hindi in bharathidasan univஎப்படியாவது இந்தியைத் தமிழ்நாட்டில் நுழைத்து விட வேண்டும் என்று ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சிப்பதும், அதற்காக அவ்வப்போது நூல் (!) விட்டுப் பார்ப்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். தற்போது மீண்டும் அந்த முயற்சியை அரங்கேற்றத் துணை போயுள்ளது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்ற இந்திச் சொற்றொடர் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது. 75வது விடுதலை நாளை முன்னிட்டு ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட இந்திய விடுதலை நாளுக்கான இலச்சினையில் காணப்படும் வாசகம்தான் இது. இதனை, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா என்று தமிழக அரசு தமிழாக்கம் செய்து அரசு கடிதங்களிலும் பிற இடங்களிலும் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆங்கில வழியில் இந்தி வாசகம் திணிக்கப்பட்டிருப்பது பரவலான கண்டனங்களை எழுப்பியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு இதனைக் கண்டித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாசும் இதைக் கண்டித்துள்ளார்.

அதேநேரத்தில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், அதே நிகழ்ச்சியில் மேடையில் இருந்த ஆளுநரிடம், “தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை நடைமுறையில் உள்ளதாகவும், ஆளுநர் இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், மாணவர்கள் ஒரு மொழியை விருப்பப்பட்டால் படித்துக் கொள்ளலாம், ஆனால் அந்த மொழி திணிக்கப்படக் கூடாது” என்றும் பேசியிருக்கிறார்.

1965 மொழிப்போர் காரணமாகத் தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட இந்தி புறவாசல் வழியாக மீண்டும் தமிழ்நாட்டிற்கு உள்ளே நுழைவதற்கு இடம் பார்த்துக் கொண்டுள்ளது. அறிஞர் அண்ணாவின் வழியில், முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில் பீடுநடை போடும் திராவிட முன்னேற்றக் கழக அரசு இந்தி நுழைவதற்கு எந்த வகையிலும் இடம் கொடுத்து விடக்கூடாது என்பதே தமிழ் ஆர்வலர்கள் மற்றும் திராவிட இயக்க உணர்வாளர்களின் விருப்பமாக உள்ளது. தமிழ்நாடு அரசு இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.

- வெற்றிச்செல்வன்

Pin It