாரத்தை மாற்றினர். இந்தியக் குடியுரிமையும், வாக்குரிமையும் பெற்றனர். இத்தகைய வாழ்வுக்கு இந்திய அரசு துணை போகிறது. அசாமியர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, அவர்களை வாக்கு வங்கிகளாக அரசியல் கட்சிகள் பார்க்கின்றன.

ஐநா அகதிகள் ஆணையம் விதித்தவற்றை ஏற்றுக் கொண்டு, வளர்ச்சியடைந்த, ஐரோப்பிய, வட அமெரிக்க, பசிபிக் நாடுகள் புகலிடம் தேடி வந்த மூன்றாண்டுகளுக்குள் ஈழ அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குகின்றன.

மாநகராட்சி உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக அந்தந்த நாடுகளில் ஈழ அகதிகள் அரசியல் உரிமை பெற்றிருக்கிறார்கள். தாம் விரும்பிய தொழிலைத் தேடுகிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற கல்வி வாய்ப்பைத் தடையின்றி பெறுகிறார்கள். எங்கு விரும்பினாலும் பயணிக்கிறார்கள். வறுமை நீங்கிய வாழ்வு வாழ்வது மட்டுமல்ல, ஈழத்திலும் தமிழகத்திலும் வாழும் சொந்த பந்தங்களுக்குப் பொருளாதார உதவியும் வழங்குகிறார்கள்.

இலங்கையின் இன ஒழிப்பு, இந்தியாவின் மனித உரிமை மறுப்பு, உயர்கல்வி ஒதுக்கீடு பறிப்பு, வாழ்வுரிமை ஒழிப்பு, அரசியல் உரிமை அற்ற நிலை! என்ன செய்வார்கள்? உயிரைப் பணயம் வைத்து, வாழ்கின்ற எஞ்சிய ஒவ்வொரு நாளும் மனிதர்களாக வாழ ஆசைப்படுகின்றவர்கள் படகுகளில் ஏறுகிறார்கள். அவர்களைத் தடுப்பது மனித நேயமன்று.