செயற்கை நுண்ணறிவு கருவிகளை சாட்ஜிபிடி, ஜெமினி, மெட்டா தரும் தகவல்கள் குறைபாடுகளையும், சார்பு நிலைகளையும் வெளிப்படுத்துகின்றன என்று ’இந்து ஆங்கில’ நாளேட்டில் சுசித்ரா கார்த்திகேயன் என்பவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த வாரம் ஒரு கட்டுரையை எழுதுவதற்காக, “பிரம்பானன் (Prambanan) கோயிலுக்கு முதலில் சென்ற இந்தியத் தலைவர் யார்?” என்று கூகுள் தேடலில் தட்டச்சு செய்தேன். உடனே, “இந்தோனேசியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்பானன் கோயிலுக்கு சென்ற முதல் இந்தியத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி” என்ற பதில் தோன்றியது.
ஆனால், இந்தியாவும் இந்தோனேசியாவும் 1940-களிலிருந்தே இராணுவம், கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் இணைந்து செயல்பட்டு வந்துள்ள நிலையில், அந்தப் பதில் குறித்து எனக்கு சந்தேகம் எழுந்தது. உண்மையை உறுதிப்படுத்துவதற்காக, நூற்றாண்டுக்கும் மேலான செய்தித்தாள் காப்பகங்களைத் தேடக்கூடிய ’தி இந்து’ நாளிதழின் பொருள் சார்ந்த (semantic) தேடலைப் பயன்படுத்தினேன். அதில், 1958 டிசம்பர் 14 அன்று, இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், இந்தோனேசியாவிற்கான தனது அரசுமுறைப் பயணத்தின் போது பிரம்பானன் கோயிலுக்குச் சென்றதாக தி இந்து செய்தி வெளியிட்டிருந்தது.
செயற்கை நுண்ணறிவின் வரம்புகளை மேலும் ஆராயும் நோக்கில், ChatGPT மற்றும் Gemini-யிடம் “பாலஸ்தீனுக்கு முதன்முதலாகச் சென்ற இந்திய பிரதமர் யார்?” என்று கேட்டேன். இரண்டும், “2018 பிப்ரவரி 10 அன்று மேற்குக் கரையின் ரமல்லாவுக்கு சென்று பாலஸ்தீன அதிபர் மக்மூத் அப்பாஸைச் சந்தித்த நரேந்திர மோடியே முதல் இந்திய பிரதமர்” என்று பதிலளித்தன. ஆனால், ’தி இந்து’ காப்பகங்களைப் பார்த்தபோது, 1960 மே-19 அன்று ஜவஹர்லால் நேரு காசா பகுதியைப் பார்வையிட்டதே இந்திய பிரதமரின் முதல் பாலஸ்தீனப் பயணம் என்பது தெரியவந்தது.
“அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்க செனட்டர்கள் அல்லது காங்கிரஸ் உறுப்பினர்கள் யாராவது சென்றுள்ளனரா?” என்று ChatGPT மற்றும் Gemini-யிடம் கேட்டேன். Gemini, “தற்போதைய அல்லது முன்னாள் அமெரிக்க செனட்டர் அல்லது காங்கிரஸ் உறுப்பினர் யாரும் அந்தக் கோயிலுக்குச் சென்றதாக பொதுப் பதிவோ அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலோ இல்லை” என்றது. ChatGPT, “2024-ல் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு ராமர் கோயிலுக்குச் சென்றது” என்று தவறான தகவலை அளித்தது. ஆனால், தி இந்து காப்பகங்கள் வேறொரு உண்மையை வெளிப்படுத்துகின்றன.
1993 நவம்பர் 3 அன்று, பாபர் மசூதி இடிக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு ஆண்டு கழித்து, ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க செனட்டர்கள் குழு ராமஜன்மபூமி வளாகத்துக்குச் சென்றது. பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர்களின் உடனிருப்பில், ஸ்டீவன் மோர்ஸ் தலைமையிலான அந்தக் குழு, ராம் லல்லா சிலை வைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தைப் பார்வையிட்டது.
செயற்கை நுண்ணறிவு வழியாக பெறப்படும் தகவல்களில் முழுமையாக நம்பகத் தன்மை கிடையாது; சார்பு நிலைகள் அதிலும் வரத் தொடங்குகின்றன. கடைசியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட “வந்தே மாதரம்” மசோதாவில் முழுப்பாடலும் இடம்பெற்றதா? என்று நான் கேட்டேன் (விடுதலை இராசேந்திரன்). முழுப்பாடலும் இடம்பெறவில்லை என்று மெட்டா ஏ.அய் தவறான பதிலை அளித்தது.
- விடுதலை இராசேந்திரன்