கடந்த ஏப்ரல் 26, 27 நாட்களிலும், அதைத் தொடர்ந்து நேபாள நாட்டை மிகமோசமான  நிலநடுக்கம் தாக்கி தரைமட்ட மாக்கியிருக்கிறது.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவின் வடமேற்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள லாம்ஜெங் என்ற இடத்தை மையமாகக் கொண்டு, 26.04.2015 - ஞாயிறு அன்று 7.9 என்ற ரிக்டர் அளவில், வலுவான நிலநடுக்கம் தாக்கியது. அடுத்தநாள், 6.9 ரிக்டர் அளவுக்கான, நிலநடுக்கம் தொடர்ந்தது. அதற்குப் பிறகும், ஏறத்தாழ 55 முறைக்குமேல், சிறுசிறு நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் ஏற்பட்டு பேரழிவுகள் தொடர்ந்தன.

தலைநகரம் காத்மாண்டுவிலும், அந்நாட்டின் இமயமலை உயர்பகுதிகளில் உள்ள 25 மாவட்டங்களிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இந்நில நடுக்கத்தால், 5000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந் துள்ளனர். பல்லாயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காத்மாண்டுவிலும், வேறு சில நகரங்களிலும் அமைந் துள்ள வரலாற்றுச் சின்னங்களும், வழிபாட்டு இடங்களும் இருந்த சுவடில்லாமல், தரைமட்டமாயின.

குடிதண்ணீர், உணவு, மருந்து எதுவுமின்றி, பல்லாயிரக் கணக்கான மக்கள் திறந்த வெளியில், உயிர் அச்சத்தோடு தத்தளித்து நிற்கின்றனர்.

இந்த நிலநடுக்கம் இந்தியாவில், உத்திரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களைத் தாக்கியது. ஏறத்தாழ 60க்கும் மேற்பட்டோர் இம்மாநிலங் களில்  உயிரிழந்துள்ளனர். இதில் பீகாரிகள் எண்ணிக்கை அதிகம்.

இந்தப் பேரழிவில் சிக்கி உறவையும், உடைமை யையும் இழந்துத் தவிக்கும் நேப்பாள மக்களுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது! அதேபோல், இந்தியாவின் வடமாநிலங்களில் உயிரழந்தோர் குடும்பங்களுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

தரைமட்டமாகியுள்ள, நேப்பாளத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்பதற்கும், இறந்தோர் உடல்களை மீட்பதற்கும், உடனடி பேரிடர் நீக்கப் பணிகள் மேற்கொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்பதற்கும் நேப்பாளத்திற்கு, உலகநாடுகள் அனைத்தும் உற்ற துணையாக விளங்க வேண்டும்.

நேர்ந்துள்ள இந்த மனிதப் பேரவலத்தின் விளைவுகள், மிக நீண்ட காலத்திற்கு அந்நாட்டு மக்களை பாதிக்கக்கூடிய தாகும். எனவே, ஐ.நா. முயற்சி மேற்கொண்டு நேப்பாள நாட்டை  மீள் கட்டமைக்கவும், மக்களின் வாழ்வாதாரங்களை நிலைநிறுத்தவும், நீண்டகால நிதியுதவியும் தொழில்நுட்ப உதவியும் வழங்கியாக வேண்டும்.

நேப்பாள நிலநடுக்கம், அடிப்படையில் இயற்கைச் சீற்றத்தால் நேர்ந்ததுதான் என்றாலும், நாடுகள் மேற்கொள்ளும் தொழில் வளர்ச்சி முறை இது போன்ற பேரழிவுகளை விரைவுபடுத்தி விடுகிறது என உணர வேண்டிய தருணம் இது!

பூமிக்கு அடியில் ஆழத்தில் அமைந்துள்ள நிலத்தட்டுகள் பெரும்பாலும் நகர்ந்து கொண்டே இருப்பவைதான். அது அவற்றின் இயற்கைத்தன்மையாகும். ஆயினும், இந்த நிலத்தடிப் பாறை அடுக்குகளில், “வளர்ச்சி” என்ற பெயரால் நடக்கும் மனிதக் குறுக்கீடு இயற்கைக்கு மாறான நிலத்தட்டு நகர்வுகளை ஏற்படுத்திவிடும்.

எடுத்துக்காட்டாக, மீத்தேன் திட்டத்திற்காகவோ, பாறை எண்ணெய் (Shale) எடுப்பதற்காகவோ பல்லாயிரம் அடி ஆழ்குழாய் அமைத்து, நீரையும் - எண்ணெய்யையும் எரிவளியையும் உறிஞ்சி வெளியேற்றும்போது, செயற்கையாக ஏற்படும் அந்த வெற்றிடத்தை நிரப்ப, கடலின் உப்புத் தண்ணீர் உள்ளே நுழைவது தவிர்க்க முடியாதது. உப்புத் தண்ணீர் பாறையை அரிக்கும் தன்மையுடையது என்பதை அனைவரும் அறிவோம்.

கீழடுக்குப் பாறைகள் இவ்வாறு அரிப்பினால் வலுவிழக் கும் போது, நிலத்தின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டு எதிர் பாராத விளைவுகள் ஏற்படும் ஆபத்து உண்டு.

இயற்கை நிகழ்வுகள் அனைத்தையும் தடுத்துவிட முடியாது என்றாலும், செயற்கையாக ஏற்படுத்தும் பேரழிவு களையாவது நிறுத்த வேண்டும் என்ற முடிவுக்கு மனித குலம் வரவேண்டும்.

நேப்பாளப் பேரழிவிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினை இதுதான்!

Pin It