கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு எந்த அளவுக்கு முனைப்பு காட்டுகிறதோ, அதைவிட வலிமையாக அப்பகுதி மக்கள் அணு உலையை இழுத்து மூட வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.

சாதிகள், மதங்கள், கட்சிகள் இவைகளுக்கு அப்பால், மக்கள் ஒன்று திரண்டு போராடுகிறார்கள் என்றால், அணு உலைகளினால் ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று பொருள். சோவியத்திலும், சப்பானிலும் அணு உலைகள் பாதிக்கப்பட்டதால் மக்கள் அடைந்த பாதிப்பை கூடங்குளம் மக்கள் சுட்டிக்காட்டி, அச்சப்படுகிறார்கள்.

மத்திய அரசும் அணுசக்தி ஆணையமும் அணுமின் நிலையம் ஏன் தேவை என்பதற்குக் காரணங்களைச் சொல்கின்றனவே ஒழிய, மக்களின் அச்சத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பாரதிய சனதா கட்சி மத்தியில் ஆட்சி செய்த போது இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்தவர் அப்துல்கலாம் அவர்கள். பொக்ரான் அணு குண்டுச் சோதனையை திறம்படச் செய்ததில், இந்திய விஞ்ஞானி அப்துல்கலாம் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

அவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தைப் பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில், கூடங்குளம் அணுமின் நிலையப் பாதுகாப்பு தனக்கு முழு மனதிருப்தி அளிப்பதாகவும், இந்தியாவிலேயே முதன் முதலாக மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சம் கூடங்குளத்தில் மட்டுமே இருப்பதாகவும், இந்த அணு மின் நிலையத்தை ஆழிப்பேரலையோ, பூகம்பமோ தாக்க வாய்ப்பில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இந்தியாவிலேயே மிகச் சிறந்த பாதுகாப்பு தொழில் நுட்பம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில்தான் இருக்கிறது என்றால், இந்நாட்டிலுள்ள பிற அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு பலவீனமானதாக இருக்கிறதா என்ற  வினா எழுகிறதே !

கூடங்குளம் அணுமின் நிலையம் பூகம்பத்தாலோ, சுனாமியாலோ தாக்க வாய்ப்பு இல்லை என்கிறார் கலாம். பூகம்பமும், அழிப்பேரலையும் எப்போது வரும் என்று தெரியாது. அவை வந்த பின்னர்தான் பாதிப்பு என்ன? எவ்வளவு? என்று தெரிந்து கொள்ள முடியும். 6.5 ரிக்டருக்குக் கீழேதான் நிலநடுக்கம் வரும் என்பதல்ல. சப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலை நிலநடுக்கத்தைப்போல ரிக்டர் அளவு 8.5க்கும் அதிகமும் வரலாம்.

அமெரிக்கா 1973ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய அணுஉலைகளை  உருவாக்க முன்வரவில்லை. சப்பான் ஆழிப்பேரலையால் புகு´மா அணுஉலை விபத்துக்குள் ளான பிறகு, அந்த நாடும் அதுபோன்ற ஒரு திட்டத்தை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

கல்பாக்கம் அணுஉலை செயல்படத் தொடங்குவதற்கு முன்னால், அங்குள்ள கடலில் ஆண்டுக்கு 500 கிலோ கடல் சிங்க இறால்கள் கிடைத்ததாகவும், இப்பொழுது ஆண்டுக்கு 10 கிலோ இறால்கள் மட்டுமே கிடைப்பதாகவும் கல்பாக்கம் விஞ்ஞானி புகழேந்தி சொல்லியிருக்கிறார்.

வெறும் இறால் மீன்களின் நிலையே இப்படி என்றால், மனிதர்களின் நிலை என்னவாகும்? அவர்களின் வாழ்வாதாரங்கள், எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கை என்ன ஆகும்? போபால் வி­ வாயு ஏற்படுத்திய  பாதிப்பை விட அணுகதிர் வீச்சு ஏற்படுத்தும் அழிவு மிகக் கொடியதல்லவா?

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் மக்களாலும், இளைஞர்களாலும் பெரிதும் மதிக்கப்படுகின்றவர். அவர் அரசின் தூதுவராக மட்டும் செயல்படாமல், மக்களின் நம்பிக்கைக்கு உரியவராகவும் செயல்பட்டிருக்க வேண்டும் என்பது நம் கருத்து. அதற்கு வாய்ப்பில்லை என்று அவர் கருதுவாரானால் இந்தச் சிக்கலில் இருந்து விலகி இருந்திருக்கலாம். மக்களுக்கு மனவருத்தம் ஏற்படும் வகையில் இப்படிப்பட்ட கருத்துகளை சொல்லி இருக்க வேண்டாம் என்பது, அவர் மீது பற்றுடையோரின் எண்ணமாகும்.

Pin It