‘இந்துத்துவா’ அரசியலிலும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் முரண்பாடு தீவிரமடைந்து வருகிறது. உ.பி, பீகார் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் பார்ப்பன எதிர்ப்பு வெடித்து கிளம்பியுள்ளது.
இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவின் பார்ப்பன வாக்கு வங்கி அமைதியிழந்துள்ளது. இது 2027 சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியின் வாய்ப்புகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்தி பேசும் மய்யப் பகுதிகளில் பாஜகவுக்கும் அதன் பார்ப்பன ஆதரவாளர்களுக்கும் இடையிலான பிளவுகள் விரிவடைந்து வருகின்றன. இதைப் புறக்கணிப்பது பாஜகவுக்கு ஆபத்தாக முடியலாம். பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் ஜூன்-17 அன்று காவல்துறை என்கவுன்ட்டரில் பாரத் பூஷண் திவாரி என்ற பார்ப்பனர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கொந்தளிப்பு ஜாதிப் பிரச்சினையாக மாறியது. மத்தியப் பிரதேசத்தில் நரோத்தம் மிஸ்ராவ் என்ற பார்ப்பனருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. உத்தரப்பிரதேசத்தில் பார்ப்பன சமூகத்தினர் நடத்திய அரசியல் கூட்டங்களிலும், தங்களுக்கு அநீதி இழைப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஆறு முதல் எட்டு மாதங்களே உள்ள நிலையில் இந்த நிகழ்வுகள் பாஜகவுக்கு கடுமையான சவாலை உருவாக்கியுள்ளன. குறிப்பாக, பல்கலைக்கழக வளாகங்களில் ஜாதிப் பாகுபாட்டைத் தடுக்கவும் தண்டிக்கவும் கடுமையான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்த பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) முடிவு பார்ப்பனர்களை ஆத்திரப்படுத்தியது. பாகுபாடு என்றால் தலித் மாணவர்களுக்கு எதிரானது மட்டுமே என்று மானியக்குழு விதியைத் திருத்தியதை பார்ப்பனர்கள் ஏற்கவில்லை. தங்களுக்கு எதிராகவும் பாகுபாடு காட்டப்படுகிறது என்று கொந்தளிக்கிறார்கள். பாஜகவினரே இதை எதிர்த்து போராடினார்கள்.
உத்தரப் பிரதேசத்தில் மொத்த வாக்காளர்களில் பார்ப்பனர்கள் 10–12 விழுக்காடு உள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் அவர்களின் பங்கு 5–6 விழுக்காடாகவும், பீகாரில் 3.65 விழுக்காடாகவும் உள்ளது. பீகாரில் பொதுப்பிரிவினர் பட்டியலில் பார்ப்பனர்களே அதிக எண்ணிக்கையிலான சமூகமாக உள்ளனர்.
“பாறையைப் போல உறுதியாக பாஜகவுக்குப் பின்னால் நின்றவர்கள் நாங்கள்தான். பீகாரில் கட்சியைக் கட்டியெழுப்பியது யார்? தாராகாந்த் ஜா, வினோத் நாராயண் ஜா, கோபால் ஜீ, அஸ்வினி சவுபே, மிதிலேஷ் திவாரி போன்ற பார்ப்பனர்கள்தான். கட்சிக்கு இன்பத்திலும் துன்பத்திலும் துணையாக இருந்தனர். ஆனால் இப்போது எங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது,” என்று பெயர் வெளியிட விரும்பாத பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
போஜ்பூர் மாவட்டம் பிலௌட்டி கிராமத்தைச் சேர்ந்த பாரத் பூஷண் திவாரி என்ற பார்ப்பனர் ஜூன் 17 காலை காவல்துறை என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். (உ.பியில் ஏராளமான பார்ப்பனர்கள் ரவுடிகள் பட்டியலில் உள்ளனர்). அவர் “திவாரி” என்பதாலேயே, அதாவது பார்ப்பனர் என்பதாலேயே கொல்லப்பட்டதாகக் கூறினர். அதே நேரத்தில், மாநிலத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட பாஜகவினரும், மத்திய அமைச்சர் உள்ளிட்ட சிலரும், தலித் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கொல்லப்படும்போது இதேபோன்ற கோபம் ஏன் வெளிப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பினர். இந்த ஆண்டு பாஜக பீகாரில் தனது முதல் முதலமைச்சராக சம்ராட் சவுத்ரியை நியமித்தது. அவர் குஷ்வாஹா சமூகத்தைச் சேர்ந்தவர்; அந்தச் சமூகம் பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவில் அடங்குகிறது.
மே-7, 2026 அன்று, சவுத்ரி முதலமைச்சராகப் பதவியேற்ற ஒரு மாதத்துக்குள், மூத்த பாஜக தலைவரும் முக்கிய பார்ப்பனத் தலைவருமான மிதிலேஷ் திவாரி மாநில கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். முன்னாள் முதலமைச்சர் ஜகந்நாத் மிஸ்ராவின் மகன் நிதிஷ் மிஸ்ரா நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பாரத் திவாரி கொல்லப்பட்டதற்கான எதிர்வினையாக பார்ப்பன ஆதரவு வாக்கு வங்கியை பாதிக்கும் என்று முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் வழக்கத்திற்கு மாறாக கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார். இதற்கிடையே முதலமைச்சர் சவுத்ரி பேசிய பழைய காணொலிகளும் சமூக ஊடகங்களில் மீண்டும் பரவின. அதில் அவர், “நேற்றும் பிராமணர்களே உயர்ந்தவர்கள்; இன்றும் உயர்ந்தவர்களே. உங்கள் வழிகாட்டுதலின்படியே பீகார் இயங்கும்” என்று கூறியிருந்தார். இது இப்போதும் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில்
இதற்கிடையில் மத்தியப் பிரதேசத்தில், முன்னாள் அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவ் என்ற பார்ப்பனருக்கு ஜூலை-30 அன்று நடைபெறவிருந்த ததியா இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை 11 அன்று ததியா மாவட்டத்தில் அவரது ஆயிரக்கணக்கான பார்ப்பன ஆதரவாளர்கள் காவல்துறையுடன் மோதினர். எதிர்ப்பின் அடையாளமாக தேசிய நெடுஞ்சாலை 44-அய் கிட்டத்தட்ட 12 மணி நேரம் மறித்தனர்.
இந்த இடைத்தேர்தலுக்கு பார்ப்பனரல்லாத அஷுதோஷ் திவாரியை பாஜக வேட்பாளராக அறிவித்ததைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடந்தது. கட்சியின் மூத்த பார்ப்பனத் தலைவரான மிஸ்ராவின் கோரிக்கையை பாஜக புறக்கணித்தது. கடந்த காலங்களில் தனது கருத்துகளால் பலமுறை சர்ச்சையை ஏற்படுத்தியவர் மிஸ்ரா.
இந்தத் தேர்தலில் திவாரி முதன்முறையாக போட்டியிடுகிறார். ஆனால் பார்ப்பன மிஸ்ரா ததியா தொகுதியின் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர். நான்காவது முறையாக வெற்றி பெற்றிருந்தால், மாநில அமைச்சரவையில் முக்கியமான பதவிக்கு அவர் தீவிர போட்டியாளராக இருந்திருப்பார். பின்னர் மிஸ்ரா புதுடெல்லிக்குச் சென்று கட்சித் தலைவர் நிதின் நபீனை சந்தித்ததாகவும், கட்சியின் முடிவை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஜூலை தொடக்கத்தில், முதலமைச்சர் மோகன் யாதவுக்கும் நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியாவுக்கும் இடையே நீடித்து வந்த அதிகாரப் போட்டி புதிய கட்டத்தை எட்டியது. கட்சிக்குள் தற்போது மிக முக்கியமான பார்ப்பனத் தலைவராகக் கருதப்படும் விஜய்வர்கியா, முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் பொதுவெளியில் வெளியானதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை தீவிரமடைந்தது. தனது கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் தமக்குத் தெரியாமலேயே இடமாற்றம் செய்யப்படுவதாகவும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமக்கு ஒத்துழையாமை, புறக்கணிப்பு மற்றும் எதிர்ப்பு மட்டுமே கிடைத்ததாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குற்றம்சாட்டினார்.
உத்தரப் பிரதேசத்தில்
பாஜக எதிர்கொள்ளும் மிகப்பெரிய பார்ப்பன எதிர்ப்பு தேர்தலை எதிர்கொள்ளவுள்ள உத்தரப் பிரதேசத்தில்தான் உள்ளது. பழைய தாக்கூர்–பார்ப்பனப் போட்டி குறிப்பாக கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் (பூர்வாஞ்சல்) நிலவி வருவதால், இந்தச் சமூகத்தைத் திருப்தியாக வைத்திருப்பது பாஜகவுக்கு மிகவும் சிக்கலான பணியாக உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில், உத்தரப் பிரதேச மாநில அய்.ஏ.எஸ் அதிகாரியான அலங்கார் அக்னிஹோத்ரி, அப்போது பரேலி நகர மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றியவர், பல்கலை மானியக் குழுவின் புதிய விதிமுறைகள் “கருப்புச் சட்டம்” என்று குறிப்பிட்டு அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி, தனது புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டி ஒன்றை வெளியிட்டு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விதிமுறைகள் பொதுப்பிரிவு மாணவர்கள் துன்புறுத்தப்படுவதற்கு வழிவகுக்கும் என்று அவர் அச்சம் தெரிவித்தார்.
அவரது சுவரொட்டியில், இந்த ஆண்டு ஜனவரியில் பிரயாக்ராஜில் நடைபெற்ற மாக் மேளாவில் ஜோதிஷ் பீட சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதிக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் “அவமதிப்பையும்” கண்டித்திருந்தார். கடந்த சனவரி-27ம் தேதி இந்த சங்கராச்சாரி கங்கையில் ‘புனித நீராட’ பல்லக்கில் பவனி வந்ததை காவல்துறை தடுத்து நிறுத்தியது.
மேலும், உத்தரப் பிரதேச அரசில் “பார்ப்பனர்களுக்கு எதிரான பிரச்சாரம்” நடைபெறுவதாகக் குற்றம்சாட்டி பாஜகவைப் புறக்கணிக்குமாறும் அழைப்பு விடுத்தார். “ஒழுங்கீனம் மற்றும் பணிவிதிகளை மீறுதல்” என்ற அரசு விதிகளின் கீழ் உ.பி ஆட்சி இந்தப் பார்ப்பன அதிகாரி மீது குற்றம் சாட்டியது. உடனே பதவி விலகல் கடிதத்தைத் தந்தனர். அடுத்த சில மணி நேரங்களிலேயே அவரை அரசு இடைநீக்கம் செய்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று, அதிருப்தியடைந்த பாஜகவைச் சேர்ந்த பார்ப்பன சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேலவை உறுப்பினர்கள் குழு ஒன்று லக்னோவில் மூத்த கட்சித் தலைவர் பஞ்சானந்த் பாதக்கின் இல்லத்தில் கூட்டம் நடத்தியது. இதற்கு சற்று முன்புதான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பங்கஜ் சவுத்ரி பாஜகவின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். அதுமட்டுமின்றி 6 மாதங்களுக்கு முன்பு பிற்படுத்தப்பட்ட தாக்கூர் சமூகத்தைச் சார்ந்த 40 சட்டமன்ற உறுப்பினர்கள் லக்னோவில் கூடி கட்சித் தலைவராக பிற்படுத்தப்பட்டோரை நியமிக்க வலியுறுத்தினர்.
பார்ப்பன எதிர்ப்பை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனக்கு சாதகமாக பயன்படுத்தினார். பார்ப்பனர்களுக்கு ஆதரவாக பேசி தன்பக்கம் இழுக்க முயன்றார். தனது கட்சி எப்போதும் பார்ப்பன சமூகத்தை மதித்துள்ளதாகவும், பார்ப்பன மாநாடுகளில் பங்கேற்றுள்ளதாகவும் அகிலேஷ் யாதவ் தொடர்ந்து கூறி வருகிறார். பாஜக முண்ணனி தலைவரும் துணை முதலமைச்சருமான பிரஜேஷ் பாதக், மாநிலத்தில் உள்ள செல்வாக்குமிக்க பார்ப்பன சமூக உறுப்பினர்களை சமீபகாலமாகச் சந்தித்து வருகிறார். சமூகத்தின் குறைகளைத் தீர்க்க பாஜக முயன்று வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் பார்ப்பனர்கள் வெறும் வாக்காளர்கள் மட்டுமல்ல; அரசியல் கருத்துகளை வடிவமைக்கும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் உள்ளனர்.லக்னோவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான சரத் பிரதான் கூறுகையில், உத்தரப் பிரதேசத்தில் பார்ப்பனர்களுக்கும் பாஜகவுக்கும் இடையே வெளிப்படையாக அதிகரித்து வரும் அதிருப்திக்கு முக்கிய காரணம், முதலமைச்சர் ஆதித்யநாத் அரசில் தாக்கூர் சமூகத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருவதே என்றார்.
“சில பார்ப்பன குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் இந்த அதிருப்தியை மேலும் தீவிரப்படுத்தின. அவர்களில் மிகவும் பிரபலமானவர் விகாஸ் துபே. அவரது கொலை திட்டமிட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டது. துபே பார்ப்பன சமூகத்தில் அந்த அளவுக்கு பிரபலமாக இருந்தவர் அல்ல என்றாலும், உத்தரப் பிரதேச காவல்துறை மேற்கொண்ட அந்த என்கவுன்டர் முறையாக நடத்தப்படாத விதம் சமூகத்தில் அவருக்கு ஆதரவு உணர்வை ஏற்படுத்தியது.” என்கிறார் ஆய்வாளர் சரத் பிரதான். உத்தரப்பிரதேச அரசியலில் தாக்கூர்களும் பார்ப்பனர்களும் பாரம்பரியமாக மோதிக் கொண்டிருந்தாலும் இருதரப்பினருக்கும் மோதல் கடுமையாகியுள்ளது என்கிறார்.
( ‘பிரண்ட்லைன்’ ஆக-15, இதழில் வெளிவந்துள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்)
- விடுதலை இராசேந்திரன்