kuthoosi guruஹிந்தியில் பேசக்கூடிய - விவாதிக்கக்கூடிய - வக்கீல் என்று பொருளல்ல. ஹிந்திக்காக வாதாடக்கூடிய வக்கீல் என்றுதான் பொருள்.

தமிழின் உயர்வைப் பற்றி வங்காளிகள் கூட்டத்தில் தெலுங்கில் பேசினால் எப்படி யிருக்கும்?

எந்த மொழியை வளர்க்க வேண்டுமோ அந்த மொழியில் பேசுவதுதான் நல்லது. உதாரணமாக சமஸ்கிருதத்தை வளர்க்கவேண்டும் என்கிறவர்கள் வீட்டிலும் வெளியிலும் சமஸ்கிருதத்தில் பேசுவதுதான் பொருத்தம். ஹிந்திக்காக வாதாடுகின்ற வக்கீல்கள்கூட ஹிந்தியில் பேசுவதுதான் ஒழுங்கு.

ஹிந்தி வக்கீல்கள் பலருண்டு. சர்தார் வேதரத்னம் பிள்ளையிலிருந்து மந்திரி மாதவமேனன் வரையில், எத்தனையோ ஹிந்தி வக்கீல்கள் இருக்கின்றனர்.

அவர்கள் தங்கள் வீட்டுப் பெரியவர்கேளா, தாங்களோ ஹிந்தி கற்க வேண்டுமென்பதில் அக்கறை காட்டுவதில்லை. பள்ளிப் பிள்ளைகளிடம் ஹிந்தி உயர்வு பிரச்சாரஞ் செய்வதில்தான் இவர்களுக்கு மிகவும் ருசி.

பெரம்பலூர் மாணவன் ஒருவன் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறான். மூன்றாவது படிவத்தில் (ஐஐஐ குடிசஅ) படிக்கிறானாம். மற்றெல்லாப் பாடங்களிலும் நல்ல ‘மார்க்’ வாங்குகிறானாம்.

ஆனால் ஹிந்தியில் மட்டும் ‘கோழி முட்டை’ கிடைக்கிறதாம்! ஒரு எழுத்துக்கூடத் தெரியவில்லையாம்! ஆசிரியரோ பெரிய பெரிய வாக்கியங்களைக் கேட்கிறாராம். பதில் கூறத் தெரியாததால் அடிக்கிறாராம். கிள்ளுகிறாராம். வகுப்பை விட்டு வெளியே தள்ளுகிறாராம்.

“நான் என்ன செய்வது? ஹிந்தி விருப்ப பாடமா? கட்டாய பாடமா? எனக்கு ஏதாவதொரு வழி சொல்லுங்களேன்! அடி தாங்க முடியவில்லையே! மனுஷன் குரங்காக விழுந்து பிடுங்குகிறாரே!

என்று எழுதியிருக்கிறான், சிறுவன்! என்னப்பா தம்பி சொல்லட்டும், நான்? உன் நிலை பரிதாபகரமாத்தானிருக்கிறது! உங்கள் படிப்பைப் பாழக்குவதென்றே முடிவு கட்டியிருக்கிறார்கள், சர்க்கார். கட்டாயமில்லை என்று சொல்லிக்கொண்டே பள்ளிதோறும் ஆசிரியர்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் வாங்குகிற சம்பளத்துக்கு ஏதாவது செய்து தொலைக்கணுமே! அதற்காக, பாவம், உங்கள் பிராணனை எடுக்கிறார்கள்!

கல்வி மந்திரி மாதவமேனன் சென்னையில் பேசியிருப்பதைப் படித்தாயா?

“இங்கிலீஷ் விஷயத்தில் முன் தடவை செய்த தவறை மீண்டும் செய்துவிட வேண்டாம். பார்ப்பனப் பிள்ளைகள் எப்படியும் தேசிய மொழியான ஹிந்தியைப் படித்துவிடுவார்கள்.

இப்போது துவேஷ மனப்பான்மை கொண்டு இன்னமும் ஹிந்தி படிக்க பிராமணரல்லா தார் முன் வரவில்லையானால் பிராமண ரல்லாதார் முன்னேறவே முடியாது.” என்று பேசியிருக்கிறார்! அதாவது இங்கிலீஷில் நாமெல்லோரும் ஏமாந்த போய்விட்டோம்! பார்ப்பனர் முந்திக் கொண்டு விட்டார்களாம்!

ஆதலால் இப்போதே, நாமும் ஹிந்தி படிக்கவேண்டும் என்கிறார்.

இங்கிலீஷ் விஷயத்தைக் கவனிப்போம். அது உலகப் பொதுமொழி. விஞ்ஞான நூல்கள் பொங்கி வழிகின்ற மொழி. அதைப் படித்திருந்தால் எந்த நாட்டுக்குப் போனாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஹிந்தி அப்பேர்ப் பட்ட மொழியா?

அது போகட்டும். இங்கிலிஷ்காரன் ஆண்டதனால் தானே, இங்கிலீஷ் படிக்க வேண்டியிருந்தது? அவன்தான் போய்விடடானே! அதுதான் இங்கிலீஷை ஒழித்துவிடப்போகிறோம் என்கிறார்களே, காங்கிரஸ்காரர்கள்?

ஹிந்தி சங்கதியும் அப்படித்தானே? ஹிந்தி ஆட்சி உள்ளவரையில் தானே ஹிந்திக்கு மதிப்பிருக்கும்? இங்கிலீஷ் ஆட்சியே இருநூறு ஆண்டுகள்தானே இருக்க முடிந்தது? ஹிந்தி ஆட்சி இருபது ஆண்டுகூட இருக்க முடியாதே? தமிழன் எப்போதும் தனி ஆட்சிதானே நடத்திக் கொண்டிருந்தான்? ஹிந்தி ஆதிக்க ஆட்சியிலிருந்து பிடுங்கிக் கொண்டு வந்துவிட்டால், அதன்பிறகு இந்த உதவாக்கரை ஹிந்தி எதற்காக?

“பிராமணர்கள் அன்று இங்கிலீஷ் படித்ததுபோல் இப்போது ஹிந்தி படிக்கிறார்கள்”, என்கிறார் மந்திரி. இதில் ஆச்சரியமென்ன? ஹிட்லர்

வெற்றிமேல் வெற்றியடைந்து கொண்டிருக்கும்போது ஜர்மன் படித்துக் கொண்டிருந்தார்களே! அவர்கள் மலையாளத்திலிருந்தால் மலையாளம் படிப்பார்கள்! ஆந்திராவிலிருந்தால் தெலுங்கு படிப்பார்கள்! வங்காளத்திலிருந்தால் வங்காளம் படிப்பார்கள்! தமிழ் நாட்டிலிருந்தால் தமிழ் படிப்பார்கள்! தாய் மொழி இல்லாதவர்கள் எதையும் படித்து முன்னேற வேண்டியது தானே?

இந்த நாடு மட்டும் தனி நாடாகட்டும்! அல்லது அதற்கான கிளர்ச்சி வெற்றி பெறுவது போலிருக்கட்டும்! பூணூலை அறுத்தெறிந்துவிட்டு, திருக்குறளுங்கையுமாகத் திரிவார்களே!

ஆகவே, மாணவத் தம்பீ! அடிகளையும் உதைகளையும் பொறுத்துக் கொள்! முடிந்தவரையில் படி! ஆனால் தனி நாடு பெறுவதற்கு ஓய்வு நேரத்தில் ஒவ்வொரு விநாடியும் வேலை செய்!

வேலை என்றால் பேசுவதும் எழுதவதுமல்ல! எத்தனையோ ஆக்க வேலைகளுண்டு! தெரிகிறதா?

ஆனால் ஒன்று. கஷ்டப்பட்டுப் படித்தால் உனக்கு ஹிந்தி வராமற் போகாது. அதற்காக வேண்டுமானால் போட்டி போட்டுப் படித்து அதிக ‘மார்க்’ வாங்கிக் காட்டலாம்!

ஹிந்தி ஏகாதிபத்தியம் ஒழியவேண்டும். நம் நாடு நமக்காக வேண்டும். இதில் மட்டும் கண்ணுங்கருத்துமாயிரு! மறந்துவிடாதே! உன் கூட்டாளி மாணவர்களை ஒன்று திரட்டு! ஹிந்தி ஏகாதிபத்திய ஒழிப்பை உன் மூலமந்திரமாக வைத்துக்கொள்!

- குத்தூசி குருசாமி (24-8-50)

நன்றி: வாலாசா வல்லவன்

 

Pin It