மக்களவைத் தேர்தல் முடிவுக்கு நாடே காத்திருந்த ஜீன் 4, 2024 அன்று நீட் தேர்வு முடிவுகளும் வெளிவந்தன. இத்தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு மாணவர்களும் கல்வியாளர்களும் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வு மோசடியான தேர்வு என ஆரம்பத்திலிருந்து சொல்லிக் கொண்டிருந்ததை இன்று வட மாநிலங்களும் உணர ஆரம்பித்துள்ளனர்.

மருத்துவம் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு அவசியம் என மோடி அரசு புகுத்திய நீட் தேர்வு 2019-ம் ஆண்டிலிருந்து தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டு மருத்துவ சேர்க்கைக்கான இத்தேர்வு மே 5-ம் நாள் நடத்தப்பட்டது. 23,33,297 மாணவர்கள் தேர்வெழுதினர். அதன் முடிவுகளே இப்போது வெளிவந்து சர்ச்சைகள் வெடித்துள்ளது.students against neet scamஇம்முறை நடந்த தேர்வில் முன் எப்போதும் இல்லாத அளவில் 67 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். இதில் ராஜஸ்தான், அரியானா, பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம். மேலும் அந்த 67 பேரில் 6 பேரும் அரியானா மாநிலத்தை சார்ந்தவர்கள். ஒரே தேர்வு மையத்தில் எழுதியவர்கள். இவர்கள் அனைவரும் முழு மதிப்பெண்ணான 720 பெற்றிருக்கிறார்கள்.

மேலும் இதே தேர்வு மையத்தில் இரண்டு பேர் 719, 718 என மதிப்பெண் வாங்கியுள்ளனர். இத்தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் (180*4 = 720) கேட்கப்படும். ஒவ்வொரு சரியான விடைக்கு தலா 4 மதிப்பெண் வழங்கப்படும். தேர்வில் மாணவர்களுக்கு ஒரு தவறான விடையாக இருந்தால் 5 மதிப்பெண்கள் குறைந்து 715 மதிப்பெண்கள் (720-5= 715) கிடைக்கும் அல்லது ஒரு கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்றாலும் மதிப்பெண்கள் வழங்கப்படாது. எனவே 4 மதிப்பெண்கள் குறைந்து 716 மதிப்பெண்கள் (720-4= 716) கிடைக்கும்.

nta neet scamமதிப்பெண் வழங்கப்படும் முறை இவ்வாறு இருக்கும் போது, 718, 719 போன்ற மதிப்பெண்கள் எவ்வாறு வரும் என பலத்த சந்தேகம் எழும்பியது. அதன் பின்னரே, இந்த வருட தேர்வில் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களாக 70 முதல் 80 வரை கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்தது. ”NCERT பாடப்புத்தங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களாலும், தேர்வு மையங்களில் சில தேர்வர்கள் நேரத்தை இழக்க செய்ததாலும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது” என கூறியது. 2018-ல் நடந்த CLAT என்ற ”இணையதள சட்டத்தேர்வில்” உச்ச நீதிமன்றம் வழங்கக் கூறிய கருணை மதிப்பெண்களை முன்னுதாரணமாகக் கொண்டு 1563 மாணவர்களுக்கு மட்டும் கூடுதல்/கருணை மதிப்பெண்கள் வழங்கியதாகவும் கூறியது.

ஆனால் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில், குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் இதனை கொடுத்தது ஏன்? இந்த கருணை மதிப்பெண் யார் யாருக்கு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது? எந்தெந்த தேர்வு மையங்களில் காலதாமதம் ஏற்பட்டது? ஏன் மற்ற மாணாக்கர்களுக்கு வழங்கவில்லை? போன்ற கேள்விகளுக்கு NTA தெளிவான விளக்கங்கள் அளிக்கவில்லை.

இதனால் பெற்றோர், மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பு உருவாகி விவாதங்கள் எழும்பிய பின்னரே, UPSC முன்னாள் தலைவர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. தற்போது 1563 பேரின் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்கிறோம் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. இம்மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வை ஜூன் 23-ஆம் தேதி நடத்தவுள்ளதாகவும், அதன் முடிவுகள் ஜூன் 30-ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் மீள் தேர்வு எழுத விரும்பாத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் நீக்கம் செய்து இறுதி மதிப்பெண்கள் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது.

இந்த நீட் தேர்வில் (2024) வெளியான மோசடிகள்:

  • ராஜஸ்தான் மற்றும் பீகாரில் நீட் தேர்வுக்கு முன்பு வினாத்தாள் சமூக வலைதளங்களில் கசிந்து பெரும் சர்ச்சையை எழுப்பிய நிலையில், ராஜஸ்தானில் 11 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். மேலும் நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை மறுப்பு தெரிவித்தது. பின்னர் அது சமூக வலைதளங்களில் வெளியாகி அம்பலப்பட்ட பின்பு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகே 5 மாணவர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • டெல்லி மற்றும் ராஜஸ்தனில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுத வந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு 10 லட்சம் பேரம் பேசப்பட்டிருக்கிறது.
  • ஒடிசா, ஜார்கண்ட், மகாராசுடிரா, கர்நாடகா மாநிலம் சார்ந்த 16 பேர் 1000 கி.மீ பயணித்து கோத்ரா தேர்வு மையத்தை தேர்வு செய்து, தேர்ச்சி பெற 10 லட்சம் தந்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
  • பீகாரில் மருத்துவ இடத்துக்கு தலா எட்டு லட்சம் பேரம் பேசும் ஆடியோவும் வெளியானது. வினாத்தாள்களை முன்கூட்டியே பெற 30 லட்சத்துக்கும் மேல் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் நீட் தேர்வு எழுதியவர்கள். பீகாரின் ராமகிருஷ்ணா நகரில் உள்ள பள்ளியில் 35 பேர் கொண்ட குழு தேர்வுக்கு முன்னரே போலித் தேர்வு நடத்தி விடைகளுடன் கூடிய நீட் வினாத்தாள்களை வழங்கியது குறித்து விசாரணை நடக்கிறது.
  • குஜராத்தின் கோத்ராவில் ராய் ஓவர்சீஸ் என்கிற பயிற்சி மையத்தில் பயிற்சி மைய அதிகாரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இடையே ரூ 2.68 கோடி பணப்பரிமாற்றம் நடந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
  • குஜராத்தில் நீட் தேர்வு எழுதிய ஒரு பெண் 705 மதிப்பெண் பெற்றிருக்கிறார். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மூன்றிலும் தேர்ச்சி அடையவில்லை.

இவ்வாறு வினாத்தாள் கசிவு, மருத்துவ சீட்டுக்கு பேரம், பயிற்சி மைய தரகுத்தனம் என இத்தனை மோசடிக்கு பின்பும், கருணை மதிப்பெண்களும் வழங்கப்பட்ட விவகாரம், தேர்வு எழுதிய மற்ற மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மதிப்பெண்களால் பெரும்பாலான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த நீட் தேர்வு முடிவை ரத்து செய்ய கோரி கல்வியாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில் தான் பல்வேறு கட்டப் போராட்டங்கள் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, கொல்கத்தா, சத்திஸ்கர், மேகாலயா, அரியானா போன்ற மாநிலங்களில் தற்போது போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாணவர்கள் #justiceforNeet, #ReNeet போன்றவற்றை ’X’ தளத்தில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு தேர்வு மையங்களில் வினாத்தாள் முற்றிலும் மாறுபட்டு, மிகவும் கடினமாக இருந்ததாகக் குற்றம் சாட்டினர். இதுகுறித்து தேர்வாணையத்திடமும் கேட்கப்பட்டும் எந்த பதிலும் வரவில்லை என்றும், இதனால் கடும் மன உளைச்சலில் உள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களுக்கு தனி கட் ஆஃப் மற்றும் தனியாக கலந்தாய்வு நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று கோரிக்கை மனு அளித்திருந்தனர். எனினும் எங்களுக்கு உரிய நீதி வேண்டும் என 200 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் பல மாநிலங்களிலும் நடந்த மோசடிகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இந்த பாஜக அரசிடம் மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

முறைகேடு நடந்த இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் மகாராஷ்ரா அரசு (சிண்டே பிரிவு) வலுயுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் இதற்காக குரல் எழுப்பி வருகின்றனர்.

இத்தேர்வு எழுத தேர்வு மையத்துக்கு செல்வதற்கு முன்பு மூன்றடுக்கு பரிசோதனை என்ற பெயரில் மாணவர்களை குற்றவாளிகளைவிட மோசமாக நடத்தினார்கள். மாணவர்கள் அரை கையுள்ள சட்டை மட்டுமே போடவேண்டும், பெண் பிள்ளைகள் கம்மல், கொலுசு, வளையல், செயின் போடக்கூடாது, தலைமுடி பின்னக்கூட கூடாது என கடும் கட்டுப்பாடுகள் விதித்தார்கள், பெண்களின் உள்ளாடை முதற்கொண்டு சோதனை செய்தே அனுப்பினார்கள். இவ்வளவு கொடுமைகள் செய்தவர்கள், புகார் குறித்தான கேள்விகளுக்கு மட்டும் தெளிவின்றி பதில் அளிக்கிறார்கள்.

நீட் தேர்வு என்பது சமூகநீதிக்கு எதிரானது என ஆரம்பம் முதலே எதிர்த்து நின்றது தமிழ்நாடு. ’இந்த தேர்வு மூலம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் பாதிக்கின்றனர். இதனால் மருத்துவ கட்டமைப்பே சிதைத்துவிடும் என ஏ.கே.ராஜன் ஆய்வறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளோம், எனவே இந்த தேர்வு ஒழிய வேண்டும், நீட் எனும் தேர்வே தேவையில்லை‘ என சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் போட்டு அனுப்பியும் பாஜக அரசு செவி சாய்க்கதில்லை. ஆனால் இன்று நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை மற்ற மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.

இவ்வாறு தகுதி, திறமை என காரணம் காட்டி திணிக்கப்பட்ட நீட் தேர்வில் நடக்கும் மோசடிகள், ஆண்டு தோறும் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவருகின்றன. இன்னமும் பல மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடுகளைத் தவிர்த்து விட்டு, கல்லூரி ஒதுக்கீட்டிற்கான சீட்டாக மாற்றும் மோசடி நடப்பதாகவும், 50 லட்சம் – 1 கோடி வரையிலான மருத்துவ சீட்டுக்கான கல்லூரி நிர்வாகத்திற்கும், பயிற்சி மையத் தரகர்களுக்கும் இடையே உடன்பாடுகளுடன் இப்படியான முறைகேடுகள் தொடர்வதாகவும் அதிர்ச்சியான செய்திகளும் வெளிவருகின்றன. இவையெல்லாம் குறித்து முறையாக விசாரிக்கப்பட வேண்டும். ஏழை, எளிய மாணவர்களை மருத்துவத்திலிருந்தே அப்புறப்படுத்தி விடத் துடிக்கும் இத்தகைய வலைப்பின்னல்கள் கண்டறியப்பட வேண்டும்.

மாநிலப் பாடத்திட்டங்கள் வழியாக படித்து பள்ளியிறுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தகுதியற்றவர்கள் என இந்தியப் பார்ப்பனியக் கட்டமைப்பு கொண்டு வந்ததே இந்த நீட் தேர்வு. மத்தியப் பாடத்திட்ட முறையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் எழுதத் தெரிந்தாலே தகுதி என்பதை நிர்ணயித்த பார்ப்பனிய வஞ்சகத்தினால், நாம் நம் திறமை வாய்ந்த அனிதா முதற்கொண்ட 29 மாணவர்களை இழந்திருக்கிறோம். இலட்சங்களை கொடுத்து படித்து கோடிகளில் சம்பாதிக்கும் எண்ணம் கொண்டவர்களை மருத்துவராக்கி அழகு பார்க்கும் வக்கிர மனம் கொண்ட இந்திய பார்ப்பனிய அதிகார வட்டத்தினால், வாழ்க்கையில் மருத்துவர்களாகி சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இலட்சியவாதிகளை இழந்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா எனும் பயிற்சி மையம் அளித்த மன அழுத்தத்தால் மட்டும் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர். பயிற்சி மையங்கள் ஈட்டும் பல்லாயிரக்கணக்கான வருமானத்திற்காக இப்படி ஒரு தேர்வு முகமையை அமைத்து பாஜக அரசு நடத்தும் மோசடித் தேர்வே நீட் தேர்வு.

கிட்டத்தட்ட 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என்றால், பயிற்சி மையங்கள் ஒரு மாணவருக்கு ஈட்டும் கட்டணத்தொகை குறைந்தபட்சம் 2 லட்சம் என்றால், இந்த வலைப்பின்னலுக்குள் புழங்கும் பணம் எத்தனை ஆயிரம் கோடி என்பதை கணக்கு போட்டாலே மலைத்து விடும் அளவுக்கு கொள்ளைகள் நடக்கின்றன. நீட் கொள்ளையர்கள் நடத்திய மோசடிகள் மிகச் சிறிய அளவில்தான் வெளிவந்து அதிர்ச்சியை உருவாக்கி இருக்கின்றன. இன்னும் மலையளவுக்கான கொள்ளைகள் இந்த வலைப்பின்னலுக்குள் மறைந்தே கிடக்கின்றன.

இவற்றை அறிந்ததனால்தான் தமிழ்நாடு நீட் தேர்வை எதிர்த்தது. தமிழ்நாடு ஒலித்த எச்சரிக்கை மணி இன்று மற்ற மாநிலங்களுக்கும் கேட்டிருக்கிறது. நீட் தேர்வு வேண்டாம் என்னும் குரல் பாஜக அரசின் செவிப்பறையை கிழிக்கும் வண்ணம் போராட்டங்களும் தொடர்கிறது. அனைத்து மாநிலங்களும் எழுப்பும் நீட் எதிர்ப்புக் குரலினால் முறைகேடுகளின் மொத்த வடிவமான நீட் தேர்வை ஒழித்து விடலாம் என்னும் நம்பிக்கை பிறக்கிறது. இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளும், அதிக மருத்துவ இடங்களும் உள்ள தமிழ்நாடு உருவாக்கிய மருத்துவக் கட்டமைப்பை சிதைக்காமல் காக்கும் பொறுப்பு நம் கையில்தான் இருக்கிறது.

- மே பதினேழு இயக்கம்

Pin It