maniyarasan 300அருள்தந்தை செகத் கஸ்பர் அவர்கள்  தலைமை யில் இயங்கும் தமிழ் மையம், தமிழர் தொழில் வர்த்தகப் பெருமன்றம் ஆகியவை நடத்திய சங்கம் -4 தமிழ்த் திருவிழாவின் ஒரு பகுதியாக சென்னை இராசா அண்ணாமலைபுரம் டி. என். இராசரத்தினம் அரங்கில் 16.2.2015 அன்று “இன்றையத் தேவை திராவிடமா? தமிழ்த் தேசியமா? என்ற தலைப்பில் விவாத மேடை நடந்தது. 

“திராவிடமே” என்ற தலைப்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் “தமிழ்த் தேசியமே” என்ற தலைப்பில் தோழர் பெ. மணியரசன் அவர்களும் தருக்க உரையாற்றினர்.  முதலில் 30 மணித்துளி சுப.வீ. பேசினார்.

அடுத்து 30 மணித்துளி பெ.ம. பேசினார். பின்னர் ஒவ்வொருவரும் பத்து, பத்து மணித்துளிக்கு பதிலுரை ஆற்றினர்.  இருவர் வாதங்களும் தருக்க அடிப் படையிலும் தோழமை உணர்வுடனும் நிறைவுற்றன. 

ஆனால் கருப்புச் சட்டை அணிந்த தோழர்கள் பத்துப் பதினைந்து பேர் அரங்கத்தின் நடுவில் எழுந்து நின்று மேலும் மேலும் தாங்கள் வினாத் தொடுக்க வாய்ப் பளிக்க வேண்டும் என்று கோரினர்.  அதற்கு திரு. செகத் கஸ்பர் 8.45 மணிக்கு முடிக்க வேண்டும். 9.15 மணியைத் தாண்டி நடந்து கொண்டுள்ளது. இனியும் தாமதிக்க இயலாது. இத்துடன் நிறைவு செய்கிறோம் என்றார்.  தமது அமைப்பின் வழக்கப்படி உறுதிமொழி சொல்ல மற்றவர்கள் வழிமொழிந்தனர்.

ஆனால் மேற்படி கருப்புச் சட்டைத் தோழர்கள் எழுந்து நின்று “கஸ்பர் ஒழிக - பெரியார் வாழ்க” என்றும் மற்ற முழக்கங்கள் எழுப்பியும் கூச்சலிட்டனர்.  பின்னர் “மணியரசன் ஒழிக’’ என்று நெடுநேரம் முழக்கம் எழுப்பினர். இதற்கிடையே அவர்களை அமைதிப் படுத்த சுப.வீ ஒலிபெருக்கியில் வேண்டுகோள் விடுத்தார்.  “இது ஒரு தோழமையுடன் கூடிய விவாதம்.  இதில் நீங்கள் முழக்கம் போடுவது சரியல்ல. அமைதி யாகச் செல்லுங்கள்’’ என்றார்.

 பார்வையாளர் வரிசையிலிருந்து மேடையேறிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கலி. பூங்குன்றன் ஒலி வாங்கியை வாங்கி “நாம் சந்திக்க வேண்டிய களங்கள் வரும். அப்போது சந்திக்கலாம். இப்போது அமைதியாகச் செல்லுங்கள்’’ என்றார்.  ஆனால் அதன் பின்ன ரும் அத் தோழர்கள் அமைதியடைய வில்லை. அரங்கத்திற்கு வெளியே நின்று கொண்டு முழக்க மெழுப்பினர். 

தமிழின உணர்வாளர் களும், நிகழ்ச்சி நடத்திய அமைப்பினரும் தோழர் பெ. மணியரசன் அவர் களைச் சூழ்ந்து கொண்டு வழி அனுப்பி வைத்தனர்.

அங்கு இருவர் ஆற்றிய உரைகளையும் வெளியிட இவ்விதழில் இடம் போதாது.  எனவே தோழர் பெ. ம. வாதத்தின் முகாமையான பகுதி மட்டுமே இங்கு வெளியிடப்படுகின்றது.  பேச்சு வடிவம் - எழுத்து வடிவ மாக மாற்றப்பட்டுள்ளது.  அடைப்புக்குள் உள்ளவை விளக்கத்திற்காகப் புதிதாகச் சேர்க்கப்பட்டவை.

பெ. ம. பேச்சு

திராவிடத்திற்கு எதிரான கருத்துகளைப் பார்ப் பனியம் தான் தூண்டிவிடுகிறது என்று இங்கு சுப. வீ. பேசினார்.  “ கடவுளை மறுத்தால், சைத்தானை ஆதரிக் கிறீர்கள், அதனால்தான் கடவுளை மறுக்கிறீர்கள்’’ என்று பக்தர்கள் கூறுவார்கள். அது போல் திரா விடத்தை நாங்கள் மறுத்தால், அதனைப் பார்ப்பனர்கள் தூண்டிவிட்டுள்ளார்கள் என்று பெரியாரியவாதிகள் கூறுகிறார்கள். இது பகுத்தறிவுப் பக்தி மார்க்கம். 

இன்றைய அவசரத் தேவை தமிழ்த் தேசியமே!

ஆரியப் பார்ப்பனிய இந்திய அரசு சமற்கிருதத்தைத் திணிக்கிறது.  இந்தித் திணிப்பைத் தீவிரப்படுத்தியுள் ளது.  இந்திய அளவிலும் தமிழக அளவிலும் ஆரியப் பார்ப்பனிய இந்துத்துவா கூடுதல் வளர்ச்சி பெற் றுள்ளது.  கூடுதல் அதிகாரத்தோடு அது கோலோச்சு கிறது. 

திராவிட மாநிலங்கள் என்று சொல்லப்படும் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம் ஆகியவை தமிழர்களை எதிரிகளாகக் கருதுகின்றன. காவிரி உரிமையைப் பறித்துக் கொண்டது மட்டுமின்றி 1991 நவம்பர் - டிசம்பரில் காவிரிக் கலகம் என்ற பெயரில் கர்நாடகத் தமிழர்களைக் கன்னட வெறியர்கள் கொலை செய்தார்கள்.  வீடுகளை எரித்தார்கள்.  தமிழர் வணிக நிறுவனங்களைச் சூறையாடினார்கள்.  இரண்டு இலட்சம் தமிழர்கள் கர்நாடகத்திலிருந்து ஏதிலிகளாக - அகதிகளாகத் தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தனர்.

 மலையாளிகள் முல்லைப் பெரியாறு அணை உரிமையைப் பறித்ததுடன், 2011 நவம்பர், டிசம்பரில் கேரளம் சென்ற தமிழக அரசு ஊர்திகளை அடித்து நொறுக்கினார்கள். தமிழ்நாட்டிலிருந்து சென்ற அய்யப்ப பக்தர்களைத் தாக்கினார்கள்.  அங்கு ஒரு தேநீர்க் கடையில் வெந்நீரைத் தமிழ் இளைஞர் மீது ஊற்றிக் கொன்றார்கள். தேனி மாவட்டத்திலிருந்து தோட்ட வேலைக்குச் சென்ற 400 தமிழ்ப் பெண்களைக் கடத்தி 24 மணி நேரம் வைத்திருந்து அவமானப் படுத்தினார்கள். 

ஆந்திரத் தெலுங்கர் பாலாற்றில் அணை கட்டித் தமிழகத்திற்குத் தண்ணீர் வராமல் தடுத்தார்கள். இப்போது கடைசியாகக் கணேசபுரத்தில் அணை கட்டுகிறார்கள்.  கசிவு நீர் கூடப் பாலாற்றிலிருந்து இனி வராது. 

இவர்களையெல்லாம் நம்மோடு சேர்த்து திராவிடர்கள் என்கிறார்கள். 2009 இல் 1 லு  இலட்சம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்தார்கள். தமிழக சட்டப் பேரவையில் செயலலிதா முன் மொழிந்து “ஈழ இனப்படுகொலைக்குப் பன்னாட்டுப் புலனாய்வு தேவை. இலங்கை இந்தியாவின் பகை நாடு, இந்திய அரசு இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ஈழம் குறித்துக் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’’ என்று ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அந்நடவடிக்கை ஒரு நாடகமாகக் கூட இருக்கட்டும்.  அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய புறநிலை அழுத்தம் -- இன உணர்வு தமிழ்நாட்டில் நிலவுவதால் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஆனால் ஆந்திரா, கர்நாடகா, கேரள சட்டப் பேரவைகளில் இல்லாவிட்டாலும் அங்குள்ள கட்சிகள் தமிழினப் படுகொலைக்கு ஒரு கண்டனத் தீர்மானம் கூடப் போடவில்லை.  ஒரு சொட்டுக் கண்ணீர் ஈழத் தமிழர்களுக்காக அவர்களிடம் இல்லை.

“தானாடாவிட்டாலும் சதை ஆடும்” என்பார்கள். அப்படித்தான் தமிழ்நாட்டில் நாம் போராடினோம்.  அந்தத் திராவிடர்களுக்கு அது உருத்தவில்லை.  ஏனெனில் திராவிடர் என்ற ஓர் இனம் இல்லை.

பெரியார்தான் திராவிட இனம் குறித்த சித்தாந்தத்தை உருவாக்கியவர்.  இங்குப் பேசிய சுப.வீ. “திராவிடம் என்பது ஒரு கோட்பாடு” என்றார்.  அப்படி ஒரு கோட்பாட்டைச் செயற்கையாக உருவாக்கியவர் பெரியார்தான்.  இங்கே எனக்கு முன் திராவிட இயக்க வரலாற்றைத் தொகுத்த திருநாவுக்கரசு அவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.  நீதிக்கட்சியினர், பார்ப்பனர் அல்லாதார்க்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும். நீதி கிடைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார் களே அன்றி அவர்கள் திராவிடம் என்ற சித்தாந்தத்தை உருவாக்கவில்லை.

நாம் சங்க காலத்திற்குப் பிறகு களப்பிரர் காலம் தொடங்கி - பல்லவர் காலம் என ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அடிமைகளாக இருந்துவிட்டோம்.  இடையில் சிறிது காலம் சோழர்கள் ஆட்சி, பாண்டியர் ஆட்சி. சோழர்களிலும் வாரிசற்றுக் குலோத்துங்கச் சோழன் முதல் பெண் வழி வாரிசாக வந்த தெலுங்குச் சோழர்கள் ஆட்சி.  பின்னர் நாயக்க மன்னர்கள் ஆட்சி யில் தமிழர்களின் மிச்சம் மீதியிருந்த சிறப்புகள் எல்லாம் பாழடிக்கப்பட்டன.  நாயக்கர் ஆட்சி என்பது தெலுங் கர் ஆட்சி! சமற்கிருதமும் தெலுங்கும் கோலோச்சின.  பார்ப்பனர்கள் ஆதிக்கம் புரிந்தனர்.

தமிழ் மொழியில் சமற்கிருதம் கலந்து பேசுவது எழுதுவது சிறப்பு என்று மணிப்பிரவாள நடையைக் கொண்டு வந்தனர். தமிழர்களைத் திராவிடர்கள் என்றனர்.  தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று ஒருபோதும் சொல்லிக் கொண்டதில்லை. அப்படிக் கூறிக் கொள்வதை இழிவாகக் கருதினார்கள்.  அதனால்தான் சங்க காலத்திலிருந்து எந்த இலக்கியத் திலும் தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொண்டதற்கான சான்று கிடையாது. ஆரியர் கள் உருவாக்கிய சொல் திராவிடம் என்பது. 

ஆனால் நாயக்கர் காலத்தில் பார்ப்பனியம் கோலோச்சியதால் - பார்ப்பனர்கள்  கூறியபடி தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டனர். அதில் பெருமை இருப்பதாகக் கருதிக் கொண்டனர். அடிமை மனநிலையின் வெளிப்பாடு அது. 

ஏன், அக்காலத்தில் தமிழர்கள் தங்களைச் சூத்தி ரர்கள் என்றும் சொல்லிக் கொண்டனர்.  தமிழர் களிலேயே உயர்சாதி என்று கூறிக் கொண்டோர் தங் களை சற்சூத்திரர் - உயர்ந்த சூத்திரர் என்றும் கூறிக் கொண்டனர்.  அதனால் நாம் இன்றும் நம்மை சூத்திரர் என்றா கூறிக் கொள்கிறோம்.  அது போல்தான் ஆரியப் பார்ப்பனர் சூட்டிய “திராவிடர்’’ என்ற பெயரையும் நாம் ஏற்கக் கூடாது. அது இழிவு!

அயோத்திதாசப் பண்டிதர் போன்ற தமிழறிஞர்கள் அந்தக் காலத்தில் திராவிட சங்கம் வைத்தனர்.  திராவிடர் என்றும் கூறிக் கொண்டனர். ஆனால் பின்னர் அயோத்திதாசர் மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் ஒடுக்கப்பட்ட மக்களை “சாதியற்ற தமிழர்” என்று பதியும்படி மனுச் செய்தார்.  அவர் நடத்திய இதழின் பெயர் முதலில் “ஒரு பைசா தமிழன்’’, பின்னர் “தமிழன்” என்பதாகும்.

திராவிடர் என்று தங்களைத் தமிழர்கள் எப்படிப் பட்ட அடிமைச் சூழலில் சொல்லிக் கொண்டார்கள் என்பதை - சூத்திரா? என்று சொல்லிக் கொண்டதோடு ஒப்பு நோக்கி திராவிடர் என்ற சொல்லைக் கைவிட வேண்டும். 

 “திராவிட இனம்’’  என்ற சித்தாந்தத்தைப் பெரியார் எப்படி உருவாக்கினார் என்பதைப் பார்க்க வேண்டும்.  இதோ பெரியார் கூறுகிறார்.

“தமிழர் என்பது மொழிப் பெயர். திராவிடர் என்பது இனப் பெயர்.  தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்ற தலைப்பில் கூட முடியும். ஆனால் தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிட முடியாது.  இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனாயிருந்தாலும் எந்த மொழி பேசுபவனாயிருந்தாலும் அவன் திராவிடர் என்ற தலைப்பில் தான் சேருவான். ஆகையால் திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன் மொழி காரணமாக மட்டுமே தன்னைத் திராவிடன் என்று கூறிக் கொள்ள முடியாது. 

“தமிழர் என்றால் பார்ப்பானும் தன்னைத் தமிழனென்று கூறிக் கொண்டு நம்முடன் கலந்து கொண்டு மேலும் நம்மைக் கெடுக்கப் பார்ப்பான்.  திராவிடர் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக் கொண்டு நம்முடன் சேர முற்பட மாட்டான்.  அப்படி முன்வந்தாலும் அவனு டைய ஆச்சார அனுஷ்டானங்களையும் பேத உணர்ச்சி யையும் விட்டுவிட்டுத் திராவிடப் பண்பை ஒப்புக் கொண்டு அதன்படி நடந்தாலொழிய நாம் அவனைத் திராவிடன் என்று ஒப்புக் கொள்ள மாட்டோம். 

“தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனை பேரையும் சேர்க்கவும் நான் விலக்க நினைத்த நமக்கு மாறுபட்ட கலாச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதியுண்டா? இழிவுக்கும் தாழ்வுக்கும் கட்டுப்பட்டுள்ள மக்களையும் இதற்கு நேர்மாறாக, இழிவுக்கே காரணமான உயர் சாதி மக்களையும் ஒன்றாக்கிக் கொண்டால் அதில் இவ்விழிவு நீங்க வழி ஏற்படுமா? முதலில் இவ்விழிவு நீங்கட்டும்! பிறகு எல்லாருமே ஒன்றாவோம்!”

-ஈ.வெ. ரா. சிந்தனைகள் -(வே. ஆனைமுத்து தொகுப்பு - பாகம் 1 - பக்கம் 548)

இனம் பற்றிப் பெரியார் கூறும் வரையறுப்பு தவறானது. வரலாற்று வழியில் உருவாவது இனம். ஒருவர் சேர்க்க நினைப்போரை சேர்த்துக் கொள்ளவும், விலக்க நினைப்போரை விலக்கிக் கொள்ளவும் “இனம்’’ என்ற வரையறுப்பில் இடமில்லை.  இனம் என்பது பிறப்பால் வருவது, குணத்தால் - பண்பால் வருவது அல்ல. எடுத்துக் காட்டாக பிரபாகரன் தமிழின விடுதலைத் தலைவர். கருணா தமிழினத் துரோகி. கருணாவைத் தமிழன் இல்லை என்று சொல்லிவிட முடியாது.  ஏனெனில், தமிழனா இல்லையா என்பது கருணாவின் தாய் - தகப்பனை வைத்து முடிவு செய்கி றோமே தவிர, கருணாவின் நடவடிக்கையை வைத்து அல்ல.  கருணாவின் நடவடிக்கையை வைத்துத் தமிழி னத் துரோகி என்கிறோம். பெரியார் சேர்க்க நினைப் பவரை சேர்த்துக் கொள்வதற்கும், விலக்க நினைப்ப வரை விலக்கிக் கொள்ளவும் இன ஆராய்ச்சியில் இடமில்லை.

தமிழன் என்றால் தனது தாய்மொழி தமிழ் என்று சொல்லிக் கொண்டு பார்ப்பான் தானும் தமிழன் என்று வந்து விடுவான். திராவிடன் என்றால் பார்ப்பான் தான் திராவிடன் என்று சொல்லிக் கொண்டு வரமுடியாது என்கிறார் பெரியார்.  இதுவும் நடைமுறை உண்மை இல்லை.

பார்ப்பனர்கள் தாம் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.  தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று பழங்காலத்தில் சொல்லிக் கொண்டதில்லை. விந்திய மலைக்குத் தெற்கே உள்ள பிராமணர்களைப் பஞ்ச திராவிடர் அதாவது ஐந்து திராவிடர் என்றும் விந்திய மலைக்கு வடக்கே உள்ள பிராமணர்களை ஐந்து கௌடர்கள் என்றும் சொல்லிக் கொண்டார்கள்.  1. ஆந்திரார், 2. கர்நாடகர், 3. மகாராஷ்டிரர், 4. கூர்ஜரர் (குஜராத்) 5. தமிழர் ஆகிய ஐந்து பிரிவுப் பார்ப்பனரும் பஞ்ச திராவிடர் என்று தங்களை வரையறுத்துக் கொண்டார்கள்.  வடக்கே பீகார், காஷ்மீர் வரை உள்ள பார்ப்பனர்கள் பஞ்ச கவுடர்கள்.

கி.பி. நான்காம் நூற்றாண்டில் வஜ்ர நந்தி என்ற ஆரியப் பார்ப்பன சமணர் மதுரையில் நிறுவிய சமண சங்கத்தின் பெயர் திராவிட சங்கம் என்பதாகும்.  அக்காலத்தில் தமிழர்கள் தங்களைத் திராவிடர் என்று சொல்லிக் கொண்டதில்லை. அதற்கான அகச் சான்று இல்லை. ஆனால் சமத்துவம் பேசிய சமண சமயத் துறவி ஆரியராய் இருந்த காரணத்தால் திராவிட சங்கம் என்று அமைத்தார். 

ஆதி சங்கரர் எழுதிய சௌந்தர்ய லகரியில் வரும் “திராவிட சிசு” என்பது ஆரியப் பார்ப்பனரான ஆதி சங்கரரையே குறிக்கும் என்பாரும் உண்டு.  கௌனிய கோத்திரத்தைச் சேர்ந்த ஆரியப் பார்ப்பனரான திருஞான சம்பந்தரைக் குறிக்கும் என்பாரும் உண்டு.  இருவரில் யாரைத் திராவிடக் குழந்தை என்று குறிப்பிட்டிந்தாலும் அவ்விருவருமே பிராமணர் என்பதால் தான் குறிக்கப்பட்டிருக்கிறது என்று சென்னையிலிருந்து வெளிவரும் பிராமணர்கள் நடத்தும் “பிராமின் டுடே” என்ற இதழ் கூறுகிறது. 

இதோ அந்த பிராமின் டுடே இதழ். இது 2007 செப்டம்பர் மாத இதழ். இக்கட்டுரையின் தலைப்பு “ஆதி சங்கரர் , திருஞானசம்பந்தர் - பிராமண திராவிடர்கள்” என்று உள்ளது.  இதை எழுதியவர் டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் , பேராசிரியர், தலைவர் உயிர் வேதியியல், சங்கர நேத்ராலயா பார்வை ஆராய்ச்சி நிறுவனம், சென்னை - 6 என்று போடப்பட்டுள்ளது. 

மயிலாப்பூர் சமற்கிருதக் கல்லூரயில் இப்போதும் மணி திராவிட் என்று சமற்கிருதப் பேராசிரியர் இருக்கிறார்.  அவர் பார்ப்பனர்.  அவரை அண்ணல் தங்கோ பேரன் அருட்செல்வன் சந்தித்துப் பேசினார். அப்போது மணி திராவிட் தங்கள் குடும்பத்தின் முன்னோர்கள் கடைப்பிடித்துவரும் பழக்கப்படி தன் பெயருக்குப் பின்னால் திராவிட் என்ற சொல்லைச் சேர்த்திருப்பதாகக் கூறினார். “தமிழ்நாட்டிலிருந்து மும்பை சென்று எங்கள் முன்னோர்கள் வசித்தனர். அங்கு வசிக்கும் தமிழர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் முதலியார், செட்டியார் என்பது போன்ற சாதிப் பெயர்களைப் போட்டுக் கொள்வார்கள்.  பிராமணர்கள் தாங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்வதற்காகத் திராவிடர் என்று பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வார்கள் என்று மணி திராவிட் கூறியிருக்கிறார்.

பெங்களூரில் வசிக்கும் மட்டைப் பந்து வீரர், இராகுல் திராவிட், ஒரு நேர்காணலில் தங்கள் முன்னோர்கள் கும்பகோணத்தைச் சேர்ந்த பிரா மணர்கள். எங்கள் குடும்பத்தில் பெயருக்குப் பின்னால் திராவிடர் என்பதைக் குறிக்கும் திராவிட் என்ற சொல்லைச் சேர்த்துக் கொள்வோம். என் தாத்தா பெயரிலும் திராவிட் இருந்தது என்றார்.

பிரித்தானியக் கலைக் களஞ்சியம் (Britanica Encyclopaedia) ) திராவிடர் என்றால் தென்னாட்டுப் பிராமணர் என்று  கூறுகிறது.  இதோ அந்த நகல் என்னிடம் இருக்கிறது. படிக்கிறேன் (பேராசிரியர் த. செயராமன் கண்டறிந்தது)

“Dravidian : a name only applied in Indian usage to the Southern group of the Brahmins q.v. But Dravidian is applied

unfortunately to the indigineous people of India South of the Vindhyas and to the northern half of Ceylon it should be confined to the languages of this area”. - Encyclopaedia Britanica, Vol 7. Edn 15(1947),P624

 “திராவிடர் என்பது இந்திய வழக்கத்தில் தென்னகக் குழுவைச் சேர்ந்த பிராமணர்களை மட்டுமே குறித்த சொல்.  ஆனால் கெடுவாய்ப்பாக, விந்திய மலைக்குத் தெற்கே உள்ள உள்நாட்டு மண்ணின் மக்களையும் இலங்கையின் வடபாகத்தில் உள்ள மண்ணின் மக்களையும் குறிப்பதாய் ஆனது. இந்தப் பகுதியில் உள்ள மொழிகளுடன் மட்டுமே இச் சொல்லை (திராவிடர்) வரம்பு கட்டிக் கொள்ள வேண்டும்.

-பிரித்தானியக் கலைக் களஞ்சியம், தொகுதி 7, பதிப்பு 15 (1947) பக்கம் 624 (ஆங்கிலம்)

தமிழ் மொழியை அடையாளமாக வைத்தால் பார்ப்பான் தனது தாய்மொழி என்று கூறித் தானும் தமிழன் என்று வந்துவிடுவான். திராவிடன் என்றால் தானும் திராவிடன் என்று வர முடியாது என்றார் பெரியார். பெரியாரின் இந்த வரையறுப்பு தவறு என்றாகிறது.  ஏனெனில் பிரித்தானியக் கலைக் களஞ்சியம் “திராவிடர்” என்ற அடையாளத்தை விந்திய மலைக்குத் தெற்கேயும் இலங்கையின் வடபாகத்திலும் பேசப்படும் மொழி பேசுவோருடன் மட்டுமே திராவிடர் என்பதை வரம்பு கட்ட வேண்டும் என்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னக மொழிகளைப் பேசுவதால் இப்பகுதிகளில் வாழும் பிராமணர்கள் திராவிடர்கள் ஆனார்கள் என்று கூறுகிறது. 

திராவிடர் என்றால் பார்ப்பனர் வரமாட்டார் என்பது வரலாற்று உண்மையல்ல. பெரியாருக்கே அதில் சந்தேகம் இருந்ததால் தான் “எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக் கொண்டு நம்முடன் சேர முற்பட மாட்டான். அப்படி முன்வந்தாலும் அவனுடைய ஆசார அனுஷ் டானங்களையும் பேத உணர்ச்சிகளையும் விட்டுத் திராவிடப் பண்பை ஒப்புக் கொண்டு அதன்படி நடந்தால் அவனைத் திராவிடன் என்று சேர்த்துக் கொள்ளலாம்” என்கிறார்.

உலகத்தில் எங்கேயாவது இனத்துக்கான வரையறுப்பை பெரியார் கூறுவது போல் ஒருவனின் நடத்தையை வைத்து முடிவு செய்வார்களா? பெரியார் “திராவிடம்” குறித்து ஒரு சித்தாந்தத்தை உருவாக்க முயன்றார். ஆனால் அதற்குரிய அடிப்படைக் கூறுகளை அவரால் சொல்ல முடியவில்லை.  அதற்கான தரவுகளை அவரால் தரமுடியவில்லை.  அதனால் அவர் ஒரு போலி சித்தாந்தத்தைத்தான் ((Pseudo Idealogy) உருவாக்கினார்.

அவர் பார்ப்பனரைத் தன்னுடைய அமைப்பில் சேர்ப்பதில்லை என்று அமைப்பு விதியைச் செய்து கொண்டிருக்கலாம்.  அதற்கு மாறாக - தமிழர் என்றால்  பார்ப்பான் தன் மொழியும் தமிழ் என்று கூறிக் கொண்டு தானும் தமிழன் என்று வந்துவிடுவான்,   எனவே திராவிடன் என்கிறேன் என்றார் பெரியார்.  இது என்ன ஞாயம்? உலகில் தோன்றிய முதற்பெரும் இனமான தமிழ் இனத்தின் அடையாளத்தை -- இருப்பைப் பெரியார் மறுத்தது என்ன ஞாயம்? ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களில் அவரவரும் அவரவர் இனப் பெயரோடு அதைச் சொல்லிக் கொண்டு ஒருங்கிணைகிறார்கள். தமிழ்நாட்டில் பெரியார் தமிழர் அடையாளத்தை மறுத்து தமிழர் ஒருங்கிணைப்பைச் சிதறடித்து விட்டார். இன உணர்வில் ஓர் உளவியல் ஊனத்தை ஏற்படுத்தி விட்டார். இதை நினைத்தால் நெஞ்சு பொறுக்க வில்லை. 

காலுக்குச் செருப்புப் போட்டுக் கொள்வதற்கு மாறாகக் காட்டுக்கே செருப்புப் போடு என்பது போல், தமிழர் என்ற நமது இனப் பெயரையே மறைத்தார் பெரியார். தெலுங்கர்களை, கன்னடர்களை, மலையாளி களை உங்கள் இனப் பெயரைக் கை விடுங்கள் என்று சொன்னால் அவர்கள் ஏற்பார்களா? மாட்டார்கள்.  பாழ்பட்ட தமிழினத்தில்தான் தங்கள் இன அடை யாளத்தை மறுக்கச் சொன்னார் பெரியார்.

 நான் அறிந்தவரை பெரியார் தமிழின மறுப்பாளர். தமிழ் மொழி எதிர்ப்பாளர். 

ஆனைமுத்து ஐயா பெரியாரின் பேச்சுகளை, எழுத்துகளை மூன்று தொகுதிகளாக வெளி யிட்டுள்ளார்கள்.  (மறுபதிப்பில் பல பகுதிகளாகப் பிரித்துள்ளார்). அந்த மூன்று தொகுதிகளையும் இளைஞர்கள் ஒரு மாதத்திற்குத் தொடர்ச்சியாகப் படித்துப் பாருங்கள்.  அதன் பிறகு பெரியாரைப் பற்றி ஒரு முடிவுக்கு வாருங்கள். நான் சொல்கிறேன் என்பதற்காக ஏற்க வேண்டியதில்லை. 

1938இல் தமிழ்நாடு தமிழர்க்கே என்பார். 1939இல் திராவிட நாடு திராவிடர்க்கே என்பார். 1956இல் தமிழ்நாடு தமிழர்க்கே என்பார். ஒவ்வொன்றையும் மாற்றிக் கொண்டே போவார். 1952இல் ஆச்சாரியார் (ராஜாஜி) முதலமைச்சர் ஆனபோது வரவேற்றார்.  அவரைப் பாராட்டினார். அதன்பிறகு, காமராசர் முதலமைச்சர் ஆனபிறகு அவரைப் பாராட்டிக் கொண்டே இருந்தார். தி.மு.க.வையும் அண்ணாவையும் ஒழிப்பதையே முதற்பெரும் வேலையாகக் கொண்டி ருந்தார்.

1966இல் “பார்ப்பனத் தோழர் களுக்கு” என்று தலைப்பிட்டு வேண்டுகோள் கடிதம் எழுதினார்.  அதில், பார்ப்பனர்களை நாட்டை விட்டு வெளி யேற்றிவிட வேண்டும் என்று நான் கூறவில்லை.  உங்கள் பங்கை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; எங்கள் பங்கை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். எங்கள் பங்கையும் சேர்த்து நீங்கள் எடுப்பதால் பிரச்சினை வருகிறது.

என் மீதுள்ள கோபத்தில் ஆச்சாரியார் பேச்சைக் கேட்டுக் கொண்டு கண்ணீர்த் துளிகளுக்கு வாக்களித்து விடாதீர்கள். காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்றார். ஆனால் 1967இல் திமுக வெற்றி பெற்று அண்ணா, பெரியாரைப் பார்த்து வாழ்த்துப் பெற்றவுடன் தி.மு.க. ஆட்சியை ஆதரிக்கத் தொடங்கி விட்டார்.

அண்ணாவுக்குப் பின் கலைஞர் ஆட்சியை ஆதரித்தார். 1970இல் கல்லூரிப் பட்டப்படிப்பில் கலைஞர் தமிழ்வழிக் கல்வியைக் கொண்டு வந்தார்.  அப்போது காமராசர் அதை எதிர்த்தார்.  மாணவர் களைத் தமிழ்வழிக் கல்விக்கு எதிராகப் போராடுமாறு தூண்டிவிட்டார் காமராசர்.  கலைஞர் ஆட்சியை ஆதரித்து வந்த பெரியார் அப்போது மட்டும் 1970இல் தமிழ்வழிக் கல்வியை ஆதரித்து விடுதலையில் எழுதினார். 

(காங்கிரசை ஆதரித்து வந்தபோது மாணவர்கள் 1965இல் நடத்திய மாபெரும் இந்தி எதிர்ப்பு மொழிப் போரை பெரியார் எதிர்த்தார்)

ஆட்சியாளரை ஆதரிக்கும் நோக்கில்தான் 1970இல் தமிழ்வழிக் கல்வியை ஆதரித்தார் பெரியார்.  இதைப் பெரிதாக சுப.வீ. காட்டுகிறார்.  பெரியார் தமிழ் வழிக் கல்வியை ஆதரித்தார் என்கிறார்.  ஆனால் அதன்பிறகு 1972இல் பெரியார் தமிழை எதிர்த்தார்.  இதோ பெரியார் 1972 டிசம்பரில் கலைமகள் இதழுக்குக் கொடுத்த நேர்காணல் ஈ.வெ.ரா. சிந்தனைகள் இரண்டாவது பாகம் பக்கம் 1228.

செய்தியாளர் - தமிழைக் காட்டுமிராண்டி பாஷை  என்று நீங்கள் குறிப்பிட்டீர்களே?

பெரியார் - ஆமாம் சொன்னேன். என்ன தப்பு? ஒருத்தனோடு ஒருத்தன் சண்டை போட்டுக்கிட்டுத் தமிழிலே திட்டறானே.. எப்படித் திட்டறான்? அவன் அம்மா, அக்கா, பொண்டாட்டி -எல்லாரையும்னா இழுக்கிறான் ( இந்த இடத்தில் சில நடைமுறைத் தமிழ் வசவுகளை உதாரணத்துக்குக் குறிப்பிடுகிறார் - திரு பெரியார்.  அவற்றை நான் எழுதாமலே வாசகர்கள் புரிந்து கொள்ளக் கூடும். -செய்தியாளர்) அதே மாதிரி சண்டை வந்து இங்கிலீஷ்லே திட்டினா. .“ஃபூல்”னு திட்டலாம், “இடியட்”னு திட்டலாம். தமிழிலே திட்ற மாதிரி கேவலமாகத் திட்டறதுண்டா? அதுவும் கிராமங்கள்ல பெண்பிள்ளைகள் சண்டை போட்டுக்கிறதைக் கேட்டா நான் சொல்றது புரியும்”.

தமிழில் அம்மாவை, அக்காவை, மனைவியை இழுத்துத் திட்டறதனாலே தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார் பெரியார். ஆங்கிலத்தில் பாஸ்டர்டு ( விபச்சாரி மகன்) என்று திட்டுகிறார்கள்.  இதற்கு என்ன சொல்வார் பெரியார். 

தமிழ் மொழி எதிர்ப்பு என்பது தொடர்ந்து பெரியாரிடம் இருந்து வந்தது.  1969இல் பெரியார் தமிழ் பற்றிச் சொன்னதைப் பாருங்கள். 

“எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்கோ, தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல என்பதைத் தோழர்கள் உணர வேண்டும்.  மற்றெதற்கு என்றால் ஆங்கிலமே பொது மொழியாக அரசாங்க மொழியாக தமிழ்நாட்டு மொழியாக தமிழன் வீட்டு மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவேயாகும். 

“தமிழன் பழைய தமிழனாகவே இருக்க வேண்டும் என்று கருதுவது, தமிழன் காட்டுமிராண்டியாகவே இருக்க வேண்டும் என்று கருதுவதற்கு ஒப்பாகும்.

  “நாம் இவ்வாறு கூறுவது தமிழன் உலக மனிதனாக - விஞ்ஞான உருவாக - ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் மக்களை விஞ்ஞானத்தில் தோற்கடிக்கத் தக்கவனாக ஆக வேண்டும் என்பதற் கேயாகும்.  நாம் இன்று கிணற்றுத் தவளைகளாக இருக்கிறோம்.  நமக்குக் கம்பனுக்கு மேல் புலவன் இல்லை.  வள்ளுவனுக்கு மேல் தீர்க்கதரிசி இல்லை. இக்கருத்தில் நாம் உலக மனிதனாக ஆக முடியாது என்பது எனது பலமான கருத்து. ஆகையால் தமிழர் தோழர்களே உங்கள் வீட்டில் மனைவியுடன் குழந்தைகளுடன் வேலைக்காரிகளுடன் ஆங்கிலத்தி லேயே பேசுங்கள். பேசப் பழகுங்கள். பேச முயலுங்கள்.  தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள். என்னை வையாதீர்கள். மனிதனாக வாழ முயலுங்கள்.”

(விடுதலை அறிக்கை 27.1.1969, ஈ.வெ.ரா. சிந்தனைகள் பாகம் 2 பக்கம் 989)

பெரியார் 1969 இல் கூறிய இந்த மொழிக் கொள்கை சரியா? அவருடைய மொழிக் கொள்கை வெறும் நுகர்வு வாதத்தை (consumerisam) அடிப்படையாகக் கொண்டது..  நுகர்வு வாதம் மனித மாண்புகளைப் பற்றிக் கவலைப் படாதது.

 பெரியாரிடம் தமிழின மறுப்பும் தமிழ் மொழி எதிர்ப்பும் தொடர்ந்து இருந்து வந்தது. 

(அடுத்த இதழில் முடியும்)

nutrine book 350

 பன்மை வெளி

புதிய வெளியீடு நூல்விற்பனைக்கு..!

நூல்கிடைக்குமிடம்:

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்

21, முதல் பிரிவு, முதல் தெரு,

கலைஞர் கருணாநிதி நகர்,

சென்னை -600 078.

தொலைபேசி : 044-24742911

கி.வெங்கட்ராமன் எழுதிய

நியூட்ரினோ ஆளிணிவும்

கதிர் வீச்சு அபாயமும்

விலை: ரூ. 10/-

Pin It