தம் அரசியல் மீது எப்பொழுதெல்லாம் கேள்விகள் எழும்புமோ அப்பொழுதெல்லாம் ஓடி ஒளிவது ம.க.இ.க.வினரின் வழக்கமான ‘புரட்சிகர’ நடவடிக்கை. இப்பொழுதும் அது தான் நடந்திருக்கிறது. நாம் எழுப்பிய பல கேள்விகளுக்கு இதுவரை அவர்கள் விடையளிக்கவில்லை. மாறாக, நாங்கள் அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்று ஓட்டுப் பொறுக்கிகளைப் போலவே பிதற்றுகின்றனர். தமிழுக்காக தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்கள் இதுவரை எந்தப் போராட்டமும் நடத்தவில்லையாம். தமிழுக்காக அவர்கள் எதுவுமே செய்யவில்லையாம். ‘சர்வதேசியம்’ பேசும் ம.க.இ.க.வினர் மட்டும் தான் தமிழ்நாட்டில் தமிழுக்காக ‘பாடுபட்டு’ இருக்கின்றனராம். நம்புங்கள். மேலும் நம்மோடு விவாதம் செய்ய அவர்களுக்கு விருப்பமும் இல்லையாம். நேரமும் இல்லையாம். அடேங்கப்பா..! என்னா ஒரு பில்டப்பு..!

 ‘விவாதத்திற்கு வரத் தயாரா..?’ – ‘எங்களுக்கும் தான் நேரமில்லை தான்’ - என்று முதன் முதலில் வாய்ச்சவடாலுடன் வம்பிழுத்தவர்கள் ம.க.இ.க.வினர் தாம். தற்பொழுது அவர்களது இந்தியத் தலைமை பற்றி அம்பலப்படுத்தப்பட்டதும் ‘நேரமில்லை.. விருப்பமில்லை..’ என்று ஓடுகின்றனர்.

1988 ஆம் ஆண்டு ‘கேடயம்’ இதழ் வெளியிட்ட ஒரு வெளியீட்டின் தலைப்பு என்ன தெரியுமா? ‘முட்டிப் பார்த்து விட்டு எட்டி ஓடும் புதிய கலாச்சாரம்’. 1988 ஆம் ஆண்டு ‘கேடயம்’ இதழிடம் ம.க.இ.க.வின் ‘புதிய ஜனநாயகம்’ ஏடு, ‘விவாதத்திற்குத் தயாரா?’ என்று வீரவசனம் பேசி ‘முட்டி’ பார்த்துவிட்டு, ‘எட்டி’ ஒடினர். அப்பொழுது ‘கேடயம்’ வெளியிட்ட நூலுக்கு இவ்வாறு தலைப்பிட்டதைப் பார்க்கும்பொழுது 1988லிருந்து இன்றுவரை இப்படித்தான் இவர்களது விவாத நேர்மை மாறாமல் இருக்கிறது என்பதைத்தான் இது உணர்த்துகின்றது.

 தமிழ்நாட்டில் மட்டுமே செயல்பட்டுக் கொண்டு, ‘அகில இந்திய புரட்சி’ செய்யத் திட்டம் வைத்திருக்கும், ஒரு ‘இந்தியக்’ கட்சியின் மக்கள் திரள் அமைப்பான ம.க.இ.க., ‘நாங்கள் தமிழ்நாட்டு மக்களுக்காக இதைச் செய்தோம் அதைச் செய்தோம்’ என்று பட்டியலிட முடியுமென்றால், தமிழ்நாட்டு மக்களுக்கெனவே இயக்கம் கண்டு, அவர்தம் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் மட்டுமே செயல்பட்டு வரும் தமிழ்த் தேசிய சக்திகள் தம் போராட்டங்களை எளிதாக பட்டியலிட்டுக் காட்ட முடியும். அது மிகப் பெரும் பட்டியலும் கூட.

 காவிரி மீட்புக்காக தொடர் போராட்டங்கள், நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்திற்கு அளிக்கக் கூடாதென நடைபெற்ற போராட்டங்கள், தொடர் இயக்கங்கள், முல்லைப் பெரியாறு உரிமைக்காக கேரளா மீது நடத்தப்பட்ட பொருளாதாரத் தடை மறியல், ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றக் கூடாதென கன்னட வெறியர்கள் ஓசூருக்குள் நுழைந்து முழக்கமிட்ட போது, அதனைக் கண்டித்து கர்நாடக எல்லைக்குள் நுழைந்து நடத்தியப் போராட்டம், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு பதிலடியாக கன்னடப் பேருந்துகளை முற்றுகையிட்டது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 26 பேருக்காக தமிழகமெங்கும் நிதி திரட்டி அவர்களை விடுவிப்பதற்கு நடத்தப்பட்ட ‘26 பேர் உயிர்காப்புக் குழு’ நடத்தியப் போராட்டங்கள், ஈழத்தமிழருக்கு உணவு திரட்டி அதனை ஈழத்திற்கு அனுப்புவதற்காக நடத்தப்பட்ட படகுப்பயணப் போராட்டம், அதைத் தொடர்ந்து நடந்த அய்யா. நெடுமாறனின் சாகும் வரை உண்ணாப்போராட்டம், ஈழத்தமிழர்களை அழித்தொழிக்கும் சிங்கள அரசின் வங்கிக்கு பூட்டு போட்டு நடத்தியப் போராட்டம், தஞ்சை இந்திய அரசு விமானதள முற்றுகைப் போராட்டம், இந்திய அரசின் வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட போராட்டங்கள், ஈழத்தமிழர்களை அழித்தொழிக்கும் இந்திய சிங்கள அரசுகளை கண்டிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்திய சிங்களக் கொடி எரிப்புப் போராட்டம், தமிழ்வழிக் கல்விக்காக, தமிழ் மொழி ஆட்சி மொழியாக வேண்டுமென தனித்தமிழ் இயக்கங்கள், மன்றங்கள் ஆகியவை நடத்திய தொடர்ப் பரப்புரைகள். இவையெல்லாம் பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள், தனித்தமிழ் இயக்கங்கள், மன்றங்கள் ஆகியவை நடத்தியவை. இவை அனைத்தும், ‘தமிழினம் விடுதலை பெற வேண்டும்’ என்ற தமிழ்த் தேசிய முழக்கத்தை ஏற்றுக் கொண்ட வெவ்வேறு அமைப்புகள் நடத்திய வெவ்வேறு போராட்டங்களின் ஒரு பகுதித் தொகுப்பே ஆகும்.

 ம.க.இ.க.வினரின் பார்வையில் மேற்கண்ட போராட்டங்கள் எல்லாம் ‘இனவாத’த்தை முன்னெடுத்துச் செல்பவையாகவும், அதை முன்னெடுத்த இயக்கங்கள் ‘இனவாத’ இயக்கங்களாகத் தான் தெரியும். ஏனெனில் அப்பேர்ப்பாட்ட இந்தி ஆளும் வர்க்க ‘மனுநீதீ’ பார்வை தான் அவர்களது பார்வை. தமிழுக்காக நாங்களும் பாடுபட்டிருக்கிறோம் என்று ம.க.இ.க. தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை எண்ணி பரிதாபம் கொள்ளவே வேண்டியிருக்கிறது.

இந்த லட்சணத்தில், தமது அமைப்புகளை இயக்கும் மறைமுகக் கட்சியின் பெயரிலேயே ‘இந்திய’த்தை ஒழிக்க முடியாத இந்த ‘வீராதி வீரர்’கள் ‘இந்தியத் தேசியத்தை முறியடிப்பது நாங்க தானுங்கோ’ என்று முண்டா தட்டுகிறார்கள்.

 தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் அனைவரும் ஆதிக்க சாதி வெறியர்கள் என பொருமித் தீர்த்திருக்கிறார், சர்வதேசியவாதி. மேலும் ‘ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை தமிழராக எண்ணியதில்லை’ என்றும் கூறி குதூகலித்திருக்கிறார். ஈழத்தில் தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாக கொன்றொழிக்கப் படுகிறார்களே என்ற வேதனையில் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் எந்தப் போராட்டத்தையும் நடத்தவே இல்லையா? நடத்தியிருந்தால் அவர்களை எது போராட்டங்களை நடத்த வேண்டும் என உந்தித் தள்ளியது? சாதி உணர்வா? தமிழர் என்ற இன உணர்வா? ம.க.இ.க.வின் கண்களுக்கு ஏனோ இதெல்லாம் தெரியாதது போல் நடிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் தம்மை தமிழராய் உணர்ந்ததால் தான், ஈழத்தமிழ் மக்களுக்காக ‘போரை நிறுத்து’ என்று பாகுபாடின்றி போராடினார்கள். ‘இல்லையில்லை.. தமிழ்நாட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை தமிழராக உணரவில்லை. அதனால், தான் ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் அமைதியாக எந்த ஒரு கண்டனமும் தெரிவிக்காமல் இருந்தார்கள்’ என்று ம.க.இ.க. திரும்பவும் பதிலளித்தால் நாம் நகைக்கவே முடியும். தமிழர்கள் சாதி ரீதியாக பிரிந்தே கிடக்க வேண்டும் என்று முழக்கமிடுவதில் ம.கஇ.க.விற்கு ஏன் அவ்வளவு ஆர்வம், ஏன் அவ்வளவு ஆசை என்று தான் கேட்க வேண்டியிருக்கிறது.

 தமிழ்ச் சமூகத்தின் அவலமாக சாதி இருந்து வருகின்றது. சாதித் தமிழர்கள் ஒன்றுபட தடையாய் இருந்து வரும் முக்கிய காரணியாகும். சாதியின் ஊற்றுக் கண் பார்ப்பனியம். வந்தேறிகள் விதைத்த சாதியை அடித்து விரட்டி, பார்ப்பனியத்தை வீழ்த்தி தமிழர்களாக நாம் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? இது தான் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு வலிக்கிறது. ம.க.இ.க.விற்கு வலிக்கிறது.

‘தமிழ்’ என்றாலே ‘சாதி’ தான் அர்த்தமாம். இது தான் ம.க.இ.க.வின் ‘மனுநீதி’ பார்வை. ஆதிக்க சாதி வெறியர்களிடத்தில் உள்ள பார்ப்பனியம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசிய அமைப்புகள் உறுதியுடன் உள்ளன. அதனால் தான் பார்ப்பனியத்தை தம் முதன்மை எதிரியாக முன்னிறுத்தியுள்ளன தமிழ் தேசிய அமைப்புகள். அதே வேளையில், பார்ப்பனியத்தால் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத அனைத்து சாதி மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய சக்திகள் ஒன்றுபட்டு கூறுகின்றன. தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதில் பார்ப்பனர்கள் வேண்டுமானால் எதிர்க்கலாம். அரசு என்பது ஒடுக்குமுறை கருவி. எனவே, தாழ்த்தப்பட்ட மக்களும் அதில் பங்கு கொள்ளக் கூடாது என பார்ப்பனர்களுக்கு ஆதரவாக மார்க்கசியத்தை முன்னிறுத்தி ம.க.இ.க. ஏன் இதனை எதிர்க்கிறது? இடஒதுக்கீட்டிற்கான போராட்டத்தை ‘நாய்ச் சண்டை’ என்று பார்ப்பனர்களை விடக் கேவலமாக வர்ணித்தது ம.க.இ.க. மட்டுமே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ம.க.இ.க.வின் இந்த பார்ப்பனப் பார்வையை அம்பலப்படுத்துவதால் தான், ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியர்கள் நடந்து கொள்கிறார்கள் என்ற அவதூற்றை தொடர்ந்து வீசுகின்றது.

 தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்கொடுமைகளை மேற்கொண்ட எந்த ஆதிக்க சாதி வெறிக்காரர்கள் எவரையும் தமிழ்த் தேசியர்கள் ஏற்றுக் கொண்டதில்லை. போற்றிப் புகழ்ந்ததில்லை. ஆனால், ‘இட ஒதுக்கீடு என்பதே ஒரு முதலாளித்துவ சீர்திருத்தம் தான், சலுகை தான்’ என்று கூறி, மறைமுகமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வழங்கப்படுகின்ற இட ஒதுக்கீட்டை வேண்டாமென முழக்கமிடும் ம.க.இ.க.வின் குரல் தான் ஆதிக்க சாதி வெறியர்களின் குரல்; பார்ப்பனர்களின் குரல்; பார்ப்பனியத்தை தாங்கிப் பிடிக்கும் பாதந்தாங்கிகளின் குரல். ம.க.இ.க.வின் இந்த பார்ப்பன எடுபிடித்தனத்தை அம்பலப்படுத்துவதால் தான், ம.க.இ.க.வின் ‘மனுநீதீ’ப் பார்வையில், தமிழ்த் தேசியர்கள் ‘சாதி வெறியர்களாக’த் தெரிகிறார்கள் போலும்.

 ஆதிக்க சாதி வெறியர்கள் சிலர் இட ஒதுக்கீட்டினால் பயனடைகிறார்கள் என்பதாலேயே அச்சாதியில் உள்ள கூலி வேலை செய்வோர், நிலமில்லா விவசாயிகள், படிப்பறிவற்ற பாமரர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களுக்கும் ஆதிக்க சாதிவெறி முத்திரை குத்தி இட ஒதுக்கீட்டை ‘இரத்து செய்’ என்று முழக்கமிடுகின்றது ம.க.இ.க. இவ்வாறு, ஆதிக்க சாதியில் உள்ள அனைவருமே ‘அவா நன்கு கற்றறிந்தவா தானு’ , ‘நல்லா தானே இருந்துண்டிருக்காங்க’ என பார்ப்பனக் குரலில் இட ஒதுக்கீட்டை மறைமுகமாக மறுக்கிறது. ம.க.இ.க.விற்கு நாம் சொல்லிக் கொள்வதெல்லாம் இது தான், இனியும் ‘இட ஒதுக்கீடு’ குறித்த உங்களது ‘மனுநீதி’ப் பார்வையை ‘சமூகநீதி’ப் பார்வை என்பது போல் பாசாங்கு செய்து அம்பலப்பட வேண்டாம். ஏற்கெனவே நிறைய அம்பலப்பட்டுள்ளீர்கள் என்று நினைக்கும் பொழுது ‘இவன் ரொம்ப நல்லவன்டா’ என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

 சாதி ஒழிப்பு கூடாது என்றோ, சாதி ஒழிப்புக்கான போராட்டத்தை முன்னெடுக்கக் கூடாது என்றோ தமிழ்நாட்டில் எந்தவொரு உண்மையான தமிழ்த் தேசிய அமைப்பும் கூறவில்லை; கூறியதில்லை. சாதி ஒழிப்பை தன் திட்டத்தில் வைத்துள்ள தமிழ்த் தேசிய அமைப்புகள் மீது தான் இவ்வாறான ஆதிக்க சாதி வெறி முத்திரை குத்தப்படுகின்றது. இவ்வாறான அவதூறுகளைப் பரப்புவர்கள் யார்?

தமிழனம் ஒன்றுபடவே கூடாது என்று எண்ணுகின்ற இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளான பார்ப்பனர்கள் தாம் இவ்வாறு செய்கின்றனர். அதையே ம.க.இ.க.வும் செய்கிறது. இதில் மட்டுமா ம.க.இ.க. பார்ப்பனர் குரலை வெளிப்படுத்துகிறது? புலிகளை பாசிஸ்ட்டுகள் என்று வெறிக்கூச்சல் போடும் ‘தினமல(ம்)ர்’ பார்ப்பனர்களுக்கும் ‘புதிய ஜனநாயக’த்திற்கும் என்ன வித்தியாசம்? இட ஒதுக்கீடு தீர்வல்ல என்று கூறுகிற ம.க.இ.க.வின் குரலுக்கும், ‘அபிஷ்டு..!’ என இட ஒதுக்கீட்டை ஒதுக்கித் தள்ளும் மயிலாப்புர் பார்ப்பானின் குரலுக்கும் என்ன வித்தியாசம்?

 தோழர் மருதையன் பார்ப்பனர் என்பதால் மட்டும் ம.க.இ.க. பார்ப்பனக் கட்சி என்று யாரும் சொல்வதில்லை. ம.க.இ.க.வின் செயல்பாடுகள் பார்ப்பனியத்தை பாதுகாப்பதாகவே உள்ளன என்பதால் தாம் அவ்வியக்கத்தின் மீது கேள்விகள் எழுகின்றன. ம.க.இ.க.வின் தலைமைப் பொறுப்பில் உள்ள, ‘ரெங்கராஜன்’ என்ற பார்ப்பன அடையாளத்துடனான பெயருள்ளவரை ‘வீராச்சாமி’

என்று மாற்றிவிட்டதாலோ, ‘வல்லபேசன்’ என்ற பார்ப்பன அடையாளப் பெயருள்ளவரை ‘மருதையன்’ என்று மாற்றி விட்டதாலோ மட்டும் பார்ப்பனியம் ஒழிந்து விடாது. பார்ப்பனியச் சார்பு இல்லாத நடவடிக்கைகள் தான் பார்ப்பனியத்தை ஒழிக்கும்.

கருணாநிதி பார்ப்பனரல்லாதவர் என்பதால் தி.மு.க. பார்ப்பனியத்திற்கு சேவை செய்யாத கட்சி என்று யாராவது சொல்ல முடியுமா? எந்தத் தமிழ்த் தேசிய அமைப்பாவது அப்படி கருதியிருக்கிறதா சொல்லியிருக்கிறதா? அது போல் தான் இதுவும். பெயரிலும் இல்லை, பிறப்பிலும் இல்லை. செயலில் தான் உள்ளது, பார்ப்பனியத்தின் சார்பு. இது தான் நாம் ஏற்றுக் கொண்ட வரையறை. அதனால் தான் ம.க.இ.க.வின் செயல்பாடுகள் பார்ப்பனியத்திற்கு குடை பிடிக்கின்றன என்கிறோம்.

 பார்ப்பனர்கள் ஆரியர்கள், வந்தேறிகள். அவர்களுக்கு எப்பொழுதுமே எதிரான இனமாகத் தான் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். இத்தமிழினம் தான் உலகின் மூத்த மரபினம். இது அறிவியல் சான்றுகளால் வரலாற்றுச் சான்றுகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை. முன்பொரு காலத்தில் இவ்வினத்தின் மக்கள் சகல உரிமைகளுடன் தம்மைத் தாமே ஆண்டு கொண்டு வாழ்ந்து வந்தனர். இன்று வந்தேறிகளாலும், ஆதிக்க சக்திகளிடமும் பிடிக்கப்பட்டு ஒர் அடிமைகளாகவே தம்மை யாரென உணராத நிலையிலேயே அடிமை வாழ்க்கை நடத்துகின்றனர். வாழ்கின்றனர். தமிழினத்தின் இந்த இழிநிலையை சுட்டிக் காட்ட, ‘தமிழா உனக்கொரு வரலாறு உண்டு’ என்று சொல்வது தவறாம். பழம் பெருமை பேசுவதாம். ‘தமிழா நீ இன உணர்வுள்ளவனாக இல்லை! நீ சொரணையற்றவனாக இருக்கிறாய்! எனவே விழித்தெழு!’ என்ற சொல்வது தவறாம். தமிழ் இனத்தின் அடிமை நிலையை உணர்த்தி, இந்தி ஆதிக்க சக்திகளுக்கு எதிரான விடுதலைப் போரில் தமிழினத்தை பங்கு பெறச் செய்வது தவறு என்றால், அதைத் தவறு என்று சொல்லும் ம.க.இ.க.வினரின் குரல் யாருடையது என்று நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம்.

 ஆக, ம.க.இ.க.வின் நோக்கமும் குரலும் பின்வருவதாகத் தான் உள்ளது. இந்தியத் தாய்த்திருநாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ரசிய - அமெரிக்க மேல்நிலை ஏகாதிபத்தியங்கள் மற்றும் பிற ஏகாதிபத்தியங்கள், தரகு அதிகார வர்க்க முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்குகின்ற புதிய ஜனநாயகப் புரட்சி’. இதற்காகத் தான் தேசிய இன விடுதலை கோரும் தமிழ்த் தேசியத்தை எதிர்க்கிறார்கள். தம் தேசியத்திற்கு ‘புதிய ஜனநாயக புரட்சி’ செய்ய, தமிழ்த் தேசத்தில் ஆள் பிடிக்கிறார்கள். ம.க.இ.க.வினரே, உங்களது ‘இந்தியத் தாய்த்திருநாட்டிற்கான’ புரட்சிக் கனவை நிறைவேற்ற, உங்களைப் போலவே இட ஒதுக்கீடு வேண்டாமெனவும், புலிகள் பாசிஸ்டுகள் எனவும் முழக்கமிடும் பார்ப்பன சக்திகள் நிறைந்த இந்தி மாநிலங்களுக்குச் சென்று ஆள்பிடியுங்கள். ‘இந்தியா’ என்ற கட்டமைப்பே பார்ப்பன பனியாக்களின் இந்தி ஆதிக்க சக்திகளின் வேட்டைக்காடு என்று வரையறுத்த பெரியாரின் சுயமரியாதை மண்ணாண தமிழ் மண்ணில், நின்று கொண்டு ‘இந்தியத் தாய்த்திருநாட்டின்’ முன்னேற்றத்திற்காக புரட்சி செய்ய ஆள் பிடிக்காதீர்.

 ம.க.இ.க.விற்கு வேண்டுமானால் ‘இந்தியா’ தாய்த்திருநாடாக இருந்து விட்டுப் போகட்டும். நமக்கு ‘இந்தியத் தாய்த்திருநாடு’ பற்றி எந்தக் கவலையும் இல்லை. பா.ச.க. உள்ளிட்ட பார்ப்பன பாசிஸ்ட்களும் ம.க.இ.க.வை போலவே ‘இந்தியத் தாய்த்திருநாடு’ என்று அணிவகுக்கிறார்கள் என்பதும் நமக்கு ஏனோ மண்டையில் எழுகிறது. நமது கவலையெல்லாம், ‘இந்திய தாய்த்திருநாடு ‘ என்ற பெயரில் தமிழினத்தின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போடுவதை எதிர்த்து தானே தவிர, ‘இந்தியத் தாய்த்திருநாட்டின்’ முன்னேற்றம் குறித்து அல்ல. அதிலும் பாருங்க, ம.க.இ.க. வின் ‘இந்தியத் தாய்திருநாடு’ முன்னேறுவதற்கு முட்டுக்கட்டையாக சாதியும், பார்ப்பனியமும் இல்லை என்பார்களாம். ஆனால், சாதியும் பார்ப்பனியமும் முக்கிய எதிரிகள் என வரையறுக்கும் நாம் தான் இவர்களது கண்களுக்கு ஆதிக்க சாதி வெறியர்களாக தெரிகிறோமாம். அடேங்கப்பா..! என்னே ஓர் ‘அதிபுத்திசாலித்தனம்’!.

ம.க.இ.க. தனது ‘இந்திய தாய்த்திருநாட்டை’ கடைசி வரை கட்டி அழுது கொண்டிருக்க நாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. தமிழ் அன்னையை விடுதலை செய்து விட்டு, ‘இந்திய தாய்த்திரு’நாட்டை கட்டி அழுங்கள் என்று தான் சொல்கிறோம்.

 ம.க.இ.க.வினர் அவர்களே கூறுவது போல ‘மருதையன், பார்ப்பனத்தலைமை, புலியை எதிர்ப்பவர்கள், தமிழ் விரோதிகள், இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள்’ என அவர்களது ஒருபகுதி தான் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாம். எனவே மீதம் உள்ளவற்றையும் அம்பலப்படுத்துமாறு எமக்கு மறைமுகமாக வேண்டுகோள் விடுப்பது போலுள்ளது அவாகளது கூற்று. கவலை வேண்டாம். நாம் இருக்கிறோம். அவர்களது அவ்விருப்பத்தை நிறைவேற்ற நாம் தயாராகவே இருக்கிறோம். இந்திய உளவுத்துறை வங்கதேச விடுதலையின் போது உருவாக்கிய ‘முக்தி வாகினி’ போன்ற ‘புரட்சியாளர்’ வேடமிட்ட போலி விடுதலைக் குழுக்களாகவே இவர்கள் நமக்குத் தென்படுகின்றனர். எனவே, ம.க.இ.க.வினரின் கடந்த கால புரட்டுகளை, அவர்கள் கடந்து வந்த ‘புரட்சி’ப் பாதையை, ம.க.இ.க.வின் ‘இந்திய ‘லட்சியக் கனவு’களை அம்பலப்படுத்தியாக வேண்டும். அதனைத் தொடர்ந்தும் செய்வோம். (இதற்குத் தகுந்த சான்றுகளையும், ம.க.இ.க.வினரின் கடந்த கால புரட்டுகளைப் பற்றிய தகவல்களையும் அறிந்தவர்கள் எமது மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுமாறும் அழைக்கிறேன்).

 கீற்று இணையதளம், பெரும் எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டும் வெளியிடாமல், புதிய எழுத்தாளர்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும் ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதனால் தான் ஒரு சாதாரண மனிதனான எனது கருத்துகளும் இதில் பதியப்பட, விவாதிக்கப்பட முடிகிறது. இந்த தளத்தை, பயன்படுத்திக் கொண்டதால், என்னைத் திட்டுவதற்கு பதில் ‘‘கீற்று’ இணையதளத்திற்கு ‘உள்நோக்கம்’ உள்ளது’ என்று ம.க.இ.க.வினர் புகைவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒரு வேளை ‘கீற்று’ இணையதளம் தமிழ்த் தேசிய ஆதரவு எழுத்துகளை மட்டுமே வெளியிட்டால், ம.க.இ.க.வினர் கூறுவது போல் ‘உள்நோக்கம்’ இருக்குமோ என சந்தேகிக்கலாம். ஆனால், ம.க.இ.க.வினரின் பதில்களையும், பின்னூட்டங்களையும் கூட ‘கீற்று’ இணையம் பிரசுரித்தே வந்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. இது தெரிந்தும் ‘உள்நோக்கம்’ இருக்கிறது என்று ம.க.இ.க.வினர் உளறினால், அந்த உளறல் தான் ‘உள்நோக்கம்’ கொண்டதென நாம் நம்ப வேண்டுயிருக்கும்.

- அதிரடியான் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It