electric board 400 கடந்த 31.03.2014 அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் த.தே.பொ.க. உள்ளிட்ட எட்டு மக்கள் நலஅமைப்புகள், தமிழ்நாடு மின்வாரியத் தில் நடந்துள்ள அதிர்ச்சி தரும் நிர்வாக முறைகேடுகளை எடுத்துக்காட்டினார்கள் 24,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது அந்த முறைகேடு.

அத்துடன் மேட்டூர் 600 மெகாவாட் நிலையம் என்ற புதிய விரிவாக்க நிலையம் உற்பத்தியைத் தொடங்காமல் முடங்கிக்கிடப் பதையும், அதனால் தனியாரிடம் 1 யூனிட் 10ரூபாய் 91 காசுக்கு கொள்முதல் செய்யப்படுவதில் நடந்த முறை கேடுகளையும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.

இக் கூட்டத்திற்குப் பத்து நாட்களுக்குப் பிறகு, தமிழக முதலமைச்சர் தேர்தல் கூட்டங்களில் பேசும் மின்னுற்பத்தியில் “சதி’’ நடந்துள்ளது என்று குற்றம் சாட்டிப் பேசினார். இந்திய அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிறுவனங்கள் திட்டமிட்டு உற்பத்தி முடக்கப்படுவதாக கூறினார்.

தமிழ்நாடு மின் வாரியத்தில் என்ன முறைகேடுகள் நடக்கின்றன என்பது பற்றி நிறைய சொல்ல முடியும். ஆனால் இதில் பல்வேறு முறைகேடுகளைப் பற்றி சொல்ல முடியும் என்றாளும், வெகு எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய “மேட்டூர்’’ 600 மெகாவாட் நிலையம் பற்றிய பின்னணி குறித்தும் இதில் நடந்துள்ள குழறு படிகள் குறித்துக்கும் மட்டும் இங்கே முன்வைக்கிறோம்.

இதுவும்யாருக்கும் தெரியாமல் நடந்த சதியா? என்பதை மின் வாரியமும் அரசும் விளக்க வேண்டும்.

மேட்டூர் 600 மெகாவாட் நிலையத்தை வடிவமைத்து நிறுவி, இயக்கித் தரும் ஒப்பந்தம் பி.ஜி.ஆர் மின் உற்பத்தி நிறுவனம் (BGR Energy Ltd) என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மதிப்பு 3550 கோடி ரூபாயாகும்.

இந்திய மின் இயந்திரங்கள் உற்பத்தி நிறுவனமான BHEL நிறுவனத்தின் போட்டியை மீறி எந்த இயந்திர உற்பத்தியும் செய்யாத BGRக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அனல்மின் நிலையங்களின் நிறுவனப் பணி இயந்திர உற்பத்தியாளர்களை உள்ளடக்கிய கூட்டுநிறுவனம் அல்லது உற்பத்தியாளர்களுக்கே வழங்குவது தான் நடைமுறை. 

ஏனெனில் அனல்மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகளுக்கு இந்த வடிவமைப்பாளர்களே பெரும் பகுதி தீர்வுகாண முடியும். அத்துடன் திட்டக் காலத்தில் செல வானதை விட பழுது நீக்கக் கால நீடிப்பதால் ஆகும் செலவு, பொருளாதார ரீதியிலும், சமுதாயரீதியிலும், பெரிய இழப்பைக் கொண்டு வந்து சேர்க்கும்.

இந்த ஒப்பந்தப் புள்ளியில் பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட முன்னுரிமை இத்துடன் நிற்கவில்லை. குறித்த காலத்திற்கு முன்பாகவே பணியை முடிப்பதால் ஊக்கத் தொகை வழங்கப்படுவதா கவும் கூறப்படுகிறது. ஆனால் உண்மைநிலை என்ன?

பி.ஜி. ஆருக்கு இந்த ஒப்பந்தப் புள்ளி ஒப்பந்தம் வழங்கப்பட்ட காலகட்டத்தில் உற்பத்திச் செலவு 1 மெகா வாட்டுக்கு 35.85 கோடி ரூபாய் என்று மட்டுமே இருந்தது என சொல்லப்படுகிறது. ஆனால் பி.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தப் புள்ளி ஒரு மெகவாட் உற்பத்திக்கு 35.85 கோடி ரூபாய் என தாராளமாக நிர்ணயக் கப்பட்டு வழங்கப் பட்டுள்ளது.

உண்மையில் மேட்டூர் 600 மெகாவாட் நிலையம் என்பது முற்றிலும் புதிதாக நிறுவப்படும் மின் உற்பத்தி நிலையம் அல்ல. ஏற்கெனவே இயங்கிவரும் மேட்டூர் அனல் மின் நிலையத்தின் விரிவாக்க நிலையமே. (4-x210=840 மெகாவாட்) புதிதாக நிறுவப்படும் நிலையத்திற்கான கரிகையாளும் பகுதி, சாம்பல் கையாளும் பகுதி போன்றவைகளில் பணி குறை வாகவே இருக்கும். விரிவாக்கத் திட்டம் குறைந்த காலமே பிடிக்கும்.

ஜூன் 2008ஆம் ஆண்டில் பணி தொடங்கப்பட்ட இந்த நிலையம், செப்டம்பர் 2011இல் முழு உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தக் காலம் ஆகிய 39 மாதத்திற்கு பிறகு ஆகும் காலதாமதத்திற்கு ஒவ்வொரு மாதத்திற்கும் பி.ஜி.ஆர் நிறுவனம் மின்வாரியத்திற்கு மாதத்திற்கு ரூ. 107 கோடிதர வேண்டும் என்பதும் ஒப்பந்த நிபந்தனையாகும்.

இந்த ஏப்ரல் 2014 வுடன் ஒப்பந்த காலம் முடிந்து 31 மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் உற்பத்தி தொடங்கிய பாடில்லை. 4.5.2012இல் சோதனை ஓட்டத் தினைத் தொடங்கிய நிலையம், இன்னும் “சோதனை’’ யாகவே உள்ளது.

இன்று வரை மின்வாரியம் தான் தனது மூக்கால் இந்தத் திட்டத்திற்குச் செலவழித்து வருகி றது. இந்த ஒப்பந்தம் பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கோரிக்கைகளை, மின்வாரியம், இது “தொழில் இரகசியம்’’ என்றும் மறுதலித்துள்ளது. இந்தத் தொழில் இரகசியம் என்ன என்பது தான் மக்களுக்குத் தெரிய வேண்டியுள்ளது.

BGR நிறுவனம் பற்றி நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். அனல்மின் நிலையங்கள் நிறுவும் போது, அமைக்கப்படும், துணைநிலையங்கள், புகைப்போக்கி (சிம்ணி) எண்ணெய்கையாளும் பகுதி கொதிகலனுக்கான நீர் தயாரித்தல், போன்றவைகள் (Balanace of plant) என்பனவற்றை அமைத்துத் தரும் துணை ஒப்பந்த நிறுவனமான GEA என்ற நிறுவனம் தான் இன்றைய BGR ஆகும்.

இது அமைத்த முதல் மின்உற்பத்தி நிலையமும் தமிழ்நாடு மின்வாரியத்தினுடையதே. இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள வழுதூர் 92 மெகாவாட் திறனுடைய எரிக்காற்று மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகுக்கான ஒப்பந்தம் தான் முதலில் BGRக்கு வழங்கப்பட்டது.

2001இல் வழங்கப்பட்ட இந்த ஒப்பந்தபடி, 18 மாதக் காலத்திற்குள் உற்பத்தியைத் வாங்கியிருக்க வேண் டும். 2007நவம்பரில் 62 மெகா வாட்டும் அடுத்து 2008 ஏப்ரலில் 92 மெகாவாட்டும் உற்பத்தி செய்ய தொடங்கியிருக்க வேண்டும். எரிக்காற்று நிலையங்கள், அனல் மின் நிலையங்களுடன் ஒப்பிடும் பொழுது எளிய வடிவமைப்புடையவை.

ஆனால், போதிய அனுபவம் ஏதுமில்லாத ஒப்பந்தத்தாராகிய BGR, நிறுவனம் மின் உற்பத்தி நிலையத்தை வடிவமைக்கவும், அதன் பிரச்சனைகளைச் சந்திக்கவும் முடியவில்லை. போதக் குறைக்கு இத்தாலிய நிறுவனமான ONSALDOவிடம் இந்நிறுவனம் இயந்திரங்கள் வாங்கியிருந்தது. ஒப்பந்தப்படி உற்பத்தி நடைபெறவில்லை.

தொடர்ந்து எந்த அக்கறையும் BGR காட்டாத நிலையில், 7.1.2009 அன்று அன்றைய முதல்வர் அவர்களுக்கு இதுகுறித்து கடிதம் எழுதினோம். வழுதூர் போன்றே மேட்டூர் நிலையத்திற்கு வழங்கப் பட்ட ஒப்பந்தமும், இழுபறியாகும் என்றும் தமிழகம், மிகப்பெரிய மின்நெருக்கடியில் சிக்கிக்கொள்ளக் கூடும் என்பதையும் அதில் தெரிவித்திருந்தோம்.

14.06.2009 இல் உற்பத்தியைத் தொடங்கிய 92 மெகாவாட் நிலையம், 8.1.2010 அன்று படுமோச மாகப் பழுதடைந்தது. இது உற்பத்தி தொடங்கிய ஓர் ஆண்டு காலத்திற்குள் நடந்துள்ளது. இந்த ஓர் ஆண்டுகாலம் என்பது உத்திர வாத (வாரண்டி) காலமாகும். இந்த காலத்தில் உண்டாகும் பழுதுக்கு ஒப்பந்தத் தாரரே பொறுப்பேற்க வேண்டும்.

BGR எந்தக் கவலையும் கொள்ளவில்லை. அதுதான் இந் நிலையத்திற்கான முக்கியப்பாக மானடர்பைன் இயந்திரத்தை இத்தாலியிருந்து வருவித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

ஆனால் மின்வாரியம் ஒப்பந்த நிபந்தனையின் படியான தன் தரப்புக் கடமைகளை மட்டுமே செய்தது. பழுதடைந்த காலத்தில் ஒப்பந்தம் படி எரிக்காற்று பயன்படுத்த முடியாமல் போனதால் அதற்கான பணத்தை வாரியம் கட்டியாக வேண்டும். அதன் படி கட்டியது.

இவ்வாறாக நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பையும் வாரியம் சந்திக்க வேண்டி வந்தது.

8.1.2010இல் பழுதடைந்த இந்த நிலையம் மீண்டும் 11.5.2011 அன்று 485 நாட்களுக்குப் பிறகே மீண்டும் இயங்கத் தொடங்கியது. 485 நாட்களுக்கும் 485 கோடியை மின் வாரியம் இழந்து மட்டுமல்ல. பழுதைச் செப்பனிடவும் ரூ. 100 கோடியளவுக்கு செலவு செய்தது. இந்த நிதி சுமையேற்க வேண்டிய BGR நிறுவனமோ எந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொள்ளவில்லை.

மீண்டும் இந்த நிலையம் ஜூன் 2012இல் பழுதடைந்து உற்பத்தியின்றிப் போனது. இப்பொழுது மின்வாரியமே இதைப் பற்றி கவலை கொள்ளவில்லை. அக்டோபர் 2012 இல் நல்ல மழைக் காலத்திலேயே மின்வெட்டினால் தமிழகம் மூச்சுதிணறியது இது குறித்து, வலைத்தளங்களில் செய்தி வெளியிட்டோம், ஒரு பதிலுரையையும் அனுப்பியது.

அதில் மேட்டூர் நிலையம், எப்ரல் 2013லும், வடசென்னை நிலையங்கள் மே 2013 லும் உற்பத்தி தொடங்கப் போவதாகக் கூறியிருந்தது.

வழுதூர் நிலையம் செப்பனிடப் பட்டு உற்பத்தி சனவரி 2013இல் தொடங்கியதாகவும் தெரிவித்தது. எனினும் 92 மெகாவாட்டுக்குப் பதிலாக 67 மெகாவாட் உற்பத்தி செய்து. அதிர்வு காரணமாக முழு உற்பத்தியை இன்று வரை இந் நிலையம் எட்ட முடியவில்லை.

இந்நிலைதான் இன்று மேட்டூரிலும் நடக்கிறது 31. 10. 2012 25.10.2013 இல் முதல்வர் சட்ட மன்றத்தில் இந்நிலையம் உற்பத்தி தொடங்கப் போவதாகவும் தமிழகம்மிகுமின் மாநிலமாகப் போவதாகவும் அறிவித்தார்கள். அது மட்டு மல்ல 4.5.2012இல் சோதனை ஓட்டத்தைத் தொடங்கிய இந் நிலையம், 12.10.13 அன்று முழு உற்பத்தி தொடங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் 4.2.2014இல் பழுதடைந்த நிலையம் இன்று வரை உற்பத்தியைத் தொடங்கவே வில்லை ஏன் தெரியுமா?

மேட்டூரில் நிறுவப்படும் இயந்திரங்கள் சீனாவில் தயாரிக்கப் பட்ட DANGFENG பெயருடைய தாகும். இதே நிறுவனத்தின் இயந்திரங்கள், மேற்குவங்கம் துர்காபூரிலும், சாகார்கிரியிலும் நிறுவப்பட்டு உத்திரவாத காலத்திற்குள்ளாகவே பழுது அடைந்துள்ளன. பழுது நீக்க மீண்டும் இயந்திரங்களைக் கழட்டிச் சீனாவிற்கு அனுப்ப வேண்டியதாயிற்று.

அனுபவமின்மை, தரமான இயந்திரங்கள் என்று கொள்ள முடியாத எந்திரங்கள், இயந்திர உற்பத்தி இல்லாத இந்நிறுவத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது மட்டுமல்ல; தமிழக மக்களுக்கு எது நடந்தாலும் ஙிநிஸி நிறுவனம், எந்த சலனமும் இன்றி பாதுகாக்கப்படுகிறது. 31 மாதக் காலத் தாமதத் திற்கு ரூ.3100 கோடி தண்டத் தீர்வையை இந்நிறுவனத்திடமிருந்து மின் வாரியம் பெற்றிருக்க வேண் டும்.

குறைந்தபட்ச நடவடிக்கை எடுத்திருந்தால் கூட இந்நிறுவனம் சுணக்கம் இன்றி பணியாற்றியிருக்கும். 04.05.2012இல் சோதனை ஓட்டம் தொடங்கிய நிலையம் மத்திய ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிபடி 6 மாதத்திற் குள்ளாக உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும் ஏன் நடைபெற வில்லை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் என்ன செய்தது. இதுவும் வாரியம் சொன்ன தொழில் இரகசியமாக இருக்கலாம்.

இத்துடன் நிற்கவில்லை 485+100+ என ரூ.585கோடிக்கும் மேலாக வழுதூர் நிலையத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது. பழுதாகிநின்றதால் ஏற்பட்ட செலவு இது. ஆனால் வழுதூர் நிலையத்தை நிறுவுவதற்கான திட்டச்செலவே 355 கோடி ரூபாய்தான்.

அது போல மேட்டூர் 600 மெகாவாட் நிலையம், 31 மாத காலத்தில் ஏற்படுத்திய இழப்பு எவ்வளவு? தமிழகத்தின் சமூக இழப்பு எவ்வளவு? இதனை யார் சரி செய்திருக்க வேண்டும்? இவை பற்றியெல்லாம் மக்களுக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டாமா?

கூடுதலாக இன்னும் ஒரு செய்தி. இதே ஙிநிஸி நிறுவனம் மேட்டூர் போன்றே இராஜஸ் தானில் காலிஸ்சிந் நிலையத்தையும் அமைத்துள்ளது இதுவும் விரிவாக்கத்திட்டமே. 2 x 600 என இரு அலகுகள் கொண்ட இந்நிலையத் தின் திட்டச் செலவு ரூ4900 கோடி ஆகும். அதாவது 600 மெகா வாட்டிற்கு 2450 கோடிரூபாய் மட்டுமே.

ஆனால் மேட்டூர் நிலையமோ 3550 கோடிரூபாய் செலவு கொண் டதாகும். காலிஸ்சிந்தில் போலவே மேட்டூரிலும் இதே DANGFENG என்ற சீன இயந்திரங்களே பயன படுத்தப்படுகின்றன. ஆனால் திட்டச் செலவு மட்டும் 900 கோடி ரூபாய் அதிகம். இதுவும் மின்வாரியத்தின் தொழில் ரகசியம் போலும்.

சிக்கல் இத்துடன் நிற்க வில்லை. 06.01.2006 இல் மத்திய அரசு தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களுடன் மின் கொள்முதலுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய கூடாது என்றும், நடை முறையிலுள்ள கட்டுமானங்களுக்கு 30.09.2006 பிறகு ஒப்பந்தம் செய்ய கூடாதுஎனவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு மாறாக BGR ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

1994ல் செய்யப் பட்டிருந்த ஓர் ஒப்பந்தத்தினை வாங்கி அவசர அவசரமாக 28.09.2006 இல் இதே BGR நிறுவனம் கடலூர் பவர் புராஜக்ட் என்ற பெயரில் 1320 மெகாவாட்டிற்கான புரிந்துணர்வு வழியில் வாரியத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்தத்திற்கான நிதி ஏற்பாட்டிற்கான (Financial clouser) காலமாக ஓர் ஆண்டு காலத்தை நிர்ணயித்து ஒழுங்குமுறை ஆணையம் 18.04.2007இல்அனுமதி வழங்கியது. இன்று வரை இந்த அனுமதியை ஆணையம் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

ஏனெனில் 6202 கோடிக்கான இவ்வொப்பந்தம் இரத்தானால் இந்நிறுவனத்தின் பணிக்கான உத்தரவுகள், (Order Book) மதிப்பு குறைந்து போகும். இது இந் நிறுவனத்தில் பங்கு மதிப்பை குறைக்கும்.

இந்நிறுவனம் வங்கிகளில் கடன் பெறும் வாய்ப்பு குறைந்து போகும். இந்த இக்கட்டிலிருந்து இந்நிறுவனத்தை காப்பாற்றி வருபவது மின்சார ஒழுங்குமுறை ஆணையமே.

2006ம் ஆண்டிலிருந்து இந் நிறுவனம், மின் வாரியத்தைப் பயிற்சி களமாக்கிக் கொண்டு பெரிதாக வளர்ச்சியடைந்துள்ளது.

இன்றுவரை தமிழக மின் உற்பத்தியில் தட்டுப்பாட்டை ஏற்படுத்திவரும் இந்நிறுவனத்தின் மற்றொரு தொழிற்சாலைக்கு 24 மணி நேரத் தடையில்லா மின்சாரம் வழங்க 2012இல் உத்திரவாதமளித்துள்ளது தமிழக அரசு.

BGR என்ற கத்துக்குட்டி உற்பத்தி நிறுவனத்தை தமிழக அரசு காப்பாற்றுகிறது. தமிழக மக்களை யார் காப்பாற்ற வருவார்கள்.

Pin It