கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத் தொடங்கும் என்கிறது மத்திய அரசு. கூடங்குளம் அணுஉலை செயல்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று அணுஉலைக்கு எதிரான கூட்டமைப்பினர், எதிர்ப்புக் குரல் கொடுக்கின்றனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆதரவாகக் காங்கிரஸ் கட்சியும், எதிராக மக்களும் நிற்கிறார்கள். இன்று எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறவர்கள், அணுஉலைக் கட்டத் தொடங்கிய போது ஏன் அதை எதிர்க்கவில்லை என்றும் சிலர் கேள்வி கேட்கின்றனர்.

போராட்டக் குழுவைச் சேர்ந்த செல்வி லிட்வின் இது குறித்துக் கூறும்போது 1980ஆம் ஆண்டு தொடக்கம் 31 ஆண்டுகள் அணுஉலைக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அணுஉலை அமைப்பதற்கான ஆரம்பகட்டத்தில் இதுகுறித்த விழிப்புணர்வு அம்மக்களிடம் இல்லை. ஜப்பானில் உள்ள புகுசிமா நகரத்தில் ஆழிப்பேரலையால் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட ஆழிப்பேரலையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளுமே இன்றைய வேகமான விழிப்புணர்ச்சிக்குக் காரணம் என்னும் லிட்வின் கூற்றை நாம் ஒதுக்கி விட முடியாது. அணு வீச்சின் கொடுமைய உணர்ந்த ஜப்பான் அரசு, மீன் உணவைக் கூட உண்ணவேண்டாம் என்று மக்களை அறிவுறுத்தியதை நாம் மறந்து விட முடியாது.

அத்தகைய கதிர்வீச்சுக் கொடுமை தங்களைப் பாதிப்பது மட்டுமின்றி, வரும் தலைமுறைகளையும் பாதித்துவிடக் கூடாது என்ற மக்களின் அச்சம் நியாயமானது. ஒரு புறம் அணுஉலையால் பாதிப்பே வராது என்று சொல்லும் அதிகாரிகள், மறுபுறம் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்யலாம் என்னும் முன் எச்சரிக்கைப் பயிற்சியை மக்களுக்கு அளிப்பது முரணாக இருக்கிறது.

அது மட்டுமன்று அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு ஏற்படுமா, ஏற்படாதா என்ற மக்களின் கேள்விக்கு இன்றுவரை மத்திய அரசு உறுதியான விடை எதையும் கூறவில்லை.

கூடங்குளம் அமைந்துள்ள இடிந்தகரைப் பகுதி மக்கள் அனைவரும் மீனவர்கள். கடலை நம்பி வாழ்பவர்கள். இவர்களின் வாழ்வாதாரம், அங்கு அமைந்துள்ள அணுஉலையினால் நாளையோ மறுநாளோ உருக்குலைந்து போகாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. இது போதாதென்று மேலும் அணுஉலைகளுக்கான ஒப்பந்தத்தில் கையயழுத்திட ரஷ்யா புறப்படுகிறார் பிரதமர் மன்மோகன்சிங். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அல்லவா இது இருக்கிறது.

கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடிவிட வேண்டும் என்பதோடு, இனி நம் நாட்டில் எந்த இடத்திலும் அணுஉலைகள் நுழைவதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதே அனைவரின் வேண்டுகோளும் ஆகும்.

அணுஉலைகளில் மிகப் பெரும் பணத்தைக் கொட்டி, மிகச் சிறிய அளவிலேயே மின்சாரத்தை நாம் பெறுகிறோம். எனவே அரசின் நோக்கம், அணுஉலைகளின் மூலம் மின்உற்பத்தியைப் பெருக்குவதன்று, பக்கவிளைவாகக் கிடைக்கும் புளுடோனியத்தைப் பெற்று, அதன் மூலம் அணுகுண்டுகளைத் தயாரிப்பதே ஆகும். இந்தியர்களைக் கொன்றுவிட்டு, இந்தியா வல்லரசாவதில் அப்படி என்ன ஆர்வமோ தெரியவில்லை!

Pin It