“வானத்தைப் பார்” நேற்று
அப்பா சொன்னார்.

வானம் நீலமில்லை.அது சத்தம்.

பெரியதொரு இரும்புப் பறவை
வீசிச் சென்றது.
அம்மா சொன்னாள்
“அது ட்ரோன்… பயப்படாதே.”

பறவைகளுக்கு பெயர் தெரியாது எனக்கு.ஆனால்
இவைக்கு ஏன் பயம் வருது?

என் புத்தகத்தில்
ஒரு வீடு வரைந்தேன்.
சின்ன ஜன்னல்.சிவப்பு கூரை.
அதன் மேல்
ஒரு கருப்பு கோடு வரையணும் என்று
என் கையில் யாரோ தள்ளின மாதிரி இருந்தது.

அது ராக்கெட் தானாம்.

நேற்று இரவு
நட்சத்திரம் விழுந்தது போல
ஒரு தீ விழுந்தது.
என் நண்பன் இன்று பள்ளிக்கு வரல.
“இலக்கு” ஆனதாம் அவன் வீடு

“இலக்கு”ன்னா என்ன அம்மா?

அவள் கண்களில் பதில் இல்ல.
கண்ணீரா பதிலாகும்

கடல் எப்பவும் எனக்கு பிடிக்கும்.
அருகே போனால்
அலை வந்து பாதம் நனைக்கும்.

இப்போ கடலும் பயப்படுத்துற மாதிரி இருக்கு.
அதன் மேல் பெரிய கருப்பு கப்பல்.
அது மீன் பிடிக்க வரலாமே?
ஏன் அது தீ மட்டும் கொண்டுவருது?

நான் வரைந்த உலக வரைபடத்தில்
எல்லைகள் இல்லை.
ஆசிரியர் சிவப்பு பேனா வைத்து
கோடு இழுத்தார்.
அதுக்கு அப்புறம்
செய்திகளில் கோடு எல்லாம்
இரத்தம்.

என் அம்மா சொல்றாங்க
“அமைதி வரட்டும்” என்று.

அமைதி என்றால் என்ன?
அது விளையாட்டு நேரமா?
அல்லது
நான் பயமில்லாமல் தூங்கும் இரவா?

நான் பெரியவனாகும்போது
ட்ரோன் ஓட்ட மாட்டேன்.
ராக்கெட் செய்ய மாட்டேன்.
கப்பல் கட்ட மாட்டேன்.

நான் வீடு கட்டுவேன்.

வானத்தில் பறவைகள் மட்டும் பறக்கட்டும்.
நட்சத்திரம் விழுந்தால்
அது ஆசையாக இருக்கட்டும்.
“இலக்கு” என்ற சொல்லை
நான் மறந்துவிடட்டும்.

ஏனென்றால் என் வானத்தில்
பறவைகள் இல்லை.

அவற்றை மீண்டும் வரவழைக்க
காத்திருக்கிறேன்.

 “தேசிய பெருமை (Limited Offer)”

இன்று அரசியல்வாதி A
போர்க்கப்பலைத் திறந்து வைத்தார்.
ரிப்பன் வெட்டும்போது
கடல் கைதட்டவில்லை.

அவர் சொன்னார்:
“இது நம் நாட்டின் பெருமை!”

அதே நேரத்தில் மீனவர் கேட்டார்:
“என் வலை எங்கே?”

அடுத்த மேடையில்
அரசியல்வாதி B
ஏவுகணையைக் காட்டி
புன்னகைத்தார்.
பின்னால் LED திரையில்
தீப்பொறிகள் slow motion.

“நாம் பதிலடி கொடுத்தோம்!”

எந்த கேள்விக்கு?
யாருடைய குழந்தைக்கு?
எந்த வீட்டு முகவரிக்கு?

ராக்கெட் பறந்தது.
பங்குச் சந்தை ஏறியது.
ட்விட்டரில் ஹேஷ்டேக் வெடித்தது.
அடிக்கடி மாறும் profile picture-களில்
பெருமை.

தரையில் ஒரு வீடு மட்டும்
இருந்த இடம் தெரியாமல் போனது.

ட்ரோன் மேலிருந்து பார்த்தது.
அது உணர்ச்சியற்றது.
அதன் கேமரா
“collateral damage” என்று எழுதிக் கொண்டது.

ஒரு செய்தியாளர் கேட்டார்:
“அமைதி பற்றி?”
அரசியல்வாதி சிரித்தார்:
“அமைதி? அது தேர்தலுக்கு முன் பேசுவோம்.”

போர் ஒரு நிகழ்ச்சி.
ஸ்பான்சர்: பாதுகாப்பு ஒப்பந்தம்.
Tagline: “உங்கள் பயம் — எங்கள் வாக்கு.”

நாடாளுமன்றத்தில் கைத்தட்டல்.
அடைக்கல முகாமில் காத்திருப்பு.

தேசிய கீதம் ஒலிக்கிறது.
அதே சமயம்
அறிவிக்கப்படாத இறப்புகள்
அடிக்குறிப்பாக ஓடுகிறது.

ஒரு குழந்தை கேட்டது:
“அப்பா, வெற்றி யாருக்கு?”

மௌனமாயிருந்தார் அப்பா

வெற்றி என்பது
போரில் உயிர் பிழைத்தவர்களின் சொல் அல்ல;
போர் தொடங்காதவர்களின் சொல்.

போர்க்கப்பல் இன்னும் மிதக்கிறது.
ஏவுகணை இன்னும் தயாராகிறது.
ட்ரோன் இன்னும் சுற்றுகிறது.

அமைதி?
பிரஸ் மீட்டின் கடைசி ஸ்லைடு

- அன்பாதவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.