சு.வேணுகோபாலின் சிறுகதைகளின் ஊடாகப் பயணிக்கும் போது எதிர்ப்படும் விடயங்கள் சமூகத்தோடு நேரடி தொடர்பு கொண்டவையாகவும் வாழ்வின் தினசரி நிகழ்வுகளின் பதிவுக ளாகவும் அமைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. இவருடைய கதைகள் பெரும்பாலும் பெண்களின் வாழ்வியல், ஆண்-பெண் உறவுமுறை, குழந்தை மனங்களின் வெளி, விவசாயம், மாறிவரும் பண்பாட்டுச் சூழல் ஆகியவற்றைப் பின்புலமாகக் கொண்டுள்ளன. இவருடைய கதைகளில் யதார்த்த மனவெளியைச் சித்திரிக்கும் போக்கு இழையோடுவதை உணரமுடிகிறது. வாழ்வின் வெறுமை யான, இருண்மையான, கனமான பகுதிகளைத் தொட்டுச் செல்பவை யாக இக்கதைகள் உள்ளன.

பெண்களின் வாழ்வியல் வெளி குறித்த உரையாடல்களாகச் சில கதைகளை முன்னிறுத்தலாம். கிடந்த கோலம் கதையில் வீட்டு வேலைகளில் பெண் உழைத்துக்கொண்டே இருக்க ஆணின் குடும்பப் பொறுப்பு எதுவாக இருக்கிறது என்ற கேள்வி, இரவு மட்டும் பெண்ணை அணுகுவதாக அமைகிறது. கலவியில் ஈடுபட்ட கணவனைப் பார்த்து மனைவி, ‘இதுக்கு மட்டும்தான் நீயா’ எனச் சிரிப்பது. அவள் சிரிப்பின் ஊடாக வெளிப்படும் வலி அன்றாட நடைமுறையின் வாழ்வின் ஆழமான பதிவு. பெண்ணை உடலாக மட்டும் பார்க்கும் பொதுப்புத்தி கொண்ட நாயகன், இறந்த அப்பா வின் உடலை வீட்டுக்குக் கொண்டுவர முடியாமல் உதவி கேட்கும் பெண்ணை, அவள் ஆதரவற்று உள்ளதைப் புரிந்து வெட்கி அவளுக்கு உதவும் கதையாக வெண்ணிலை அமைந்துள்ளது.

முதியவர்கள் தங்கள் மகன்களால் வஞ்சிக்கப்படும் நிலையில் கடைசிக் காலத்தில் உணவும் கவனிப்பும் மரியாதையும் அற்று வாழும் நிலை குறித்து வெவ்வேறு கோணங்களில் பதிவுசெய் துள்ளார். தீராக்குறை கதையின் மூன்று சகோதரிகளுக்கும் வயதான காலத்தில் தங்கள் பிள்ளைகளால் சுகமில்லை. தள்ளாத வயதில் கூலி வேலை, சுடு சொற்கள், ஒரு வாய் கஞ்சிக்கு மகனிடம் மற்றவர்கள் வழியாகச் சிபாரிசு தேடல் என அவர்கள் வாழ்க்கை அலைகழிக்கப் படுகிறது. இதே போன்ற சூழலில் உள்ள தாய்மை கதையின் அம்மாவால் இறுதி வரையிலும் பிள்ளைகளைத் தண்டிக்க முடிய வில்லை. வெறுத்துப்போய் காசு வெட்டிப் போட நினைத்துக் கோவி லுக்குப் போகும் அவள், இறுதியில் அவர்களின் வாழ்விற்காகச் சாமி கும்பிட்டுவிட்டு வருகிறாள். தாய்மைக் குணம் அரவணைப்பாக வெளிப்படுகிறது. ஆனால் அக்குபாரிக் கிழவியின் அட்டகாசங்கள் கதையில் உடல் குறித்த நனவுணர்வு அற்ற நிலையிலும் கிழவி சொத்து விஷயத்தில் மகளுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்காக வன்மத்தோடு மகன், மருமகளுக்குத் தெரியாமல் பெண்ணுக்குத் தோடும், பணமும் கொடுப்பதை, வித்தியாசமாகப் பதிவு செய்கிறது. குதிரை டாலருக்காக ஏங்கும் மகன் வழிப் பேரனை அவள் ஏமாற்று கிறாள். அது அவளின் ரகசிய வன்ம வெற்றியாக, ஆணின் தோல்வி யின் குறியீடாக உள்ளது. வீழ்ந்த மரத்தின் வாழ்ந்த பறவைகள் கதையின் தாயோ தன் மகனுக்கு வேலையில்லாத நிலையில் கணவனின் வேலையாவது கிடைக்க எண்ணி அவரது சுகவீனத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, இறுதியில் அந்த வேலையும் மகனுக்குக் கிடைக்காததை எண்ணி வருந்தும் தாய், கணவனைக் காட்டிலும் மகன்மீது கொண்ட பாசம் தாய்மையின் உச்சமாக வெளிப்படுகிறது.

தொப்புள்கொடி கதையில் வல்லுறவினால் பாதிப்படைந்த பெண் மனநிலை பிறழ்ந்து கர்ப்பமடைவதும் குழந்தை பெறுவதும் குழந்தையைப் பாராமரிக்கத் தெரியாமல் இறப்பதும் பிணம் என்று தெரியாத குழந்தையோடு உறவாடுவதும் என விரிந்து செல்கிறது. இறுதியாகப் பெற்றோர்கள் மகளுக்கு விஷம் கொடுத்து கொல்வதாக முடிகிறது. சாப நினைவுகள் கதையில் மனநிலை பிறழ்ந்த பெண் ஊர் சுற்றித் திரிந்த நிலையில் கண்ட நண்பன் மனநலக் காப்பகத்தில் சேர்ப்பதாக முடிகிறது. ஒற்றைப் பொருண்மையில் நகரும் இவ்விரு கதைகளில் இருவேறுப்பட்ட முடிவுகளுக்குக் கிராம, நகர்ப்புறச் சூழல் முக்கிய காரணமாக அமைகின்றன. உடம்பு கதையில் மனைவி யின் பிரசவக் காலத்தில் அவளுடைய உடல் உபாதைகளைக் கணவன் எதிர்கொள்ள குற்றவுணர்வில் வசப்பட்டவனாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறப் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் வேலை செய்யும்போது ஏற்படும் அவத்தைகளை நித்திய கண்டம் கதையில் காணலாம். அகம், புறம் சார்ந்து வெளிப்படும் பெண்களின் வலிகளை மிகச் சரியாகப் பதிவுசெய்துள்ளார்.

ஆண், பெண் உறவுமுறை சிக்கல்களை முன்னிறுத்தி நகரும் கதைகளில் உள்ளிருந்து உடற்றும் பசி வாசகருக்கு ஆழமான அதிர்ச்சியை அளிக்கக்கூடியது. தாய்தந்தை அற்ற குடும்பத்தில் நான்கு தங்கைகளுக்காகச் சொந்த வாழ்க்கையைத் துறந்து ஒவ்வொருவரை யும் கரையேற்றுகிறான் அண்ணன். மூன்று தங்கைகளுக்கும் திருமணமான நிலையில் நான்காவது தங்கைக்குக் குடும்பப் பொறுப்பு வந்துசேர்கிறது. ஒருநாள் இரவில் அண்ணனின் கை வந்து பாலியலுக்கு அழைக்கிறது. அதிர்ந்து மிரளும் அவளிடம் அவன் கேட்கிறான், ‘அக்கா அவுங்க ஒங்கிட்ட வேற ஒண்ணும் சொல்ல லையா...’ என்று ஒழுக்க அதிர்ச்சிக்கு அப்பால் செல்லக்கூடிய வாசகர் அந்த வாழ்க்கையில் உள்ள பரிதாபகரமான யதார்த்ததை உணரும் சூழல் வலிமிகுந்தது.

இன்னொரு கோணத்தில் ஆண், பெண் உறவை அணுகும் கதை கொடிகொம்பு. குடிகாரனான கணவனின் இயலாமைக்கு முன்னால் கூசி போகும் வாணியின் காம உணர்வு காயடிப்புச் செய்யப்படும் நிலையில் அவள் மனம் இயல்பாக மாமனார்மீது திசைமாறுகிறது. இந்தத் திசைமாற்றத்தை சஞ்சலங்கள் ஏதுமில்லாமல் சொல்லியிருக் கிறார். வாணிக்குக் காமம் சார்ந்த ஏக்கம் இருந்தது என்று கதை எங்குமே சொல்லவில்லை. அவளுடைய காமம் அவளுக்கே தெரிய வரும் இடத்தை, சு.வேணுகோபால் சொல்லியிருக்கும் விதம் இந்தக் கதையை அசாதாரணமான ஒரு நுண்மைக்குக் கொண்டுசெல்கிறது. மாமனார் பொன்னையா ஆடும்போது அவரது தசைகளைக் கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கும் பக்கத்துவீட்டு கனகத்தின் கண்களை ஓரக்கண்ணால் பார்க்கிறாள் வாணி. அப்போது அவளுக்குள் மூண் டெழும் பொறாமையும் குரோதமும்தான் அவளுக்கு அவளுடைய காமத்தை அடையாளம் காட்டுகின்றன. ஆசிரியர் இவ்விரு கதை களிலும் எங்கும் எந்த நியாயத்தையும் கற்பிக்கவில்லை. நம் ஒழுக்க நெறிகளை, அற உணர்ச்சியை மறுபரிசீலனைக்கு உள்ளாக்குவதன் வழியாக இக்கதைகளை நாம் தாண்டிச்செல்லக் கூடும். பிராய்டின் காயடிப்புச் சிக்கலுக்கு உள்ளான ஆண், பெண் உலகம்தான் இவ்விரு கதைகளில் வெளிப்பட்டுள்ளது.

இவருடைய கதைகளில் குழந்தைகள் சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். புற்று கதையில் சிறுமியின் நாய் வளர்க்கும் ஆசையும் அப்படி வளர்க்கும் நாய்க்குட்டி பெண் குட்டி என்பதால் வீட்டில் அதற்கான இருப்பு இல்லாமல் காட்டில் விடப்படும் நிலை கண்டு, அச்சிறுமியின் மனநிலையில் தானும் ஒரு பெண் தனக்கும் அந்த நிலை ஏற்பட்டுவிடுமோ எனக் கலங்குவதை அடர்த்தியான வலியோடு பதிவு செய்துள்ளார். நிரூபணம் கதையின் சிறுவனோ கைவிடப்பட்ட முதியவருக்குக் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை யின் நிரூபணமாக உள்ளான். கதைகளில் அன்பு வறண்ட இடங்களில் மாற்றாகக் குழந்தைகளே உள்ளனர்.

குழந்தை ஒன்றின் அன்றாடச் செயல்பாடுகள் வழியாகச் செல் கிறது உயிர்ச்சுனை என்ற கதை. ஒருகாலத்தில் ஏரிகளை நிறையச் செய்து மண்ணில் நீர் ததும்பச்செய்து விவசாயம் செய்த குடும்பம் நவீனக் காலகட்டத்தில் ஆழ்துளைக்கிணறுகள் உருவாகி மண்ணை ஒட்டயுறிஞ்கிறது. ஒருகட்டத்தில் மண்ணின் ஆழத்தில் இருந்து எரியும் வெம்மையுடன் ஆவிதான் வருகிறது. ஆழ்துளைக்கிணறை மேலும் ஆழமாக்க முயலும் அந்தக் குடும்பத்தின் ஒரு நாள் பதிவாகத் தான் இக்கதை அமைகிறது. குடும்பமே அந்தக் குழாயில் வரும் நீரை நம்பித்தான் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும் நிலையில் கடைசிப் பணத்தையும் கொடுத்துத்தான் துளை போடுகிறார்கள். அந்த நம்பிக்கை குரூரமாகச் சிதையும் இடத்தில் முடிகிறது கதை. அந்தக் கதைச்சித்தரிப்புக்குள்தான் நிதீன் என்ற குழந்தை உலவு கிறான். குழாய்போடுவதும் சரி நீர் வராததும் சரி அவனுக்கு ஒருவகை விளையாட்டாகவே இருக்கிறது. 

“எம்பிள்ள கல்யாணம் நின்னாலும் பரவாயில்ல. எம் பேரன்... கூகாளியம்மா... இது நியாயமா? வாய்க்கால்ல தண்ணி வல்ல தாத்தான்னு சொன்னப்பயே என் நெஞ்சு வெடிச்சிருக்கணும். மாப்பிள்ளை வந்தா பணத்துக்கு என்ன பதில் சொல்றது. எம் பேரனுக்காக எந்தச் சாமியும் கண்ணத் தொறக்கலயே?Ó வார்த்தைகள் தெளிவில்லாமல் குழறின. அவருக்குக் குப்பென வேர்க்கத் தொடங்கியது. மூலைக்கு ஒருவராக சுருண்டு படுத்துக் கிடந்தனர்” (‘உயிர்ச்சுனை’, வெண்ணிலை தொகுப்பு, ப.18) என்ற வரியில் நுட்பமாக இந்தக் கதையில் நிதீனின் இடத்தை அடையாளம் காட்டுகிறார் ஆசிரியர். கைவிடப்பட்ட நிலத்தில் போராடும் விவசாயியின் கதையாகப் புத்துயிர்ப்பு.

‘‘மலையடிவாரத்தில் சாலிக்கருவேல மரங்கள் குடையை விரித்தபடி நின்றிருந்தன. சைக்கிளை விட்டிறங்கி இடதுபுறமாகச் செல்லும் பாதையில் உருட்டிக்கொண்டு சென்றான். பொதைப்புல் சரிவு பொட்டலமாக இருந்தது. காய்ந்து சொடித்துப்போன புல் சுழிவைக்கூட ஓரிடத்திலும் காணமுடியவில்லை...” (‘புத்துயிர்ப்பு’, வெண்ணிலை தொகுப்பு, ப.109).

என்று ஆரம்பிக்கிறது கதை. மாட்டுக்கு ஒரு கைப்பிடி புல்லுக்காக வெறித்துக்கிடக்கும் பொட்டலில் அலையும் வாழ்க்கையின் பதிவு.

அன்பிற்கு முக்கியத்துவம் தரும் கதைகளும் அன்பை விட பொருளாதாரம் முக்கியம் என்ற எண்ணத்தில் வாழும் மக்களின் கதைகளையும் எழுதியுள்ளார். குதிரை மசால் தாத்தா கதையின் முதியவர் குழந்தை மனம் உள்ளதால்தான் 80 வயதிலும் உழைக்கவும் பாட்டி இறந்தால் தானும் காணாமல் போவேன் எனப் பூடகமாகச் சொல்லவும் முடிகிறது. இதே பிணைப்பும் அன்பும் மெய்ப்பொருள் காண்பது அறிவு கதையின் அப்பாவுக்கு மகன் மேல் உள்ளதைக் காணமுடிகிறது. எப்படியாவது பிள்ளையைப் படிக்க வைக்க நினைக்கும் அப்பாவின் அன்பையும் வறுமையையும் புரிந்து கொண்டு மெய்ப்பொருள் அறியும் மகன். ஆனால் வாழும் கலை கதை யில் பொருள் இல்லாததால் வெறுத்து ஒதுக்கும் மனைவி, பணம் கொடுத்துப் போகும் வாழும் கலை பயிற்சிகளில் தெளிவாகாத மனம் கழைகூத்தாடி சிறுமியின் வாழ்வு பாடம் புகட்ட கடின வேலைக்குத் திரும்பும் கணவனின் வலியைச் சொல்லும் கதையாக வெளிப்படு கிறது.

அவதாரம் கதையில் தலைதீபாவளிக்காக மனைவி ஊருக்குச் செல்லும் வழியில் காடர்கள் குடியில் பிறந்த பெண்குழந்தை பிறந் ததையட்டி (வளர்ச்சியின்றிப் பிறந்த குழந்தை) கொண்டாட் டங்கள் நடைபெறுகின்றது. கோயில் கோயிலாகச் சென்று ஆண்குழந்தை வேண்டிய பலனாகத் தன் அக்காவிற்குப் பிறந்த ஆண்குழந்தையின் கோரமான உருவம் அவன் கண்முன் நிழலாடி யது. அக்காவின் ஆண்குழந்தை அனாதையாக்கப்பட்ட நிலையையும் காடர்கள் பெண்குழந்தையைத் தெய்வமாக்கிக் கொண்டாடி மகிழும் மனநிலையையும் ஒப்பிட்டு பார்க்கும் சூழல் அழுத்தமான பார்வையாக நம்முன் விரிகிறது. இனக்குழு சமூகத்தில் பெண் குழந்தை கொண்டாடப்படும் சூழலைத் தாய்தெய்வ வழிப்பாட்டின் எச்சமாக உள்வாங்க முடிகிறது.

களவு போகும் புரவிகள் தொன்மத்தையும் கற்பனையையும் கலந்து விளக்கிச் செல்லும் இக்கதையில் அந்நியர்களால் நம் நாட்டுச் செல்வங்கள் மறைமுகமாகச் சுரண்டப்படுவதை எடுத்துரைக்கிறது. நடை கதையில், தன்னுடன் பழகும் ஒரு சக மனிதன் தன்னோடு நடைபோடும் போது அந்த நடையின் வேகத்திற்குத் தன்னால் ஈடுகொடுக்க முடியாத நிலையை எண்ணி வருந்தும் மனநிலை காரணம் விளங்கும் போது நடையிலும் ஏற்றத்தாழ்வு பார்க்கும் சமூகத்தைக் காட்டுகிறார். உருமாற்றம் கதையில் தேசப்பற்று மிகுந்து காமராஜர் காலத்தில் அவரோடு பழகிய மனிதரின் மனநிலை காலமாற்றத்திற்கேற்ப உருமாறுவதையும் அவர் வாழ்க்கையின் சூழல் அவரை எவ்வாறு தன்நிலை மறந்து செயல்பட வைக்கிறது என்பதையும் யதார்த்தத்தோடு பதிவுசெய்துள்ளது.

ஒரு துளி துயரம் கதையில் திருமண மொய்ப்பணத்தைப் பதிவு செய்யும் சாக்கில், கொடுத்த கடனை எடுத்துக் கொண்டுவிட்ட நண்பனின் துரோகத்தை எண்ணி, மனம்வருந்தி தற்கொலை செய்து கொள்கிறான்(?). அவனது மனைவி மாற்றுத் திறனாளியான தன் மேல் அன்பு காட்டிய அவனின் கவுரவத்திற்காக அந்த நண்பனுக்கு மிச்ச முள்ள கடன் தொகையைக் கொடுப்பதும், அவன் வெட்கி வருந்து வான் என நினைத்து ஏமாறும் காட்சியில் மனித மனதின் சின்னத் தனமும் பெருந்தன்மையும் இணைமுரணாக வெளிப்பட்டுள்ளது. மனித மனம் குற்றவுணர்வில் வெந்துசாகும் என்ற மிகையதார்த் தத்தைக் காட்சிப்படுத்தாமல் யதார்த்தமாக முடித்துள்ளார்.

பூமிக்குள் ஓடுகிறது நதி பள்ளர், தேவர் சமூகத்தில் நிலவும் சாதியக் கலவரங்களை முன்னிறுத்தி நகர்கிறது. ஆனால் சமூக உறவுமுறையில் தேவர் சமூகத்தில் பிறந்த பிள்ளைக்குப் பள்ளர் சமூகப் பெண் பால்கொடுக்கும் சடங்கு நடக்கும் நிகழ்வினைத் தலை முறை தத்துவமாக வழங்கிவருவதைக் கதை மூலமாகப் பதிவுசெய் கிறார். பள்ளர் தேவர் சமூகத்தில் நிலவும் சாதிய கலவரங்களுக்கு மாற்றாக, சமரச நோக்கத்திற்காக ஆசிரியர் இக்கதையை எழுதியதாக எண்ணத் தோன்றுகிறது.

சு.வேணுகோபாலின் இக்கதைகள் அனைத்துமே முற்போக்கு இலக்கியத்தின் பேசுபொருட்களை எடுத்தாண்டிருப்பவை. ஆனால் இவை பிரச்சாரம் செய்வதில்லை. மிகக் கனமான விடயங்களைக் கூட மிகச் சாதாரணமாகச் சொல்ல முனைகின்றன. எது யதார்த்தமோ அதை ‘அப்படியே’ முன் வைக்கின்றன. இக்காரணத்தால்தான் இவை நம்பகத்தன்மையுடன் வெளிப்படும் கதைகளாக அமைகின்றன.

சு.வேணுகோபாலின் யதார்த்தச் சித்திரிப்பை வெற்றிகரமாக்கும் அம்சங்களில் மொழியும் ஒன்று. இவருடைய மொழி பொதுநடை யிலும் பாத்திரங்களின் மொழி வட்டாரத் தன்மையோடும் வெளிப் படுகிறது. மொழிநடை மண்வாசனையோடு இயல்பான நிலையில் அமைந்தபோதிலும் சில இடங்களில் இறுக்கமாகவும் உள்ளது.

உத்திகளைக் கையாளுவதற்கு முக்கியத்துவம் அளிக்காத நிலை யில், தீராக்குறை கதையில் dramatic monologue எனும் ஒருவர் பேச்சில் சூழல் சொல்லப்பட்டு எதிராளியின் பேச்சில் ஊகிக்கப்படும் உத்திக் கையாளப்பட்டுள்ளது. சில கதைகளில் சூழலின் வெறுமை யிலிருந்து தப்பிக்க கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நனவுரு கற்பனை யில் (fantasy) மூழ்குகிறார்கள். காட்சிப்படுத்துதலும் கதைசொல்ல லும் இவருடைய கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன.

சு.வேணுகோபாலின் நடை எழுத்தாளனுடையதாக இல்லாமல் விவசாயியினுடையதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. விவசாயியாக மாறி பல இடங்களில் விவசாயத்தின் மிக நுட்பமான விவரணங் களை அளித்துள்ளார். இவருடைய கதைகளின் களப்பின்னணி பெரும்பாலும் கிராமங்களைச் சார்ந்தும் அதற்கடுத்து டவுன் போன்ற நகரங்களை முன்னிறுத்தியும் நகர்கின்றன. சென்னை போன்ற பெருநகரங்கள் குறித்த பதிவுகள் குறைவு. ஆனால் சென்னைக்கு வேலை காரணமாக வருபவர் சென்னையிலுள்ள நபரால் ஏமாற்றப் படும் போது சென்னை குறித்த ஆசிரியரின் பதிவு பொதுப்புத்தியில் விளைந்த பதிவாக வெளிப்பட்டுள்ளது. கதை சொல்லலில் உவமைகள் மூலம் கதாபாத்திரங்களின் தன்மையும் சூழலும் விளக்கப்பட்டுள்ளது. கதைகளில் வெளிப்படும் கதாபாத்திரங்கள் உன்னத நிலையில் உள்ளவர்களாகப் போற்றுதலுக்குரியவர்களாகப் படைக்காமல், யதார்த்த வெளியில் நின்று மனிதனின் கீழ்மை குணங்களோடே படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கதைக்கேற்ற பெயரை வைப்பதில் கதையின் ஆழமான புரிதல்கள் வெளிப்படும் நிலையில் பெயர்கள் அமைந்துள்ளன. மேலே குறிப்பிட்ட கதைகளே இதற்குச் சான்று. தொகுப்பிற்கும் இது பொருந்தும். வெண்ணிலை தொகுப்பில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கதைகளிலும் மைய கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு நிலை யில் நிர்க்கதியாக நிற்கும் நிலையை அடைவதாகக் காட்சிப்படுத்தப் படுகின்றனர். வெண்ணிலை என்றால் பரிபூரணமாகக் கைவிடப் பட்ட நிலையாகும். இவ்வாறு கதைகளின் பெயர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் தன்மையில் கவித்துவத்துடன் அமைந்துள்ளன.

சு.வேணுகோபால் மூன்று சிறுகதை தொகுப்புகளில் 58 சிறுகதைகளை எழுதியுள்ளார். பூமிக்குள் ஓடுகிறது நதி (2000), களவு போகும் புரவிகள் (2001), வெண்ணிலை (2006). நுண்வெளி கிரகணங்கள் (1997) என்ற நாவலும் கூந்தப்பனை (2001), திசை யெல்லாம் நெருஞ்சி (2006) ஆகிய குறுநாவல்களையும் எழுதி யுள்ளார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான பூமிக்குள் ஓடுகிறது நதியில் 18 சிறுகதைகள் உள்ளன. களவு போகும் புரவிகள் தொகுப்பிலுள்ள 17 சிறுகதைகளில் 9 கதைகள் சிறுபத்திரிக்கைளில் வெளிவந்துள்ளன.

வெண்ணிலை 23 சிறுகதைகளின் தொகுப்பு. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் எந்த இதழிலும் எழுதப்படாமல் தொகுப் பிற்காக எழுதப்பட்டவை. முற்றிலும் யதார்த்தம் சார்ந்து மண்ணால் கைவிடப்பட்ட விவசாயிகளின் வாழ்வின் சரிவைத் தீவிரமாகச் சொல்வதன் வழியாகச் சமகால வரலாற்றின் பதிவாக நிலை கொண்டுள்ளது. இத்தொகுப்புத் திருப்பூர் கலை இலக்கியப் பேரவை யின் விருதைப் பெற்றுள்ளது. ஒருதுளி துயரம் இவருடைய கதைகளில் தேர்ந்தெடுக்கபட்ட 15 சிறுகதைகளின் தொகுப்பு. கல்லூரியில் பாடப்புத்தகமாக இடம்பெறுவதையட்டி அதற்காகத் தொகுக்கப்பட்டது.

(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர். “பத்துப்பாட்டின் யாப்பு மரபு” குறித்து ஆய்வு செய்து வருகிறார்.)

Pin It