நவீன அறிவுஜீவிகள் கையொப்பமிட்ட கூட்டறிக்கையின் மூன்றிலொரு பங்கு சுருக்கம்

கவனம்,
சோதனை வெற்றி பெற
மிக முக்யம் வெள்ளெலிகள்.
வாசகனென்று பெயரிடு.

குடுவையின் பாதிவரை
சொற்களால் நிரப்பு

"இசங்கள்'' சிலதை உட்செலுத்து
பிப்பெட்டின் உதவியால்...

கலக்கு நன்றாக நுரைக்கும்வரை

மிரட்சியாய் பார்க்கும் எலிகள் குறித்த
கவலை வேண்டாம்
கீழோர்க்கு அஞ்சேல்.

படைப்புருவாக்கத் தவத்தீயால்
வெப்பமூட்டு குடுவைக்கு
சுடரை நெற்றியில் நிறுத்து
எழுத்தும் நவீனம் எழுதுகோலும் நவீனம்.

குடுவையிலிருந்து குழாய் மூலம்
வெளியேறத் தவிக்கும்
வாயுவின் மீது குறியீட்டு நீர்த் தெளி
படியும் படிமங்கள் புரியாமல்

குடுவையுள் கழிவாகக் கிடக்கும்
திட நவீனத்தை
ரெண்டு வரியெடுத்து தின்னக் கொடு;
எலிகள் ஏற்று ருசித்தால்
ம்ஹும்! படைப்பு இன்னமும் பக்குவப்படவில்லை

எளிமை புரிதலிருப்பின்
தூக்கிக் கிடாசு கசடென.

பிறமொழி வார்த்தைகளைத் தூவு லேசாக
மறந்துவிடாதே!
படைப்பு சீர்மிகு செம்மொழியிலென்பதை...

பிப்பெட்டின் உதவியால் கலக்கு
படிமத் துகள்களை
பொங்கும் நுரைக் கொப்புளங்களின்
ஒலியிலிருந்து கோர்க்கப்பார் இசைக்குறிப்புகளை

திரளும் வார்த்தைகளைப் பத்தியாக்கு
அநேர்க்கோட்டில்...

ஒரு துண்டத்தை கொடுத்துப்பார்
எலிகள் குமட்டித் துப்புவதையும்
இணைத்து உருவாக்குன அதிநவீனத்தை

பொங்கிப் பெருகுமந்த திடக்கழிவை
சிற்றிதழ்களுக்கு அனுப்பிவிட்டு

செத்துப்போ நவீன அறிவுஜீவியே
கிணற்றில் விழுந்தோ
குடியில் அமிழ்ந்தோ...

Pin It