கற்பனை செய்ய முடியாத காட்சி ஒன்றை டிசம்பர் மத்தியில் நாடாளுமன்ற வளாகத்தில் காண முடிந்தது. வன்முறை, இரத்தச் சிந்தல்களை வெறுத்து ‘அகிம்சை’யை வலியுறுத்திய காந்தியடிகளின் சிலைக்குப் பின்னே பதுங்கிக் கொண்டு துப்பாக்கியால் குறி பார்க்கிறார் ஒரு சிப்பாய். நாடாளுமன்றத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது என்று பரவிய செய்தியால் உறுப்பினர்களும் அமைச்சர்களும் பீதியில் ஓடிய போது, பயங்கரவாதிகள் எங்காவது ஒளிந்திருக்கிறார்களா என்று விழிப்புணர்வோடு கண்ணோட்டம் செலுத்துகிறார் அந்த சிப்பாய்.

Anarunaவெடிகுண்டு பீதி, நெல்லையிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே பெங்களூரில் விஞ்ஞானிகள் மாநாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானிலிருந்து இயங்கும் `அல்கொய்தா’ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வடக்கே காஷ்மீரிலிருந்து தெற்கே நெல்லை வரை பயங்கரவாதத்தின் தடங்கள் பதிந்திருப்பதை உணர முடிகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன் காஷ்மீரில் பிரிவினைவாதிகளால் அமைதி கெட்டு விட்டது. அது கலவர பூமியாகி விட்டது என்று பேசப்பட்டது. பிறகு பஞ்சாபில் துப்பாக்கிச் சத்தம் கேட்காத நாளே இல்லை என்றானது. அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் தீவிரவாதிகள் பதுங்கிக் கொண்டு தாக்குகிறார்கள் என்கிற தகவலின் அடிப்படையில் அங்கே ராணுவத்தை அனுப்பினார் இந்திரா காந்தி. அதன் தொடர்ச்சியாக பொற்கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக சீக்கியர் மத்தியில் பரவிய கசப்புணர்ச்சி இந்திரா காந்தியின் பாதுகாவலரையும் தொற்றிக் கொண்டது. பணியில் இருந்த காவலரே பிரதமர் இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்றார். பிறகு அத்வானியின் ரதயாத்திரை, கரசேவை, பாபர் மசூதி இடிப்பு போன்ற ‘தேசிய எழுச்சி’யின் பக்க விளைவாய் கோவையில் தொடர்குண்டு வெடிப்பு; தமிழகமே அதிர்ந்து போனது.

தொடர்ந்து பம்பாய், டெல்லி, குஜராத், அசாம், ஆந்திரா, கர்னாடகம் என்று இந்தியா முழுவதுமே வெடிகுண்டுகளின் முழக்கங்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. இந்தியாவில் மாத்திரமல்ல அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஜெர்மன், பிரான்ஸ் என்று கண்டங்களில் உள்ள நாடுகள் அனைத்திலுமே பயங்கரவாதத்தின் அதிர்முழக்கங்களால் இரத்த ஆறுகள் ஓடுகின்றன. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் இட்லரிடமிருந்து பயங்கரவாதத்தை அமெரிக்கா பற்றிக் கொண்டது. நவீன ஆயுதபலத்தால் உலகையே அது அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவுக்குப் பின்னே யூத பயங்கரவாதம் மூளையாகச் செயல்பட்டது. அமெரிக்கப் பயங்கர வாதம் இஸ்லாமியப் பயங்கரவாதத்தை தன் தலைவாசலுக்கே அழைத்து விட்டது. `பெண்டகன்’ மீதே தாக்குதல் நடந்து விட்டது.

பெண்டகனைத் தாக்கியது இஸ்லாமிய தீவிரவாதமா, அமெரிக்க தீவிரவாதமா? சந்தேகம் தொடர்கிறது. இவ்வாறு உலகம் முழுவதுமே ஒவ்வொரு நாட்டிலும் `பயங்கரவாதம்’ அரசுகளுக்கும் அப்பாவி மக்களுக்கும் எதிராகப் பேருருவாய்க் காட்சி தருகிறது. இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண் எது? பல அறிவு ஜீவிகள் ஒப்புக் கொள்ள மறுத்தாலும், உண்மைக்குத் திரையிட்டு மனம்போன போக்கில் கைநீட்டினாலும் - பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண் மதவெறியே என்பதை அலட்சியம் செய்து விட முடியாது.

ஒரு காலத்திலே ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாய் இருந்த மதம், அபினியாய்ச் செயல்பட்டது. ஆதிக்கவாதிகளுக்கோ மதம் ஒரு பாதுகாப்பான ஆயுதமாகவே மாறிவிட்டது. மதத்தின் பெயரால் அடக்குமுறையாளர்கள் ஆட்சி நடத்துவதும், மதத்தின் பெயரால் இந்தக் கொடுமைகளைப் பொது மக்கள் சகித்துக் கொள்வதும் தவிர்க்க முடியாத இயல்பாகிவிட்டது.

எல்லா மதப் பிரிவினரிலும் கண்ணீரிலும், கசப்பிலும் வெந்து மடியும் வறியோர் உண்டு. இவர்களே அதிகமாய் உண்டு. ஆனால், வறுமைக்கும் கொடுமைக்கும் ஆளாகும் இம்மக்களோ தம் எதிரிகள் வெளியில் இருப்பதாகவே பயிற்றுவிக்கப்படுகிறார்கள். சில மதங்கள், ‘நாமே உலகாளப் பிறந்தவர்கள்; ரட்சிக்கப்பட்டவர்கள்’ என்கிற வெறியுணர்வை ஊட்டுகின்றன. உலகம் முழுவதுமே ஒரே மதம் நிறுவப்பட்டு விட்டால் மண்ணிலே `சொர்க்கம்’ மலர்ந்து விடுமோ?

சோஷலிச சமூக அமைப்பே மனிதருள் அன்பையும் ஒற்றுமையையும் உத்தரவாதம் செய்யுமே தவிர மதங்களால் அது சாத்தியமில்லை. சோஷலிசக் கட்டமைப்பு தந்த பாதுகாப்பால்தான் சோவியத் யூனியன் பல நாடுகளாய்ச் சிதறிய போதுகூட எந்த வெடிச் சத்தமும் கேட்கவில்லை. சோவியத் யூனியனிலும், சீனத்திலும் சோஷலிசம் அரும்பியபோது இந்திய மண்ணிலும் சோஷலிசத்தில் ஆர்வமுள்ள நேருவின் ஆட்சி உதயமானது. இந்திய சோவியத் நட்புறவும், `இந்தியர்களும் சீனர்களும் சகோதரர்கள்’ (`இந்தோ - சீனா பாய் பாய்) என்கிற முழக்கங்களும் இனிதே செழித்தன. இந்திய சீன நல்லுறவில் விரிசல் விழுந்தது எப்படி? பகைமை வளர்ந்தது எப்படி?

பௌத்த மதத் தலைவர் தலாய்லாமாவால்தான் இந்திய சீன உறவில் தீப்பற்றியது. மேலை நாடுகளின் ஆதரவுடன் கம்யூனிச எதிர்ப்பும், சீன எதிர்ப்பும் தலாய்லாமா மூலம் தூண்டி வளர்க்கப்பட்டது. கம்யூனிச நற்பயன்களை இழக்க விரும்பாத மக்கள் கொந்தளித்த போது `சதிகாரன்’ இந்தியாவுக்குத் தப்பி வந்தான். இந்திய-சீன நட்புறவை விரும்பாத இந்துமத வெறியர்கள் இங்கே நேருவுக்கு நெருக்கடி கொடுத்தார்கள்.

தோழமை நாட்டுக்கு எதிராகச் சதிபுரிந்த தலாய்லாமாவை இந்தியா அனுமதித்திருக்கக் கூடாது. ஆனால், `அகதியை’ அரவணைப்பதாகக் கூறி இன்று வரையிலும் தலாய்லாமாவுக்கு இந்திய அரசு கோடிக் கணக்கில் செலவு செய்து பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. தலாய்லாமா இந்தியாவில் இருந்து கொண்டு ஓர் அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார். அகதியாய் வருவோருக்குப் புகலிடம் தருவது நியாயமானதே. ஆனால், தலாய்லாமா வெறும் அகதியாய் இங்கே இல்லை.

தலாய்லாமாவுக்குத் தரப்படும் தனி அந்தஸ்து இங்கே பிற அகதிகளுக்குத் தரப்படுவதில்லை. நேபாளத்திலே அதிகார வெறியில் ‘அரண்மனைப் புரட்சி’ மூலம் அதிகாரத்துக்கு வந்தவர் மன்னர் ஞானேந்திரா. ஞானேந்திரா மன்னராக முடிசூட்டிக் கொள்வதற்கு முன்பே நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராகவும் ஜனநாயகத்துக்கு ஆதரவாகவும் பல போராட்டங்கள் தொடங்கி விட்டன. ஞானேந்திரா மூர்க்கமான சர்வாதிகாரி என்பதால் ஜனநாயகத்துக்கான போராட்டங்கள் தீவிரமாகின. முடியாட்சியின் கொடூரமும் தீவிரமாகியது. கட்சிகள் தடை செய்யப்பட்டன. எழுத்துரிமை பேச்சுரிமைகள் மறுக்கப்பட்டன. இன்று போராட்டம் இல்லாத நாளில்லை. ‘மாவோயிஸ்டுகள்’ ஆயுதமேந்திப் போராடுகிறார்கள்.

Gandhiகம்யூனிஸ்ட்டுகளின் போராட்டம் எந்தச் சூழ்நிலையிலும் மக்களைப் பாதுகாப்பதாகவே இருக்கும். மாவோயிஸ்ட்டுகள் இளைஞர்கள் என்பதால் பல சந்தர்ப்பங்களில் எல்லை கடந்து விடுகிறார்கள். ரஷ்யாவில் ஜார் மன்னருக்கு எதிரான போராட்டங்களின்போதுகூட `நரோத்னிக்குகள்’ என்கிற தீவிரவாதப் பிரிவினர் வர்க்கப் போராட்டத்துக்கு மாறாகத் தனி நபர் படுகொலைமூலம் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நம்பி வெடிகுண்டுகளின் மொழியில் பேசினார்கள். லெனினது சகோதரர் அலெச்சாண்டர் உல்யானோவ்கூட இந்த இயக்கத்தில் ஈடுபட்டு ஜார் மன்னரின்மீது வெடிகுண்டு வீசி - அதில் மன்னன் தப்பித்து - இறுதியில் தூக்கிலிடப்பட்டார்.

இம்மாதிரியான `இளம் பிள்ளைக் கோளாறுகளை’ லெனின் புரட்சிக்கு எதிரானதாகவே கருதினார். நரோத்னிக்குகளின் உணர்வுகள் நியாயமானவையாக இருக்கலாம். ஆனால், அவர்களுடைய வழிமுறைகள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்றார் லெனின். மாவோயிஸ்ட்டுகளும் சற்றொப்ப நரோத்னிக்குகளின் வாரிசுகளே. நக்சலைட்டுகள் குறித்து அண்ணாவும் இதே கருத்தை வெளிப்படுத்தினார். ஜனநாயக வழிமுறைகள் முற்றிலும் தடை செய்யப்படும்போது வெடிகுண்டுகளின் ஓசை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதனால் நேபாள மாவோயிஸ்ட்டுகளை மன்னர் ஞானேந்திராவின் பார்வையிலேயே நாமும் பார்க்க இயலாது. தீவிரவாதிகளை ஆட்சியாளர்களே வலிந்துருவாக்குகிறார்கள் என்பதை யாரும் மறுத்து விட முடியாது.

மன்னராட்சி நேபாள மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவரான சந்திரப் பிரகாஷ்கஜூரேல் மீது குறிவைத்தபோது அவர் வெளிநாடு செல்ல முயன்றார். அந்த வெளிநாட்டுப் பயணத்தின்போது சென்னை விமான நிலையத்தில் அவர் முறையான பாஸ்போர்ட் இல்லை என்று கைது செய்யப்பட்டார்.

நேபாளத்தில் என்ன நடக்கிறது என்பது இந்திய அரசுக்குத் தெரியும். மன்னராட்சியின் கொடுமையை இந்திய அரசும் எதிர்ப்பதாகக் கூறுகிறது. ஜனநாயகம் மலரவேண்டும் என்று இந்தியா சார்பில் கூறப்படுவதாகவும் நம்பப்படுகிறது. மன்னராட்சியின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடும் ஒருவர் முறையான பாஸ்போர்ட் வைத்திருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், அவர் யார் என்பது இந்திய அரசுக்குத் தெரியும்போது, அவரை அகதியாக ஏற்கலாம். அல்லது அவர் விரும்பும் நாட்டுக்குப் போகுமாறு அனுப்பி விடலாம். கைது செய்து சிறையில் வைத்து ‘பொடா’ கைதிபோல் நடத்துவது ஏன்? கம்யூனிஸ்ட் எதிரியான புத்த மதத்தலைவர் தலாய்லாமாவுக்கு வழங்கப்பட்ட இரக்கம், தாராளம், சலுகை எல்லாம் மாவோயிஸ்ட் தலைவர் சந்திரப் பிரகாசுக்கு மறுக்கப்பட்டது ஏன்?

தலாய்லாமா திபெத்தின் புத்தமதத் தலைவர் மட்டுமல்ல; அமெரிக்க ஏஜெண்ட்; கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர். அதனால் இங்கே அதிகார மையங்களில் உள்ள கம்யூனிச எதிர்ப்பாளர்களும், அதிகாரப் பிரியர்களும், ஜனநாயக வழிமுறைகளுக்கு எதிரானவர்களும், தலாய் லாமாவுக்கு ராஜ மரியாதை தருகிறார்கள். சந்திரப் பிரகாஷ் அப்படியில்லை. அவர், மன்னராட்சியை எதிர்ப்பவர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர். மன்னர் ஞானேந்திராவின் ஆட்சியை எதிர்த்துப் போராடும் ஒருவரை இந்தியா - அதாவது இந்திய ‘சூத்திரதாரிகள்’ அனுமதிக்க முடியுமா? ஞானேந்திரா யார்? காஞ்சி சங்கராச்சாரியின் பக்தர். சங்கராச்சாரிக்கு ஆன்மீக சரீர அவஸ்தைகள் ஏற்படும்போதெல்லாம் நேபாளத்துக்குத் தான் செல்வார். மன்னர் குடும்பமும் இங்கே வந்து சங்கர பூஜை செய்வது வழக்கம். உலகத்திலுள்ள ஒரே ‘இந்து நாடு’ நேபாளம்தான். அகன்ற பாரதக் கனவில் இருக்கும் அக்கிரகாரத்து மனிதர்களுக்கு ஞானேந்திரா ஒரு நம்பிக்கை நட்சத்திரம். அவரை எதிர்க்கும் சந்திரப் பிரகாஷை எப்படி ‘அகதியாக’ ஏற்க முடியும்? சந்திரப் பிரகாஷுக்கு இரக்கம் காட்டுவது சங்கராச்சாரியை எதிர்ப்பதாகிவிடாதா? இந்திய அதிகார மையம் குறிப்பறிந்து நடந்து கொள்கிறது.

அமெரிக்க விருப்பத்துக்கும், ஆரிய நலன்களுக்கும் எதிரான யாதொன்றையும் அனுமதிக்கக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கும் சூத்திரதாரிகளிடம் மனிதாபிமானத்தையும் நேர்மையுணர்ச்சியையும் எப்படி எதிர்பார்க்க முடியும்? தலாய்லாமாவுக்கு சலாம் போடுவோம்; சந்திரப் பிரகாஷுக்குத் தண்டனை தருவோம் என்பதுதான் ‘அவர்களின்’ நியாயம்!

மற்றுமொரு `நியாயமான’ அணுகுமுறையையும் பார்ப்போம். காஷ்மீரத்திலிருந்து பல ‘பண்டிதர்கள்’ வெளியேற நேர்ந்தது. உடனே இந்திய சூத்திரதாரிகளின் நெஞ்சம் பதறியது. முஸ்லீம் தீவிரவாதிகளால் இந்துக்களுக்கு ஆபத்து என்கிற ஆவேச உணர்ச்சி பற்றவைக்கப்பட்டது. இந்திய அரசும் பண்டிட்களைப் பராமரிக்க சகல உதவிகளையும் செய்கிறது. நாடு தழுவிய அளவில் ‘தனியார்’ அமைப்புகளும் நிதி வசூல் செய்கின்றன. காஷ்மீர் பண்டிட்டுகள் இங்கே ராஜ மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள்.

காஷ்மீரத்தைப் போலவே சிங்கள பௌத்த வெறியர்களால் ‘இந்துக்கள்’ தாக்கப்படுகிறார்கள். அரசு பயங்கரவாதமும் இந்துக்களுக்கு எதிராக ஏவிவிடப்படுகிறது. ஆயிரக்கணக்கான இந்துக்கள் இலங்கையிலிருந்து அகதிகளாய் இந்தியாவுக்கு ஓடி வருகிறார்கள். அவர்கள் நடுக்கடலிலேயே கைது செய்யப்படுகிறார்கள். இங்கே அகதி முகாமிலும் அவர்கள் கைதிகளைப் போலவே கண்காணிக்கப்படுகிறார்கள். ஈழத்து இந்துக்களுக்காகப் பரிந்து பேசுவதுகூட இங்கே தடை செய்யப்படுகிறது.

காஷ்மீர் இந்துக்கள் கண்ணின் மணிகளாகவும் இலங்கை இந்துக்கள் புண்ணின் வலிகளாகவும் உணரப்படுவது ஏன்? ஏனென்றால் காஷ்மீர் இந்துக்கள் பண்டிதர்கள். இலங்கை இந்துக்கள் தமிழர்கள். இதிலும் ஒரு வித்தியாசம். காஷ்மீர் ‘இந்துக்கள்’ சங்கராச்சாரியை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இலங்கை இந்துக்களோ சங்கரமடத்தைத் திருத்தலமாகவே வழிபடுகிறவர்கள். ஆனாலும், காஷ்மீர் இந்துக்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். இலங்கை இந்துக்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். சில இலங்கை இந்துக்கள் மருத்துவத்துக்காகக்கூட இந்திய மண்ணில் இறங்கக்கூடாது என்று திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

‘இந்து’ என்பதாலேயே ‘பண்டிதர்களும்’ ‘தமிழர்களும்’ ஒரே தரத்தவர் ஆகிடுவாரோ? ‘தேவர்’களும் ‘அசுரர்’களும் சரிநிகர் சமானமாகிடுவாரோ? சில நேரங்களில் முரண்பட்ட துருவங்கள் என்று கருதப்படும் பயங்கரவாத அரசுகளும், இந்த அரசுகளின் நேர்மையற்ற தன்மைகளை நிராகரிப்பவர்கள் என்று கருதப்படுகிறவர்களும் கைகுலுக்கிக் கட்டித் தழுவிக் கொள்வது உண்டு.

ஒரு வகையில் ‘மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு’வின் வாரிசு. மற்றொருபுறம் மார்க்சிய அறிவுஜீவி. இன்னொரு வகையில் சங்கராச்சாரியாரின் ‘காவல்பூனை’. இவ்வாறு பல முகங்களைக் கொண்டவர் ‘இந்து’ ராம். ‘புகழ்பெற்ற’ இந்துக் குடும்பத்தின் பிள்ளையான ராமுக்கு வெறிகொண்ட இலங்கை புத்தமத அரசு, இலங்கையின் உயர்ந்த விருதை அளித்துப் பாராட்டுகிறது. இந்துக்களை வேட்டையாடும் புத்த அரசின் விருதை ஏற்க மாட்டேன் என்று ராமும் மறுக்க வில்லை.

இந்து சங்கராச்சாரிக்கு ஒரு பாதிப்பு என்றால் தூங்க முடியவில்லை ராமுக்கு. இரவோடு இரவாக ஆந்திரா சென்று சங்கராச்சாரியைப் பத்திரமாகக் காஞ்சிக்கு அழைத்து வரவேண்டும் என்று ராமின் இரத்தம் துடிக்கிறது. ஆனால், இலங்கையில் பல ஆயிரம் இந்துக்கள் ரத்தக்காயங்களுடன் அலறுவது ராம், சோ, சுப்பிரமணியம் சாமி, சேஷன் போன்ற அக்கிரகாரத்து அடையாளச் சின்னங்களுக்குக் கேட்பதே இல்லை. ஏன் இந்த முரண்பாடு? உண்மையில், ‘இந்து’ என்பது தமிழர்களின் அடையாளம் அல்ல என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் முரண்பாடு அவர்களிடம் இல்லை. இலங்கை இந்துக்கள்மீது அவர்கள் பரிவு காட்டாமல் போகட்டும். ஆனால், வெறுப்புக் காட்டாமல் இருக்கக் கூடாதா?

Thalailamaஅது அவர்களால் முடியாது. ஏனென்றால் ‘அவர்கள்’ பயங்கரவாத எதிர்ப்பில் முன்னணியில் பிரண்ட்லைனில் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று அமெரிக்கா அறிவிக்கிறது!

அமெரிக்கா விடுதலைப் புலிகளைத்தானே பயங்கரவாத அமைப்பு என்கிறது; தமிழர்கள் அனைவருமே விடுதலைப் புலிகளா? தமிழர் பிரச்னையில் ஒதுங்குவது ஏன்? தமிழர்கள் அனைவருமே புலிகள் என்று அவர்களுக்கொரு `கிலி’. இந்தப் பயத்தில் இந்தியாவின் தேசிய மிருகமான ‘புலி’யையும் தடை செய்ய வேண்டும் என்றுகூட அவர்கள் கூச்சலிடலாம்.

சரி. அமெரிக்கா அறிவித்துள்ள பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் ஆர்.எஸ். எஸ்.சும் தானே இடம் பெற்றிருக்கிறது! ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் அதன் குட்டி குளுவான்களும் தடை செய்யப்பட வேண்டும் என்று எந்த அக்கிரகாரத்து அறிவுஜீவியும் குரல் எழுப்புவதில்லையே, ஏன்?

ஒரு குறிப்பெழுதுவோம்;

ராஜீவ் காந்தியை ஒரு இலங்கைத் தமிழச்சி கொன்றாள்.
இந்திரா காந்தியை ஒரு `பஞ்சாப்வாலா’ கொன்றான்.
மகாத்மா காந்தியை ஒரு பார்ப்பனன் கொன்றான்.
ஆகவே, தமிழர்கள், பஞ்சாபியர், பார்ப்பனர்கள் மூவினத்தாரையும் ‘குற்றப் பரம்பரையினர்’ என்று அறிவிக்கலாமா?

“கொலை செய்! போரிடு. அது சத்திரியனின் தர்மம். போரிலே வென்றால் பூமி கிடைக்கும். மரணமடைந்தால் சொர்க்கம் கிடைக்கும். எடு காண்டீபம்!’’ என்று போர் வெறியைத் தூண்டும் கீதாசிரியனை என்ன செய்யலாம்?

(தமிழ்ச் சான்றோர் பேரவை செய்திமடல் - ஜனவரி 2006ல் வெளியான கட்டுரை)

Pin It