‘முரண்பாட்டை முன்வைத்தல்’ எனும் இந்நூல் கிருஷ்ணகுமார் அவர்களால் என்.சி.இ.ஆர்.டி. நிறுவனத்திற்கு எழுதப்பட்டது. இதனை ஜே. ஷாஜஹான் மொழியாக்கம் செய்து பாரதி புத்தகாலயம் வெயிட்டுள்ளது.

தொடக்ககாலக் கல்வி முறையானது சாதி, பொருளாதாரத்தினை மையமிட்டிருந்ததால் எதிர்கேள்வி கேட்க இயலாது போயிற்று. மதப்பிரச்சாரத்திற்கான மொழியறிவையும் கம்பெனி மற்றும் அரசு பணிகளில் இயந்திரகதியாய் வேலை செய்யத் தேவை யான அடிப்படைக் கல்வியையுமே கற்பித்தன என்று காலந்தோறு மான கற்பித்தலில் உள்ள முரண் வரலாற்றைக் குறிப்பிடும் என்.மாதவன் இவையனைத்தும் முதலாளித்துவப் பார்வையில் பணிக்கப்பட்டது என்கிறார். மாற்றுக் கருத்தின்றி ஓர்மையாக்கப் பட்ட இக்கல்விமுறை இன்றளவிலும் பின்பற்றப்பட்டு வருகின்றது.

கல்வி நிறுவனச் சூழலுக்கு அப்பாற்பட்ட முறைசாராத வகையில் கிடைக்கும் அனுபவங்கள் வாயிலாக மாணவர்களால் அதிகப்படியான விஷயங்களைக் கற்க இயலும். ஆக, அந்த வகையில் கிடைக்கும் அனுபவங்களும் கல்விதான் எனும் நம்பிக்கையினை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது கல்விச் சூழலின் கட்டாயம் என்கிறார் என்.மாதவன். திணிப்பற்ற இவ்விதக் கல்விக்கான நேரடிக் களமாக இச்சமூகம் விரிகின்றது. இவ்வாறான கற்பித்தலும் அதற்கான பாடத்திட்ட வரைவும் காலமாற்றத்தினை உள்வாங்கியனவாக இருப்பதில்லை என்ற முரண்பாட்டை முன்வைக்கும் கிருஷ்ணகுமார் வரலாறு, அறிவியல் பாடத்திட்டங்களைச் சான்றாகக் கொள்கின்றார்.

வரலாற்றுப் பாடத்திட்டங்கள் ஒருவித சுயசார்புடன் எழுதப்படுகின்றன; நடுநிலையான விவாதங்கள் முன்வைக்கப்படுவதில்லை. அப்படியே முன்வைத்தாலும் ஆசிரியன் அதை விவாதிக்க விடுவதில்லை. திடமான அறிவுப் புலப்பாட்டிற்கு உண்மையான வரலாற்றுப் பின்புலம் மிக முக்கியமானது. வரலாற்றில் மிகையான தகவல்களை மட்டும் தந்து முரண்பாடுகளை முற்றிலும் தவிர்க்கும் இம்முறையானது இளைய தலைமுறையினரின் அறிவுத் தேவையை நிறைவு செய்வதில் தடையாயிருக்கின்றது. இந்நிலை ஆசிரியன் கூற மாணவன் கேட்கும் ‘வரலாறு சொல்லுதல்’ முறையாகவே இருக்கின்றதே தவிர காலச் சூழலோடு பொருத்தி ஆய்ந்தறியும் ‘வரலாற்றினைக் கண்டறிதல்’ முறையாக இல்லை.

மேற்கூறியது போன்றே அறிவியல் பாடத்திட்டங்களும் இருவேறு பிரிவாக பிரிந்து கிடக்கின்றன. 1. பூமியின் வளத்தை மேலும் மேலும் பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சி காணும் அறிவியல் 2. இயற்கைக்கு மதிப்பளிக்கும் நவீன கல்வியின் விஞ்ஞான பார்வையாக வடிவம் பெற்ற சூழலியல். இவை இரண்டையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்திப் பார்க்கும் மாணவனுக்கு முன்னதால் உருவான முரணே பின்னது என்பது தெரிவதில்லை. அப்படியான உண்மையைக் கற்பிக்கும் கல்விமுறை நம்மிடையே பின்பற்றப்படவில்லை. இவர்கள் நம் சூழலுக்குச் சிறிதும் தொடர்பற்ற ‘Rain Rain Go Away’ முதலானவற்றை மனப்பாடம் செய்தே வளர்கின்றனர்.

- அ.கார்வண்ணன்

(கட்டுரையாளர், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை ஆய்வாளர். ‘புழங்கு பொருள் பண்பாடு’ குறித்து ஆய்வை மேற்கொண்டுள்ளார்.)

Pin It