15.12.2011 அன்று கூடிய தமிழ்நாடு சிறப்புச் சட்டமன்றம், வரலாற்றுச் சிறப்புமிக்க சில தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானத்தை முன்மொழிய, தி.மு.கழக சட்டமன்றக் கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட அனைத்துக் கட்சியினரும் அதனை வழிமொழிந்து நிறைவேற்றியுள்ளனர். முன்பு ஒருமுறை காவிரிப் பிரச்சினையில் இப்படி ஒரு சிறப்புச் சட்டமன்றம் கூட்டப்பட்டு, ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக கட்சிகள் அனைத்தும் ஒரே வரிசையில் நின்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது இப்போதுதான்.
தமிழர்களின் நலன் கருதித் தமிழக அரசு மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளுக்கும் தி.மு.கழகம் துணை நிற்கும் என்று சட்டமன்றத்தில் மு.க. ஸ்டாலின் பேசியுள்ள பேச்சு, மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது. 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், 1983இல் ஈழ ஆதரவுப் போராட்டத்துக்குப் பிறகு, மக்களே தன்னெழுச்சியாகத் தெருக்களில் இறங்கிப் போராட வந்திருப்பதும் இப்போதுதான் மறுபடியும் நடைபெறுகிறது.
எனினும், மனித நேயமற்ற முறையில் கேரள அரசும், கேரளத்தில் உள்ள சில இனவாதக் குழுவினரும் அங்கே கட்டவிழ்த்து விட்டிருக்கும் வன்முறை மிகக் கொடியதாக உள்ளது. இடுக்கிப் பகுதியிலிருந்து தமிழர்கள் பலர் அகதிகளாக அடித்துத் துரத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, கூலி வேலை பார்க்கும் ஏழைத் தொழிலாளர்களும், பெண்களும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் குமுறி அழும் காட்சிகளைத் தொலைக் காட்சிகளில் காணப் பொறுக்கவில்லை.
அமைதியாக இருந்த தமிழகத்திலும் இரண்டு விதங்களில் இப்போது எதிர்வினை தொடங்கியுள்ளது. கேரளப் பண முதலைகளின் நகைக்கடைகள் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. கம்பம், தேனி பகுதிகளில் மட்டுமில்லாமல், மதுரை, ஈரோடு, கோவை,சென்னை ஆகிய மாநகரங் களிலும் தமிழர்களின் சீற்றத்தையும், சின அலைகளையும் காணமுடிகிறது. தண்ணீர் தர மறுக்கும் கேரளாவிற்கு அரிசி, இறைச்சி, காய்கறிகள் எவையும் செல்லாமல் தடுக்கப்படும் சாலைமறியல்கள் இன்னொரு விதமான போராட்டமாக எழுந்துள்ளன. இதன் விளைவை இப்போதே கேரள மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். தக்காளி கிலோ 200 ரூபாய்க்கு அங்கு விற்பனையாகிறது. கறிவேப்பிலையும், கொத்துமல்லியும் கூட, கட்டு இருபது ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவை இன்றைய விலைகள். அடுத்தடுத்த நாள்களில் இன்னும் கடுமையான விலையேற்றத்தை அவர்கள் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. தண்ணீரை மட்டுமே தங்களிடம் வைத்துக் கொண்டிருக்கும் கேரளம், தமிழகத்திடம் தொடர்ந்து முரண்டு பிடிக்குமானால், அவர்கள் பட்டினிப் பஞ்சத்தை நோக்கி நகர்வதை யாராலும் தடுக்க முடியாது. வன்முறையைத் தூண்டி விடும் கேரள அரசியல்வாதிகள் இந்த உண்மைகளை உணரவேண்டும்.
33 ஆண்டுகளாக உள்ள இப்பிரச்சனை, இரு மாநில அரசுகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தைகளில் இருந்து விலகித் திடீரென இன்று கொழுந்து விட்டு எரியக் காரணமான இரு சுயநல அரசியல் வாதிகளில் ஒருவர் இன்றைய காங்கிரஸ் அரசின் கேரள முதல்வர் உம்மன்சாண்டி, மற்றவர் சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்ட் அச்சுதானந்தன்.
கடந்த அக்டோபரில் காலமான காங்கிரஸ் அமைச்சர் ஜேக்கப் தொகுதியில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறவில்லையானால், அது இடதுசாரி எதிர்க்கட்சியின் சமபலத்தில் இறங்கிவிடும். காங்சிரஸ் அரசுக்கு இது பெரும் பலவீனமாகிவிடும் என்பதனால் உம்மன்சாண்டியும்; அத்தொகுதியைக் கட்டாயம் கைப்பற்றிக் காங்கிரசைக் கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அச்சுதானந்தனும், ஆடுகிற சுயநலக் கட்சி விளையாட்டில், இருமாநில மக்களும் நெருப்பின் மேல் நிற்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள்.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டது, நீர் கசிகின்றது, இடுக்கியில் நில அதிர்வு தொடர்ந்து ஏற்படுகிறது, அணை உடைந்தால் 35 லட்சம் மக்கள் அழிந்து போவார்கள், அணை உடையப் போகிறது, புதிய அணை கட்ட வேண்டும் இல்லாவிட்டால் ஆபத்து...ஆபத்து என்று மக்களைப் பீதியில் கொண்டுவந்து நிறுத்தியதன் விளைவால், இன்று முல்லைப் பெரியாறு அணை பெரும் போராட்டக் களமாகிவிட்டது.
உண்மையில் அணை பலவீனப்பட்டு விட்டதா?
கேரள உயர்நீதி மன்றத்தில், கேரள அரசுத் தலைமை வழக்கறிஞர் கே.பி. தண்டபாணி 2.12.2011ஆம் நாள் கொடுத்த விளக்க அறிக்கையில், “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்திற்கும் அணையின் பாதுகாப்புக்கும் சம்பந்தம் இல்லை. இப்பொழுது 136.5 அடி தண்ணீர் இருப்பதால், எந்த ஆபத்தும் இல்லை. உச்சநீதிமன்ற ஆணைப்படி நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தினாலும் அணைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது” என்று கூறியிருக்கிறார்.
அணை உடைந்து விடுமா? 35 லட்சம் மக்கள் அழிந்து விடுவார்களா? இந்தக் கேள்விக்கும் அதே அறிக்கையில், ஒருவேளை முல்லைப் பெரியாறு அணை உடைந்தால்?! அந்தத் தண்ணீரைத் தாங்கி ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இடுக்கி, சிறுதோணி, குளம்மாவு அணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் திறந்துவிட்டால் தண்ணீர் அரபிக் கடலுக்குச் சென்றுவிடும் என்றும் கூறியிருக்கிறார் தலைமை வழக்கறிஞர் தண்டபாணி.
கேரள அரசின் தலைமை வழக்கறிஞர் தந்த இந்த விளக்கத்தை, உறுதி செய்யுமாறு அம்மாநில உயர்நீதிமன்றம் இட்ட ஆணையை ஏற்ற முல்லைப் பெரியாறு அணைத் தொழிற்நுட்பக் குழுத் தலைவர் பரமேசுவரன் நாயர், 06.12.2011 அன்று நீதிமன்றத்தில் கொடுத்த அறிக்கையில், கேரள அரசுத் தலைமை வழக்கறிஞர் கூறியிருப்பவை அனைத்தும் சரியே என்று உறுதிசெய்துள்ளார்.
கேரள முதல்வர் உம்மன்சாண்டியும் செய்தியாளர்களிடையே பேசும்போது, அரசுத் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சொன்னவை அனைத்தும் கேரள அரசின் கருத்துதான் என்றும் வாக்குமூலம் கொடுத்துள் ளார்.
உலகறிய முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது, அதற்கு ஆபத்து ஏதும் இல்லை, அப்படியே உடைந்தாலும் மக்கள் அழியமாட்டார்கள், இடுக்கி அணை அதைத் தாங்கிக் கொள்ளும் என்று உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பின்னர், மீண்டும் மீண்டும் அணை பாதுகாப்பாக இல்லை, உடையப் போகிறது என்று கேரள அரசு சொல்வதில் இருந்து, கேரள அரசும், உம்மன் சாண்டிகளும், அச்சுதானந்தன்களும் நாடகம் ஆடுகிறார்கள் என்பது அம்பலமாகிறது.
இந்நிலையில் கேரள முக்கிய அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், அம்மாநிலக் கேரள இளைஞர் காங்கிரசாரும், கேரள பா.ஜ.க.வினரும் அத்துமீறி முல்லைப் பெரியாறு அணையில் நுழைந்து அணையைச் சேதப்படுத்தியுள்ளனர். குறிப்பாகக் கடப்பாறை, இரும்புக்கம்பிகளுடன் சென்ற அவர்கள் முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையை உடைத்துச் சேதப்படுத்தியிருக்கிறார்கள்.
நாளை கேரள அரசு மற்றும் அரசியல் வாதிகளின் தூண்டுதலினால் கூட முல்லைப் பெரியாறு அணை தகர்க்கப்படலாம் என எண்ணத் தோன்றுகிறது. கேரள அரசைக் கண்டித்துத் தேனியில் உண்ணாவிரதம் இருந்த வைகோ, முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வெடிமருந்தை அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்று கூறியது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இன்றைய நிலவரப்படி, கேரள அரசு கூட்டிய சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தில் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்றும், முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.
கேரள அரசு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை 1887ஆம் ஆண்டு தொடங்கி 1895ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. அப்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, தமிழகத்திற்கு 999 ஆண்டுகள் தண்ணீர் தர வேண்டும். இது தமிழகத்தின் உரிமை. அதன்படி 2995ஆம் ஆண்டுவரை முல்லைப் பெரியாறு அணை நீரைப் பெறுவதில் நம் உரிமை முழுமையானது.
இடையில் அணை பலவீனமாக உள்ளது என்பது போன்ற சர்ச்சையில், தமிழக அரசின் நிதி உதவியினால் அணை நவீன முறையில் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் முல்லைப்பெரியாறு அணை, தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அணையாகும். தமிழகத்தின் அனுமதி இல்லாமல் முல்லைப்பெரியாறு அணையைத் தொடவோ, அன்றி அங்கு சிறு துரும்பை அகற்றவோ கேரள அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.
கேரள அரசியல்வாதிகளான உம்மன் சாண்டி, அச்சுதானந்தன் போன்றாரின் கீழ்த்தரமான அரசியல் அணுகுமுறையில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் மக்கள். கேரளத்தவர்கள் அங்குள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். கடைகளை அடித்து நொறுக்குகிறார்கள். இரப்பர் தோட்டத்துத் தொழிலாளர்களாகிய தமிழ்ப்பெண்களிடம் வரம்புமீறி நடக்கிறார்கள். இவையயல்லாம் மனித நாகரீகம் அல்ல.
தேனி, கம்பம், குமுளி மெட்டு அவைசார்ந்த பகுதியில் வாழும் தமிழர்களை இவையயல்லாம் ஆத்திரப்படுத்தி விட்டது. விளைவு, 50,000 மக்கள் கேரள எல்லைக்குள் நுழையத் திரண்டெழுந்துவிட்டார்கள். இந்த எழுச்சி இயல்பானது. இதில் கேரளத்தைப் போலத் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிகளும் பின்னணியில் இல்லை. இயல்பாக எழுந்த மக்கள் எழுச்சி இது.
ஓர் அரசு, இந்த மக்களை எப்படிக் கையாள்வது என்பது கூடத் தெரியாமல், கேரள எல்லைக்குள் அவர்கள் நுழைந்தால் கண்டவுடன் சுட்டுத்தள்ள உத்தரவு பிறப்பித்தி ருக்கிறார் இடுக்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜார்ஜ் வர்கீஸ்.
ஜார்ஜ் வர்கீசுக்குத் தமிழர்கள் என்ன தீவிரவாதிகளா? வன்முறையாளர்களா? அல்லது இவர்கள் தமிழர்கள் என்ற இனவெறியா?
2006 பிப்ரவரி 27ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், நீர்மட்டத்தை 136இல் இருந்து 142 அடியாக உயர்த்தவில்லை கேரள அரசு.
பலமாக இருக்கும் அணையைப் பலவீனம் என்று சொன்னதோடு, உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு மாறாக, “கேரள அணைகள் பாதுகாப்புச் சட்டம்” ஒன்றை நிறைவேற்றி முல்லைப் பெரியாறு அணைக்குப் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
கேரள அரசின் துணையோடு, தயாரிக்கப் பட்ட டேம் 999 என்ற திரைப்படம் வன்முறையைத் தூண்டிவிட்டது. அணையை இடிக்கவும், புதிய அணையைக் கட்டவும் கேரள சட்டமன்றம் தீர்மானம் இயற்றி இருக்கிறது. மொத்தத்தில் தமிழர்களும் மலையாளிகளும் நேருக்கு நேராக மோதிக்கொள்ளும் சூழ்நிலை இன்று ஏற்பட்டுவிட்டது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்திருக் கிறார்கள். கேரளத்த வர்களும் பிரதமரைச் சந்தித்துள்ளனர். இரு மாநில நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தாவது மத்திய அரசு இதில் தலையிட வேண்டும்.
முக்கியமாகத் தமிழக அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சிகளும் இணைந்து வைக்கும் கோரிக்கையான முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க மத்தியப் பாதுகாப்புப் படையை நிறுத்த வேண்டும் என்பதையாவது மத்திய அரசு செய்ய வேண்டும்.
எதையும் செய்யாமல், செயல்படாத பிரதமரான மன்மோகன் சிங் இதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடானது.
1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப்பட்டபோது, தமிழ் மண்ணின் பல பகுதிகளை அண்டை மாநிலங்களிடம் நாம் இழந்தோம். அவற்றுள் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் குறிப்பிடத்தக்கன. அவற்றை மீண்டும் தமிழ்நாட்டுடன் இணைப்பதன் மூலமாகவே இப்பிரச்சினை ஒரு நிரந்தரமான தீர்வை எட்டும். இன்றைய போராட்டம் அதை நோக்கியே நகர்ந்து கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது.