நூலகப் பெருஞ்செல்வர் ரோஜா முத்தையா இயற்கை எய்தி விட்டார் என்ற செய்தியைக் கேட்டவுடன் அன்பர் இராமலிங்கம், அவர் துணைவியார், நான் ஆகிய மூவரும் கோட்டையூர் சென்றோம். பெரியவருக்கு எங்கள் இறுதி வணக்கத்தைச் செலுத்திவிட்டு, விரைவாகவே தஞ்சை மீண்டோம். உடனேயே ஆங்கிலத்தில் இரு கடிதங்கள் வரைந்து, ஒன்றை தி ஹிந்து நாளிதழுக்கும், தி இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கும் அனுப்பினேன். இரண்டு கடிதங்களும் தாமதமில்லாமல் வெளி யாயின. நான் வரைந்த செய்தியின் சாரம் இதுவே. அமரர் ரோஜா முத்தையாவின் நூலகம் ஐந்து கோடி ரூபாய் பெறும். என்றாலும் இத்தொகையின் ஐந்தில் ஒரு பகுதி வழங்கப்பட்டாலும், அந்நூலகத்தை அவர்கள் குடும்பத்தாரிடமிருந்து பெறமுடியும்.

வெளிநாட்டில் இருந்த ஒரு பெண் ஆய்வாளர் இச்செய்தியைப் படித்தவுடன் ஷிகாகோ பல்கலைக்கழகத்தோடு தொடர்பு கொண்டு நூலகத்தை அப்பல்கலைக்கழகத்தார் பெற முயல வேண்டும் என்று வற்புறுத்தினார். கீழ்த்திசை நூல்கள் பிரிவின் தலைவர் நை என்னும் அறிஞர் இது வகையில் விரைந்து செயல் பட்டார். இரு அறிஞர்கள் கோட்டையூர் வந்தனர். நூலகத்தின் பெருமைகளையும், அதைப் பெறவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி, அவர்கள் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தனர். சேர்க்கப் பட வேண்டிய முக்கியமான தகவல்களை இராமலிங்கமும் நானும் அவர்களுக்குத் தந்தோம். நேரில் நூலகத்தைப் பார்வையிட்ட அவர்களே, நிறைவுபெற்று அறிக்கையை அமைத்தனர்.

பிறகு நை அவர்களின் உதவியாளர் கோட்டையூர் வந்தார். அவரிடமும் இராமலிங்கமும் நானும் அனைத்தையும் எடுத்துச் சொன்னோம். அவரிடம் எல்லா விளக்கங்களையும் பெற்ற நை அவர்கள் கோட்டையூர் வந்தார். அவரை இராமலிங்கம், நான், செட்டியார் அவர்கள் குடும்பத்தார் ஆகியோர் வரவேற்றோம். செட்டியார் அவர்களின் சகோதரியின் கணவர் வள்ளியப்பன் இயன்ற உதவி புரிய கோட்டையூர் வந்திருந்தார்.

நூலகத்தைப் பார்வையிடுவதற்கு முன்பாக அதைப் பற்றிய அரிய தகவல்களைக் கூற நை அவர்களின் அனுமதியை வேண்டினேன். “நீங்கள் கூற இருப்பன எனக்குப் பெரிதும் பயன்படும். சற்றே விரிவாக உங்கள் விளக்கம் அமைய வேண்டும்” என்றார் அவர்.

சற்றேறக்குறைய 90 நிமிடங்கள் நான் ஆங்கிலத்தில் விளக்கம் தந்தேன். நை அவர்கள் “நாள் முழுவதும் இதைக் கேட்க எனக்கு விருப்பம் மேலிடுகிறது. ஆனால் போதிய அவகாசம் இல்லை. இப்போது நான் நூலகத்தைப் பார்வையிட வேண்டும். தேவைப் படும் செய்திகளை அவ்வப்பொழுது சுருக்கமாகத் தாருங்கள்” என்றார். அன்றும், மறுநாளும் நை அவர்களோடு இராமலிங்கமும் நானும் இருந்தோம். நூலகம் தம் பல்கலைக்கழகத்தால் வாங்கப்படும் என்று உறுதி அளித்தார் நை அவர்கள்.

வள்ளியப்பன் அவர்கள் என்னைத் தனியே அழைத்துச் சென்று “இன்றுதான் இந்நூலகத்தின் பெருமையை நான் ஓரளவு புரிந்து கொண்டேன்; உங்கள் பேச்சு பதிவு செய்யப்படாமல் போய் விட்டதே” என்று உருக்கத்தோடு கூறினார்.

செட்டியாரின் நூலகம் தமிழகத்திலேயே வைத்துப் பேணப்படுவதற்கு நானும் காரணமாக இருந்திருக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்வு அடைகிறேன்.

செட்டியார் அவர்கள் மருத்துவச் சிகிச்சை பெற தஞ்சைக்கு எங்களால் அழைத்து வரப்பட்டார். மருத்துவமனையும் எங்கள் இல்லத்திற்கு அருகிலேயே இருந்தபடியால் செட்டியார் அவர் களுக்கும் அவர் மனைவியார் அவர்களுக்கும் தகுந்த உதவிகள் எங்களால் செய்ய முடிந்தது. மூன்றாம் முறையாக தஞ்சை மருத் துவமனையில் செட்டியார் அவர்கள் தங்கியிருந்தபோது, அவர் கைப்பட ஓர் உயில் வரைந்தார். அதில் தம் மனைவியாரையும் சாட்சி கையெழுத்திடுமாறு செய்தார். தம் காலத்திற்குப் பிறகு நூல் நிலையத்தை நன்கு காப்பாற்றும் அறிஞருக்கோ, நிறுவனத்திற்கோ, கிரயம் செய்து கொடுக்க இராமலிங்கமும் நானும் பொறுப்பேற் போம் என்று திடமாக நம்பினார். தம் நூல் நிலையக் கிரய வரும் படியிலிருந்து எனக்கும் இராமலிங்கத்திற்கும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கப்படவேண்டும் என்று பதிவு செய்திருந்தார்.

ஷிகாகோ பல்கலைக்கழகம் நூல் நிலையத்தை வாங்க முற்பட்டபோது, இச்செய்தி வெளிவந்தது. கிரயத்திற்கு எந்த முட்டுக்கட்டையும் நிகழக்கூடாது என்று எண்ணிய இராமலிங்கமும் நானும், “எங்களுக்கு எந்தத் தொகையும் தேவையில்லை” என்று எழுத்து மூலம் சமர்பித்துவிட்டோம்.

இராமலிங்கத்தின் மூத்த மகள் திருமணத்திற்குச் செட்டியாரின் மனைவியார் ரூபாய் ஐம்பதினாயிரம் நன்கொடையாகக் கொடுத்தார். என் மணிவிழாவிற்கு 25,000 ரூபாய் பெறுமானம் உள்ள நகைகளை அளித்தார். கலாசம்ரக்ஷண சங்கம் என்ற நிறுவனத்தை நான் தோற்றுவித்து அதன்மூலம் அரிய, குறிப்பாகப் பல ஆண்டுகள் மறுபதிப்புப் பெறா நூல்களை, அச்சிடும் முயற்சியில் ஈடுபட்டு வந்தேன். என் செய்கையைப் பாராட்டிச் செட்டியார் அவர்களின் மகள் வள்ளிக்கண் எனக்கு ரூபாய் இருபதினாயிரம் அளித்தார். செட்டியாரின் மகன் நாராயணன் அவர்கள் ஒவ்வோராண்டும் ஒரு புதிய நூலை வாங்கி எனக்கு வழங்குவதைத் தம் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவற்றை எல்லாம் நினைக்கும்போது, “தாளுண்ட நீரைத் தலையாலே” தரும் தென்னை பற்றிய நினைவே எழுகிறது.

ஒரு சுமார்த்த பிராமணனாகப் பிறந்த நான் சைவ சித்தாந்தத்தில் ஈடுபட்டிருப்பதை உணர்ந்த செட்டியார் அவர்கள் அச்சில் இல்லாப் பல நூல்களை எனக்கு வழங்கினார். நானும் அவர் கேட்ட சில நூல்களை அவருக்கு வழங்கி மகிழ்ந்தேன்

நூல்களை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதை நான் செட்டியாரிடம் அறிந்து கொண்டேன். அவரால் நான் பெற்ற நன்மைகள் பலப்பல.

என்னுடைய நூலகத்தில் 40,000 நூல்கள் உள. நூலகச் சுவரில் மூன்று படங்களை மாட்டியிருக்கிறேன். அவை பாரதியார், என் வழிகாட்டியான திருலோக சீதாராம், ரோஜா முத்தையா ஆகியோரின் படங்கள். என் வீட்டு வாசலில் உள்ள மேசையில் செட்டியாரின் படம் இடம்பெற்றுள்ளது. தினமும் அவர் திருவுருவத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து வருகிறேன்.

செட்டியார் அவர்கள் முதல் பதிப்பிற்குத் தரும் மதிப்பு அலாதியானது. இதுவகையில் நான் அவரிடம் கற்ற பாடம் ஒன்றை இங்கே கூறுகிறேன். 1984இல் தருமபுர ஆதீனம் அனைத் துலக சைவ சித்தாந்தக் கருத்தரங்கம் ஒன்றைத் தருமையில் நடத்த முடிவு செய்தது. இதற்காகச் சில நல்ல நூல்களை வெளியிட ஏற்பாடாயிற்று. சைவ சித்தாந்தம் பற்றி ஆங்கிலத்தில் வரையப் பட்ட கட்டுரைகளைத் தேடிக் கண்டுபிடித்து ஒரு தொகுப்பு நூல் அமைத்துத் தரும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. குருவரு ளாலும் திருவருளாலும் அப்பணியை நான் நிறைவேற்றினேன். சதமணிக்கோவை என்னும் நூலைக் குறிப்புரையுடன் அமைத்துதர அமரர் மு. அருணாசலம் அவர்கள் முன்வந்தார்.

சந்தான குரவருள் மூன்றாமவரான மறைஞானசம்பந்தர் எந்த நூலையும் இயற்றவில்லை என்றே கொள்ளப்படுகிறது. இது மரபு வழிச்செய்தியாகும். ஆனால் அருணாசலம் அவர்கள் மறைஞானசம்பந்தரே சதமணிக்கோவையின் ஆசிரியர் என்றும், சித்தாந்த சாத்திரங்கள் 14 என்பது பிழை என்றும், அவை 16 என்றும் தம் பதிப்பில் கூறியுள்ளார். சில வாதங்களையும், செய்திகளையும் தம் கருத்துக்குச் சார்பாக அவர் வரைந்துள்ளார். ஸ்ரீலஸ்ரீ குருமஹா சந்நிதானம் இந்நூலுக்கு ஓர் அணிந்துரை வரைய என்னைப் பணித்தது. நானும் அருணாசலம் அவர்கள் கருத்தை ஏற்றே என் அணிந்துரையை வரைந்தேன்.

அருணாசலம் பிள்ளை அவர்கள் பதிவு செய்த ஒரு கருத்து எனக்குப் பொருத்தமாகத் தோன்றியது. அவர் கூறியதா வது: சாத்திரங்கள் 14 என்று காட்டுவது ஒரு வெண்பா. அது “உந்தி களிறு” என்று தொடங்குகிறது. “மெய்கண்ட சாத்திரங்களை 1866இல் மதுரை நாயகம் பிள்ளை என்பவர் முதன்முதலில் அச்சிட்டார். இச்செய்யுள் ஏட்டுப் பிரதிகளில் காணப்படாமையால் சாத்திரங்களை நினைவுபடுத்திக் கொள்ள எளிதாய் இருக்கும் பொருட்டு இவரே செய்த பாடல் என்று கருதத் தோன்றுகிறது. 14 என்ற வரையறை இதிலிருந்தே தொடங்குகிறது. அக்காலத்தில் சாத்திரப் பயிற்சி குன்றி இருந்தமையால் சதமணிக்கோவை பயிற்சியும் குன்றி இருந்தது. 14 என்று வரையறுத்தவர் சதமணிக் கோவையை மறந்துவிட்டார். ஆனால் பல சித்தாந்த சாத்திர ஏடுகளில் எண் குறிப்பிடப்படாமல் சதமணிக் கோவையையும் சேர்த்து எழுதியிருக்கக் காண்கிறோம்.

சில ஏடுகளில் சீர்காழி-சிற்றம்பல நாடிகள் செய்த துகளறுபோதம் கொள்ளப்பட்டு, உமாபதியார் வரைந்த உண்மைநெறி விளக்கம் விடப்பட்டிருக்கக் காண்கிறோம். எனவே, சித்தாந்த சாத்திரம் 14 என்ற பிற்காலக் குறிப்பை நாம் மறந்து சித்தாந்த சாத்திரம் மொத்தம் எத்தனை என்று கருதத் தலைப்பட்டால் இன்று நாம் சம்பிரதாயமாகக்கொள்ளும் 14 நூல்களோடு சதமணிக்கோவையும், துகளறு போதத்தையும் சேர்த்துப் பதினாறு என்று கொள்ளுதல் பொருத்தமாய் இருக்கும். இவ்விரு நூல்களும் மிகவும் பொருளாழம் பொருந்திய சாத்திர நூல்கள் என்பதில் தடையில்லை. ஆனால் மற்ற பதினான்கு சாத்திரங்களுக்கும் பண்டை உரைகள் எழுந்திருக்க இந்த இரண்டு நூல்களுக்கும் பண்டைய உரைகள் நமக்குக் கிடைக்கவில்லை. அதுவே, இவற்றைச் சான்றோர் சாத்திர வரிசையில் கொள்ளாமைக்குக் காரணமாய் இருக்கலாம் என்று தோன்றுகிறது”.

என் அணிந்துரையில் அருணாசலம் அவர்கள் வெளியிட்ட முடிவுகள் என்னால் ஏற்கப்பட்டன என்றாலும் அம்முடிவுகள் முறையாக ஆய்வுக்கு உரியவை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.

என்னுடைய அணிந்துரையைப் பார்த்தருளிய மகா சந்நிதா னத்தைத் தரிசனம் செய்யச் சென்றபோது, மகாசந்நிதானம் என்னி டம் கேட்ட கேள்வி இதுவே. “உமக்கு அருணாசலம் அவர்களைக் கண்டால் பயமா?” இக்கேள்வி எழுந்த உடனேயே, மகா சந்நிதா னத்திற்கு அருணாசலம் அவர்களின் முடிவுகள் ஏற்புடையன அல்ல என்ற எண்ணம் தோன்றியிருப்பதை ஊகித்தேன். என்றா லும், மறுமாற்றாக நான் கூறியது என்ன என்பதை இப்போது கூறுகிறேன். “உண்மையைக் கண்டு நான் பயப்படுபவன் அல்லன்.” அப்போது மகா சந்நிதானம் “மகா உண்மையைக் கண்டுவிட்டீர். மரபு என்ற ஒன்றை இலேசில் தள்ளிவிட முடியாது.” விடை பெற்று வெளியேறும்போது, “என்ன இது?” ஆதீனத்தலைவர் ஆய்வில் கிடைத்த புதிய செய்திகளை ஏற்க மறுக்கின்றாரே இது நல்லது ஆகாதே” என்றே எண்ணினேன்.

பிறகு ஒரு நாள் இராமலிங்கமும் நானும் கோட்டையூர் செல்ல நேர்ந்தது. செட்டியார் அவர்களின் புத்தகங்கள் அவர் வீட்டிலும், வேறு ஒரு வீட்டின் மாடியிலும், ஒரு கிட்டங்கியிலும் இருந்தன. கிட்டங்கியில் இருந்த நூல்களைப் பார்க்க நாங்கள் ஆசைப்பட்டோம். மதிய உணவை முடித்துக்கொண்டு அக்கிட்டங்கிற்குச் சென்று பார்க்க செட்டியார் அனுமதி தந்தார். அப்போது அவர் சொன்னார்: “நூல்களைப் பார்க்கச் சில மணி நேரம் தேவைப்படும். பொறுமையாகப் பாருங்கள், உங்களுக்குத் தேவைப்படும் காபி, பலகாரங்களை ஆள் மூலம் அனுப்புகிறேன். பொறுமையாக நூல்களைப் பாருங்கள். ஒரு முக்கிய விஷயம். அவ்விடத்தில் பழைய திருக்குறள் பதிப்புகள் உள்ளன. அவற்றைத் தனியாக எடுத்து வைத்துவிடுங்கள். ஆள் மூலம் அவற்றை எடுத்துவர ஏற்பாடு செய்கிறேன்.”

கிட்டங்கியில் இருந்த நூல்களைப் பார்வையிட்டோம். சுமார் 20 திருக்குறள் பதிப்புகள் எங்கள் கண்களுக்குப் பட்டன. அங்கு வந்த பணியாளர் மூலம் அவற்றை அனுப்பி வைத்தோம். பிறகு இரண்டு மணி நேரம் கழித்துச் செட்டியார் இல்லத்திற்குப் புறப்பட்டோம். செட்டியார் அவர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அவர் உடல் பலவீனத்தால் வீட்டின் உள்ளே அமைந்த திண்ணையில்தான் இருப்பார். என்ன அதிசயமாக வாசல்படியில் நிற்கிறாரே என்று நாங்கள் எண்ணினோம். எங்களைப் பார்த்த உடன் தம்முடைய இரு கரங்களையும் மேலே தூக்கியபடி எங்களுக்கு வணக்கம் செலுத்தினார். நாங்கள் பதறிப்போய் விட்டோம். அவரைக் கையால் வணங்கியபடியே, “நீங்கள் இப்படி எங்களை வணங்குதல் முறையில்லை” என்றோம். ஆனால் கூப்பிய கரத்தை நெகிழவிடாமல், அவர் சொன்னார். “தொலைந்து போன புதையலை மீட்டெடுத்துத் தந்து இருக்கிறீர்கள். உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்”.

வீட்டின் உள்ளே மூவரும் சென்று திண்ணையில் அமர்ந்தோம். செட்டியார் கூறியதாவது: “ஆறுமுக நாவலர் 1861இல் திருக்குறளை பரிமேலழகர் உரையோடும், தம்முடைய அடிக்குறிப்புகளோ டும் பதிப்பித்தார். அதன் ஒரு படியை நான் மாத்திரமே வைத்தி ருந்தேன். ஆனால் எங்கு தேடியும் அதை நான் கண்டுபிடிக்க முடியவில்லை. மிக அருமையான நூல் போய்விட்டதே என்று நான் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். இன்று நீங்கள் அனுப்பிய திருக்குறள் பதிப்புகளிலே, அந்நூல் இருப்பது கண்டு எல்லையற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. நீங்கள் வீட்டுக்குள் வந்த பிறகு உங்களுக்கு வந்தனம் கூறாமல் வாசலிலேயே கூறவேண்டும் என்று காத்திருந்தேன்.”

செட்டியார் எவ்வளவு பெரிய பண்பாளர். அவருடைய நூலை (அது எது என்று கூட எங்களுக்குத் தெரியாது) அவர் பெறுமாறு நாங்கள் செய்தது எதிர்ச்சையாக நிகழ்ந்த செயல். ஆனால் அந்த மகான் அதற்காக எவ்வளவு எங்களைப் பாராட்டினார் என்பதை நினைக்கும்போது இப்போதும் புல்லரிக்கின்றது.

இராமலிங்கம் உடனே அப்பதிப்பை வாங்கிப் புரட்டினார். சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலிருந்து அடிக்குறிப்புகளில் மேற்கோள்கள் அந்நூலில் தரப்பட்டிருந்தன. இதில் விசேஷம் என்னவென்றால் இவையெல்லாம் 1861இல் அச்சில் வராதவை. 1861இல் தமிழ்த் தாத்தாவின் வயது ஆறு. இதை மறக்க வேண்டாம்.

ஓர் அடிக்குறிப்பை இராமலிங்கம் வாசித்தபோது நான் துள்ளிக் குதித்தேன். சைவ சாத்திரம் ஒன்றிலிருந்து அதன் பெயரைக் கூறி மேற்கோள் ஒன்றைத் தந்த நாவலர் “இது சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கினுள் ஒன்று” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ஒரு குறிப்பு அருணாசலம் கொண்ட முடிவுகள் அனைத்தையும் தகர்த்து எறிந்துவிட்டது. பிள்ளை அவர்கள் 1866இல்தான் சித்தாந்த சாத்திரம் 14 என்று வரையறுக்கப்பட்டது என்று கூறி அந்த அஸ்திவாரத்தின் மேல் தம் முடிவுகளைக் கட்டி வைத்தார். மகா சந்நிதானம், “மரபு என்பதை இலேசில் தள்ள முடியாதே” என்று கூறியும் நான் ஏற்காமல் போனேனே என்று மெத்த வருந்தினேன். “வழக்கு வலியுடைத்து” என்று சேனாவரையரும் கூறியிருப்பதை நான் நினைவில் கொள்ளாதே போனேனே என்றும் வருந்தினேன்.

ஆக, முதல் பதிப்பு எவ்வளவு முக்கியம் என்பதைப் பல வருடங்களுக்கு முன்பே உணர்ந்து செயல்பட்ட செட்டியார் அறிஞருள் அறிஞர் என்பது நிதர்சனம்.

முதன்முதலில் வெளிவந்த திருவாசகப் பதிப்பின் இரண்டு படிகளைச் செட்டியார் அவர்கள் வைத்திருந்தார். ஒன்று முழுமை யான நல்லபடி; இரண்டாவதில் தலைப்புப் பக்கமும் மேலும் சில பக்கங்களும் இல்லை. செட்டியார் அவர்கள் ஒரு பழக்கத்தைக் கைக்கொண்டிருந்தார். தம்மிடம் இரண்டு அல்லது அதற்கு மேலும் சில படிகள் இருந்தால்தான், ஒரு படியையேனும் தாம் வைத்துக்கொண்டு மற்ற படி(களை) விற்கத் தலைப்படுவார். கல்கத்தா தேசிய நூலகத்தைச் சார்ந்த கேசவன் என்பவர் திருவாசகத்தின் முதற்பதிப்பின் படியைச் செட்டியாரிடமிருந்து பெற மிகவும் முயன்றார். செட்டியார் இசையவில்லை. செட்டியார் அவர்கள் தம்மிடம் இருக்கும் படிகளில் தலைப்புப் பக்கத்திலும் இன்னும் சில பக்கங்களிலும் தம் ரப்பர் ஸ்டாம்பு முத்திரையைப் பதிவு செய்து வைப்பார். கேசவன் அவர்கள் மிகவும் மன்றாடிக் கேட்டதால் திருவாசகத்தின் முதற்பதிப்பின் நல்ல படியை, தேச நலத்தை எண்ணி, ‘கேசவனிடம் தந்தார். கொட்டையூர் சிவக் கொழுந்து தேசிகரே திருவாசகத்தை முதன்முதலில் வெளியிட்டார்.

செட்டியாரிடம் இப்புத்தகத்தை வாங்கிச் சென்ற கேசவன், செட்டியார் அவர்களுக்குப் பெருந்துரோகம் இழைத்து விட்டார். அவர் இந்தியாவில் அச்சு, பதிப்பு ஆகியவற்றின் வரலாற்றின் முதல் பாகத்தை 1985இல் வெளியிட்டார். அதில் செட்டியார் அவர்களிடம் பெற்ற திருவாசக நூலின் தலைப்புப் பக்கத்தைப் படம்பிடித்து வெளியிட்டிருந்தார். அப்புத்தகத்தின் தலைப்புப் பக்கத்தில் செட்டியார் அவர்களின் ரப்பர் ஸ்டாம்பில் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. இந்தப் பகுதியின்மேல் தில்லி அருங்காட்சி யகத்தில் உள்ள ஒரு படிமத்தின் புகைப்படத்தைப் பொருத்தி விட்டு அதைப் படமெடுத்துத் தம் நூலில் வெளியிட்டார். கேசவனின் செய்கையை நான் துணிந்து ஒரு துரோகச் செயல் என்பேன், புத்தகத்தைத் தர மறுத்த செட்டியாரிடம் பலமுறை மன்றாடியே அவர் அதைப் பெற்றார். ஆனால் புத்தகம் செட்டியார் தந்தது என்பதைக் காட்ட அவருக்கு மனமில்லை. ஏதோ தாம் தேடிக் கண்டுபிடித்ததாக உலகோர் உணரவேண்டும் என்ற எண்ணத்தால் செட்டியார் அவர்களின் பெயரும், விலாசமும் அடங்கிய பகுதியை மறைத்து விட்டார். இதன் விளைவுகள் பல தீமைகளுக்கு இடந்தந்துள்ளன.

1.   உண்மை வேண்டுமென்றே மறைக்கப்பட்டிருக்கிறது.

2.   செட்டியார் அவர்களுக்குச் சேரவேண்டிய பெருமை வேண்டுமென்றே மறைக்கப்பட்டுவிட்டது.

3.   கேசவன் அமைத்த புகைப்படப் படிமம், தலைப்புப் பக்கத்தில் உள்ள பல எழுத்துக்களை மறைத்துவிட்டது.

4.   கேசவன் தலைப்புப் பக்கத்தில் தலையிட்டு ஒரு தவறான முன்மாதிரிக்குத் தாராளமாக இடம்தந்துவிட்டார்.

5.   திருவாசக முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலேயே நூல்களில் புகைப்பட படிமம் இடம்பெற்றுவிட்டது என்ற பொய்யான தோற்றம் கேசவனால் உருவாக்கப்பட்டுவிட்டது.

6.   பதிப்பில் தமிழ் வருடம் மாதம் ஆகியவையே இடம்பெற்றி ருந்தன. இவற்றை வைத்துச் சரியான முறையில் கேசவன் பதிப்பு ஆண்டைத் தரவில்லை. பதிப்பு ஆண்டு 1834 என்று அவர் காட்டியிருக்கிறார்.

7.   முதல் பதிப்பு 1835 ஜனவரி-பிப்ரவரியில் வெளிவந்தது.

எனக்கு மேலும் ஓர் ஐயம். கல்கத்தா நூலகத்திற்கு என்று பெறப்பட்ட திருவாசகம் அந்நூலகத்தில் சேர்க்கப்பட்டதா என்பதே.

தேசிய நூலகத்தோடு தொடர்புடைய கேசவன் செட்டியாரின் உதவியைப் போற்றியிருக்க வேண்டும். மாறாக தவறான முறையில் சுயப்பெருமையை நாடியது கொடுமையிலும் கொடுமை.

செட்டியார் அவர்கள் பற்பல திருவாசகப் பதிப்புக்களைச் சேகரித்துக் காத்து வந்தார். அதில் ஒரு பதிப்புப் பற்றி மட்டும் இங்கே கூறுகிறேன். இது 1868ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நூலைப் பதிப்பித்தவர் ஒரு முசுலீம். அவர் பெயர் கா.பீர்காதர்லி ராவுத்தர். 142 ஆண்டுகளுக்கு முன்பு இந்து முசுலீம் நல்லிணக்கம் தமிழகத்தில் நிலவி வந்தது என்பதற்கு இந்நூல் ஒரு பென்னம் பெரிய அடையாளம். இந்நூலின் மீள்பதிப்பை எங்ஙனமேனும் வெளிக்கொணர நான் ஆசைப்பட்டேன். ஷிகாகோ பல்கலைக்கழகத்தார் செட்டியார் அவர்களின் நூல் நிலையத்தைக் கிரயம் பெற்று அதைப் பலரும் பயன்கொள்ளுமாறு சென்னையிலேயே அமைத்திருக்கின்றனர். தமிழுக்குப் புரியப்படும் ஒரு பெரும் தருமப்பணி இது. மேலே சொன்ன திருவாசக நூலை நான் வேறு எங்கும் காணமுடியவில்லை. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலத்தின் இயக்குநர் அன்பர் திரு க. சுந்தர் அவர்கள் இந்நூலின் புகைப்படப் படிமத்தை எனக்கு அளித்து உதவினார். 24.06.2008 அன்று இந்நூலின் மீள்பதிப்பை, ரோஜா முத்தையா நினைவு வெளியீடாகவே வெளியிட்டேன். அன்பர் சுந்தர் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட நூலகத்தை அழகுறப் பேணிவரு கிறார். மேலும் பற்பல நூல்களைச் சேகரித்து அந்நூலகத்திற்கு வளம்கூட்டி வருகிறார்.

ராவுத்தர் ஐயா பதிப்பில் பல அற்புதமான அடிக்குறிப்புகள் உள. ஒன்று பற்றி மட்டும் இங்கு நான் கூறவேண்டும். திருவாசகத்தின் முதல் நான்கு பாடல்களை அகவல்கள் என்று குறிப்பிட்டு இன்று திருவாசகப் பதிப்புகள் வெளிவருகின்றன. சிவபுராணத்தின் முடிவில் ராவுத்தர் ஐயா தந்திருக்கும் அடிக் குறிப்புகள் புலவர்கள் போற்றும் வகையில் அமைந்திருக்கிறது. சிவபுராணம் கலிவெண்பாவில் அமைந்திருப்பதை அப்பெரியவர் நிறுவியிருக்கிறார். ராவுத்தர் ஐயா வெளியிட்டிருக்கும் நூலின் தொடக்கத்தில் சிவலிங்கம் ரிஷபதேவர் திருவுருவங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் சிவமயம் என்ற மந்திரச் சொல்லும் இடம் பெற்றுள்ளது. ஆனால் ராவுத்தர் ஐயாவைப் பற்றிய செய்திகளை நான் பெற முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறேன், மீள்பதிப்பில் ரோஜா முத்தையா அவர்கள் ரப்பர் ஸ்டாம்பு முத்திரை தெளிவாக இடம்பெற்றுள்ளது. பின்புற அட்டையை செட்டியார் அவர்களின் திருவுருவப் படம் அலங்கரிக்கின்றது.

ரோஜா முத்தையாவின் நூலகத்தோடு தொடர்பு கொண்டால் ரோஜா முத்தையாவின் பண்புநலன்களின் ஒரு பகுதியேனும் தொடர்பாளர்களைப் பற்றிக் கொள்ளும் என்பது நானறிந்த உண்மை. விதிவிலக்காகப் போனவர் கேசவன் மட்டுமே.

ஷிகாகோ பல்கலைக்கழகம் கிரய ஒப்பந்தத்தை நிறைவு செய்த நிலையில், செட்டியாரின் மனைவியார் அன்பர் நை அவர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். நை அவர்கள் தம் புகைப்படம் ஒன்றை வழங்க வேண்டும் என்றும், அப்படம் செட்டியார் ஐயா படத்தின் பக்கத்தில் மாட்டப்பட வேண்டும் என்பதே அவ்வேண்டு கோள். அப்போது நை அவர்கள் என்ன சொன்னார் தெரியுமா? “செட்டியார் படத்தின் பக்கத்திலா? கூடாது. அவர் படத்தின் கீழே மாட்டுங்கள்” இத்தகு பண்பாளரான நை அவர்களோடு பழகும் பாக்கியம் பெற்றவன் நான். நை அவர்களே தம் மனைவியாரோடு எங்கள் இல்லத்திற்கு விஜயம் செய்து, நாங்கள் அளித்த விருந்தினையும் ஏற்றுக் கொண்டார்கள். ஊர் திரும்பிய நை அவர்களின் மனைவியார் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் தாம் வடுமாங்காயைச் சுவைத்து உண்டது பற்றி ஒரு குறிப்பு வரைந்திருந்தார்.

செட்டியார் அவர்களோடு உரையாடுவதே ஓரு சுகானுபவம். பெரிய அறிஞர்கள் அறிந்திரா உண்மைகள் பலவற்றை அவர் கொட்டுவார். அவர் பல சொல்லக் காமுற மாட்டார். பயனில சொல்ல மாட்டார். அவர் தாம் தேடிவைத்த தமிழ் நூல்களை நன்கு பயன்படுத்திக் கொண்டவர். பழைய அஞ்சல்தலைகள், ஆவணங்கள், பத்திரிகைகள், கடிதங்கள், திரைப்பட நாடக நோட்டிசுகள், இத்யாதி அவர் நூலகத்தில் இடம்பெற்றிருந்தன. அவர் ஒரு சமயம் கூறினார்: “நான் தபால் தலைகள் மூலம் பொருள் ஈட்டி அதைப் புத்தகம் வாங்கப் பயன்படுத்துகிறேன்.” இது உண்மை. அரோண்டா என்ற கப்பல் முழுகிப் போயிற்று. பல மாதங்கள் கழித்து நீரில் மூழ்கி அதிலிருந்த பொருள்களை மீட்டனர். தோல் பையில் சேகரிக்கப்பட்ட கடிதங்களும் கிடைத்தன. அக்கடிதங்களில் அரோண்டா என்ற முத்திரையைப் பதித்து உரியவர்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதில் ஒரு கடிதம் செட்டியார் அவர்கள் வசம் இருந்தது.

ஆறுமுக நாவலர் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, நாவலர் அவர்களின் திருக்கோவையார் முதல் பதிப்பின் கடைசிப் பக்கத்தில் அவர் இனி வெளியிடுவதாக இருக்கும் நூல் பட்டியலில் வளையாபதி போன்ற அரிய நூல்கள் இடம்பெற்றிருந்தன என்று சொன்னேன். செய்தியை செவிமடுத்த செட்டியார் அவர்கள் சிந்தனையில் ஆழ்ந்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு (மதுரை) வானொலி நிலையத்தார் செட்டியார் அவர்களை நேர்காண வந்தனர். அப்போது அவர் கூறிய செய்தி அவரது புத்தி கூர்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது. அவர் கூறியதாவது: “தமிழ்த் தாத்தாவைப் போல் புத்தகங்களைத் தேடிப்பிடித்து வெளியிடுவார் எவருமில்லை. ஆனாலும் அவர் ஊர் ஊராக அலையாமல் ஒருமுறை ஈழ நாட்டிற்குச் சென்றிருந்தால் ஏராளமான சுவடிகளை அள்ளிக்கொண்டு வந்திருக்கலாமே”.

ஹிந்து நாளிதழ் ரிப்போர்ட்டர் கணபதி அவர்கள் செட்டி யாரை நேர்காண வந்தபோது ஒரு கேள்வி கேட்டார். “இப்படி புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும் என்று எப்படி உங்களுக்குத் தோன்றியது?” பதிலாக அவர் கூறியதாவது. “எப்படி தோன்றியதா? இதைத் தவிர வேறு ஒன்றும் எனக்குத் தோன்றவில்லை”.

தி ஹிந்து நாளிதழ் செட்டியார் படத்தோடு அவர் நூலகம் பற்றிய விரிவான கட்டுரை ஒன்றையும் வெளியிட்டது. “A Lifetime Quest” என்பதே அக்கட்டுரையின் தலைப்பு. இக்கட்டுரை வெளிவர நான் தி ஹிந்து அலுவலகத்துக்குச் சென்று ஏற்பாடு செய்ய முடிந்தது. கட்டுரை வெளிவந்த பிறகு செட்டியார் அவர்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது இராமலிங்கம் அவர்களும் உடன் இருந்தார். அப்போது செட்டியார் அவர்கள், “கட்டுரையைப் படித்தேன். ஆனால் தலைப்பைப் படித்த எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. என் தேடல் முழுவதும் . . . வாழ்நாள் முழுவதுமான தேடலா? இல்லவே இல்லை. ஜோலியோடு ஜோலியாக வாய்ப்புக் கிடைத்தபோது சேகரிக்கப்பட்டவை தாமே என்னிடம் உள்ள நூல்கள். கட்டுரையின் தலைப்பு எனக்குச் சிரிப்பையே உண்டாக்கியது.” செட்டியார் அவர்களின் பணிவு எத்தகையது? அவர் கூறிய வாசகம் அப்பர் அடிகள் அருளிய வாசகத்தை ஒத்திருக்கிறதே. இதுபோன்றதோர் சூழலில், “விலா இறச் சிரித்திட்டேனே” என்றுதானே அப்பர் அருளியுள்ளார்.

ஒரு நேர்காணலில், செட்டியாரிடம் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது: “உங்கள் வாழ்வில் மிக மகிழ்ச்சி தந்த நிகழ்ச்சி எது? வருத்தம் தந்த செய்தி எது?” இதற்கு அவர் கூறிய விடை. “மிக மகிழ்ச்சியானது, தமிழ்த்தாத்தா வாழ்ந்த காலத்தில் நான் வாழக் கொடுத்து வைத்தேன் என்பது. மிக துக்கமான நிகழ்வு மூர்மார்க்கெட் எரிந்து போனது.” மூர்மார்க்கெட் எரிந்து போனதை நினைத்து நினைத்து துக்கப்படுவார் அவர். அடடா! தேடினால் அங்கு எப்புத்தகத்தையும் பெறலாமே. ஒரு முறை என் வழிகாட்டியான திருலோக சீதாராம் அவர்களோடு மூர்மார்க் கெட் சென்று புத்தகங்களைத் தேடினேன். கடைக்காரர் “என்ன புத்தகம் வேண்டும்?” என்றார். பல ஆண்டுகளாக அச்சில் இல்லாத, ஈ. ஏ. அப்பாட் வரைந்த ஷேக்ஸ்பியரின் கிராமர் கிடைக்குமா” என்று இடக்காக ஒரு கேள்வி கேட்டேன். கேட்ட அக்கணமே அந்நூலின் பிரதி ஒன்றை அவர் எடுத்துத் தந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு வெளிவந்த மீள்பதிப்பு. நான் அசந்து போனேன். பழைய புத்தகக் கடைக்காரர் இந்நூலின் பெருமையை உணர்ந்து, மீள்பதிப்பு வந்த உடனேயே அதை வாங்கி வைத்தி ருப்பதைக் கண்டு வியந்து போனேன்.

தமிழுக்குச் சரியான இலக்கிய வரலாறு இன்னமும் எழுதப் படவில்லை என்பதே செட்டியார் அவர்களின் கருத்து. கூடிய வரையில் அனைத்து நூல்களையும் தேடி, அவையிற்றைப் பயன் கொண்டு வரலாறு படைக்கப்பட வேண்டும், இக்காரியத்தைச் சாதிப்பார் நம்மிடையே இல்லையே என்று செட்டியார் வருந்துவார்.

அபூர்வமான தகவல்களைச் செட்டியார் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும். கட்டடங்களைப் பற்றி ஆய்வு செய்ய வந்தவரிடம், செட்டியார் ஒரு பிரெஞ்சு சஞ்சிகையைக் காட்டி னார். அதில் ஒரு கட்டடம் தராசு மாதிரி கட்டப்பட்டிருந்தது. வந்தவரைப் பார்த்து. ”இம்மாதிரி ஏதேனும் ஒரு கட்டடத்தைப் பார்த்ததுண்டா” என்று வினவினார். அவர் ‘இல்லை’ என்றார். செட்டியார் முகத்தில் ஒரு விஷமச் சிரிப்பு அரும்பியது. உடனே, தம் வீட்டிற்கு எதிரில் உள்ள வீட்டைப் பார்த்து வரச் சொன்னார். நாங்களும் போய்ப் பார்த்தோம். அது தராசு வடிவில் அமைந்த கட்டடம். செட்டியார் அவர்கள் பார்வை அலாதியானது. அது கூர்மையானது; தீட்சண்யம் உடையது.அவர் காண்பனவற்றை அவர் மனம் அப்படியே புகைப்படம் பாணியில் பதிவு செய்து வைத்திருக்கும்.

ஒருமுறை, அவர் என்னிடம், “தமிழ்த்தாத்தா உமர்கயாம் பாடல் களை மொழிபெயர்ப்பு மூலம் படித்துச் சுவைத்திருக்கிறார்; இது உங்களுக்குத் தெரியுமா?” என்றார். “தெரியாது” என்றேன். “இன்று தெரிந்துகொள்ளுங்கள். மின்னா நூருத்தின் மொழி பெயர்த்த பாடல்களுக்கு ஐயர் பாயிரம் வழங்கியுள்ளார். படியுங்கள்” என்று ஒரு கையடக்க நூலைத் தந்தார். ஐயரின் சிறப்புப் பாயிரம்:

“ஓங்கிய சுவைசேர் பர்ஸிய மொழியில்

 உமர்கையாம் மொழிந்தபாக் களைநல்

ஆங்கிலமுதலா மொழிகளிற் பல்லோர்

 ஆக்கினர்; அவை தமிழ் செய்தான்

 தேங்குசீ ரன்ன வாசலோன் முகம்ம

 தப்துல்கா திர்ப்பெயர்த் திறலோன்

 தங்கிலா குணத்தோன் றருமின்ன நூருத்

தீனெனு நல்லொழுக் கினனே.”

உடனேயே அந்நூலின் ஒரு படியை அவர் எனக்கு அளித்தார். இது நிகழ்ந்த தேதி 2.1.1987

இந்நூலை அன்பர் கதிர் மீள்அச்சு செய்துள்ளார். விலை ரூபாய் 20. கிடைக்குமிடம்: அகரம், மனை எண். 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் -613 007

செட்டியார் அவர்கள் அசைக்க முடியாத தெய்வ நம்பிக்கை உடையவர். மகாத்மா காந்தியிடம் எல்லையற்ற ஈடுபாடு கொண்டவர். புத்தகப் பிரியர்களை மிகவும் நேசிப்பார். அவர் அதிக கவனம் செலுத்தியது பழைய நூல்கள் மீதே.

செல்லரித்த புத்தகங்களைத் தனியே ஓர் இடத்தில் வைத்திருந் தார். “இவைகளையுமா காப்பற்ற வேண்டும்” என்று அவரைக் கேட்டேன். அப்போது அவர் கூறியதாவது: “செல்லரிப்புகள் பல விதம். ஆக பலவிதமான செல்லரிப்பு நூல்களை நான் காப்பாற்றி வருகிறேன். இது வகையில் ஆய்வு செய்வாருக்கு இவை மிகவும் உதவும்” என்றார்.

பலப்பல அரிய நூல்கள், பலவிதமான சஞ்சிகைகள், நாளிதழ்கள் அவர் நூல்நிலையத்தில் பேணிக் காப்பாற்றப்பட்டுவந்தன. முக்கிய மான செய்திக் குறிப்புகளை முறையாகக் கத்தரித்து வைத்து, ஒவ் வொன்றையும் வெள்ளை செலஃபோன் தாளில் செருகி வைத்தி ருப்பார். அவர் சேகரித்த குறிப்புகள் சில இலட்சங்கள் ஆகும்.

பாம்புகளைப் பற்றிய ஆய்வுச் செய்திகளை அபரிமிதமாக சேமித்து வைத்திருந்தார். அவைகளைக் கொண்டு பத்தாயிரம் பக்கத்தில் ஒரு நல்ல நூலை உருவாக்க முடியும். ஊழல் பற்றி அவர் சேகரித்து வைத்த தகவல்கள் ஏராளம்.

நாடகங்கள் 300க்கு மேல் அவர் சேகரித்து வைத்திருந்தார். இவற்றில் பல மீள்பதிப்புப் பெறவே இல்லை. அப்பெரியாரின் வாழ்க்கை பற்றி ஒரு தனி நூலே வரையப்பட வேண்டும்.

ஒரு நூலைப் பற்றி என்ன என்ன தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு பட்டியல் அமைத்து வைத்திருந்தார். அதைக் கண்ணுற்ற நை அவர்கள், இப்படி ஒரு பட்டியலை ஒரு கமிட்டி போட்டு நாங்கள் தயாரித்தோம். அதைவிடவும் சிறப்பான பட்டியலைத் தனி ஒரு மனிதரான செட்டியார் செய்திருக்கிறாரே. இவர் அசாதாரண அறிஞர் என்று விதந்து பாராட்டினார்.

அவரைப் பற்றி மேலும் நான் என்ன சொல்ல. அமரர் செட்டி யார் ஓர் அசாதாரண அறிஞர். சற்றும் கர்வம் இல்லாதவர். பெரிய பரோபகாரி. அவர்தாம் தமிழைக் காப்பாற்றியவர். அவர் புகழ் ஓங்குக. 

(சேக்கிழார் அடிப்பொடி தி. நா. இராமசந்திரன் அவர்கள் உயர்நீதி மன்ற வழக்குரைஞராக பணிபுரிந்தவர். இவர் பாரதியார் குயில் பாட்டு, பெரியபுராணம் போன்ற பல நூல்களை மொழிபெயர்த்து உள்ளார். இவர் ரோஜா முத்தையா செட்டியாரின் நெருங்கிய நண்பராவார். இவரும் அரிய நூலகம் ஒன்றை தமது வீட்டில் உருவாக்கியுள்ளார்.)

Pin It