பல்லவ அரசனின் மகனான போதிதருமர் பவுத்தத்தைச் சீனாவிற்குக் கொண்டு சென்றதாகவும், அவரே தமிழர்களின் அதிரடிச் சண்டையை சீனாவுக்கு அறிமுகம் செய்து பரப்பினார் என்றும் சொல்லப்படுகிறது.

காஞ்சிபுரத்தை ஆட்சி செய்த அரசனின் மகன் போதிதருமர். இவர் கி.பி. 525இல் சீனாவுக்குச் சென்று, அவர் சார்ந்த “தியான மார்க்கம்”  என்ற பவுத்தப் பிரிவை அங்கு பரவச்செய்தார் என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி.

மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் ஆய்வுகள் பெருமதிப்புக்கு உரியன என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆயினும் போதிதருமர் குறித்து அவர் தரும் அரச குமாரன் என்ற கருத்து ஏற்புடையதாக இல்லை.

கடைச்சங்க காலத்திற்குப் பின் கி.பி. 250 முதல் 575 வரை தொண்டை நாட்டை ஆட்சி செய்தவர்கள் களப்பிரர்கள்.

கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இறுதியில் புத்தவர்மன் என்ற பல்லவ குடித் தோன்றல், களப்பிரரை எதிர்த்துப் போர் புரிகின்றான் என்ற பட்டயச் செய்தியை உறுதி செய்கிறார் பேரா.மா.இராசமாணிக்கனார். இந்தப் போர் நடந்த காலம் 5ஆம் நூற்றாண்டின் இறுதி என்பதால் இதை கி.பி. 475-490 என்று கொள்ளலாம்.

களப்பிரரை விரட்டி பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு ஆட்சியைக் கைப்பற்றிய ஆண்டு கி.பி.575. இதில் இருந்துதான் பல்லவ ஆட்சி தொடங்குகிறது. எனவே கி.பி. 525இல் அதாவது பல்லவர் ஆட்சி ஏற்படுவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர், போதிதருமரின் தந்தை பல்லவ அரசனாகக் காஞ்சிபுரத்தை ஆட்சி செய்தார் என்பதும், அவரின் மகன்தான் போதிதருமர் என்பதும் இங்கு பொருந்தவில்லை. காலமும் குடிமரபு ஆட்சியும் முரண்படுகிறது. அதுபோலவே கி.பி. 475-90 காலகட்டங்களில் களப்பிரருடன் போரிட்ட புத்தவர்மனை இப்போதிதருமருடன் இணைக்க முடியாது. ‘வர்மன்’ என்பது அரசகுலம் சார்ந்தும் ‘தருமன்’ என்பது அறம் சார்ந்தும் அமைவதைக் கவனிக்கலாம். காலமும் வேறுபடுகிறது.

எனவே போதிதருமர், பல்லவ அரசனின் மகன் அல்லது இளவரசன் என்பது ஏற்பதற்கு இல்லை.

ஆனால் தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் சீனாவுக்குச் சென்றுள்ளார் என்பதையும், அவரே தமிழகத்தில் இருந்து பவுத்தத்தை (தியான மார்க்கத்தை) சீனாவுக்குக் கொண்டு சென்றவர் என்பதையும் மறுக்க முடியாது.

அதே சமயம் கி.பி. 502 முதல் 549 வரை சீனாவை ஆட்சி செய்த லியாங் குடும்பத்தைச் சேர்ந்த ஊ-டி என்ற அரசனை, அவனுடைய அவைக்களத்தில் போதிதருமர் சந்திக்கிறார். இந்தக் காலத்தை எடுத்துப் பார்க்கும்போது போதிதருமர் என்ற ஒருவர் கி.பி.525 காலகட்டங்களில் சீனா சென்றார் என்ற மயிலையாரின் கருத்து ஏற்புடையதாகிறது.

இங்கு இன்னொரு செய்தியும் கவனத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது.

மெளரியப் பேரரசர் அசோகர், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பவுத்த சமயத் தூதுக்குழுக்களைப் பல்வேறு இடங்கள், நாடுகளுக்கு அனுப்பினார். மகதத்தில் மட்டுமே  இருந்த பவுத்தத்தை முழு இந்தியாவிலும் பரவச் செய்தார். பர்மா, கம்போடியா, சயாம், கிழக்கிந்தியத் தீவுகள், கொரியா, ஜப்பான், மங்கோலியா, இலங்கை, திபெத் மட்டுமின்றி சீனாவிற்கும் பவுத்த தூதுக் குழுக்கள் அசோகரின் முயற்சியால் அனுப்பப்பட்டு பவுத்தம் பரவியது - என்கிறார் வரலாற்று ஆய்வாளர் வின்சன்ட் ஏ ஸ்மித்.

அசோகர் பேரரசராக முடிசூட்டிக் கொண்ட ஆண்டு கி.மு. 269.

அசோகரின் எந்த ஒரு கல்வெட்டிலும், அவர் பவுத்தக் கோட்பாடுகள் குறித்தோ அதன் கொள்கைகள் குறித்தோ செய்தி காணப்படவில்லை. அதே காலகட்டங்களில் புத்தரின் மூல பவுத்தமும், பின்னாளில் தோன்ற இருக்கும் பிற்கால மகாயான பவுத்தப் பிரிவும் இருந்தன. இதில் அசோகர் எந்தப் பிரிவை ஏற்றுக்கொண்டார் என்பது தெரியவில்லை.

ஆனால் அசோகரால் அனுப்பப்பட்ட தூதுக்குழு மூலமாக புத்தரின் நேரடி மூல பவுத்தமான தேரவாத பவுத்தம் சீனாவுக்கு கி.மு. 269க்குப் பின்னர் சென்றிருக்கிறது என்பதை நம்ப வழி இருக்கிறது.

சீனாவுக்குப் பிற்காலத்தில் சென்ற போதிதருமர் மகாயானத்தின் ஆணிவேரான அத்வைதத்தைத் தியான மார்க்கமாகக் கொண்டு சென்றுள்ளார்.

மயிலை சீனி. வேங்கடசாமி தரும் இன்னொரு தகவல், சீன அரசன் ஊ-டிக்கும் போதிதருமருக்கும் சிறிது காலத்தில் பிணக்கு, முரண்பாடு ஏற்பட்டு, அங்கிருந்து வெளியேறிய போதிதருமர் சீனாவின் வட பகுதிக்குச் சென்று சமயப் பணி செய்திருக்கிறார் என்பது.

அரசனுக்கும் போதி தருமருக்கும் பகை ஏற்படவில்லை. போதிதருமர் ஆட்சிக்கோ, அரசுக்கோ எதிராகச் செயல்படவில்லை. அப்படிச் செயல்பட்டு இருந்தால் அவர் குற்றவாளி ஆக்கப்பட்டு இருப்பார். அரசனுக்கும், போதிதருமருக்கும் இடையே நிலவியது முரண்பாடு என்ற பிணக்கு.

என்ன முரண்பாடாக இருக்கும்?

அசோகரின் காலத்தில் சீனாவுக்குச் சென்ற பவுத்தம் தேரவாத மூலபவுத்தம். அதை அரசன் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

போதிதருமர் கொண்டு சென்றது அத்வைதத் தியானப் பிரிவு.

புத்தர் தன் தொடக்கக் காலத்தில் இராஜகிருகத்தில் இருக்கும் போது, தன் நேரடி அனுபவத்தின் மூலம் இத்தியான வழியை முற்றிலும் நிராகரித்துவிட்டார்.

இதனால் அரசனின் தேரவாதமும், போதிதருமரின் அத்வைத தியான மார்க்கமும் ஏற்படுத்திய முரண்பாட்டின் விளைவாகவே, போதிதருமர் அரசனை விட்டு விலகி, வடசீனம் சென்று தன் தியான மார்க்கத்தைப் பரவச் செய்திருக்கிறார் என்பது ஏற்புடையதாக இருக்கிறது.

தொகுத்துச் சொன்னால்,

போதிதருமர், தமிழகத்தில் இருந்து சீனாவுக்குக் கொண்டுசென்றது தியான மார்க்கம். பின்வந்த காலங்களில் சீனாவில் தேரவாதம் மங்கி, மகாயானமே வலிமை பெற்றுவிட்டது.

போதிதருமர் வீரப்போர்க் கலையை சீனாவில் அறிமுகம் செய்து பரப்பினார் என்பதற்குச் சான்றுகளும் கிடைக்கவில்லை. அவர் பல்லவ அரச குமாரனும் அல்லர்.

சீனர்களின் 28 சமயக் குறவர்களில் ஒருவர் ஹுய்-கெ-ஒய் என்ற போதிதருமர். இவரை டா-மொ என்றும் சீனர்கள் அழைப்பார்கள்.

சீனாவிலும், ஐப்பானிலும் போதிதருமருக்குக் கோயில்கள் உள்ளன. அங்கே இரவும் பகலும் எண்ணெய் விளக்குகள் எரிந்தவண்ணம் இன்றும் இருக்கின்றன.

சான்று நூல்கள்:

1. பவுத்தமும் தமிழும் - மயிலை சீனி. வேங்கடசாமி(1980)

2. பல்லவர் வரலாறு - மா. இராசமாணிக்கனார் (1968)

3. அசோகர் - வின்ஸ்டன் ஏ. ஸ்மித் (2009)

Pin It