வீதிநாய்கள் உறங்குவதே இல்லையா..? என்ன ஒரு பெருஞ்சத்தம் ..! தெருவில் குரைத்த நாய்களின் பெருந்தொண்டையொலி படுக்கையறைக்குள் நுழைந்தென் தூக்கத்தை அறுத்தது .
எழுந்தவன் கழிவறைச்சென்று திரும்பி நாவறட்சித்தணிக்க குடிநீரை அருந்துகிறேன் உறக்கம் முழுவதுமாய் தொலைந்தே போனது வழக்கமான வியாதியும் மருந்துமான கைப்பேசியில் நிரட ஆரம்பித்தேன்.
youtube-ல் யாரோ ஒரு பெண்மணி ஆவேசமாய் பேசிக் கொண்டிருந்தாள் !
சற்றே தாட்டியான உருவம்; உருண்டையான கருத்த முகத்தில் பெரிய பொட்டு! குரலில் பெரும் ஆக்ரோஷம்! பெண்மணியின் பின்னணியில் சாதிச் சங்கமொன்றின் முத்திரை, கொடியுடன் சங்கத் தலைவரின் சிரித்த முகம்
“அனைத்து ஊடகத்துறையினருக்கும் வணக்கம்! சூரன் இளைஞர் பேரவைத் தலைவர் சரண்ராஜ் துணைவி ரஞ்சிதா பேசுறங்க.. கடந்த சில தினங்களுக்கு முன்னாடி எங்க குடும்பத்துல சுபநிகழ்ச்சி ஒன்னு நடந்தது . அதுக்காக என்னோட கணவரை ரெண்டுநாள் பரோல்ல பன்னெண்டு வருஷத்துக்கப்புறம் மிகக்கடுமையான சட்டப் போராட்டம் நடத்தி நாங்க சிறையிலயிருந்து வெளியே அழச்சிகிட்டு வந்தோம்
ரெண்டுநாள் எங்கவீட்டு விசேஷத்திற்கு அதுவும் அவரோட செல்லப்பொண்ணு நிச்சயதார்த்தத்துக்கு வந்ததுக்கு ஏங்க இவ்வளவு கூச்சல்? இது ஏன் எல்லா மீடியாக்களிலும் பேசுபொருள் ஆகியிருக்குன்னு தெரியல .. அரசியல் நிகழ்ச்சிக்கோ பொதுக்கூட்டத்துக்கோ எங்கணவர கூப்ட்டுகிட்டு வரல… எங்கசொந்த குடும்பநிகழ்ச்சிக்கு ஒரு தகப்பனா அவர் வந்து போனார். இதில் மீடியாக்காரங்களுக்கு என்னப் பிரச்சனைன்னு தெரியல
உங்களுக்கு பார்வையாளர் எண்ணிக்கை கூடுதுன்தற்காக எது வேணுமானாலும் பேசுறாங்க.. எங்கத்தம்பிங்க அக்னிசட்டிப்போல ரொம்பக்கோவக்காரனுவோ .. எங்கள தீண்டினாச் சுடுவோம்.. சிறைச்சாலையெல்லாம் எங்களுக்கு மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை தூக்குமேடை எங்கத்தம்பிகளூக்கு பஞ்சுமெத்த நீங்க கத்திப் பேசினா எங்கக் கத்திப்பேசும்… பேச எவ்ளோ நேரம் ஆகும்
எங்கத்தம்பிங்க எல்லாத்தையும் உன்னிப்பா கவனிச்சுட்டு தான் இருக்காங்க சும்மா எங்க குடும்ப விஷயத்துல தலையிடாதீங்க இப்போதைக்கு இதமட்டும் எச்சரிக்கையாக சொல்லிக்கிறேன் நன்றி..!-- எனக் குரலில் கடும்கோபம் கொப்பளிக்களிக்கப் பேசினாள் அந்தப் பெண்மணி.
என்ன நிகழ்வு இது? எப்போது நடந்தது..? எப்ப்டிப் பாக்கம விட்டேனிதை..?பழைய கதை தானென்ன? மூளையின் வினாக்கள் விரல்களுக்கு கட்டளை இட நிரலில் வேறொரு காணொளி.அட..இது என்ன சொல்லப்போகுது? அவன் காணொளியைப் பார்க்கத் தொடங்கினான்.
அட இவர் பிரபல வழக்கறிஞர் மோகன் அல்லவா.. வழக்கறிஞர் வேறு ஒருவருடன் சம்பவத்தை விவரித்துக் கொண்டிருந்தார்
***
கோவிந்தராஜும் ரேவதியும் கல்லூரியிலிருந்து பேருந்து பிடித்து மலைக்கோயில் நிறுத்தம் இறங்கி படியேறத் தொடங்கினர். இருவரும் மலைக்கோயில் உள்நுழைந்து பெருமாளை சேவித்தார்கள். பெருமாள் மிகுந்த சக்தி வாய்ந்தவராம்!
கோவிந்தராஜும் ரேவதியும் மலைக்கோயிலின் உட்பிரகாரத்தைச் சுற்றி வந்து முன்மண்டபத்தினொரு ஒதுக்குப்புறத்தில் வந்தமர.. திடீரென ஒரு கும்பல் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்தது.
”ஏய் யார்ரா நீயி..எந்தூரு..ரெண்டுபேரும் இங்க இன்னாப் பன்றீங்க ?”
”ஏண்டி பாதிரிகுப்பம்தான நீயி..? நல்லஜாதியிலப் பொறந்துட்டு இந்தக்கேடுகெட்ட பயலோட லவ்வு கேக்குதா லவ்வு..?” -ஒரு வெறிமிருகன் அவளை நெருங்கினான்.
“டேய் இவள இழுத்துகிட்டுப்போயி அவவூட்ல வுட்டுட்டு இவள எங்கேயும் வெளியே அனுப்பக்கூடாதுன்னு நான் சொன்னேன்னு இவ அப்பன் கிட்ட சொல்லு.. ஏய் அந்த மொபைலை கூடுடி..”- சரண்ராஜின் அதிகாரம் தூள்பரத்திட.. கூட இருந்தவரில் எவனோ ஒருத்தன் மொபைலை வாங்கும் சாக்கில் அந்தப் பெண்ணைத் தொடக்கூடாத இடங்களில் தொட்டான்.
“எந்திரிடி சாதிக்கெட்டதே...யா..முண்ட படிக்கிறதுக்கு காலேஜ் அனுப்புனா லவ்வு..மொபைலு மயுறு ..”
ரேவதி திமிறினாள். அவள் கன்னத்தில் சரண்ராஜின் வலதுகையின் ஆவேசம். ’பளாரென்ற’ அறை விழுந்தது. ” நம்ம சாதிப் பொண்ணாச்சேன்னு பொறுமையா சொல்லிட்டு இருக்கேன்..திமுறுற…! நெஞ்சில பயிர் மொளைச்சவளே.. இழுத்துனுப் போடா இவள..”
” ண்ணா வேணாண்ணா அடிக்காதண்னா அந்தப் பொண்ணு நல்லப்பொண்ணுண்ணா வுட்டுடுண்ணா” கோவிந்தராஜன் கெஞ்சும் குரல்
அந்தப் பொண்ணுகிட்ட மொபைல் வாங்கவந்த அண்ணனின் டிரைவர்.. ரேவதியின் தொடக்கூடாத இடங்களையும் தொட்டான். அவனும் அவளும் ஒரே சாதிதான்! சரண்ராஜ்க்கும் கோவிந்தராஜுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.. கோவிந்தராஜ் யாரென்றே இந்தக் கும்பலுக்குத் தெரியாது. ஆனால் அவன் வெள்ளகேட் காலனிப் பையன் என்பது மட்டும் அண்ணனுக்குச் சொல்லப்பட்டது. ரேவதிக்கு பாதிரிகுப்பம் கிராமத்திலிருந்து படிக்க வந்தவள்!
ரேவதிக்கு இந்த ‘அண்ணன்’ யார்? அவனுடைய பின்னணி என்ன எதுவுமே தெரியவுமில்லை..புரியவுமில்லை .வங்கொடுமையாக அவள் கையை இழுத்தவன் பின் பலியாடு போல நடந்தாள்.
” சொல்றா எங்க சாதிப்பொண்ணுகிட்ட இங்கயின்னா வேலடா..?
“இல்லண்ணா ரெண்டுபேரும் ஒரே காலேஜ்ல ஒண்ணாப் படிக்கிறோம்ண்ணா.. சாமிக் கும்பிடக்கோவிலுக்கு வந்தோம்ண்ணா..”
“உங்களையெல்லாம் கோவிலுக்குள்ள விட்டதேத்தப்பு! அந்தக்காலத்து கெழங்களுக்கு இதெல்லாம் புரியாம கோயிலுள்ள போய்வர்ரதுக்கு அனுமதி வாங்கி கொடுத்துட்டானுங்க …இதுல லவ் கேக்குதா லவ்வு அட்ரா அவன! ”
”ஏண்டா உங்காளுங்களுக்கு தான் கோபுரதர்சனம் கோடிப்புண்ணியம்ன்னு சொல்லி வச்சிருக்கோமே படிக்கலியா நீ.. !”
பெருமாள் வில்லம்பு ,கதை, சக்கரமென ஆயுததாரியாகத் தானிருந்தார். ஆனால் ரேவதியை சங்கத்து டிரைவருடன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு கோவிந்தராஜை அண்ணனின் ஆட்கள் நாலைந்துபேர் மிரட்டியழைத்துக் கொண்டுப் போனப்போது. சிசிடிவி கேமரா நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தது பெருமாளுடன்
கோவிந்தராஜ் குடித்தக் கடேய்சித்தண்ணீர் கோயிலில் பருகியத் துளசித்தீர்த்தம்தான்
***
கோவிந்தராஜைக் கூட்டிக் கொண்டுப் போன கும்பல் சரண்ராஜ்க்கு சொந்தமானத் தோட்டத்துக்குக் கொண்டு சென்றது
“ஏன்டா …..நாய்ப்பயலே அடுத்தவேள சோத்துக்கு வழியில்லாத எச்சக்கல நாய்க்கு எங்க சாதிப் பொண்ணுக் கேக்குதா” என்றபடியே கோவிந்தராஜின் வாயில் குத்தினான் ஒருவன்
”ண்ணா வேணாண்ணா வலிக்குதுண்ணா.. லவ் எல்லாமில்லண்ணா நாங்க வெறும் ஃபிரண்ட்ஸ்தாண்ணா.. அடிக்க வேணாம்ன்னு சொல்லுங்கண்ணா”
“சரி அடிக்கல ..நான் சொல்றபடி கேளு..நானு சொல்றபடி பேசு..”
“குடும்பச் சூழ்நிலைக் காரணமாக நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என் தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் அல்ல” - கோவிந்தராஜ் குரலிலேயே கைப்பேசியில் பதிவு செய்யப்படுகிறது
“நல்ல பையனாத் தாண்டா இருக்க.. இப்ப நீ சொன்னதையே ஒரு பேப்பர்ல எழுதி கையெழுத்து போடு பார்ப்போம் ..”
“ண்ணா என்னைய விட்டுருங்கண்ணா..”
“ஏய்.. ம்மாள … ப்போடுறான்னா சும்மா நிக்குற போடுறா.. பேசிக்கிட்டே இருக்குற கீழ்ச்சாதி தெ …..யா மவனுக்கு ஒசந்த சாதிப்பொண்ணு கேக்குதா.. எழுதுடான்னா..லவடிக்கபால்.. சீக்கிரம் எழுது.. எழுதாம இங்கருந்து தப்பிக்க முடியாது நீ..சொல்லிட்டேன்”
எழுதினாலும் உயிர் பிழைக்க முடியாது என்றுணர்ந்த கோவிந்தராஜ் கண்ணீருடன் தற்கொலை குறிப்பு என்னும் பெயரில் தன் மரண சாசனத்தை தானே எழுதுகிறான்
”அவனோட நாக்க அப்டியே கட் பண்ணுடா அப்டியே ரெண்டாக்கிழி அவன் செல்போனை ஆஃப் பண்ணிவை” எனக் கட்டளைகளை வீசியபோது சரண்ராஜ் போனுக்கு ஒரு அழைப்பு வருகிறது “ஆமாண்டா.. இங்கதான் தோட்டத்து வூட்லதான் இருக்கோம். நம்ம சாதிக்காரப் பொண்ணு கிட்ட கீழ்ச்சாதிப் பையன் ஒர்த்தன் வாலாட்னான்.. அதான் அவனுக்கு நம்ம ஸ்டைல்லப் பாடங்கத்துக் குடுத்னுக்கிறேன்.. முடிஞ்சிடும்..! இப்ப முடிஞ்சிடும்..! பாண்டிக்குத்தானே சாயங்காலமாப் போலாம்.. நானே போன் பண்றேன்”- என்றவன் கண்ஜாடை காட்ட அவனது ஆட்களில் ஒருவன் கோவிந்தராஜின் பின்மண்டையிலேயே இரும்புக்கம்பியால் அடிக்க கோவிந்தராஜின் மூளை சிதறியது
“இந்த நாய் மூளைய ஈசானமூலயாப் பாத்து தூக்கிவீசுடா.. ”- ரத்தம் பீறிடத் தள்ளாடி விழுந்தவனின் கழுத்தில் ஒரு கத்தியைக்கொடுத்து அறுத்து தலைவேறு உடல்வேறு ஆக்கியது அந்தக் கொலைகார கும்பல்
“இவந்தலைய மூங்கில்ல சொருவி உயரமா ஒரு இடத்துல நிக்கவைப்போம் இவன் சாதிக்காரன் எல்லாம் பாக்கணும் தெரியுதா.. இவன் ஒடம்பக் கொண்டுன்போயி ரயில்வே தண்டவாளம் பக்கமா போட்டுடு” என்றபடி கிளம்பினான் சரண்ராஜ் .அவன் சொன்னதையே வேதவாக்காகக் கொண்டு கோவிந்தராஜை முழுப்பிணமாக ஆக்கியது நாசகாரக் கும்பல்
***
மத்திய சிறை வாசலில் பல்வேறு வகையான கார்களின் கூட்டம்1
பெரிய சிறையில் சின்னக்கதவு திறந்தது! தலைவன் என்று சொல்லிக் கொள்பவனின் கால்கள் சிறைக் கதவைத் தாண்டி வெளியுலகின் மீது அடியெடுத்து வைக்க ”ஏய்! தலைவன் பாட்ட சவுண்டா வச்சு விடு ஜெயில் அலறட்டும்”
‘எஜமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில பொட்டு வச்சோம்
எஜமான் உங்க சொல்லுக்குத்தான்
நாங்க தானே கட்டுப்பட்டோம் ’
***
யூடியூபர் வழக்கறிஞர் மோகனிடம் கேட்டார்.”சார் இதெல்லாம் அந்தப் பெண்மணிக்குத் தெரியாதா..?
“இந்த வினோத வேடிக்கைக் கும்பலின் அமெரிக்கையெல்லாம் பார்ப்பவர்களுக்கு அண்ணன் ஏதோ தியாகதீபமாய் தேசத்துக்கு சேவை செய்து சிறை மீண்ட ஒரு தியாகி போல தோணும் உண்மையில் அண்ணன் ஒரு கொலைகாரன்! பட்டப்பகலில் பலரும் அறிய ஒரு படித்த இளைஞனை.. பொறியியல் பட்டதாரியைக் கொடூரமாக கொலை செய்தவன்! 20 வயது இளைஞனின் தலையை சீவி மூங்கிலில் வைத்து ’எங்கள் ஜாதிப் பொண்ணு கிட்ட பேசணா இதுதாண்டா கதி’ எனக் கொடூரமாய் கொக்கரித்தவன். தலையில்லா உடலை ரயில்வே தண்டவாளம் அருகில் வீசி தற்கொலை என நாடகமாடியவன் இந்த கொடூர கொலை மட்டுமல்ல அந்த இளைஞன் வசிக்கும் சேரிப்பகுதியை அழித்து வீடுகளைக் கொளுத்தி பொருட்களின் நாசம் செய்து ஒரு இளைஞனை பழிவாங்குவதாய் நினைத்து எளிய மக்களின் குடியிருப்பையே சர்வநாசம் செய்தவன்! கொடூரக் கொலைக்காக தூக்குத்தண்டனை வழங்கப்பட்டு ’நீதிதேவதையின் கண்கட்டு அவிழ்ந்ததால்’ சாகும்வரை தனிமை சிறையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட தண்டனை கைதி ! இன்று அவனின் கல்லூரி படிக்கும் மகள் நிச்சயதார்த்தத்திற்காக இரண்டு நாள் பரோலில் வரும் அவனுக்காகத் தான் இத்தனை அமர்க்களமும்”
பரோலில் வந்த கொலைக்கைதிக்கு சுதந்திரப் போராட்டத்திற்காக சிறை சென்று மீண்டதைப் போல பிரம்மாண்ட வரவேற்பு! நூறு கார்கள் 150 இருசக்கர வாகனங்கள் சுற்றுபட்டு கிராமங்களில் இருந்து சாதி சங்க வாசகங்கள் அச்சிடப்பட்ட எலுமிச்சை நிற பனியன்கள். எல்லா வாகனங்களிலும்.. சங்கத்துக்கான கொடிகள் ..கொஞ்சம் ஓவர்டோஸ்தான் அண்ணன் செய்த படுகொலைக்கு முட்டுக்கொடுக்க அண்ணனின் தர்மபத்தினி வைத்த கிடாவிருந்தோடு ஊரல் தேரல் சுவைக் கூடியதால் தொண்டரடிப் பொடியாட்களின் அடித்தொண்டைகள் சற்றுமிகையாகவே உணர்ச்சிவசப்பட்டு ஒலித்தன
***
”நீதிபதியே கேள்விக்கேட்ட பெருமை அந்த கொலகாரனுக்கு உண்டு தெரியுமா..”
“நீங்க எல்லாம் நீதிபதியாக இருந்து எனக்கு தண்டனை கொடுக்க போறீங்களா? நான் யாருன்னுத் தெரியுமா எங்கஜாதி பலம் என்னன்னு தெரியுமா? சிங்கத்தை கூண்டுல அடச்சிட்டு சிறையில் அனுப்பினாலும் எங்க சங்கம் பாத்துக்கும் தெரியுமில்ல..”
- அது நீதிமன்றம் எனப் புரிந்தும் சாதிச் சவடால் பேசுபவனைப் பார்த்து கைகட்டி நின்றது காவல்துறை.
“லத்தியடி.. லாடங்கட்டுரது.. மாவுக்கட்டெ..ல்லாம் சோத்துக்கு இல்லாதவனுக்குத்தான்.. சரண்ராஜை போன்றவனுக்கு இல்லை..புரியுதா.. நண்பரே.. சட்டம் அவனை பொறுத்தவரை இரும்பு கம்பியல்ல ..மூங்கில் பட்டை..”
***
“யண்ணா வணக்கம் யண்ணா..”
“வாடா ஐயப்பா அன்னைக்கு ரெண்டேநாள் பரோல்ல வந்ததுனால உங்கூடல்லாம் வெவரமா பேசமுடியல.. எப்படி இருக்க.. வூட்டுல சம்சாரம் புள்ளைங்க எல்லாம் சௌரியம் தானே..”
“அண்ணன் தயவுல எல்லாரும் நல்லா இருக்கோம்யண்ணா”
“என்னடா சேதி…ஜெயிலுக்குள்ள வந்து பாக்க வந்திருக்க….அண்ணிகிட்ட சொல்லிட்டு வந்தியா”
”அண்ணன் கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும் ஒரு சங்கதியை காதுல போடணும் ஆனா எப்படி சொல்றதுன்னு தான் தெரியல ”
சரண்ராஜின் அரசியல் பின்னணி தெரிந்த சிறைத்துறையின் சில்லறைத் தேவதைகள் அவனைப் பார்க்க பார்வையாளர்கள் வரும்போது கைதிகளை சந்திக்கும் பொதுவான இடத்தில் இல்லாமல் சிறிய பிரத்தியேகமான அறையொன்றில் சரண்ராஜ் உட்கார்ந்து சாவகாசமாக உரையாட வசதி செய்து தருவார்கள் .அண்ணனது அடிப்பொடிகளின் கவனிப்பு அப்படி.
அண்ணன் முகம் திருப்பி கண்காட்ட அந்த அறையில் இருந்த இரண்டு காவலர்களும் வெளியேறினார்கள்.
“என் கிட்ட என்ன தயக்கம்.. ஏன் இன்னும் முழுங்குற சொல்லுடா சொல்லு ”
“நான் சொல்றத கேட்டு அண்ணன் கோபப்படக் கூடாதுங்க நல்லா விசாரிச்சிட்டு தான் அண்ணன் கிட்ட இந்த தகவல முதல் முதல்ல சொல்றேன்”
“என்னடா ஐயப்பா ரொம்ப தான் பீடிகைப் போடுற அப்படி என்னடா விஷயம் அது” சிரித்தபடியே கேட்டான் சரண்ராஜ்.
“யண்ணா நம்ம சின்னம்மா .. “என இழுத்த அய்யப்பனை இடைமறித்தான் சரண்ராஜ்
“சின்னம்மான்னா யாரு ஏம்பொண்ணா நிச்சயதார்த்தம் முடிஞ்சுதே அவளா..?”
“ஆமாங்கண்ணா இப்போ கலயாணம் பேசிட்டு வந்தீங்களே காலேஜ்ல படிக்கிறாங்களே அவங்க தான்..”
” சொல்லு சின்னம்மாவுக்கு என்ன ”- சரண்ராஜ் குரலில் லேசான பதட்டம் கூடியது.
”அண்ணன் என்னைய தப்பா எடுத்துக்க கூடாது”
”இல்ல இல்ல ! சொல்லு”
”சின்னம்மாவ ஒரு பையனோட மலைக்கோயில் பாத்தனுங்கண்ணா..ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல உக்காந்து பேசிகிட்டு சிரிச்சிட்டு இருந்ததை என் ரெண்டு கண்ணால் பாத்தங்கண்ணா அங்கேயே விசாரிக்கலாம்ன்னு தான் நெனைச்சேன் சின்னமாகிட்ட.. ஆனா உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யலாம்ன்னு மனசுக்குப்பட்டுச்சு
”என்னடா சொல்ற..சரண்ராஜ்க்கு ..நெஞ்சு வலிப்பது போல் இருந்தது முகத்தில் வியர்வை பூக்கத் தொடங்கியது.மூளையின் யோசனை கண்களுக்குப் படர்ந்து கண்ணை மூடி மூடித் திறந்தான். சற்றே மூச்சு ஆழ்ந்து சுவாசித்து நிதானித்தான்.
”பாத்துட்டு சும்மாவா வந்த …”
“என்னயிருந்தாலும் அண்ணன் வூட்டு சமாச்சாரம்..” இழுத்தான் ஐயப்பன்
“ம்ம்...நீ ஒன்னு பண்ணு...என்ரப் பொண்ணை முடிச்சுவுட்ரு.......”
- அன்பாதவன்