அறிவியல்   நடுநிலையானது,  அதனைப் பயன் படுத்துவோரைப் பொருத்தே அதன் நன்மை தீமை இருக்கிறது என்ற கருத்து பரவலாக உள்ளது.

சிக்கலற்ற, கீழ்நிலை அறிவியலைப் பொருத்த அளவில் இக்கருத்து சரியானதே. ஆனால், சிக்கலான, உயர்நிலை அறிவியல் அப்படிப்பட்டதன்று. அது நடு நிலையானதன்று. அறிவியல் என்ற அளவிலேயே அதற்குப் பக்கச்சார்பு உண்டு. அந்த அறிவியலை வல்லரசு பயன்படுத்துகிறதா, பன்னாட்டு முதலாளிகள் பயன்படுத்துகிறார்களா, இந்தியப் பெரு முதலாளிகள் பயன்படுத்துகிறார்களா என்பதைச் சாராமலேயே அறிவியல் என்ற அளவிலேயே உயர்நிலை அறிவிய லுக்குச் சார்பு நிலை உண்டு.

இச்சிக்கலைப் புரிந்து கொள்வதும், அதனை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தீர்மானிப்பதும் இன்றைய உலகில் முகாமையான ஒன்றாக வளர்ந் துள்ளது.

எடுத்துக்காட்டாக மீத்தேன் திட்ட சிக்கலைப் பார்க்கலாம். காவிரிப் படுகையில் மீத்தேன் எடுப்புத் திட்டத்தை உழவர்களும், பல்வேறு அரசியல் இயக்கங்களும் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இது குறித்து சட்டமன்றத்தில் வினாக்களும், விவாதங்களும் எழுந்தன.

இதற்கு 23.02.2015 அன்று சட்டமன்றத்தில் பதிலளித்த தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் “மீத்தேன் திட்டத்தை நிறுத்தி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்ட நிலையிலும், ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனம் பெற்றிருந்த பெட் ரோலிய ஆய்வு உரிமம் காலாவதியாகிவிட்ட நிலையி லும் அதைப்பற்றி கவலை தெரிவிப்பது செத்த பாம்பை அடிப்பது போலத் தான்” என்று கூறினார்.

இது ஓரளவு ஆறுதல் அளிக்கிற செய்தி என்றாலும், ஆபத்து முழுமையாக விலகிவிடவில்லை என்பதை மீத்தேன் எடுப்புத் திட்டத்தை எதிர்க்கும் செயல்பாட் டாளர்கள் அறிவார்கள்.

ஏனெனில், இந்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. காவிரிப் படுகையில் மீத்தேன் எடுப்பதற்கும், ஷேல் எரி எண்ணெய் மற்றும் எரிவளி எடுப்பதற்கும் திட்டம் தீட்டி உள்ளது. இந்திய அரசு கடந்த 2013 செம்படம்பர் 24-ஆம் நாளிட்ட அறிவிப்பின் மூலம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு இதற்கான இசைவு வழங்கியுள்ளது.

ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்ப ரேசன் நிறுவனத்தைப் போலவே ஓ.என்.ஜி.சி.யும் நீரியல் விரிசல் முறையிலேயே ((Hydraulic Fracturing)) நிலக்கரிப் படுகை மீத்தேனை யும், 6,000 அடிக்குக் கீழ் பாறை படிமங்களில் பதுங்கியுள்ள ஷேல் என்ற ஒருவகை பெட்ரோ லிய எரி எண்ணெய்யையும் எடுக்க உள்ளது. பல இலட்சம் லிட்டர் ஆற்று நீரை 60 வகை நச்சு வேதிப் பொருள் களோடு மிகை வேகத்தில் பூமிக்குள் செலுத்தி அடியில் உள்ள பாறை களுக்கிடையில் கிடை மட்டத்தில் விரிசல்கள் ஏற்படுத்தி நிலக்கரிக் படிமங்களுக்கிடையில் உள்ள மீத் தேன் எரி வளியை வெளியே எடுக்கும் தொழில் நுட்பமே இது.

ஒரு கிணற்றுக்கு 75,000 லிட்டர் மாசு கலந்த நீர் என்ற விகிதத்தில் நாள் தோறும் பல இலட்சம் லிட்டர் நிலத்தடி நீர் உயிர்க் கொல்லி மாசுகளோடு கால்வாய் களில் வெளியேற்றப்படும்.

இதற்கு மேல் 6,000 அடிக்குக் கீழே தோண்டி பாறை பெட் ரோலை (ஷேல் எரி எண்ணெய்) வெளியே எடுப்பார்கள். உள் செலுத்தப்பட்ட நச்சு வேதிப் பொருள்களோடு கலந்து கரும் பழுப்பு நிறக் கூழ்மமாக வெளிவரும் இந்தப் பாறை பெட்ரோலியத்தை தூய்மைப்படுத்தி மாசுகளைத் தண்ணீரில் கலந்து பெருமளவுக்கு வெளியேற்றுவார்கள்.

இதைச் செய்வது தனியார் நிறுவனமல்ல, அரசு நிறுவனம் தான்.

ஒருவேளை இங்கு நடப்பது நிகரமை ஆட்சியாக இருந்தால் கிடைக்கும் பெட்ரோலை பொது போக்குவரத்துக்கும், மக்களுக்கும் குறைந்த விலையில் வழங்கவும் கூடும்.

அதாவது இப்புதிய அறிவியல் தொழில் நுட்பத்தின் மூலம் பெறப் படும் இயற்கை வளம் தனியாரால் இலாபமாக உறிஞ்சப் படாமல் அனைத்து மக்களுக்கும் வழங்கப் படுகிறது என்று கொள்வோம்.

அப்போதும் இந்த அறிவியல் இயற்கைக்கும், மக்களுக்கும் எதிரா னது தான் என்பதில் ஐயமில்லை.

நீரியல் விரிசல் என்ற இந்த அறிவியலைத் தனியார் முதலாளி பயன்படுத்தினாலும், சோசலிச அரசு பயன்படுத்தினாலும் எண் ணெய்க் கிணறு அமையும் பகுதி யில் உள்ள மக்களுக்கும், சுற்றுச் சூழ லுக்கும் அழிவுதான் ஏற்படும்.

இங்கு பயன்படுத்தப்படும் அறி வியல் அதன் அளவிலேயே மக்கள் பகைத் தன்மை கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

இதேபோல் இன்னொன்றை பார்க்கலாம் மரபீனி மாற்ற விதை என்பதே அது. இவற்றுள் இன்று அதிகமாக விவாதிக்கப்படும் பி.ட்டி. நெல்லை எடுத்துக் கொள்வோம்.

அமெரிக்கப் பன்னாட்டு பகாசுர நிறுவனமாக மொன்சான் டோ நிறுவனத்திற்குச் சொந்த மானதே பி. ட்டி. நெல், பி. ட்டி பருத்தி, பி. ட்டி கத்தரி போன்றவை யாகும்.

ஒரு உயிரியிலிருந்து மரபீனி களைப் பிரித்தெடுத்து, வேறொரு உயிரிக்குள் செலுத்தி அந்த உயிரிக்கு சில புதிய குணங்களை உருவாக்கும் முயற்சிதான் மரபீனி மாற்று தொழில்நுட்பம் என்பதை அனை வரும் அறிவர். இந்தத் துறையில் பி.ட்டி. (Bt) என சுருக்கமாக அழைக் கப்படும் பேசில்லஸ் துரிஞ்செனி சிஸ் பாக்டீரியாவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் நெல், பருத்தி போன்றவையே பி.ட்டி. வகை விதை களாகும்.

பி.ட்டி பாக்டீரியா இனத்திற் குள்ளேயே 30 துணை வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.  அவற் றுள் பேசில்லஸ் துரிஞ்செனசிஸ் குர்ஸ்டாக்கி என்ற பாக்டீரியா உருவாக்கும் Cry I Ab, Cry I Ac  என்ற நச்சுகள் தண்டுதுளைப்பான், இலை சுருட்டுப் புழு ஆகியவற்றை கொல்லவல்லவை. பி.ட்டி. குர்ஸ் டாக்கி பாக்டீரியாவிலிருந்து மேற் சொன்ன நச்சுகளை சுரப்பதற்கு பொறுப்பான மரபீனிகளைப் பிரித்தெடுத்து நெல் விதைக்குள் செலுத்தி உருவாக்கப்படும் மரபீனி மாற்ற நெல்தான் பி. ட்டி நெல். இதைப் போல் உருவாக்கப்படுபவை தான் பி. ட்டி பருத்தி, பி. ட்டி கத்தரி போன்றவையும் ஆகும்.

பி.ட்டி அரிசி உண்பவர்களுக்கு ஒவ்வாமை, குடல் புற்றுநோய், மலட்டுத்தன்மை உள்ளிட்ட பல நோய்கள் வரும் ஆபத்து உண்டு. பி.ட்டி உணவு தானியங்களின் தீய விளைவுகள் இன்னும் முழுமை யாகக் கண்டறியப்படவில்லை.

பி. ட்டி பயிர்கள் வேறுசில புதிய பூச்சித் தாக்குதல்களுக்கு கூடுதலாக உள்ளாகின்றன. பி. ட்டி மரபீனி மாற்ற விதைகளுக்கு மொன் சான்டோ நிறுவனம் காப் புரிமைப் பெற்றுள்ளதால் விதைச் சந்தையில் அது முற்றுரிமை நிறுவனமாக உள்ளது. இம்மரபீனி மாற்று விதைகளுக்கு மொன் சான்டோ வைத்தது தான் விலை. அது மட்டு மின்றி வேளாண்மை யில் பன்மைத் தன்மையை சீர் குலைத்து உயிர்மச் சூழலில் இது நீண்டகால தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது.

இந்த பி. ட்டி விதையை மொன் சான்டாவோ அல்லது வேறு தனியார் நிறுவனமோ உரிமையாக வைத்திடாமல் அது ஒரு வேளாண் பல்கலைக் கழகத்துக்கோ, அர சுக்கோ சொந்தமானதாக கருதிக் கொள்வோம். அந்த அரசு நிகரமை அரசாக இருந்து மலிவு விலையில் பி.ட்டி விதைகளை உழவர்களுக்கு வழங்குவதாகக் கொள்வோம். அப்போதும் அதன் தீய விளைவு கள் மாறப் போவதில்லை.

இங்கும் மரபீனி மாற்ற அறி வியல் அதைப் பயன்படுத்துவர் யார் என்பதை சார்ந்திராமல் சூழலுக்கும், மக்களுக்கும் பகையானதாகவே இருப்பதைப் பார்க்கலாம். இந்த உயர் அறிவியல் தன்னளவிலேயே மக்கள் பகைத்தன்மை உடைய தாகவே இருக்கிறது.

அணு உலை, நியூட்ரினோ திட்டம் போன்றவையும் இவ் வாறே.

அறிவியலானது எல்லா நிலை யிலும் சார்பற்றதாகவோ, நடுநிலை யானதாகவோ இருப்பதில்லை என்பதை இதன் மூலம் உணரலாம்.

அதாவது, இந்த அறிவியலுக்கு ஓர் அரசியல் இருக்கிறது. அறிவியல் என்ற அளவிலேயே அதற்கு மக்கள் பகை அரசியல் இருக்கிறது.

கத்தியை வைத்து காய்கறியும் வெட்டலாம், கழுத்தையும் வெட் டலாம். அதைப் பயன்படுத்து பவரைப் பொறுத்து இருக்கிறது என்ற வாதம் உயர் அறிவியலுக்கு பொருந்தாது. உயர் அறிவியலுக்கு அதனளவிலேயே அரசியல் உண்டு.

இந்தச் சிக்கலை எப்படி எதிர் கொள்வது என்பது இன்னொரு சிக்கல்.

அறிவியல் என்பது எதிரெதிர் கருத்தாடல்கள், விவாதங்கள் மூலமாகத்தான் வளர்கிறது என்றா லும், அறிவியலுக்கும், சனநாயகத் திற்கும் ஓர் முரண் நீடித்துக் கொண்டே இருக்கிறது. அறிவிய லாளர்கள் தங்களுக்குள் எதிரெதிர் கருத்துகளை விவாதிக்க முன்வந் தாலும், இந்த வளையத்திற்கு அப் பால் உள்ள பொது மக்களிடம் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து அல்லது கருதுகோள்கள் குறித்து விவாதிக்க விரும்புவ தில்லை. பெரும்பாலான அறிவிய லாளர்கள் தங்கள் துறைக்கு அப்பால் உள்ள அறிவாளர்கள் உள்ளிட்ட பொது மக்களை கீழாக வைத்து பார்க்கிற மனநிலை யிலேயே உள்ளார்கள். இவர்களுள் அறிவின் அகங்காரம் தலைக்கேறி யவர்களும் உண்டு.

குறிப்பாக மேற்சொன்னவை போன்ற உயர் அறிவியல், மக்கள் நலனைப் பாதிப்பதாக ஐயம் எழும் பொழுது இந்த முரண்பாடு பெரும் சிக்கலாக உருவெடுக்கிறது. உயர் நுட்ப அறிவியலறிவு இல்லாத மக்கள் தங்கள் அச்சத்தை வெளிப் படுத்தும் போது அதனைப் பெரும் பாலான அறிவியலாளர்கள் துச்ச மாக மதிக்கும் போக்கே மேலோங்கி யுள்ளது. அறிவியல் வளர்ச்சிக்கு இடையூறான வெற்றுக் கூச்சலா கவே இவற்றை பார்க்கிற அறிவா ளர்களே அதிகம். அடிப்படையற்ற அச்சங்களுக்காக அறிவியல் ஆய்வை ஆண்டுக் கணக்கில் தள்ளிப் போட முடியுமா அல்லது அவற்றின் பலன்கள் கிடைக்காமல் தள்ளிப்போட முடியுமா என்ற கேள்வியை இந்த அறிவாளர்கள் எழுப்புகிறார்கள்.

மக்கள் சார்ந்த அறிவியலா ளர்கள் எண்ணிக்கை பெருகுவது இதற்கு அடிப்படை தேவையா கிறது. அவர்கள் ஆய்வு மன்றங்க ளில் மக்கள் நலன் சார்ந்த எதிர்க் கருத்துகளை அறிவியல் அடிப் படையில் எடுத்து வைத்து கருத்துப் போராட்டம் நடத்த வேண்டும்.

ஆயினும் இது எல்லா நேரத் திலும் வாய்ப்பதில்லை. எனவே, இதற்குப் பொருத்தமான பொறிய மைவு நிறுவப்படுவது தேவையாக இருக்கிறது.

பெரிய கட்டமைப்புகளுக்கு, ஆய்வு நிறுவனங்களுக்கு, தொழில் கூடங்களுக்கு சூழலியல் மதிப்பீட்டு அறிக்கை வற்புறுத்தப்படுவது, மாசுக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள், பசுமை தீர்ப்பாயங்கள், மக்கள் கருத்து கேட்பு நிகழ்வுகள் போன் றவை இத்தகைய பொறியமைவுகள் தான்.

ஆயினும், இப்பொறியமைவுக ளும், இவற்றுக்கான சட்டங்களும் வலுவானதாக அமைவது இன்றிய மையாதது. இப்பொறியமைவுகளில் ஒவ்வொரு துறையிலும் கல்வித் தகுதி பெற்ற சூழலியல் ஆர்வ லர்கள் அமர்த்தப்படுவது கட்டா யத் தேவையாகும்.

பள்ளிகளிலிருந்து உயர்கல்வி நிறுவனங்கள் வரை செயலூக்க முள்ள அறிவியல் மன்றங்கள் நிறுவப்பட்டு பற்றற்ற முறையில் திறந்த விவாதங்கள் நடப்பது வழமையான ஒன்றாக மாற்றப்பட வேண்டும்.

இவையெல்லாவற்றிற்கும் அக்கறையுள்ள அறிவாளர்களால் வழிநடத்தப்படுகிற சூழலியல் விழிப்புள்ள மக்கள் இயக்கங்கள் வலுப்பெறுவது அடிப்படை நிபந்தனையாகும். 

உயர் அறிவியல் என்பது எந்த வர்க்க அரசின் கையில் இருந்தா லும் அதற்கென்று தனித்த எதிர் வர்க்கத்தன்மை அதாவது மக்கள் பகைத்தன்மை உண்டு என்ற மெய்யியல் புரிதல் இதற்கு முன் நிபந்தனையாகும்.

Pin It