பொய் வழக்குப் போடுவது, அப்பாவி மக்களை அடித்துத் துன்புறுத்துவது, மக்களை அச்சுறுத்தும் சக்தியாக விளங்குவது ஆகியவற்றை கொண்ட ஏதாவது ஒரு துறை இருக்கிறதென்றால் அதுதான் காவல்துறை. ஆனால் அந்த துறையை சேர்ந்தவர்கள் குறித்து அவ்வளவு தூரம் அச்சமின்றி செயல்படும் ஒரு சமூகப் பிரிவினர் உள்ளனர் என்றால் அவர்கள் நீதித்துறையைச் சார்ந்த வழக்கறிஞர்களாகவே இருப்பர். காவல்துறையினர் ஏதாவது ஒரு பகுதியினரிடம் நிதானமாக செயல்படுவார்கள் என்றால் அது வழக்கறிஞர்களிடம் தான்.

வழக்கறிஞர்கள் மீது முதல் தகவல் அறிக்கை போடக்கூட பெரிதும் அவர்கள் யோசிப்பார்கள். ஏனெனில் தங்களது உரிமைகளைப் பற்றிய விவரம் அறியாதவர்களாக சமூகத்தின் மிகப் பெரும்பான்மை மக்கள் இருக்கின்றனர். அதன் காரணமாக காவல்துறையின் அத்துமீறல்களை உரிய நீதி அமைப்புகளுக்கு எடுத்துச் சென்று அவர்கள் பதிலளித்தாக வேண்டிய கட்டாய நிலையை உருவாக்குவது மிகப்பெரும்பாலும் நடைபெறுவதில்லை. நினைத்த மாத்திரத்தில் அந்நிலையை உருவாக்கி காவல்துறையைச் சார்ந்தவர்களுக்கு பல தர்மசங்கடங்களை உருவாக்க வல்லவர்கள் வழக்கறிஞர்கள். அந்த அடிப்படையிலேயே வழக்கறிஞர்கள் குறித்த காவல்துறையின் நிதானம் எங்கும் எப்போதும் பராமரிக்கப்படுகிறது.

ஆனால் இந்த நிதானம் அப்பட்டமாக காற்றில் பறக்கவிடப்பட்டு காவல்துறையின் கோர சொரூபம் வழக்கறிஞர்களுக்கு எதிராகவும் வெளிப்பட்டது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சமீபத்தில் நடந்த காவல்துறையின் காட்டுத்தாக்குதலின் போதுதான். இந்தியா முழுவதும் உள்ள நீதித்துறை சார்ந்த அனைவரையுமே இது மீளமுடியாத ஒரு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதன் பின்னர் பிரச்னை உச்சநீதிமன்றம் சென்றதும் தாக்குதலில் ஈடுபட்ட அதிகாரிகளின் பெயர்களை விசாரித்து வெளிக்கொணர அமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிசன் அதைத் தவிர வேறு அனைத்தையும் செய்தது. வழக்கறிஞர்களின் போராட்ட நடவடிக்கைகள் குறித்தும் கண்டித்தும் பெரிய அளவில், கனத்த வார்த்தைகளில் பக்கம் பக்கமாக எழுதிய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா வன்மத்துடன் செயல்பட்ட காவல்துறையினரின் போக்கைப் பெயரளவிற்கு கண்டித்தார். நீதி அமைப்பு எவ்வாறு அரசிற்குக் கட்டுப்பட்ட ஒன்றாக ஆகிவருகிறது என்பதை அதன் மூலம் நிரூபித்தார்.

உச்ச நீதிமன்றப் பரிந்துரையின்படி இச்சம்பவத்தை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு காவல்துறை அதிகாரிகளைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்ய அறிவுறுத்தியது. அதைக் கூட இன்று வரை அமல்படுத்தாது அவர்கள் அதிலிருந்து தப்பிக்க எப்படிஎல்லாம் வாய்ப்பு வசதிகளைச் செய்து தரமுடியுமோ அதனைஎல்லாம் செய்து கொண்டுள்ளது தமிழக அரசு. எவ்வாறு போலீஸ் ராஜ்யத்தைத் தமிழகத்தில் அது பேணிப் பராமரிக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

விவேகமற்ற முட்டை வீச்சு நடவடிக்கை

இந்த தாக்குதல் ஜனதாக் கட்சி தலைவர் சுப்பிரமணியம் சுவாமி மீது கோர்ட் வளாகத்தில் முட்டை வீசிய வழக்கறிஞர்களை கைது செய்ய காவல்துறையினர் சென்றபோது நேர்ந்தது; வழக்கறிஞர்கள் கைதாவதற்கு பல்வேறு நிபந்தனைகள் வைத்து கைதை அனுமதிக்காததால் ஏற்பட்டது என்று காவல்துறை கூறுகிறது. அதனை நம்பவைக்கும் விதத்தில் ஊடகங்களும் செய்திகள் வெளியிடுகின்றன.

சுப்பிரமணியம் சுவாமி மீது முட்டை வீசிய சம்பவம் முழுமையாக தேவையில்லாமல் செய்யப்பட்ட ஒன்று. அவரைப் பொறுத்தவரையில் அவர் தன்னை ஒரு தனிமனித இராணுவமாக கருதிக் கொண்டிருப்பவர். அந்த அடிப்படையில் அவர் விடுக்கும் அறிக்கைகளும் முன் வைக்கும் கருத்துக்களும் அவர் விநோதமாக ஏதாவது சொல்வார், செய்வார் என்று அவர் குறித்து சாதாரண மக்களை எண்ணவைக்குமேயன்றி அதைத்தாண்டி எந்தவொரு மக்கட்பகுதியிடமும் அது எந்தவொரு செல்வாக்கையும் செலுத்தாது. அதாவது யாரும் அவரது கூற்றுக்களை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

குறைந்தபட்சம் அவர் மட்டுமாவது வெற்றிபெற்று நாடாளுமன்றம் செல்வதற்கு யாரிடம் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையைப் பொறுத்தே அவர் அவ்வப்போது முன் வைக்கும் கருத்துக்கள் இருக்கும். அவரது அறிக்கைகளும் அவரது நடவடிக்கைகளும் பெரிய பத்திரிக்கைகள் என்று கூறப்படுபவற்றின் ஏதாவது ஒரு மூலையில் இடம் பெறும். அதன் காரணமாக அவர் தன்னை பிரதானப்படுத்துவதற்காக நீதிமன்றங்களில் நூதனமான வேலைகள் எதையாவது செய்து கொண்டே இருப்பார். அவர் அமெரிக்காவில் கல்வி கற்றவர் மிகப்பெரிய ஒரு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர்; எனவே குறைந்தபட்சம் அவரிடம் ஒரு ஜாதி, மத, இன, பேதம் கடந்த ஒரு மனிதநேயம் இருக்கும் என்று எதிர்பார்த்தால் அவ்வாறு எதிர்பார்த்தவர்கள் ஏமாறும் விதத்திலேயே அவருடைய சமீபகால நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

தமிழ் நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் அனைத்தும் அவர் அவ்வப்போது கிளப்பும் புழுதியிலும், புகைமண்டலத்திலும் சில பலன்களை அடைந்தவைகளே. இருந்தாலும் அக் கட்சிகள் எதுவும் அவருக்கு ஒரு நாடாளுமன்ற இடத்தைக் கொடுத்து அதன் மூலம் அவரை கொம்பு சீவி விட பெரிதும் தயங்குகின்றன. ஏனெனில் அவர் ஒரு தனிநபராக இருந்தாலும், யாரையும் பயன்படுத்தி எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற அமெரிக்க மனநிலை கொண்டவர். குருட்டுத்தனமான விசுவாசத்தை தங்களை அண்டி வருபவர்களிடம் அடைந்து அடைந்து பழக்கப்பட்டுப் போன நமது மாநிலத்தின் அரசியல்வாதிகளிடம் அது அவநம்பிக்கையையே சம்பாதித்துள்ளது.

எனவே தான் அவர் தற்போது அப்பட்டமான இந்து வகுப்புவாத நிலையை எடுத்துச் செயல்படுகிறார். அதன் மூலம் பி.ஜே.பி - அது ஒரு அகில இந்திய அமைப்பாக இருப்பதால் ஏதாவது ஒரு இடத்தில் தனக்கு போட்டியிட வாய்ப்புத்தராதா என்ற அவரது ஏக்கம் தற்போது அவர் எடுத்துள்ள நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

அரசியலும் அதன் மூலம் கிடைக்கும் எம்.பி. எம்.எல்.ஏ பதவிகளும் சம்பாதிக்க ஏதுவான கருவிகளாக மாறிவிட்டதால் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் வாய்ப்புள்ள இடங்களைப் பெறுவதில் ஒவ்வொரு கட்சிக்குள்ளும் நிலவும்போட்டி பி.ஜே.பி கட்சியும் அவருக்கு இன்று வரை இடம் எதையும் ஒதுக்காத நிலையையே ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர் மீது முட்டை எறிந்து அவர் விரும்பும் விளம்பரத்தை தேடித் தந்தது எவ்வளவு குறைத்துக் கூறினாலும் ஒரு விவேகமற்ற செயலே. ஆனாலும் அது மட்டுமே நிச்சயமாக வழக்கறிஞர் மீதான காவல்துறையின் தாக்குதலுக்கு காரணம் அல்ல.

அப்படியானால் இத் தாக்குதலுக்கான உண்மையான காரணம் என்ன? அதன் பின்னணி என்ன? இது திட்டமிட்டு நடந்ததா? அல்லது தற்செயலாக நிகழ்ந்ததா? ஆகியவற்றை பார்ப்பது இத்தாக்குதலின் உண்மை அடிப்படையை புரிந்து கொள்வதற்கு மிகவும் அவசியமாகும்.

தாக்குதல் நடந்தது தமிழீழப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவே

அவ்வாறு பார்க்கப் போனால் இத்தாக்குதல் வழக்கறிஞர்கள் மீது நிகழ்த்தப்படுவதற்கு உண்மையான காரணம் தமிழ்நாட்டில் அவர்களால் இடைவிடாமல் தொடர்ச்சியாக கையிலெடுக்கப்பட்டு பல்வேறு போராட்டங்கள் மூலம் தூக்கி நிறுத்தப்படும் ஈழத்தமிழர் பிரச்னையேயாகும். இங்கு எழும் மற்றொரு முக்கிய கேள்வி மற்ற அனைத்து சமூகப் பிரிவினரையும் தாண்டி ஈழத் தமிழர் பிரச்னையை வழக்கறிஞர் பிரிவு மட்டும் இத்தனை உக்கிரமாக எடுப்பதற்கு காரணம் என்ன? என்பதாகும்.

வழக்கறிஞர் தொழில் பொதுவாகவே அரசியலோடு தொடர்புடையது. சட்ட மாணவர்களைப் பொறுத்தவரையில் அவர்களிடம் மற்ற மாணவர்களிடம் கூறுவதுபோல் பெற்றோரும் உற்றார் உறவினரும்கூட நீ அரசியலில் இருக்காதே என்று கூறமாட்டார்கள். ஏனெனில் அரசியல் அவர்களது வழக்கறிஞர் தொழிலுக்கு பெரிதும் உதவக்கூடியது. எனவே தமிழ் இன உணர்வை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளும் அந்த உணர்வை புதிதாக கையிலெடுத்துள்ள சில இடதுசாரி அமைப்புகளின் வழக்கறிஞர்களும் இந்த ஈழத்தமிழர் பிரச்னையை மையமாக வைத்த போராட்டங்களில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளன. அவை முன்னின்று நடத்தின.

நமது சமூகத்தில் எதையாவது தள்ளிப்போட எளிதில் முடியுமென்றால் அது நீதியாகத்தான் இருக்கும். போதுமான எண்ணிக்கையில் நீதிமன்றங்கள் இல்லாமல், நீதிபதிகள் நியமனமும் இன்றி லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருப்பதன் காரணமாக ஒரு வகையான மனநிலை அதாவது வழக்குகளின் தீர்ப்பை விரைவில் எதிர்பார்ப்பதே தவறு என்பது எழுதப்படாத நியதியாக ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்த வரையில் ஆகிவிட்டதால் நீதிமன்றப் புறக்கணிப்பு குறித்து யாரும் பெரிய கவலை ஒன்றும் கொள்வதில்லை.

தமிழர் மீதான அபிமானத்தை தமிழ் வெறிவாத அமைப்புகள் பயன்படுத்திக் கொண்ட நிலை

உண்மையான இடதுசாரிப் போக்கான வர்க்கப் போராட்டத்தைப் பிரதிபலிக்காத இந்த அமைப்புகள், பார்ப்பனியம் என்ற பெயரில் செத்த பாம்பை சினந்தீர அடிப்பதிலும், தலித்தியம், தமிழ் உணர்வு என்ற முழக்கங்களைக் கையிலெடுத்து குறுக்கு வழியில் வளர்ச்சியடைய அரசியல் நடத்துபவை. பொதுவாக ஈழத்தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் அனைவரிடமும் சாதாரண அப்பாவித் தமிழ் மக்கள் இராணுவத்தின் தாக்குதலால் உயிரிழப்பது குறித்து அனுதாபம் பெரிதும் உள்ளது. ஏறக்குறைய அதனைஒத்ததே வழக்கறிஞர் மத்தியில் இருந்த உணர்வுமாகும். அந்த உணர்வைச் சாதகமாக்கிக் கொண்டு, வழக்கறிஞர் தொழிலில் சமீபகாலங்களில் உருவாகி வளர்ந்து மிகவும் சாதாரணமாகிப் போயுள்ள நீதிமன்றப் புறக்கணிப்பு போன்ற போக்குகளையும் பயன்படுத்திக் கொண்டு இந்த அமைப்புகள் அவர்களை இந்த ஈழத் தமிழர் பிரச்னையில் இறக்கிவிடுவதில் வெற்றி கண்டன.

பொதுவாக மற்ற அலுவலகங்களை மொத்தமாக விடுப்பு எடுத்து ஊழியர்கள் புறக்கணித்தால் அதனால் ஏற்படுவது போன்ற ஸ்தம்பித்துப்போகும் விளைவுகள் வழக்கறிஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்புகளால் சமூகத்தில் ஏற்படுவதில்லை. எனவே தீவிரமாக ஒரு இயக்கத்தை முன் இருந்து முனைப்புடன் கொண்டுவர ஒரு சிறுபிரிவு வழக்கறிஞர்கள் தயாராக இருந்தாலே போதும் புறக்கணிப்பு என்பது நடைபெற்றுவிடும்.

அடுத்து புறக்கணித்துவிட்டு இருக்கும் வழக்கறிஞர்கள் முழக்கம் எழுப்புவது போன்ற போராட்டங்களிலும் சிலர் தீவிரமாக ஈடுபடும்போது நாமும் இதில் இருந்தால் ஒன்றும் தப்பில்லை; இப்போராட்டம் தமிழர்கள் குறித்ததுதானே என்ற அடிப்படையிலும் ஓரளவு பங்கேற்கவே செய்வர். அந்த விதத்தில் ஈழத்தமிழருக்கான வழக்கறிஞர் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. அதனைத் தூக்கி நிறுத்துவதற்கு மாநிலமெங்கும் நடைபெற்ற பல தீக்குளிப்புகள் காரணமாக இருந்தன. இது அரசியல் ரீதியாக தமிழகத்தை ஆளும் கட்சிக்கும் அதன் ஆட்சியாளர்களுக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

பதவி மீதான நேசமும் தமிழ் உணர்வு வேசமும்

தமிழகத்தை ஆளும் தி.மு.கழகம் எப்போதும் தமிழ், தமிழர், தமிழ் இனம் ஆகியவற்றைக் கொண்டு அரசியல் நடத்தும் கட்சி. அது அந்நிலையில் ஈழத்தமிழர் பிரச்னையை மையமாக வைத்து நடத்தப்படும் இன உணர்வுவினைத் தூண்டும் பிரச்னையில் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட முடியாது. அதே சமயத்தில் ஒட்டு மொத்த இந்திய முதலாளிகளின் மூலதன விஸ்தரிப்பு மற்றும் ஆதிக்க நோக்கங்களுக்காக இலங்கை அரசுடன் பல விசயங்களில் கைகோர்த்துச் செயல்படும் மத்திய காங்கிரஸ் அரசுடன் தான் இணைந்திருப்பதையும் அது முறித்துக் கொள்ள முடியாது. எனவே அது ஈழத்தமிழர் பாதுகாப்புப் பேரவை என்ற பெயரில் செயல்பட்ட அமைப்புக்குப் போட்டியாக இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பினை ஏற்படுத்தி தானும் களத்தில் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக சில பெயரளவிலான நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தது. ஆனால் வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டங்களில் அதனால் அதன் தலைமையை நிலை நாட்ட முடியவில்லை.

தர்மசங்கட நிலை

ஆனால் இலங்கைத் தமிழர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தலைமையில் ஒரு பகுதியினர் சோனியாகாந்தியை எதிர்த்து கோசங்கள் எழுப்புவது, ராஜீவ் காந்தியின் கொலையை நியாயப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்கினர். அதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே சாலைமறியல் போன்றவற்றில் ஈடுபட்டனர். அவ்வாறு மறியலில் ஈடுபட்டவர்களையும் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பகுதியினர் தாக்கத் தொடங்கினர். இதில் தாக்கியவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்தால் தமிழ் விரோத அரசு என்ற பெயர் தி.மு.க. அரசிற்கு ஏற்படும். அதே சமயத்தில் ஒரு நடவடிக்கையும் எடுக்காதிருந்தால் காங்கிரஸ் கட்சியினரின் அதிருப்தி ஏற்படும்.

இந்நிலையில் எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.கவும் காங்கிரஸுடன் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டுச் சேர்வதற்கான தங்களின் விருப்பத்தை நாசூக்காக வெளியிடத் தொடங்கியது. இந்நிலையில் எதைச் செய்வது என்றறியாத நிலையில் இருந்த தி.மு.கழகம் சுப்ரமணியம்சுவாமி மீது முட்டை வீசப்பட்டதையும் அதைஒட்டி அகில இந்திய அளவில் நீதி அமைப்புகளில் தோன்றிய அதிருப்திநிலையையும் சாதகமாக்கிக் கொண்டு ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்ற வகையில் ஒரு திட்டம் வகுத்து செயல்படத் தொடங்கியது.

ஈழத் தமிழர்களின் பிரச்னையை எழுப்பி தனக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், உரிய நடவடிக்கை எடுத்து வழக்காட வருபவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தித் தந்த அரசு தமிழக அரசு என்ற பெயரை அகில இந்திய அளவில் ஏற்படுத்திக்கொள்ளவும் திட்டமிட்டு ஒரு பெரும் போலீஸ் படையை-அதாவது முட்டை வீசியவர்களை கைது செய்வது என்ற நடவடிக்கைக்கு தேவையில்லாத எண்ணிக்கையில் காவல்துறையினரை நீதிமன்ற வளாகத்தை சுற்றி குவித்து இத்தாக்குதலை நடத்தியுள்ளது. இவ்வாறு இத்தாக்குதல் தெளிவாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதேயன்றி நிச்சயமாக இது தற்செயலாக நடந்து ஒன்றல்ல.

அரசின் முழு ஆதரவும் தங்களுக்கே என்றறிந்த காவல்துறை

மின்னணு ஊடகங்களின் லென்சுகளிடமிருந்து சாதுரியமாக அவற்றைக் கையாண்டாலும்கூட தங்களுக்கு பாதகமான அனைத்து சம்பவங்களையும் மறைத்துவிட முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். இது காவல்துறைக்கு மிக அதிகமாகவே தெரியும். இருந்தும் இத்தகைய காட்டுமிராண்டித் தனமான வன்முறையில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றால் அரசின் பச்சைக்கொடி நமது அனைத்து நடவடிக்கைகளுக்கும் சாதகமாக அசையக் காத்திருக்கிறது என்று அவர்கள் அறிந்திருந்ததேயாகும்.

காவல்துறையினர் வழக்கமான சூழ்நிலைகளில் வன்முறையில் ஈடுபடுவோரை துரத்திவிட்டு தங்கள் இடங்களுக்கு திரும்பிவிடுவதே வழக்கம். ஆனால் சென்னை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களை நீதிமன்ற அரங்குகளுக்குள் துரத்திச்சென்றது மட்டுமல்ல கதவுகளை மூடிக்கொண்டு பாதுகாப்பாக இருந்த பெண்கள் உட்பட பெரும்பாலான நீதிமன்ற அலுவலர்களையும் காட்டுத்தனமாக தாக்கியுள்னர். வழக்காட வந்த சாதாரண பொதுமக்களையும் விட்டுவைக்கவில்லை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அமைதிப்படுத்தவந்த நீதிபதி ஒருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

வாகனம் இழைத்த குற்றம் என்ன?

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையை மட்டும் காவல்துறை மேற்கொள்ளவில்லை என்பதை காவல்துறையினர் வழக்கறிஞர்களின் வாகனங்களை அடித்து நாசப்படுத்தியதிலிருந்தே தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளே அழைத்ததால் அனுமதிபெற்றே வந்தோம் என்று முதலில் கூறிய மாநகர் காவல் துறை ஆணையர் அதன்பின் அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் காவல்துறை முழுமையாக வெளியேற ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது என்று கூறிக் கொண்டே தாக்குதலைத் தொடர காவல்துறையினரை அனுமதித்துள்ளார்.

இவ்வாறு தான் திட்டமிட்ட விதத்தில் பிரச்னை திசை திரும்பிவிட்டது என்பதால் நிம்மதி அடைந்த தமிழக முதல்வர் அவர்கள் மருத்துவமனையில் இருந்தபடியே அறிக்கை ஒன்றினை விடுத்தார். அதில் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் நடப்பது நல்லதாக இருக்கட்டும். வழக்கறிஞர்களும் காவல்துறையும் எனது பிள்ளைகளைப் போன்றவர்கள் அவ்விரு பகுதியினரும் எனது இருகண்களுக்குச் சமமானவர்கள் என்றவாறெல்லாம் நாடக பாணியில் கதைவிடத் தொடங்கி அதற்கு சிகரம் வைத்தாற்போல் தான் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறி இந்த விசயத்தில் தான் அரங்கேற்றி வரும் நாடகத்தின் அடுத்த காட்சியைத் தொடங்கினார்.

ஒரு பெரிய நாடகத்தின் ஒரு காட்சி முடிந்த பின் மற்றொரு காட்சி. இந்த இலங்கை தமிழர் பிரச்னை இப்போது ஆரம்பித்த நாள் முதற்கொண்டு எத்தனை நாடகங்கள் தமிழகம் என்ற திறந்தவெளி கலையரங்கில் கலைஞர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் திரு.மு.கருணாநிதி அவர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது என்று பார்த்தால் இத்தனை தூரம் மக்களை ஏமாளிகளாக எண்ணும் அரசியல்வாதி ஒருவர் இந்த உலகில் இருக்கிறாரா என்பதும் அவர் விடும் சரடுகளுக்கும் புனை கதைகளுக்கும் ஏமாறும் மக்களும் இருக்கிறார்களா என்பதும் பலரையும் வியப்பிலாழ்த்தவே செய்யும்.

ஆரம்பத்தில் எம்.பி.க்கள் இராஜினாமா அறிவிப்பு நாடகம், அதற்கு வலு சேர்ப்பதற்காக தனது புதல்வியும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியில் தொடங்கி அனைத்து எம்.பி-களிடம் இருந்தும் இராஜினாமா கடிதங்கள் பெற்ற நாடகம், அதன் பின்னர் இப்பிரச்னையை மையமாக வைத்து பதவி விலகி இருக்கலாமே உண்மையான தமிழ் உணர்வு இருந்தால் என்ற கேள்வி சிலரால் எழுப்பப்பட்ட போது இலங்கை தமிழ் மக்களே நான் பதவி விலகுவதை விரும்பவில்லை என்று நாடகம், அதற்கு சான்றாக சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகக் கூறும் உபகதை. அதற்குப்பின் நமது உள்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி எதற்காக இலங்கை செல்கிறார் என்பதும் மிக நன்றாக தெரிந்திருந்தும் அதனை மையமாக வைத்து பல நப்பாசைகளை ஏற்படுத்துவது போன்ற வியக்கவைக்கும் நாடக காட்சிகள்; நாடகமே உலகம் நாளை நடப்பதை யாரறிவார் என்று அவர் எழுதிய வசனத்தை ஒத்த விதத்தில் தமிழ்நாட்டின் அரசியல் களமே நாடக அரங்கமாக அவரால் ஆக்கப்பட்டுவிட்டது.

நமது முதல்வர் அவர்கள் காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறினால், இங்கு நடப்பது காமராஜர் ஆட்சிதானே என்று தன் ஆட்சியை பற்றி குறிப்பிடுபவர். அதைப்போல் பல சமயங்களில் தன்னையும் ஒரு கம்யூனிஸ்ட் என அவர் கூறிக்கொள்பவர்; பெரியாரையும், அண்ணாவையும் சந்தித்திராவிட்டால் தான் ஒரு கம்யூனிஸ்ட் ஆகவே இருந்திருப்பேன் என்றும் கூறிக் கொள்பவர். ஆனால் வர்க்கங்களால் பிளவுபட்ட ஒரு சமூகத்தில் முதலாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாக விளங்குகையில் அங்கு அந்த வர்க்க ஆட்சிக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்கவும் அதன் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டு எழும் பல்வேறு பிரச்னைகளினால் உந்தப்பட்டு கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை ஒடுக்கவும் தேவைப்பட்டால் நசுக்கவும் இருப்பதே காவல்துறை. இது கம்யூனிஸக் கலாசாலையின் பால பாடம். மாமேதை லெனின் தனது அரசும் புரட்சியும் என்ற நூலில் தெளிவுபடக் கூறினார். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அரசு என்பது இறுதியில் காவல் துறையும் இராணுவமுமே என்று,

அரசு என்பது அடிப்படையில் அடக்குமுறைக் கருவியான காவல்துறையே

இவ்வாறு உள்ள அரசின் கோரவடிவம் வெளிப்பட்டுவிடாமல் இருக்கப் பராமரிக்கப்படுவதே முதலாளித்துவ ஜனநாயகத்தின் நீதி அமைப்பாகும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியல் அமைப்புச் சட்ட நியதியை வகுத்து அச்சட்டத்தில் பல்வேறு சிவில் மற்றும் அடிப்படை உரிமைகளை வழங்கி அவற்றைக் கட்டுப்படுத்த நாடாளுமன்றங்களுக்கு இருக்கும் உரிமைகளையும் பல வரம்புகளுக்குட்படுத்தி அவ்வுரிமைகளில் யாரும் தலையிட்டால் அதற்காக நீதிமன்றத்தை அணுகி உரிமையை நிலைநாட்டலாம் அல்லது அதற்கு ஏற்பட்ட பங்கத்திற்கு உகந்த வகையில் நிவாரணம் கோரலாம் என்பதே இந்த முதலாளித்துவ ஜனநாயக அமைப்பின் நியதி.

முதலாளித்துவ ஜனநாயகம் இதனை ஏன் உறுதி செய்தது என்றால் தலையை எண்ணி ஆட்சி செய்ய அனுமதிக்கும் மேலோட்டமான ஜனநாயகம் உறுதி செய்யப்பட்டால், மக்களின் உணர்வு மட்டக் குறைவினைப் பயன்படுத்தி முதலாளித்துவத்திற்கு முன்பிருந்த மன்னராட்சி முறையின் ஆட்சியாளராக இருந்த மன்னரே தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்து இந்த முதலாளிகளுக்கு அத்தியாவசியமான ஜனநாயக ஆட்சியைத் தூக்கி எறிந்தாலும் எறிந்துவிடுவர் என்பதனால்தான். அவ்வாறு அந்த உரிமைகளை பாதுகாத்துத் தரும் பணியினை செய்வது நீதி அமைப்பும் அதன் பங்கும் பகுதியுமான வழக்கறிஞர்களும் ஆவர்.

எனவே இந்த அமைப்புகளுக்குள்ளேயும் கூட ஏதாவது இரு பிரிவினரிடம் ஒத்துப்போகாத தன்மை ஓரளவு நிலவுகிறது என்றால் அது வழக்கறிஞர் மற்றும் காவல்துறையினரிடம் தான். இந்த அடிப்படையான உண்மை புரியாதவர்கள் கம்யூனிஸ்டாக அல்ல; ஒரு நல்ல முதலாளித்துவ ஜனநாயகவாதியாகக் கூட இருக்க முடியாது. ஆனாலும் கூட காவல்துறையையும், வழக்கறிஞர்களையும் தனது இரு கண்களாகப் பாவிக்கும் நமது முதல்வர் அவர்களை ஒரு கம்யூனிஸ்ட் என்று நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் போக்கு

எனவே உண்மையிலேயே ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிமீது நம்பிக்கை உடையவர்கள் எப்போதுமே நீதியமைப்பு பங்கப்படுவதை சகித்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் இங்கு நீதியமைப்பு பங்கப்படுவது மட்டுமல்ல, மிகவும் கொச்சையான விதத்தில் வழக்கறிஞர்கள் நடுரோட்டில் இழுத்துப்போட்டு அடிக்கப்படுவது போன்ற சூழ்நிலை உருவான பின்னரும் அது கண்டு நெஞ்சம் பதறாமல் கிஞ்சித்தும் ஜனநாயக உணர்வு இல்லாமல் மிகச் சாதாரணமாக ஒரு ஆட்சியாளர் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று நடந்தது ஒரு சாதாரண விசயம்போல் கூறுவாறானால் அவர் நிச்சயமாக பொற்கைப் பாண்டியன், மனுநீதிச் சோழன் போன்ற நீதிகாத்த தமிழ் மன்னர்களாக அல்லாமல், நீரோ மன்னனைப் போன்ற கொடுங் கோலராகத்தான் இருக்க முடியும்.

அது மட்டுமல்ல அவர் ஒரு மிகச் சாதாரண மனிதாபிமானியாக இருந்தால்கூட இத்தனை தாக்குதல்களுக்கு ஆள்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு உரிய நிவாரணம் கொடுக்கவேண்டும் என்ற பெயரில் முதல் தவணையாக ரூபாய் 5,000 தருகிறேன் என்று கூறியிருக்க மாட்டார். மருத்துவமனைகளில் எப்படிப்பட்ட செலவுகள் தற்போது வருகின்றன என்பதை அவர் அறியாதவராக இருக்க முடியாது. ஏனெனில் தற்போது தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு படுத்துக் கொண்டே அறிக்கைகள்விடும், அவற்றை வாசிக்கும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக ஆட்சி நடத்தியவர். அத்தகைய ஒரு சாதாரண மருத்துவத்தை தனக்குச் செய்து கொண்டவர். இவர் கூறும் ரூ.5000 அங்குள்ள மருத்துவமனை ஊழியர்களுக்கு டிப்ஸ் கொடுக்கக்கூட போதுமானதாக இராது என்பதை இவர் அறியமாட்டாரா? இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது மட்டுமல்ல வேதனையை அதிகப்படுத்துவதற்காக அதில் உப்பையும் வைத்து தேய்பது போல் உள்ளது.

அவர் இத்தனை நிம்மதி பெருமூச்சுடன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிதானமாக இவ்விசயத்தை பார்க்க முடிவதற்குக் காரணம் இந்த தாக்குதல் மூலமாக தனது அரசியல் அஜண்டா நிறைவேறிவிட்டது என்பதனால்தான். பிரச்னை திசை திருப்பப்பட்டுவிட்டது இனி எது வந்தாலும் சில காவல்துறை அதிகாரிகளை பெயரளவிற்கு இடமாற்றம் செய்தோ அல்லது ஏதாவது சில நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டோ ஆறப்போட்டு விசயத்தை முடித்துவிடலாம்; அது தமிழ் உணர்வு போன்ற தர்மசங்கடத்திலிருந்து தப்பித்து கொள்ளவும் அத்துடன் ஆட்சியதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக அவ்வுணர்வினை ஊறுகாயைப் போல் பயன்படுத்துவதை அம்பலப்படுத்தப் பயன்படும் ஈழத்தமிழர் ஆதரவு போராட்டம் இல்லாமல் போய்விடவும் வழிவகுக்கும் என்பதே அவரது நிம்மதிக்குக் காரணம்.

சரியான திருப்பம்

ஆனால் மக்களையும் வழக்கறிஞர்களையும் பொறுத்தவரை இப்போதுதான் போராட்டத்தின் களமும் தளமும் சரியான விதத்தில் மாறியுள்ளன. பிரச்னை உள்நாட்டின் பிரச்னையாக மாறியுள்ளது. எத்தனை ஜனநாயக வேடம் புனைந்தாலும் நமது அமைப்பு எவ்வாறு பாசிஸத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டிலும் பாசிஸ ஆட்சியாளர்கள் ஏதாவது ஒரு வகையில் முடக்க நினைப்பது நீதி அமைப்பையே. அந்த விதத்தில் தமிழக அரசு தற்போது செயல்படத் தொடங்கியுள்ளதும், அரசு என்பது காவல்துறையே தவிர வேறெதுவும் இல்லை என்பதும் நிலைநாட்டப்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்திற்கு மட்டுமல்ல, ஆளும் கட்சிக்கு உறுத்தலாக இருக்கும் எதையும் ஒடுக்கலாம் அதனை தோற்றுவிக்கும் எவரையும் அடித்து நொறுக்கலாம் என்ற நிலையை நிலைநிறுத்தியுள்ளது.

இது பல்வேறு பகுதி மக்களை பாதித்துக் கொண்டிருந்த போதெல்லாம் இது வழக்கம்தானே என்று யாராலும் தீவிரமாக பார்க்கப்பட முடியாத ஒரு சூழ்நிலையில் இருந்தது. தற்போது அது சட்டத்தை விளக்கும் அதன் உணர்வினை பாதுகாக்கும் வழக்கறிஞர்கள் மீதே பாய்ந்துள்ளது. சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது என்பதற்காக மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஊதியம் பெறும் அந்த அமைப்பு தற்போது உடமைகளையும் சேதப்படுத்தும் அப்பட்டமான ரவுடியிசத்தில் இறங்கியுள்ளது. மிச்சமுள்ள ஜனநாயக நியதிகளையாவது ஓரளவு பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ள அனைத்து ஜனநாயக எண்ணம் கொண்டோரும் இதனை கணக்கில் கொள்ள வேண்டும்.

அடக்கு முறைக்கு ஆதரவு கரம் நீட்டிய ஹிந்து நாளிதழ்

ஆனால் இவ்விசயத்தில் ஜனநாயகத்தின் நான்காவது அரண் எனக் கருதப்படும் பத்திரிக்கைகளின் போக்கு அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்துவதாகவே அமைந்துள்ளது. குறிப்பாகத் தமிழ் நாட்டிலிருந்து வெளிவருவதும் தரமானது என்று கருதப்படுவதுமான ஹிந்து நாளிதழ் இவ்விசயத்தில் எடுத்த நிலை அது குறித்து பலரிடமும் இருந்த நடுநிலைப் பத்திரிக்கை என்ற எண்ணத்தையே சீரழித்து சின்னா பின்னமாக்கியுள்ளது. எல்.டி.டி.ஈ நடவடிக்கைகளில் அதற்கு இருக்கும் உடன்பாடற்ற தன்மை இத்தனை ஒரு தலைப்பட்சமாக எல்.டி.டி.ஈ-ஐ ஆதரிப்பதை ஒத்த ஒரு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர் என்பதற்காக அவர்களுக்கு எதிராக திரும்பியருக்க வேண்டியதில்லை.

அதன் பாரபட்ச செய்தி வெளியீட்டிற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு அது அதன் ஆன்லைன் பதிப்பில் வெளியிட்டுள்ள வீடியோ க்ளிப்பில் வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தை எரிப்பதில் ஈடுபடுவதை மட்டும் படம் பிடித்துக் காட்டியுள்ளதாகும். நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காவல்துறையின் காட்டுத்தாக்குதலால் கொடுங்காயப்படுத்தப்பட்டது அனைத்தையும் அப்படியே மூடிமறைத்து தவறுகள் அனைத்தும் வழக்கறிஞரினதே என்று காட்டும் விதத்தில் அந்த வீடியோ கிளிப்பை வெளியிட்டுள்ளது. முதலாளித்துவ ஆட்சியாளர்களின் பாணியில் முதலாளித்துவப் பத்திரிகைகளும், இயக்கங்கள் -அவை எந்த வடிவத்தில் வந்தாலும் அவற்றிற்கு எதிராக எவ்வாறு செயல்படத் தொடங்கிவிட்டன என்பதையே இந்தப் பாரபட்ச சித்தரிப்பு படம் பிடித்துக் காட்டுகிறது.

வழக்கறிஞர்களின் போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பதன் மூலம் ஊடகங்கள், காவல்துறையின் அராஜகத்தை மூடிமறைக்கும் போக்கை அம்பலப்படுத்த வேண்டும்; அதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சிந்தனைப் போக்கை பாராபட்சமற்றதாக்க வேண்டும். இது ஜனநாயக எண்ணம் கொண்டோர் அனைவரின் தலையாய பணியாகும்.

வழக்கறிஞர்கள் தங்களது போராட்டத்தை உக்கிரப்படுத்துவதன் மூலமாக குறைந்தபட்சம் ஒன்றை நிலைநாட்ட முயலவேண்டும். இந்த வன்செயலில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது வழக்கறிஞர்கள் தங்களது போராட்ட வலிமையினால் எடுக்கவைக்கும் நடவடிக்கை இனிவரும் காலங்களில் ஜனநாயக இயக்கங்களுக்கான அரணாக -அதனை ஒடுக்க நினைப்போருக்கு ஒரு அச்சுறுத்தலாக விளங்கும் அளவிற்கு உரிய நடவடிக்கைகளை அதிகாரி - காவலர் என்ற பாரபட்சமின்றி அத்துமீறலில் ஈடுபட்ட அனைத்துக் காவல்துறையினர் மீதும் அரசை எடுக்க வைக்க வேண்டும்.

வாசகர் கருத்துக்கள்
kkannan
2009-06-11 08:15:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

advocates are modifying rowdies . police are also antipeoples activities,lawyers are included. what are difference between lawyers and polices . i dont know this two peoples are same mr maatrukaruthu. one true fact is police and advocate are support to capital class

rajbandhar
2009-08-07 05:07:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

kannan,
your concept is totally wrong . i think your thought is totally wrong

Pin It