"வேலைக்குக் கிளம்பும் போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்கவேண்டும்"

"எப்படி வெறுங்கையோடு போவ
இன்னா தாத்தா கொண்ணாந் தேன்ற
கேள்விக் கென்ன பதில் சொல்வேன்?"

*
"வெறுங்கைகளுடன்
திரும்பிக் கொண்டிருக்கின்றீர்கள்
சிறுமுயலும் கிடைக்காத இன்றைய
வேட்டையை முடித்துக் கொண்டு

தொடர்ந்து ஐந்தாவது நாளாக
இப்படி நேர்ந்திருக்கிறது
பாரம் துவளத் தளர்ந்த நடையோடு போகும்
உங்களைப் பூதாகரமாய்ப்
பின்தொடர்ந்து வருகிறது அந்திநிழல்"

*
சிறுங்கண்ணிக்குப்
பறவைகளை அழைத்து அழைத்துச்
சோர்ந்தான்
சகல வித்தைகளும்
பிரயோகிக்கப்பட்டுத்
தோற்றுக் கொண்டிருந்தன
கண்ணியைச் சுருட்டக்கூட
மனமின்றி நடந்தான்
எட்டிப்போட்ட
நடை தளர்ந்திருந்தது

தள்ளிப் போக தள்ளிப் போகப்
பூதாகரமாய்
முன்னால் விரிகிறது
வெறுங்கையுடன்
வீடு திரும்புபவனின் நிழல்

வேறு

"நோய்மையில் இற்றுக் கொண்டிருக்கும்
நைந்த வலைகள் என்னுடையவை
இந்தக் கடல் உருவானதிலிருந்து
வலையெறிந்து கொண்டிருக்கிறேன்
ஒரு மீனும் சிக்கியதில்லை இதுவரை

வலைகளின் மேல்
நம்பிக்கையிழந்தவன்
பசியிலும் மூப்பிலும் தளர்ந்துபோய்
சிறுதூண்டில் ஒன்றைத்
தயாரித்துக் கொண்டேன்

தூண்டில் முள்ளில் புழுவுக்குப் பதில்
என் இதயத்தையே பொறி வைத்துள்ளேன்
நான் மீன் உண்பேனா
என்னை மீன் உண்ணுமோ
நானறியேன்"


----------
* யுகபாரதி
* பவா செல்லத்துரை
* கலாப்ரியா
* இளங்கோகிருஷ்ணன்

இது ஒரு கொல்லாஜ் - மாண்டேஜ் கவிதை. தலைப்பு உட்பட ஒருவரிகூட என்னுடையதில்லை. தொகுப்பாக்கம் மட்டுமே என் பங்களிப்பு

- பொதிகைச்சித்தர்

Pin It