பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின்  தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டத்தில், காஞ்சி மக்கள் மன்றக் களப்பணியாளர் தோழர் செங்கொடி தன் உடலைத் தீக்கிரையாக்கி தன் எதிர்ப்பைப் பதிவுசெய்தார். மூன்று உயிர்களைக் காக்கும் போராட்டத்தில் நான்காவதாக ஒர் உயிரை இழந்த வேதனை அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியது. மரணதண்டனைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெரும் எழுச்சியை செங்கொடியின் உயிர்க்கொடை ஏற்படுத்தியது. அவருடைய உணர்வுகளுக்கு நாம் தலைவணங்குகிறோம். அவருடைய தியாகத்தைப் போற்றுகிறோம். ஆனாலும், விலை மதிப்பில்லாத உயிர்களைச் சடுதியில் போக்கிக்கொள்ளும் போக்கு நமக்கு உடன்பாடானது அன்று.

ஈழத்திலும், வியட்நாமிலும் இப்படிப்பட்ட உயிர்க்கொடைகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததை நாம் அறிவோம். மண்ணையும், உரிமைகளையும் மீட்பதற்கான விடுதலைப்போரில் இது போன்ற தற்கொடைகள் யுத்த வழிமுறைகளாக இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால் இங்கே உயிர்ப்பலிகள் தவிர்க்கப்பட வேண்டும். நாம் ஏற்கனவே ஈடுசெய்ய முடியாத எண்ணிக்கையில் உயிர்களை இழந்து விட்டோம். ஒர் உயிர்கூட இனிமேல் இழக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் இந்த போராட்டங்கள்.

பழங்குடியின இருளர் சமூகத்தில் பிறந்த செங்கொடி, குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்தவர். தந்தையோ ஒரு கூலித் தொழிலாளி. எனினும் அவர் தன் வாழ்வைத் துன்பமாய் ஒருபோதும் நினைத்ததில்லை. அவர் கற்றுக்கொண்ட இசை, நடனம் எல்லாம் மக்களுக்காகவே! சமுதாய அக்கறையும், தன்னல மறுப்பும் அவர் குணங்களாய் இருந்தன. ஈழத்தமிழர்கள் பட்ட, படுகின்ற துயரங்களை எண்ணிக் கரைபவராக இருந்தார் செங்கொடி.

தீயின் நாக்குகள் தின்று செரித்தது ஒரு செங்கொடி அன்று. ஓராயிரம் செங்கொடிகளை. நல்ல குரல் வளம், பறை முதல் பரதம் வரை நடனத்தில் தேர்ச்சி, குருதியோடு கலந்து விட்ட கொள்கைத் திறம் என்று பல்திறன் கொண்ட எதிர்கால ஆளுமையை நாம் இழந்து இருக்கிறோம். செங்கொடி உயிரோடு இருந்திருந்தால், ஆயிரம் ஆயிரம் செங்கொடிகளை உருவாக்கி இருக்க முடியும். நம்முடைய இழப்பு ஒன்றன்று ஓராயிரம். எனவேதான் சொல்கிறோம் உயிர்க்கொடைகள் வேண்டாம்.

இத்தனை வலி தரும் உயிர்க்கொடையை, காதல் தோல்வியால் நடந்த தற்கொலை என்று தினமலர் கொச்சைப் படுத்தியிருக்கிறது. எப்போதும் நம்முடைய இன உணர்வு சார்ந்த போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவது என்பது அச்சிறுமதியாளர்களுக்கு வழக்கமாகிப்போன ஒன்றுதான். என்றாலும், 20 வயது இளம் போராளியின் உயிர்க் கொடையை இழிவுபடுத்தியது மனிதத் தன்மையற்ற செயலாகும்.

ஈகையை அறமாகக் கொண்ட இனம் தமிழினம். உரிமையை உயிராய் மதிக்கும் மரபு தமிழ் மரபு. இதன் தொடர்ச்சிதான் இளைஞர்களின் உயிர்க்கொடைகள். ஒட்டுண்ணிகளுக்கு உயிரின் மதிப்புத் தெரிந்திருக்க முடியாதுதான். இரத்தலையே தொழிலாய்க் கொண்டுள்ள கூட்டம் ஈகை என்னும் உயரத்தை ஒருநாளும் எட்ட முடியாது.

1964ஆம் ஆண்டு, தமிழ் வாழ்க, இந்தித் திணிப்பு ஒழிக என்று முழக்கமிட்டபடியே தன்னை எரித்துக் கொண்ட கீழப்பளுவூர் சின்னச்சாமியின் மரணம், தமிழகம் முழுவதும் பெருநெருப்பை மூட்டிற்று. அதையும் கூட, அன்றைய ஆட்சியாளர்கள் கொச்சைப்படுத்தத்தான் செய்தனர். வயிற்று வலியால் இறந்து போனவனை எல்லாம், அரசியல் நோக்கத்திற்காகத் தியாகியாக்கப் பார்க்கிறார்கள் என்றார் அன்றைய முதல்வர் பக்தவச்சலம். இப்போது தினமலர் அப்பணியைத் தொடர்கிறது.

சின்னச்சாமியும், முத்துக்குமரனும் மூட்டிய நெருப்பு, எல்லாத் திசைகளிலும் எப்படிப் பற்றிப்படர்ந்ததோ, அதற்குச் சற்றும் குறையாமல் செங்கொடி ஏந்திய நெருப்பும், இன உணர்வாய், மொழி உணர்வாய் எங்கும் கிளர்ந்தெழும்.

காயப்படுத்தும் கயவர்களின் ஏடுகளைக் காலம் எரிக்காமல் விடாது.

Pin It