தமிழில் கவிதை,சிறுகதை எழுதிக்கொண்டிருந்த- நவீன இலக்கியப் பரிச்சயமுள்ள இளைஞர் தாமிரா இயக்கிய படம் ரெட்டச்சுழி. இயக்குநர் சங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வந்துள்ல படம். இமயமும் சிகரமும் இணைந்து கலக்கியுள்ள படம் என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறம்.  கூத்துப்பட்டறையில் பயின்ற ஆரி கதாநாயகன். அங்காடித்தெரு, கற்றது தமிழ் நாயகி அஞ்சலி கதை நாயகி. கார்த்திக் ராஜாவின் இசை. சினிமா பற்றிய ஆழ்ந்து விரிந்த ஞானம் கொண்ட ஒளிப்பதிவாளர் செழியன்.  கருணாஸ், இளவரசு போதாதென்று 22 குழந்தைகள். இவ்வளவு இருந்தும் ஒரு அழுத்தமான படமாக ரெட்டச்சுழி அமையாமல் போனது சோகம்தான்.

கட்டிறுக்கமான கதை ஒன்று இல்லாமல் மற்ற என்ன இருந்தாலும் படம் அடி வாங்கும் என்பதற்கு இன்னொரு உதாரணமாக ரெட்டச்சுழி அமைந்துவிட்டது.  ஒரு உழைப்பாளியான சைக்கிளில் போகும்  கம்யூனிஸ்ட்க்கும் ஒரு நிலப்பிரபுவான காரில் போகும் காங்கிரஸ்காரருக்கும் இடையிலான 40 ஆண்டுப் பகைதான் கதை என்று சொல்ல நினைக்கும்போதே இல்லை இல்லை இரு பகைக்குடும்பங்களில் வாழும் ஒரு காதல் ஜோடியை 22 குழந்தைகள் சேர்ந்து திட்டம் தீட்டிச் சேர்த்து வைப்பதுதான் கதை என்று ஒரு எண்ணம் வந்து குறுக்கிடும்போதே அதெல்லாம் ஒன்றுமே இல்லைசார் குழந்தைகளை வைத்து ஒரு நீண்ட தொலைக்காட்சி  சீரியல்  எடுக்க நினைத்ததை அப்படியே ஒரு முழுநீளத்திரைப்படமாகத் தந்துவிட்டார்கள் என்று தியேட்டரில் ஒருவர் அடித்த கமெண்ட் வந்து நடுவில் நிற்கிறது. என்னதான் சொல்லப்போகிறோம் என்கிற தெளிவு இல்லாதது திரைக்கதையின் பெரிய ஓட்டை.

அடுத்து 22 குழந்தைகள் படத்தில் வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் தாய் தகப்பன் என்று யாருமே படத்தில் இல்லை. இரு முகாம்களாக இரண்டே வீடுகளில் அவர்கள் இரண்டு கூட்டங்களாகவே இருந்துவிடுகிறார்கள். படத்தில் நம்பகத்தன்மை குறைவுக்கு இது ஒரு உதாரணம். கலை முதலில் வாசகனை அல்லது ரசிகனை இது உண்மை என்று நம்ப வைக்க வேண்டும்.

சிரிப்பு போலீஸ், சிரிப்புத் திருடன், சிரிப்பு வில்லன் மாதிரி இப்படத்தில் பாரதிராஜா ஒரு சிரிப்புக் கம்யூனிஸ்ட்டாக வருகிறார். பூர்ஷ்வா,வர்க்கம், வன்கொடுமை,முதலாளித்துவம் என்று ஊரில் யாருக்கும் புரியாத பாஷையில் பேசித்திரிகிறார். யாருக்காவது வகுப்பெடுக்கும் அரிப்போடு அலைகிரார்.  பால்காரன் கிடைத்தாலும் விடுவதில்லை. அதேபோல பாலச்சந்தர் ஒரு சிரிப்புக் காங்கிரஸ்காரராகச் சித்தரிக்கப்பட்டிருந்தால் அரசியல் நகைச்சுவையாவது மிஞ்சியிருக்கும். ஒரு சமநிலை இருப்பதாக நாம் எண்ணிக்கொள்ளலாம்.  காங்கிரஸ்காரர் ஒரு நிலப்பிரபுவாக மட்டுமே வருகிறார். காங்கிரஸ் கொள்கைகள் தத்துவமெல்லாம் கம்யூனிஸ்ட் கொள்கை கேலி செய்யப்பட்டது போல கேலியும் செய்யப்படவில்லை.

ஒரு கம்யூனிஸ்ட்டை சிரிப்புக்கம்யூனிஸ்ட்டாகச் சித்தரிக்கக்கூடாது என்று நாம் கூறவில்லை. ஒரு கலைஞனின் கேலிப்பொருளாக யார் வேண்டுமானாலும் ஆகலாம். மலையாளத்திலும் கூட கம்யூனிஸ்ட் கதாபாத்திரங்கள் நகைச்சுவைப்பாத்திரங்களாக வந்ததுண்டு. அதை நாம் ரசித்துச் சிரித்ததும் உண்டு. ஆனால் அதையும் ஒழுங்காகச் செய்யத்தெரியவில்லையே தம்பி தாமிராவுக்கு என்பதுதான் வருத்தம் நமக்கு. இளம் கம்யூனிஸ்ட்டாக தேர்தலில் போட்டியிட்டு பணபலமும் அதிகார பலமும் உள்ள நிலப்பிரபுவைத் தோற்கடிக்கும் சீரியஸ்ஸான கதாபாத்திரமாக  முன்கதையில் சித்தரிக்கப்படும் கம்யூனிஸ்ட் பிறகு திடீரென்று எப்படி நகைச்சுவைப்பாத்திரமானார் என்பது விளங்கவில்லை. காதலி தற்கொலை செய்து கொள்கிறாள். பகை வருகிரது. சோகம் வருகிரது. சோகப்பாடல்கள் வருகின்றன. ஆனால் நமக்கு எதுவுமே ஆகவில்லை. துளியும் மனதில் ஒட்டாத படமாக இதை எடுத்துவிட வேண்டும் என்று கடுமையான முயற்சி நடந்துள்ளது.

தாமிராவிடம் கலை நுட்பங்கள் உண்டு என்பதற்கான ஆதாரங்கள் பல காட்சிகளில் தெறித்து விழுகின்றன. காட்சி ஊடகத்தின் தன்மையை அறிந்தவராகவே தாமிரா இருக்கிறார். பல காட்சிகள் அற்புதமான கவிதை போலப் படமாக்கப்பட்டுள்ளன. செழியனைப் பாராட்ட நிறைய இடங்கள் உண்டு. 22 குழந்தைகளும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். யாரும் சோடை போகவில்லை. எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து முழுமைப்படுத்தி பாத்திரங்களை உருவாக்கி வளர்த்தெடுத்து ஒவ்வொரு பாத்திரத்துக்குமான உரிய பரிணாமத்தோடு அவற்றைப் படத்தில் வாழ அனுமதித்து. .  . . .   என்று இதுபோலப் பல முக்கியமான விஷயங்களில் தாமிராவின் உழைப்பு அல்லது பார்வை போதவில்லை என்று சொல்லத்தோன்றுகிறது. பல காட்சிகள் பாண்டியராஜனின் பசங்க, சசியின் பூ,,மணிரத்தினத்தின்  அஞ்சலி  படங்களை நினைவுபடுத்துகின்றன.  சில இடங்களில் நல்ல நகைச்சுவை வெடிக்கிறது. அதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். நகைச்சுவை உணர்வு நிரம்பிய கலைஞன்தான் தாமிரா என்பதை பாராட்டலாம்.

ஆனாலும் என்ன செய்ய மொத்தத்தில் ஒரு சின்னப்புள்ளத்தனமான படமாக முடிந்துவிட்டது. அடுத்த படத்தில் இன்னும் ஒருங்கிணைந்த நிலையில் வெற்றிப்படம் தர வாழ்த்துகிறோம்.

 -சதன்

Pin It