(சென்னை தியாகராயர் நகரில் 5.4.2014 அன்று தமிழர் முன்னணி நடத்திய தமிழர் மாநாட்டில் தோழர் பெ.மணியரசன் ஆற்றிய உரையின் விரிவாக்கம் இக்கட்டுரை)

maniarasu-speech- 600தேர்தல் பரபரப்புகள் நடந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் தமிழின உரிமை சார்ந்து, ஆழ்ந்து விவாதிக்கக் கூடிய தமிழர் மாநாட்டைத் தமிழர் முன்னணி கூட்டியிருப்பது பாராட்டுக்குரியது. அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் செயப்பிரகாசு நாராயணன் அவர்கள் கடந்த ஒருமாத காலமாக இம் மாநாட்டிற்காகக் கடுமையாக உழைத்துள்ளார். அதே போல், தமிழர் முன்னணித் தோழர்களும் உழைத்துள்ளார்கள்.

இந்த மாநாட்டின் நோக்கத்தை எனக்குமுன் பேசிய தோழர் செயப்பிரகாசு நாராயணன் விளக்கியுள்ளார். இப்பொழுது மக்களவையில் தமிழர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இந்தி பேசுவோரும் மற்றவர்களும் பெரும்பான்மையாய் இருக்கிறார்கள். தேசிய இனங்களின் மதிப்பை மக்கள் தொகையைக் கொண்டு கணக்கிடக் கூடாது. எனவே எல்லா மாநிலங்களுக்கும் சமஎண்ணிக்கையில் மக்களவையில் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்றார்.

தில்லி மக்களவையில் வாக்களிக்கும் உரிமையுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 543. இதில், தமிழகத் தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 39. மேற்படி 543 உடன் ஒப்பிடும் போது, பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தால்தான் 39 என்பது தெரியும். தமிழகத்திற்கு அவ்வளவு குறைவான எண்ணிக்கை! காரணம் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. இந்தி மொழி பேசும் மாநிலங்கள் பத்துக்கு மேல் இருக்கின்றன. அவற்றின் மக்களவை உறுப்பினர்கள் சற்றொப்ப 225 பேர்.

இந்தி மட்டும் இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கக் கூடாது என்று தமிழக உறுப்பினர்கள் 39 பேரும் சேர்ந்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு போனால், நாம் படுதோல்வி அடைவோம்! நமக்கிருப் போர் 39 பேர் மட்டுமே! இந்தியைக் கல்வி மொழியாக, மாநில ஆட்சி மொழியாக, தங்களின் பொது மொழியாக ஏற்றுக் கொண்ட மாநிலங்கள் பத்துக்கு மேல்!

அவை நமது தீர்மானத்தை எதிர்க்கும். அவை மட்டுமல்ல, ஆரியக் கலப்பிற்கும் சமற்கிருதத் தலைமைக்கும் உள்ளான குசராத்தி, வங்காளித் தேசிய இனங்களின் பிரதிநிதிகளும் தமிழகத்தின் தீர்மானத்தை எதிர்ப்பர்.

பிற மாநிலங்களில் தமிழகத்தை ஆதரிப்போர் யார் இருக் கிறார்கள்? வடநாட்டுக்காரர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? எதுவுமில்லை. நம்மோடு உறவுடைய, நம்மிலிருந்து பிரிந்து சென்ற தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகளே நம்மைப் பகைவர்களாகக் கருதுகிறார்கள். அவர்களுக்கு நாம் ஒரு பாவமும் செய்ததில்லை. நிலைமை அப்படியிருக்க வடவர் கள் எப்படி நம்மை ஆதரிப்பார்கள்?

இந்த அவலத்தை எண்ணித்தான் - இதைப்போக்கிட எல்லா மாநிலங்களுக்கும் சம எண்ணிக் கையில் உறுப்பினர்கள் இருக்கும் படி வழி செய்ய வேண்டும் என்று தோழர் செயப்பிரகாசு கூறுகிறார். அதே நேரம் தமிழ்நாடு விடுதலையை நாங்கள் கைவிடவில்லை.

சிறைக்குள் இருக்கும் சிறைவாசிகள் விடுதலையைக் கோரினாலும், சிறைக்குள் இருக்கும்வரை சில சீர்திருத்தங்களைச் சிறையில் கோருகிறார்கள் அல்லவா? அது போல் தான் நாங்கள் கேட்கும் சமஎண்ணிக்கை சீர்திருத்தம் என்று செயப்பிரகாசு தெளிவுபடுத்தினார்.

செயப்பிரகாசு கூறுவது போல், சம எண்ணிக்கைத் திட்டம் வகுக்கப்பட்டாலும் தமிழர்கள் தில்லி நாடாளுமன்றத்தில் சிறு பான்மை யாகத்தான் இருப்பார்கள். எல்லா மாநிலத்திற்கும் சமமாகத் தலா பத்து உறுப்பினர்கள் என்று வைத்தால் இந்தி மாநிலங்களுக்கு நூறு பேருக்கு மேல் வருவார்கள். தமிழ கத்திற்குப் பத்துபேர் மட்டும்தான் வருவார்கள்.

தமிழர் எதிர்ப்பில் மற்ற மாநிலங்களும் அந்த இந்தி மாநிலங்களின் நூற்றுக்கு மேற்பட்டோருடன் சேர்ந்து கொள்வார்கள். எனவே, இத்திட்டமும் நமக்குப் பயன்தராது.

நாம் சிந்திக்க வேண்டியது, நாம் கேட்க வேண்டியது, ஏழு கோடியே இருபத்தோரு இலட்சம்பேர் கொண்ட தமிழ்நாட்டு மக்கள், எப்படிச் சிறுபான்மை மக்கள் ஆனார்கள் என்பது தான்!

பிரான்ஸ் மக்கள் தொகை 6,59,51,640. பிரஞ்சுக்காரர்கள் சிறு பான்மை இல்லை. ஆனால், 7,21,00,000 பேர் கொண்ட தமிழ் நாடு சிறுபான்மை ஆனது எப்படி?

6,33,95,574 பேர் கொண்ட பிரிட்டன் சிறுபான்மையில்லை; 7,21,00,000 பேர் கொண்ட தமிழ் நாடு சிறுபான்மை!

6,14,82,297 மக்கள் தொகை கொண்ட இத்தாலி நாட்டு மக்கள் சிறுபான்மை இல்லை.

ஆனால், 7,21,00,000 மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு சிறுபான்மை. 2,16,75,648 பேர் கொண்ட இலங்கை சிறுபான்மை நாடில்லை. அங்குள்ள தமிழர்களைக் கழித்து விட்டாலும் சிங்களர் பெரும்பான்மைதான்! ஆனால், 7,21,00,000 பேர் கொண்ட தமிழ்நாடு சிறுபான்மை!

நமக்கு சமரசம் பேசிய நார்வே, 47,22,71 பேர் மக்கள் தொகை கொண்டது. அந்த நார்வேஜியர்கள் சிறுபான்மை இல்லை. ஆனால், 7,21,00,000 பேர் கொண்ட தமிழ்நாடு சிறுபான்மை. மத்தியக் கிழக்கில் மற்ற நாடுகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் இசுரேலின் மக்கள் தொகை 77,07,042 பேர்.

சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை 79,96,026. இசுரேலியர்களோ, சுவிஸ்காரர்களோ சிறுபான்மையினர் இல்லை. ஐ.நா. போன்ற உலக அரங்குகளிலும் அவர்கள் பெரிய நாடுகளோடு சம உரிமை படைத்தவர்கள். ஆனால், இசுரேலைவிட, சுவிசைவிடப் பல மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு இந்தியாவில் சிறுபான்மை!

ஒரு கோடிக்கும் கீழ் மக்கள் தொகை கொண்ட நாடுகள் நூற் றுக்கும் மேல் இருக்கும்! அவை யெல்லாம் சிறுபான்மை இல்லை! நாம் ஏன் சிறுபான்மை ஆனோம்? நாம் செயற்கையாகச் சிறுபான்மை ஆக்கப்பட்டோம்!

நம்மோடு எந்தத் தொடர்பும் இல்லாத வட மாநிலங்களோடு - மற்ற மாநிலங்களோடு வெள்ளை ஏகாதிபத்தியம் நம்மை இணைத்த தால் நாம் சிறுபான்மை ஆனோம்! கொள்ளையடிக்க வந்தவன் வெள்ளையன்! அவன் தான் பிடித்த நாடு களையெல்லாம் - தனது நிர்வாக வசதிக்காக ஒன்றிணைத்தான். வெள்ளை ஏகாதிபத்தியம் பீரங்கிகளைப்பயன்படுத்தி, இந்தியா என்ற ஒரு நிர்வாக அமைப்பை முதல் முதலாக 18ஆம் நூற்றாண்டில் உரு வாக்கியது. அதற்கு முன் இந்தியா இல்லை.

வெள்ளை ஏகாதிபத்தியம் உருவாக்கிய இந்தியாவை அப்படியே கைமாற்றி வாங்கிக் கொண்டது தில்லி ஏகாதிபத்தியம்! இப் போது, “பெரும்பான்மைக்குக் கட்டுப்படு’’ என்று நம்மைப் பார்த்துக் கட்டளை இடுகிறது.

ஒரு வீட்டில் பத்துப்பேர் இருக்கிறார்கள். அந்த பத்துப் பேரும் கூடி, அந்தக் குடும்பத்தின் ஓர் ஆண்டு வரவு செலவைப் பேசி - நடப்பாண்டில் என்னென்ன வாங்கலாம், பிள்ளையைப் பொறியியல் கல்லூரியில் சேர்ப்பதா, ஐ.டி.ஐ.யில் சேர்ப்பதா என்று விவாதிக்கிறார்கள். ஒத்த முடிவுக்குவர முடியவில்லை எனில் அவர்களில் பெரும்பான்மையோர் ஏற்கும் திட்டத்தை அக்குடும்பத்தில் செயல்படுத்தலாம். அது ஞாயம்!

ஆனால், எதிர் வரிசையில் உள்ள பத்து வீட்டுக்காரர்களையும் இந்தக் குடும்பத்தினரோடு ஒன் றாய்ச் சேர்த்து - இவர்கள் பத்துபேர் எதிர் வரிசை வீட்டுக்காரர்கள் 100 பேர், ஆக மொத்தம் 110 பேர் ஒன்றாய்க் கூடி அதில் பெரும்பான்மையினர் விரும்புவதை இந்த ஒற்றை வீட்டில் செயல்படுத்துவது என்று முடிவெடுத்தால் எப்படி இருக்கும்? இதுதான் சனநாயகம் என்றால் எப்படி இருக்கும்? இதுதான் தில்லி நாடாளுமன்றம்!

இந்த நாடாளுமன்றத்தை நாம் எப்படி சனநாயகப்படுத்த முடியும்? முடியவே முடியாது. இந்தியாவிலேயே மிகக் கொடிய ஒடுக்கு முறைக் கருவி தில்லி நாடாளுமன்ற மக்களவைதான்! இந்த மக்களவைக்கு 39 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய நாம் வாக்களித்தால் என்ன பொருள்? இந்தக் கொடிய ஒடுக்குமுறையை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்று பொருள்.

இந்தியாவுக்கு அடிமைகளாக இருக்க நாம் ஒப்புக் கொள்கிறோம் என்பதை ஐந்தாண்டுக்கொரு முறை புதுப்பித்துக் கொள்ள நமது அடிமை முறியை நாமே முன்வந்து புதுப்பித்துக் கொள்ள நம்மைப் பயன்படுத்துவதுதான் நாடாளு மன்றத்தேர்தல்! லோக்கு சபை என்பது ஒடுக்கப்பட்ட இனங்களின் தூக்கு சபை ஆகும்.

இந்த மேடையில் இருக்கும் பெரும்பாலோர் கம்யூனிஸ்ட்டுகள். நான் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் டுக் கட்சியில் 15 ஆண்டுகள் செயல் பட்டவன். செயப்பிரகாசு, துரை. சிங்கவேல், சிதம்பரநாதன், பொழிலன், தியாகு உள்ளிட்ட பலரும் கம்யூனிஸ்ட்டுகள். மார்க்சிய - லெனினியம் வளர்ச்சியடைந்த தத்துவம்.

இந்தத் தத்துவத்தை ஏற்றுக் கொண்ட அனைத்திந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந் தோர்நாடாளுமன்றவாதச் சேற்றில் சிக்கிச் சீரழிந்து விட்டனர். ஆனால், அதே மார்க்சிய - லெனினியம் நம்மைப் போன்றவர்களுக்கு புரட்சிக்கான தத்துவமாக உந்துவிசை அளிக்கிறது. ஒருசாரார் ஆயு தந்தாங்கி புரட்சி செய்து கொண் டும் உள்ளார்கள். அதற்கான உள் ளாற்றல் மார்க்சிய லெனினியத்தில் இருக்கிறது. கால வளர்க்கிக்கேற்ப வளரும் தத்துவம் மார்க்சியம்.

தமிழ்த் தேச விடுதலை உள்ளிட்ட தேசிய இன விடுதலைப் போராட்டங்களுக்கு மார்க்சிய லெனினியம் உந்துவிசை அளிக்கிறது. அதே வேளை, தேசிய இன விடுதலைப் போராட்டம் குறித்த வரையறுப்பை மார்க்சிய லெனினியம் இன்னும் விரிவுபடுத்த வேண்டியுள்ளது. துல்லியப்படுத்த வேண்டியுள்ளது.

ஒடுக்கப்பட்ட தேசிய இனத் தின் விடுதலைப் போராட்டத்தைப் பாட்டாளி வர்க்கம் ஆதரிப்பது பற்றியே பெரும்பாலும் மார்க்சிய லெனினிய நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் விதிவிலக் கான சூழ்நிலைகளில் -அதாவது தனித்தன்மை வாய்ந்த குறிப்பிட்ட சூழலில் தேசிய இன விடுதலைப் போராட்டத்தைப் பாட்டாளி வர்க்கம் முன்னெடுக்கலாம் என்றும் லெனின் குறிப்பிடுகிறார்.

பிரித்தானிய ஏகாதிபத்தியத் தின் காலனிகளின் விடுதலைப் போராட்டத்தை பாட்டாளி வர்க் கம் முன்னெடுக்கலாம் என்றார்கள். ஆனால் அவ்வாறின்றி, பெரும் பான்மைத் தேசிய இனத்தால் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தை நிபந்தனைக்குட்பட்டே ஆதரிக்க வேண்டும் என்கிறார் லெனின். தமது இந்த நிலைபாட்டிற்கு ஆதரவாக அயர்லாந்து விடுதலைப்போராட்டத்தை ஆதரித்த காரல் மார்க்சின் கூற்றை முன்வைக்கிறார்.

“அதே போல், ஆங்கிலேயத் தொழிலாளர்களின் புரட்சிப் போராட்டத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிய வேண் டும் என்று 1869-இல் மார்க்ஸ் கோரினார்; ஆனாலும் ‘பிரிவுக்குப் பிறகு, ஒருவேளை கூட்டாட்சி ஏற்படலாம்’ என்று அத்துடன் கூறினார்’’ என்றார் லெனின். (தேசியப் பிரச்சினை பற்றி மார்க்சியமும் புரூதோனியமும் - லெனின் நூல் திரட்டு-1, தமிழ், பக்கம் 313, முன்னேற்றப் பதிப்பகம் - மாஸ்கோ - 1977)

தேசிய விடுதலைக் கோரிக்கை ஒரு சனநாயகக் கோரிக்கை என்பது தான் லெனின் வரையறுப்பு. இந்த சனநாயகக் கோரிக்கையை முதலாளியத்தை வீழ்த்தும் பாட்டாளிவர்க்க நிகரமை (சோசலிச)ப் புரட்சிக்கு உட்படுத்த வேண்டும் - கீழ்ப் படுத்த வேண்டும் என்கிறார். முதன்மைப்படுத்தப்பட்ட தனித்த கோரிக்கையாக தேசங்களின் தன்னுரிமையை (சுய நிர்ணயத்தை) பாட்டாளி வர்க்கம் முன்வைக்கக் கூடாது என்கிறார் லெனின்.

“இவ்விஷயத்தில் அரசியல் சனநாயகத்தின் கோரிக்கைகளில் ஒன்றை - குறிப்பாக தேசங்களின் சுய நிர்ணயத்தை -தனிப்பட்டதாக எடுத்துக் கொண்டு, மற்றவற்றிற்கு எதிரானதாக அதை வைப்பதுதத்துவார்த்த வழியில் அடிப்படையான தவறாகும்.

நடைமுறையில், பாட்டாளி வர்க்கமானது சனநாயகக் கோரிக்கைகளுக்கான குடியரசு ஒன்றை நிறுவவேண்டும் என்ற கோரிக்கையையும் விலக்கி விடாமல் - தனது போராட்டத்தை, முதலாளி வர்க்கத்தைக் கவிழ்ப்பதற்கான தனது புரட்சிப் போராட்டத்துக்குக் கீழ்ப்பட்டதாக வைத்துக் கொண்டால்தான் அது தனது சுதந்திர நிலையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்’’ -லெனின், மேற்படி நூல், பக்கம் 312.

பாட்டாளி வர்க்கம் தனது சுதந்திர நிலையை அதாவது தற்சார்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமெனில், வர்க்கப்புரட்சிக்கு உட்பட்ட -கீழ்ப்பட்ட சனநாயகக் கோரிக்கையாக சுயநிர்ணயத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

இக்கட்டுரையை லெனின் 1916 சனவரி பிப்ரவரியில் எழுதினார் என்று மேற்படி நூலில் பின்குறிப்பாகக் கூறப்பட்டுள்ளது.

பாட்டாளி வர்க்க சர்வதேசியம் -பன்னாட்டுப் பாட்டாளி வர்க்க ஒற்றுமை - உலகம் முழுவதும் நிகரமைச் சமூக அமைப்பு விரைவில் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு - ஆகிய காரணங்களைக் கொண்டு மார்க்சும் லெனினும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலையை - தனித்தன்மை வாய்ந்த முதன்மைக் கோரிக்கையாகப் பார்க்காமல்- சமத்துவ அடிப்படையில் - தன்னுரிமையுடன் பிற தேசிய இனங்களோடு சேர்ந்திருக்கும் கோரிக்கை யாகக் குறைத்தனர்.

அதாவது, பிரிந்து போய் விடுவதை ஆதரிக்காமல் - சேர்ந்திருக்கும் நிபந்தனையுடன் அல்லது எதிர்பார்ப்புடன் தன்னுரிமையைப் (Self determination) பயன்படுத்துவதை லெனின் ஆதரித்தார்.

சமூக வளர்ச்சியில் வர்க்கம்- வர்க்க முரண்பாடுகள் -ஆற்றிய பங்கினை ஆராய்ந்த அளவிற்கு, தேசிய இனம் - தேசியம் ஆற்றிய பங்கினை மார்க்ஸ் - லெனின் உள்ளிட்ட மார்க்சிய ஆசான்கள் ஆய்வு செய்யவில்லை. அதற்கான அவகாசமும் சூழலும் அவர்களுக்கு அமையவில்லை. தனித்தனிப் பழங்குடிகளாகவும், மரபினக் குழுக்களாகவும் இருந்த சமூகப் பிரிவுகளை ஒருங்கிணைத்து ஒரு பெரும் நிலப்பரப்பில் ஒரு பெரும் மக்கள் கூட்டத்தை தாங்கள் அனைவரும் ஓர் இனத்தார் என்ற உளவியல் உருவாக்கத்தை உண்டாக்கியவை மொழி வளர்ச்சியும், தேசிய இன வளர்ச்சியும் ஆகும். இதுவும் சமூக வளர்ச்சியே.

தேசிய இன அடிப்படையில் சமூகப் புரட்சிகளும் ஏற்பட்டன. இவ்வாறான தேசிய இன வளர்ச்சி உற்பத்தி ஆற்றல்களின் வளர்ச்சியின் ஊடாக ஏற்பட்டது என்பதில் மாற்றமில்லை. அதே போல் தேசிய இன வளர்ச்சி தேச உருவாக்கம் ஆகியவை உற்பத்தி ஆற்றல்களின் வளர்ச்சியைத் தூண்டின என்பதும் உண்மையே. தேசிய இன வளர்ச்சி - உற்பத்தி ஆற்றல் வளர்ச்சியின், ஒரு சிறுபிரிவு அன்று. சமூக வளர்ச்சியில் தேசிய இனம் தனித் தன்மையுள்ள பாத்திரம் வகிக்கிறது.

பிரஞ்சுப்புரட்சி (1879), ஒரு வகையில் வர்க்கப் புரட்சி, மறுவகையில் தேசியப்புரட்சி! அது ஒரு சன நாயகப் புரட்சி!

வர்க்கப் புரட்சி - வர்க்கப் புரட்சி என்ற பெயரில் நடப்ப தில்லை; முதலாளிகள் ஒரு பக்கமாகவும் பாட்டாளிகள் இன்னொரு பக்கமாகவும் நின்று போராடுவதல்ல வர்க்கப்புரட்சி; வெவ்வேறு உடனடிக் காரணங்களைக் கொண்டு எழும் புரட்சிகள் ஊடாக வர்க்கநோக்கங்கள் ஈடேறுகின்றன என்று “என்ன செய்ய வேண்டும்’’ என்ற நூலில் லெனின் விளக்கப்படுத்தினார்.

ரசியப் புரட்சியானது நிகரமைப் புரட்சியின் உள்ளடக்கம் பெற்றிருந்தாலும், அதற்கான உடனடிக் காரணம் நிகரமை அன்று. முதலாம் உலகப் போரிலிருந்து ரசியாவை விலக்கிக் கொள்வது, மக்களுக்கு அமைதி, உணவு, உழவர்களுக்கு நிலம், மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்தல் முதலியவையே ரசியப் புரட்சியின் உடனடிக் காரணங்கள். அதன் உள்ளடக்கமாக வர்க்கப்புரட்சி இருந்தது.

சீனப் புரட்சியின் உடனடிக் காரணம், ஏகாதிபத்தியம் - ஏகாதி பத்தியக் கங்காணி ஆட்சி ஆகிய வற்றிலிருந்து சீன தேசத்திற்கு அரசியல் விடுதலை பெறுவதுதான். அதன் ஊடாகத்தான் மக்கள் சனநாயகவர்க்க நோக்கம் ஈடேறியது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு பெற்ற சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி சனநாயகத்தை நிலை நிறுத்துவதுதான் கியூபப் புரட்சியின் உடனடிக் காரணமாக இருந்தது. வியட்நாம் புரட்சி, தேச விடுதலைப் புரட்சி ஆகும்.

கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கிய புரட்சிகள் இவ்வாறே நடந்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லாத பிடல்காஸ்ட்ரோ, கியூபப் புரட்சிக்குத் தலைமை தாங்கினர் புரட்சியின் வெற்றிக்குப் பின் கம்யூனிஸ்ட் ஆனார்.

கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யில் இது வரை நடந்துள்ள புரட்சிகள் ஒரு தேசத்தின் - ஒரு தேசிய இனத்தின் புரட்சியாகவே நடந்துள்ளன. ரசியப் புரட்சி - முகாமையாக ரசிய இனத்தை மையங்கொண்டே நடந்தது. பல்வேறு தேசிய இனங்கள் சேர்ந்து நடந்த ஒரு வர்க்கப் புரட்சியை இதுவரை உலகம் காணவில்லை.

ஒரு தேசிய இனத்தின் தாயகமான தேசம், சமூக இருப்பின் ஓர் அடிப்படை அலகாகும். எனவே சமூகப் புரட்சியின் அடிப்படை அலகாகத் தேசிய இனமும் - அதன் தாயகமான தேசமும் இருக்கின்றன. உழைப்பு, உபரிமதிப்பு, சுரண்டல் என்பவை அடிப்படையில் ஒரு விதியின் கீழ் நடந்தாலும் அவை தாங்கி வரும் வடிவங்கள் பற்பல வாக இருக்கின்றன.

காலனி ஆட்சி, மன்னராட்சி, இராணுவ சர்வாதி காரம், பாசிசம், நாடாளுமன்ற சனநாயகம் எனப் பலவடிவ அரசுகளின் கீழ் மேற்படிச் சுரண்டல் நடக்கிறது. இந்தியாவில் வர்ணம் - சாதி என்ற வடிவத்திலும் சுரண்டல் நடக்கிறது. வர்க்கத்திற்கப்பால், ஒரு சமூக மக்களின் வரலாறு- மொழி - பண்பாடு - உளவியல் போன்ற வர்க்கமல்லாத கூறுகளும் சமூகப் புரட்சியில் முகாமையான பங்கு வகிக்கின்றன.

புதிய காலத்தில், சனநாயக சமூகத்தின் அடிப்படை அலகு தேசம் என்பதை முதலாளிய அறிஞர்கள் கண்டறிந்தார்கள். 17-18 ஆம் நூற்றாண்டில் தேச அரசு (Nation state) பற்றியும் அதன் இறையாண்மை பற்றியும் விரிவாக விவாதித்தார்கள். தேசம் என்பதற்கான வரையறைகளைக் கோடிட்டார்கள். இது பற்றி லெனின்பின் வருமாறு கூறுகிறார்:

“தேசங்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை மட்டுமின்றி, நமது குறைந்த பட்ச சனநாயக வேலைத் திட்டத்தின் எல்லா ( அழுத்தம் லெனின்) அம்சங்களையும் கூடச் சிறு முதலாளி வர்க்கத்தினர் நீண்ட காலத்திற்கு முன்பே (அழுத்தம் லெனின்), பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளிலேயே முன் வைத்திருக்கிறார்கள்.

மேலும் கற்பனா முறையில் தான் இன்னமும் அவற்றை எல்லாம் முன்வைத்து வருகிறார்கள்; ஏனென்றால் வர்க்கப் போராட்டத்தையும் சனநாயகத் தின் கீழ் அது தீவிரமடைதலையும் அவர்கள் காணத் தவறுகிறார்கள்’’ லெனின், மேற்படி நூல், பக்கம்: 308, 309

இங்கு நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது, தேசம் பற்றிய வரையறை, தேசங்களின் தன்னுரிமை (சுயநிர்ணயம்) போன்ற வற்றை சிறு முதலாளிவர்க்க அறிஞர்கள் பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டிலேயே கண்டறிந்தார்கள் என்பதுதான். மார்க்சிய அறிஞர்களின் காலம் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளாகும். பாட்டாளி வர்க்கப் புரட்சி நோக்கத்துடன், தேசங்களின் தன்னுரிமையை, நிகரமையுடன் மார்க்சு, லெனின் ஆகியோர் இணைத்தார்கள்.

ஆனால் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அடிப்படைச் சமூக அலகு ஒரு தேசிய இனம், ஒரு தேசம் என்று அவர்கள் வரையறுக் கவில்லை. புரட்சியின் சமூகக் காரணிகளை சமூக அறிவியல் நோக்கில் விளக்கி மெய்ப்பித்த அவர்கள் -அப்புரட்சி நடப்பதற்கான “இடம்’’ பற்றி வரையறுத்துக் கூறவில்லை. எந்தச் செயலும் நடைபெற இடமும் காலமும் இன்றியமையா முதன்மைத் தேவையாகும். இதைத் தொல்காப்பியர் முதற்பொருள் இடமும் காலமும் என்பார். இன்றைய அறிவியல் சமூகம் காலமும் இடமும் (Time and Space) என்று கூறும்.

நிகரமைப் புரட்சி நடப்பதற்கான இடம் ஒரு தேசம் என்று மார்க்சு எங்கெல்ஸ் ஆகியோரால் வரையறுக்கப்படாததால் ட்ராட்ஸ்கி உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் நிகரமைப் புரட்சி நடைபெற வேண்டும் என்றார். லெனின் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறலாம் என்றார்.

நிகரமைப் புரட்சி நடைபெறுவதற்கான அடிப்படை அலகு ஒரு தேசிய இனமும் அதன் தாயகமும் ஆகும். தனது சொந்தத் தேசத்தை நிறுவிக் கொள்ளாத- அதன் இறையாண்மையை நிலை நாட்டிக் கொள்ளாத பாட்டாளி வர்க்கம் தனக்கான நிகரமைப் புரட்சியை நடத்தும் ஆற்றல் பெற்றிருக்காது என்பதே வரலாற்றுண்மை.

ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியாத மாணவன் பத்தாம் வகுப்புக்குப் போக முடியாது என்பது போல், தாயக தேசத்தை அமைத்துக் கொள்ளாத பாட்டாளி வர்க்கம் நிகரமைப் புரட்சி நடத்த முடியாது.

தனது தேசம் அடிமைப் பட்டி ருப்பதை அறிந்து கொள்ள முடியாத பாட்டாளி வர்க்கம் நிகரமைத் தத்துவத்தை எந்த அளவு உள் வாங்கிக் கொள்ளும்?

மார்க்சிய ஆசான்கள் வரலாற்றின் வளர்ச்சி -வர்க்கப் போராட்டங்களின் வளர்ச்சி என்றார்கள். நாம் அதை மறுக்கவில்லை; வர்க்கப் போராட்டம் மட்டுமின்றி மொழி, தேசிய இன உருவாக்கம், தேசிய இனப் போராட்டங்கள், தேச விடுதலைப் போராட்டங்கள் போன்றவையும் சமூக வரலாற்றின் வளர்ச்சிக்குக் காரணிகளாக அமைந்தன என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதே நமது நிலைபாடு. இதற்கான வரலாற்றுச் சான்றுகள் ஏராளமாக உள்ளன.

தேசம் - முதலாளிகளுக்கும் பாட்டாளிகளுக்கும் பொதுவானது. அதில் யார் ஆள்கிறார்கள் என் பதைத் பொறுத்து, சமூக அமைப் பானது உள்ளடக்கமும் வடிவமும் பெறுகிறது. தேசம் என்றால் அது முதலாளியச் சிந்தனை என்று கருதக் கூடாது.

தேச விடுதலைப் போராட்டம், நிகரமையின் முன்னோடியாக இருக்கலாம் அல்லது முதலாளிய சனநாயகத்தின் வடிவமாக இருக்கலாம். அது அப்புரட்சியைத் தலைமை தாங்கி நடத்தும் ஆற்றல்களைப் பொறுத்தது.

நமது தமிழ்நாடு இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருக்கிறது. தமிழ்த் தேச விடுதலைப் போராட்டமே இன்று இங்கு புரட்சிகர ஆற்றல்களின் நிகழ்ச்சி நிரலில் முதலிடம் பெற வேண்டும். தமிழ்த் தேச விடுதலைப் புரட்சியின் ஊடாகவே இங்கு மக்கள் சனநாயகத் திட்டங்கள், சாதி ஒடுக்குமுறை ஒழிப்பு, பெண் விடுதலை, தமிழ்மொழி ஆட்சி மொழியாதல், கல்வி மொழியாதல் உள்ளிட்ட சனநாயகத் திட்டங்கள் செயல்படும்.

இந்தியப் புரட்சியின் வெற்றியில் தேசிய இனங்கள் தன்னுரிமை பெறும் என்று ஒரு சார் மார்க்சிய லெனியர்கள் கூறுகிறார்கள். அனைத்திந்தியப் புரட்சி என்பதே நடக்காது. ஏனெனில் புரட்சியின் அடிப்படை அலகு ஒரு தேசிய இனத் தாயகம்தான்! பல தேசிய இனங்களின் தாயகங்கள் அல்ல.

அனைத்திந்தியப் புரட்சிக்குமுன் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுரிமைகிடைக்க வேண்டும்; தன்னுரிமை பெற்ற தேசிய இனங்கள் சமத்துவ அடிப்படையில் இந்தியக் கூட்டரசை உருவாக்கிக் கொள்ளும் என்று ஒரு சார் மார்க்சிய லெனினியர் கூறுகிறார்கள். இதுவும் நடைமுறைக்கு வராது. விடுதலை பெற்ற தேசிய இனங்கள் மீண்டும் தங்கள்கழுத்தில் இந்தியா என்ற நுகத்தடியைச் சுமக்க முன்வரா!

ஒரு தேசத்தின் விடுதலைக்கு எந்த நிபந்தனையும் போடக்கூடாது என்பதே நமது நிலைபாடு! அந்தந் தத் தேசிய இன மக்களும் தேச மக்களும் தங்கள் தங்களின் சமூக அமைப்பை உருவாக்கிக் கொள்ள முழு உரிமை படைத்தவர்கள் ஆவர்.

தேசிய இனங்களின் கூட்டரசு என்பது தோல்வியடைந்த கோட்பாடு! எழுபத்திரண்டு ஆண்டுகள் நிகரமைச் சமூகம் நிலவிய சோவியத் ஒன்றியத்தில் சேர்ந்திருந்த தேசிய இனங்கள் 1991 -இல் பிரிந்து பதினைந்து தனித்தனித் தேசங்களை நிறுவிக்கொண்டன. அதே போல் யூகோஸ்லாவியா, செக்கஸ் லாவிய குடியரசுகள் தனியே பிரிந்து விட்டன. இது நிகரமைச் சமூக அமைப்பில் நிகழ்ந்த பிரிவினைகள்!

உலகில் மிகவும் வளர்ச்சி யடைந்த முதலாளியத்தையும், முதலாளிய சனநாயகத்தையும் கொண்டுள்ள பிரித்தானியாவில் ஸ்காட்லாந்து தேசிய இனம் தனி நாடு கேட்கிறது. அதற்கான கருத்து வாக்கெடுப்பு இவ்வாண்டின் இறுதியில் நடைபெறவுள்ளது. வளர்ச்சியடைந்த முதலாளிய நாடான கனடாவிலிருந்து பிரெஞ்சு கியூபெக் பிரிந்து போக விரும்பி கருத்து வாக்கெடுப்பு நடந்தது. ஒரு விழுக்காடு வாக்கு குறைவாக வாங்கி கியூபெக் பிரிவினை தள்ளி வைக்கப் பட்டுள்ளது. கியூபெக் தனிநாட்டுக் கோரிக்கை அப்படியே உள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் (யு.எஸ்.ஏ) 1781 லிருந்து கூட்டர சாகத் தொடர்கிறதே என்று சிலர் வாதிடக் கூடும். அந்நாட்டில் ஆங்கிலேயத் தேசிய இனமே மிகப்பெரும் பான்மையுடன் உள்ளது. ஐம்பது மாநிலங்களிலும் ஆங்கி லமே ஆட்சி மொழி, கல்விமொழி எனவே யு.எஸ்.ஏ. பல்வேறு தேசிய இனங்களின் கூட்டரசு அல்ல.

பெரும்பான்மையாக ஆங்கிலத் தேசிய இனமும், தேசிய இனம் என்று சொல்லிக் கொள்ள முடியாத சிறுபான்மை மொழியினங்களும் அங்கு இருப்பதால் அக் கூட்டரசு நீடிக்கிறது. தொடக் கத்தில் தனித்தனி நாடுகளாக இருந்த 13 நாடுகள் இணைந்து யு.எஸ்.ஏ கூட்டரசை உருவாக்கின. அவை பெரிதும் ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தன. அதனால் அக்கூட்டரசு தொடர் கிறது.

ஒரே ஜெர்மன் மொழி பேசும் ஜெர்மனியில் கூட்டரசு (Federation) உள்ளது. வரலாற்றில் நிலவிய தனித்தனி மன்னராட்சிகளை இணைத்து உருவாக்கியதால் ஒரே ஜெர்மன் மொழிபேசும் ஒரே தேசிய இனத்தின் தாயகமான ஜெர்மனியில் சனநாயக உணர்வுடன் கூட்டரசு நடத்தி வருகிறார்கள். தமிழ் நாடு விடுதலை பெற்றால் தமிழ் நாட்டிற்குள் நாமும் கூட்டரசு முறையைச் செயல்படுத்தலாம்.

ஆனால் இந்தியாவைக் கூட்டரசாக மாற்றிச் செயல்படுத்தலாம் என்பது கானல் நீரில் தாகம் தணிக்க முயலும் செயல். தமிழ்த் தேச விடுதலை போல், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட பலதேசங்கள் விடுதலை பெற வேண்டியுள்ளது.

Pin It