உலக இலக்கிய வரலாற்றில் தமிழகத்தில்தான் முதன்முதலாக ஒரு படைப்பாளனின் எழுத்துக்கான பதிப்புரிமை அரசுடைமை செய்யப்பட்டு, பிறகு பொதுவுடைமை ஆக்கப்பட்டது. காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, இரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட எவருடைய எழுத்துகளுக்கும் கிடைத்திடாத இந்தத் தனிப்பெருமை மகாகவி பாரதிக்கு எப்படிக் கிடைத்தது? இதற்கு அடிகோலிய நிகழ்வுகள், நடந்தேறிய முயற்சிகள், இந்நிகழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட அனைத் தையும் வரலாற்று ஆவணங்களின் துணைகொண்டு தான் சார்ந்த வரலாற்றுத்துறைப் பார்வையுடன் இந்நூலை ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதியுள்ளார். மகாகவி பாரதியின் படைப்புகள் நாட்டுடைமை யானதைப் பற்றி இருக்கும் பல்வேறு வாய்மொழிக் கதைகளைப் புறந்தள்ளி, வரலாற்று மூலங்களின் வெளிச்சத்தில் துல்லியமான தரவுகளைக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது என்பது இங்குக் கவனத்தில் கொள்ளத்தக்கது.

bharathi copyrightபாரதியின் படைப்புகள் பொதுவுடைமை ஆக்கப் படுவதற்கான தேவை எப்படி எழுந்தது என்பதை மிக விரிவாக இந்நூலாசிரியர் விவரிக்கிறார். பாரதி தான் வாழ்ந்த காலத்தில் அவரது பாடல்களுக்கு இருந்த சமூக, அரசியல் மதிப்பு அவரது காலத்துக்குப் பிறகு சுதந்திரப் போராட்டம் உச்சம் பெற்ற காலகட்டத்தில் பல மடங்காக உயர்ந்தது. மகாகவி பாரதியின் பாடல்களைப் பயன்படுத்துவதற்கான தேவை சமூகத்தில் பல தரப்பினருக்கும் பெருகுகிறது. இந்தச் சூழலில்கூட அவரது எழுத்துகளைப் பொதுவுடைமை ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை எழவில்லை. இச்சிந்தனை எழுந்ததற்குக் காரணம் ஒரு வழக்கு. திரைப்படம் ஒன்றில் பாரதியின் பாடலை டி.கே.எஸ்.சகோதரர்கள் பயன்படுத்தியதை எதிர்த்து ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தொடுத்த வழக்கு. இதனைப் பற்றி பிறகு விரிவாகப் பார்ப்போம்.

மகாகவி பாரதி தான் வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது படைப்புகள் வெகு குறைவு. பாரத ஜன சபை எனும் காங்கிரஸ் இயக்க வரலாற்றைப் பற்றிய மொழிபெயர்ப்பைத் தவிர்த்து ஏனைய பிற நூல்கள் யாவும் ஓரணா, இரண்டணா என்ற அளவிலேயே விற்கப் பட்டன. பாரதியின் மறைவுக்குப் பின் செல்லம்மா பாரதி தனது அண்ணன் அப்பாத்துரை ஐயருடன் இணைந்து பாரதி ஆச்ரமம் என்ற பதிப்பகத்தைத் தொடங்கி அதன் மூலம் சுதேச கீதங்களை இரண்டு பாகங்களாக வெளியிட்டார். இதற்குப் பெரும் பொருள் விரயம் செய்யப்பட்டது. இந்தி பிரச்சாரச் சபையின் பிரமுகராக இருந்த ஹரிஹர சர்மா என்பவர் புத்தக விற்பனைக்கு உதவ முன் வந்தார். 1924 இல் பாரதியின் இளைய மகள் சகுந்தலாவின் திருமணத் திற்குப் பணம் தேவைப்பட்டது. இதனால் பாரதி எழுத்துகளின் பதிப்புரிமை அவரது தம்பி சி.விஸ்வ நாத ஐயரிடம் அடகு வைக்கப் படுகிறது. பிறகு பாரதியின் பதிப் புரிமையை அடகுவைத்து வாங்கிய கடன் திருப்பிச் செலுத்தப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கட்டத்தில் விஸ்வநாத ஐயரே பாரதியின் எழுத்துகளை வெளியிடலானார். இதற்காக பாரதி பிரசுராலயம் என்றொரு பதிப்பகத்தை உருவாக்கி அதன் பங்குதாரர்களாக ஹரிஹர சர்மா மற்றும் பாரதியின் இளைய மகளின் கணவர் நடராஜன் ஆகியோரைக் கொண்டு தொடங்கினார். இதன் பின்னணியில் 1928 இல் பாரதியின் நூல்களுக்கு அரசாங்கம் தடை விதித்தது. நூல்கள் யாவும் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட தால் பொருள் இழப்பு ஏற்பட்டது. இருந்தபோதும் இதனையட்டி நிகழ்ந்த போராட்டங்களும் சட்ட மன்ற விவாதங்களும் பாரதியின் நூல்கள் பற்றி மக்களிடையே ஒரு பரபரப்பையும் ஆர்வத்தையும் உண்டாக்கி பெரும் விளம்பரமாக அமைந்தது. மக்களின் போராட்டத் தினால் பாரதியின் எழுத்துகள் மீதான தடையை அரசாங்கம் திரும்பப் பெற்றது. அரசால் பறி முதல் செய்யப்பட்ட நூல்கள் யாவும் ‘அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப் பட்டது’ என்று முத்திரையிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

இதன் பிறகு 1931இல் பாரதி பிரசுராலயம் பாரதியின் முழுப் பதிப்புரிமையையும் செல்லம்மாள் பாரதியிடம் 4000 ரூபாயை தவணையில் செலுத்தி பெற்றுக்கொண்டது. காவல்துறையினர் மற்றும் அரசாங்கக் கெடுபிடிகளைத் தாண்டி பாரதியின் பல்வேறு நூல்களைத் தேடி சி.விஸ்வநாத ஐயர் பதிப்பித்தார். விஸ்வநாத ஐயரின் இச்சீரிய பணி குறிப்பிடத்தக்கது. பாரதி பிரசுராலயத்தின் பங்குதாரர்களாக இருந்த நடராஜன் மற்றும் ஹரிஹர சர்மா ஆகியோர் முறையே ஒவ்வொருவராக பதிப்பகத்திலிருந்து விலகிக் கொண்டனர். இதன்பிறகு பதிப்பகத்தின் முழுப் பதிப்புரிமையும் விஸ்வநாத ஐயருக்கே உரியதாயிற்று. இதன் பின்னணியில் 1934 ஆம் ஆண்டு பாரதி பிரசுராலயம் ஸ§ராஜ்மல் லல்லுபாய் கம்பெனிக்கு “இசைத் தட்டுகள், பேசும் படங்கள் மற்றும் பிற ஒலிபரப்புக் கருவிவழிப் பதிவுகளைச் செய்யும் உரிமை” ஆகியவற்றை 450 ரூபாய்க்கு கைமாற்றியது. ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தாம் தயாரித்த ‘நாம் இருவர்’ திரைப்படத்தில் பாரதி பாடல்களைப் பயன்படுத்த முயன்றபோது, அதன் முழு ஒலிப்பதிவு உரிமையையும் 9,500 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொண்டார்.

மேற்கண்ட “பாரதி நூல்களின் பதிப்பு வரலாறானது பாரதி எழுத்துகளின் நாட்டுடைமையாக்கத்தின் போக்கைத் தீர்மானித்தது” எனலாம். மகாகவி பாரதியின் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்பொழுது எழுந்தது. பாரதியின் மணிமண்டபத் திறப்பு விழாவில் பேசிய ப. ஜீவானந்தம் அவர்கள், “பாரதி இலக்கியம் மக்களின் பொதுவுடைமை என்றும் பாரதி நூல்களை விஸ்வநாத ஐயர் பொது வுடைமை ஆக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அவ்வாறு அவர் முன்வந்தால் தமிழ்மக்களின் நன்றி அவருக்கு என்றும் உரியதாகும்” என்றும் கூறினார். இதே கருத்தை பாரதியின் தம்பி போலத் திகழ்ந்த பரலி. சு.நெல்லையப்பரும் இதே விழாவில் பிரதிபலித்தார்.

ஒரு வக்கீல் நோட்டீஸ் பாரதியின் எழுத்துகளை நாட்டுடைமை ஆக்கும் பணியை முடுக்கிவிட்டது எனலாம். டி.கே.சண்முகம் அவர்கள் நாடகத்துறையில் முன்னோடி. அவ்வை சண்முகம் என்று பரவலாக அறியப்பட்ட அவரின் நிறுவனமே தமிழகத்தின் முதல் சமூகப் படமான மேனகையைத் தயாரித்தது. அவர்கள் உருவாக்கிய ‘பில்ஹணன்’ எனும் நாடகத்தைத் திரைப் படமாக்க முனைந்தபோது, பாரதியின் கண்ணன் பாட்டில் வரும், ‘தூண்டில் புழுவினைப்போல் - வெளியே, சுடர் விளக்கினைப் போல், நீண்ட பொழுதாக - எனது நெஞ்சம் துடித்ததடீ!’ எனும் பாடலை திரைப்படத்தில் இணைத்திருந்தார். அப்போது பாரதி படைப்புகளின் ஒலிபரப்பு உரிமையைத் தன் வசம் வைத்திருந்தவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். அவர் தன்னிடம் இருக்கும் பாடல் உரிமையைப் பயன் படுத்தினால் இழப்பீடாக ஐம்பதாயிரம் தரவேண்டும் என்று வக்கீல் நோட்டீஸில் அறிவுறுத்தியிருந்தார்.

ஒரே நாளில் பாரதியின் பாடல்கள் தனிநபரின் சொத்தாக இருக்கலாமா? என்று அவ்வை சண்முகம் அவர்கள் அன்றைய தமிழகத்தின் பிரதமராக(முதல்வர்) இருந்த ஓமந்தூர் பி.இராமசாமி ரெட்டியார், உணவு-சுகாதார அமைச்சர் ராஜன் ஆகியோருக்குக் கடிதம் எழுதினார். தமிழ்நாட்டின் அமரகவியைப் பெட்டியில் பூட்டிவைத்து வியாபாரம் நடத்த முயலும் வேடிக் கையை அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார். மேலும் இது சார்ந்து பாரதி விடுதலைக் கழகத்தின் முதல் கூட்டத்தை நாரண. துரைக்கண்ணனை தலைவராகக் கொண்டு நடத்தினார்கள். நெல்லையில் இவர்களோடு பரலி. சு.நெல்லையப்பர், பேராசிரியர் அ.சீனிவாசராகவன் ஆகியோர் பாரதியின் மனைவி, மகள் ஆகியோரை சந்தித்து, பாரதியின் எழுத்துகள் நாட்டுடைமை ஆவதில் தங்களுக்கு எவ்விதத் தடையு மில்லை என்பதை எழுத்துப் பூர்வகமாக எழுதிப் பெற்றார்கள். ‘தாங்கள் வறுமையில் வாடிவருவதால், அரசு தங்களுக்கு உதவ முன்வர வேண்டும்’ என்றும் பாரதி குடும்பத்தினர் வேண்டிக் கொண்டார்கள். மகாகவி பாரதியின் நூல்களின் பயனை முழுமையாக அனுபவித்திராத அவரது குடும்பத்தினர் நாட்டுடைமை யாக்குவதில் உடனே மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் ஆதரவளித்ததில் வியப்பேதுமில்லை. சட்டபூர்வமான உரிமை அவர்களிடம் இல்லை என்றாலும்கூட அவர் களின் ஒப்புதலும், நிலைமையும் தார்மீக பலமாக பாரதி நாட்டுடைமைக்குப் பயன்பட்டன. இச்சமயத்தில் நாரண.துரைக்கண்ணன் பாரதி நாட்டுடைமை யாத்திரைக்காகப் புறப்பட்ட வேளையில் நலிவுற்றிருந்த அவரின் ஒரே நான்கு வயது மகன், அவர் திரும்பி வருவதற்குள் மரணமுற்று எவ்வித செய்தியும் இன்றி அவனின் இறுதிச் சடங்குகள் நிகழ்ந்திருந்தன. இத்துயர நிகழ்வு மேலுமொரு உணர்வுப்பூர்வமான உத்வேகத்தை இயக்கத்துக்குத் தந்தது.

ஏ.வி.மெய்யப்ப செட்டியார் ‘பில்ஹணன்’ படத் தயாரிப்பில் தொடர்புடைய பிறரையும் எதிர்வாதிகளாக இணைத்துக்கொண்டு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தார். அதில் தனக்கு உரிமை இருப்பதைக் காட்டும் ஆவணங்களையும் இணைத்திருந்தார். சட்டசபையில் இந்த விவகாரம் எழுப்பப்பட்ட நிலையில், ஓமந்தூரார் சட்டத்துறை செயலாளர், கல்வி மந்திரி ஆகியோரை பாரதி நாட்டுடைமையாக்கத்தில் செயல்படுமாறு அறிவுறுத்தினார். கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார், பாரதி நாட்டுடைமையாக்கத்தில் தனி ஈடுபாடு காட்டினார். அவர் ‘பாரதியின் எழுத்துகளின் சட்ட உரிமைகளைப் பொதுவுடைமை ஆக்க கிளர்ச்சி நடக்கிறது. இதைக் கையகப்படுத்த இயலுமா? என்று பரிசீலிக்க வேண்டும்’ என்று குறிப்பு எழுதினார். பாரதி நாட்டுடைமையாக்கத்தில் அரசுத்துறை அதிகாரிகள் மிகவும் மெத்தனமாகவே இயங்கினார்கள். கோவை ஆட்சியரிடம் ஏ.வி.எம் தொடுத்த வழக்கின் நிலவரங்கள் கோரப்பட்டன. இவ்வழக்கில் தொடர்புடைய அவ்வை சண்முகம் அரசுக்குப் பல்வேறு ஆவணங்களை அனுப்பி வைத்தார்.

‘பாதாள உலகம்’ படத்தில் ‘தூண்டில் புழுவினைப் போல்’ எனும் பாடலை தான் பயன்படுத்துவதால் அதைப் பயன்படுத்த முயலும் சண்முகம் சகோதரர்கள் தனக்குப் பதினோராயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஏ.வி.எம் நீதிமன்றத்தில் வாதிட்டார். இதற்கு முன் வெவ்வேறு படங்களில் பாரதி பாடல்கள் பயன்படுத்தப் பட்ட பொழுது ஏ.வி.எம் எதிர்ப்பு தெரிவிக்காததை சண்முகம் தரப்பு எடுத்துக்காட்டியது. ஓராண்டுக்கு மேல் ஒலிபரப்பு உரிமையைத் தக்க வைக்கப் போராட்டம் நடத்தியும், முதல்வர் ஓமந்தூராரைச் சந்தித்த பிறகு அரசு நாட்டுடைமை ஆக்குவதில் தீவிரமாக இருப் பதையும் கண்டுகொண்டார் ஏ.வி.மெய்யப்ப செட்டி யார். பாரதியின் பாடல்கள், நூல்கள் ஆகியவற்றின் நாட்டுடைமையாக்கத்திற்குப் பெரும் போராட்டம் ஏற்பட்ட சூழ்நிலையில் 2 ஜூன் 1948 இல் தாமே முன்வந்து ஒலிபரப்பு உரிமையை விட்டுக்கொடுப்பதாக அறிவித்தார். பாரதியின் பாடல்கள் சிலவற்றைத் தமிழகம் முழுக்க ஒலிக்கச்செய்யவே ஒலிபரப்பு உரிமையைத் தான் வாங்கியதாக ஏ.வி.எம். கூறினார். மேலும் பாரதியின் பாடல்களை உயர்தரக் கலைஞர் களைக் கொண்டே பாடுவிக்க வேண்டுமென்றார். வெகுமக்களால் பாடல்கள் பாடப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளும் அதே சமயம், பாடப்படும் முறை குறை கூற முடியாததாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எந்தப் பணமும் பெறாமல் பாரதியின் பாடல்களின் ஒலிபரப்பு உரிமையைப் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுப்பது போன்ற ஒரு தோற்றத்தை இந்தச் செயலின் மூலம் ஏற்படுத்திக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பாரதியின் எழுத்துகளின் பதிப்புரிமையை சி.விஸ்வநாத ஐயரிடமிருந்து பெறும் முயற்சிகள் தொடங்கின. அவர் பாரதியின் எழுத்துகளைப் பிழைகளோடு அச்சிட்டதாகவும், அதன் மூலம் மிகுந்த கொள்ளை இலாபம் பெற்றுவந்ததாகவும் தூற்றினார்கள். தன்னுடைய ஆரம்பகட்ட பதிப்புகள் பிழைகள் இருந்தாலும் அவை போக போகச் சரி செய்யப்பட்டதையும், இரண்டு ரூபாய்க்கு பல நூறு பக்க பாரதி நூல்களை விற்றதையும் அவர் நினைவு கூர்ந்தார். 15,000 ரூபாய்க்கு பாரதியின் எழுத்துகளின் பதிப்புரிமையைப் பள்ளிக்கூட ஆசிரியரான அவர் விட்டுக்கொடுத்ததோடு, பாரதியின் எஞ்சிய கையெழுத்துப் பிரதிகளையும் இலவசமாக அரசிடம் ஒப்படைத்தார்.

பாரதியின் எழுத்துகள் அரசுடைமை ஆக்கப் பட்டதாக அவினாசிலிங்கம் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டசபையில் அறிவித்தார். பாரதியின் குடும்பத்தினருக்கு உதவ நினைத்த அரசாங்கம் பாரதியின் எஞ்சிய படைப்புகளின் பதிப்புரிமைக்காக அவரது மனைவி, மகள்களுக்கு மொத்தமாக 15,000 தரப்பட்டது. இதற்காக மே மாதம் 1 ஆம் தேதி எழுத்துப்பூர்வமாகத் தங்களின் உரிமையை விட்டுக் கொடுத்தனர். விஸ்வநாத ஐயர் தான் ஏற்கனவே அச்சிட்டு விற்காமல் இருக்கும் பாரதியின் நூல்களை விற்க வேண்டி அரசிடம் ஓராண்டு அனுமதி பெற்றார். பிறகு மேலும் சிலகாலம் நீட்டிப்பிற்குப் பிறகு விற்க முடியாத நூல்களை முப்பது சதவிகிதக் கழிவில் பதினைந்தாயிரம் ரூபாய்க்கு அரசிடமே விற்றார்.

இவ்வாறு மகாகவி பாரதியின் படைப்புகள் தனி நபர்களிடமிருந்து அரசுடைமையாக்கப்பட்டது. அரசுடை மையாக்கப்பட்ட பாரதியின் படைப்புகள் ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் அரசாங்கத்திடம் அடைபட்டு பொது வெளிக்கு வராமலிருந்தது. அரசுடைமையான பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றிப் பரிந்துரைப்பதற்குக் கல்கி இதழாசிரியரான ரா.கிருஷ்ண மூர்த்தி, அன்றைய அரசுக் கல்லூரி முதல்வராக இருந்த கி.ஸ்வாமிநாதன், பாரதியின் தம்பி சி.விஸ்வநாத ஐயர். தமிழ்ப் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து மு.வரதராசன், கி.வா.ஜகந்நாதன் ஆகியோரும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இக்குழு முதலில் சி.விஸ்வநாத ஐயரிடமிருந்த பெற்ற பிரதிகளை என்ன செய்வதென்பது பற்றி ஆலோசித்தது. இக்கூட்டத்தில் 30 சதவீதம் கழிவு விலையில் பெற்ற இந்நூல்களை விற்பனை செய்வதென்ற முடிவுக்கு வந்தது. இதற்குச் சுதேசமித்திரன் புத்தக சாலை, ஹிக்கின்பாதம்ஸ், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், தமிழ்ப்பண்ணை, கலைமகள் காரியாலயம், இ.மா.கோபாலகிருஷ்ண கோன், பழனியப்பா பிரதர்ஸ் ஆகிய விற்பனையாளர் களைப் பரிந்துரைப்பது எனக் குழு முடிவு செய்தது. தொடர்ந்து இக்குழு பாரதியின் படைப்புகளின் சில பகுதிகளை எவ்வாறு மக்கள் பயன்படுத்துவது, எவ்வளவு கட்டணத் தொகை கொடுப்பது என்பது பற்றிய கொள்கை முடிவாகும். இதில் “பாரதியின் ஒவ்வொரு வரிக்கும் நான்கணா வீதம் கட்டணம் விதிக்கலாம் என்றும், அவ்வாறு கட்டணம் விதிக்கும் பொழுது குறைந்தபட்சம் ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது. உரைநடை எழுத்துகளைப் பொறுத்த அளவில் 250 சொற்களுக்கு ஐந்து ரூபாய் வீதம் கட்டணம் விதிக்கப்பட்டது. திரைப் படங்களைப் பொறுத்தவரை பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பாடலுக்கும் 200 ரூபாய் அரையம் விதிக்கப் படும் என்றும், இசைத் தட்டாக வெளியிட்டால் விற்பனை விலையில் 2.5 சதவீதம் செலுத்த வேண்டும்” என்றும் குழு பரிந்துரைத்தது. அரசின் இக்கொள்கை முடிவு மக்களிடையே மிகுந்த விமர்சனங்களை ஏற்படுத்தியது.

அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் பதிப்பை அச்சிட்டு வெளியிட மு.வரதராசனார், ரா.பி.சேதுப்பிள்ளை, பரலி.சு.நெல்லையப்பர், கி.வா.ஜகந்நாதன் முதலி யோரைக் கொண்ட குழு மிகத் தீவிரமாகச் செய லாற்றியது. இதில் மெய்ப்புத் திருத்துனராக அன்றைய சென்னை அரசுக் கல்லூரியில் துணைப் பேராசிரியராக இருந்த மு.சண்முகம் பிள்ளை (இவர் பதிப்பு செயல் பாடுகளைப் பேராசிரியர். வையாபுரிப் பிள்ளையிடம் கற்றவர்) அவர்களையும் இணைத்துக்கொண்டு செயல் பட்டது. இதற்கிடையில் காங்கிரஸில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு ஓமந்தூரார் தனது பிரதமர் பதவியை இழக்க நேரிட்டது. இவரைத் தொடர்ந்து பி.எஸ்.குமாரசாமி முதல்வர் பதவிக்கு வந்துவிட்டார். பிறகு 1952 இல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் சி.ராஜகோபாலாச்சாரி (இராஜாஜி) காங்கிரஸ் சார்பில் முதல்வரானார். இவ் வரசியல் சூழல் பாரதியின் படைப்புகள் வெளிவருவதில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது எனலாம்.

1954 இல் இராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனை திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே உண்டான எதிர்ப்பு ஆகிய வற்றால் இராஜாஜி தனது முதல்வர் பதவியிலிருந்து வெளியேறினார். பிறகு காமராசர் முதல்வராகினார். இத்தகைய சூழலில் தமிழகம் நான்கு முதலமைச்சர் களைக் கண்ட பிறகே பாரதியின் நூல்கள் புதியதாக வெளியாயின. ஐந்து ஆண்டுகள் கழித்து ஏழரை ரூபாய் என்கிற அதிக விலையில் முதல் தொகுப்பு வெளி வந்தது. இதற்கு ப.ஜீவானந்தம் உள்ளிட்ட தலைவர்கள் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனால் காமராசரின் ஆட்சிக்காலத்தில் 14 மார்ச் 1955இல் அன்றைய நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்களால் அரசுடைமை ஆக்கப்பட்ட பாரதியின் பதிப்புரிமை நாட்டுடைமை யாக்கப்பட்டதாக அறிவித்தார். தொடர்ந்து பாரதியின் உரைநடைகள் முழுதும் வெளிவர மேலும் எட்டு ஆண்டுகள் ஆயின. இந்த நாட்டுடைமை முயற்சியால் பாரதி அவர் ஆசைப்பட்டது போல அவரது படைப்புகள் மக்களிடையே பரவலாகச் சென்று சேர்ந்தன. அவரைப் பற்றிய வெவ்வேறு புதியபுதிய ஆக்கங்கள் வெளி யாயின. மலிவு விலையில் அவரது எழுத்தாக்கங்களைத் தொடர்ந்து பல்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டன.

பாரதியின் எழுத்துகள் நாட்டுடைமையான பிறகு திமுக அரசு பாரதிதாசனின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியது. இதன்பிறகு அதிமுக அரசு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், அண்ணா ஆகியோரின் எழுத்துகளை நாட்டுடைமை ஆக்கியது. பல எழுத்தாளர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்குவதில் பல்வேறு குளறுபடிகள் நடந்தேறியுள்ளன. ஆனந்த விகடனில் கல்கி எழுதிய எழுத்துகளின் காப்புரிமையை அதன் நிறுவனர் நீண்டகாலம் தன்னிடமே வைத்திருந்தார். கல்கியின் மறைவுக்குப் பிறகே அதனை அவர் விட்டுக்கொடுத்தார். அது போன்றே அகிலனும் மிகுந்த உரிமைப் போராட்டத்திற்குப் பிறகு ஆனந்த விகடனிடம் இருந்து பெற்றார். இதற்குப்பிறகு ஆனந்த விகடன் எழுத்தாளர்களின் பதிப்புரிமை அவர்களுக்கே உரியது என்று தனது கொள்கையை மாற்றிக்கொண்டது. மு.வரதராசனார் எழுதிய திருக்குறள் உரை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் பல இலட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டு விற்கப்பட்டன. இதனால் மு.வரதராசனுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை. இதன் பிறகு தானே பதிப்பகம் தொடங்கித் தன் நூல் களை வெளியிட்டுவந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவருக்குப் பிறகு அவரது எழுத்துகளின் உரிமையை வாரிசுகளின் அனுமதியின்றித் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியது, இதனை அவரது குடும்பம் எதிர்க்க அது திரும்பப் பெறப்பட்டது. புதுமைப்பித்தன், கண்ணதாசன் முதலியோரின் எழுத்துகளுக்கும் இதே நிலை ஏற்பட்டது. புதுமைப்பித்தனுக்கு ஐந்து இலட்சம், சக்தி வை. கோவிந்தனுக்கு ஐந்து இலட்சம் என அரசு ஒரே தராசைக் கையாளுவது கேள்விக்குரியது என்பதையும் ஆ.இரா.வேங்கடாசலபதி குறித்துச் செல்கிறார்.

‘காந்தி எழுத்துகளின் பதிப்புரிமை நவஜீவன் அறக்கட்டளையிடமிருந்து சமீபத்தில் 2009இல் தான் பொது வெளிக்கு வந்துள்ளது. பண்டித ஜவஹர்லால் நேரு மறைந்து ஐம்பதாண்டுகளுக்கு மேலாகிறது. அவரது எழுத்துகளின் பதிப்புரிமை 2024ஆம் ஆண்டு இறுதிவரை, அவரது குடும்பத்தினரிடமே இருக்கும். தாகூர் தனது படைப்புகளின் காப்புரிமையை விஸ்வ பாரதிக்குக் கொடுத்திருந்தார். அது முடிந்து ஐம்பதாண்டு களுக்குப் பிறகு பொதுவெளிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் விஸ்வபாரதி கொடுத்த நெருக்கடிக்கு உடன்பட்டு மேலும் பத்தாண்டு களுக்கு நீட்டிப்பு வழங்கியது. மார்க்சியக் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் பதிப்புரிமை இன்றுவரை இடதுசாரி மார்க்சியக் கம்யூனிஸ்டு கட்சியிடமே இருக்கிறது’ என்பதையும் வேங்கடாசலபதி குறிப்பிட்டுச் செல்கிறார்.

மகாகவி பாரதியின் படைப்புகளைப் பொது வுடைமை ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, வேகமாக வலுப்பெற்று, மாபெரும் மக்கள் இயக்கமாக மாறிய நீண்ட கதையை இந்நூலாசிரியர் துல்லியமாக விவரிக்கிறார். பாரதியின் வரலாற்று ஆய்வு நூல் என்னும் வகையை உயிர்ப்பு கொண்டதாக மாற்றுகிறது வேங்கடா சலபதியின் எழுத்து. வரலாற்று அணுகுமுறையில் தான் பெற்றுள்ள தேர்ச்சி இந்நூலினை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியுள்ளது. வரலாற்று முறைமையில் நிகழ்வுகளை முறையாகத் தொடர்ந்து அடுக்கிச் செல்வது, நிகழ்வுகளைப் புறவயமான வரலாற்று, சமூகக் கண்ணோட்டத்தோடு முன் வைப்பது போன்றவை குறிப்பிடத்தக்கது. இத்தகைய செயல்பாட்டினைத் தான் இந்நூல் முன்னெடுத்துச் செல்கிறது.

ப.ஜீவானந்தம், நாரண.துரைக்கண்ணன், அவினாசி லிங்கம் செட்டியார், ஓமந்தூரார் போன்றோரின் பங்கு, அரசு இதனை அணுகிய முறை ஆகியவற்றை ஆதாரங்களுடன் முன் வைக்கிறார். பாரதியின் வரலாறு குறித்த ஆய்வில் பெரும் பங்களிப்பு செலுத்தி வரும் ஆ.இரா. வேங்கடாசலபதியின் ஆய்வு குறிப்பிடத்தக்கது. ஏனெனில், பாரதி இயலின் முழுமை நோக்கிய பயணத்திற்கு இது துணை நிற்கும். இந்திய இலக்கிய உலகில் இரு மகாகவிகளாக அறியப்படும் பாரதியையும் தாகூரையும் ஒப்பிட்டு பல ஆய்வுகள் நடந்தேறியுள்ளன. இச்சூழலில் பாரதியின் நாட்டுடைமையாக்க வரலாறு பற்றி ஆராயும்போது தாகூரின் எழுத்துகளது பதிப்புரிமை வரலாற்றினையும் ஒருங்கே அல்லது தனியே வேங்கடா சலபதி விவரித்திருப்பாராகலின் சிறப்பாக இருந் திருக்கும். சி.விஸ்வநாத ஐயரைப் பற்றி விவரிக்கும் இடங்களில் இரக்கம் மேலோங்கிய விறுவிறுப்பான நடையை வேங்கடாசலபதி பயன்படுத்தியுள்ளாரோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. பாரதி நாட்டுடைமை பற்றித் தீர்வு காண ஏ.வி. மெய்யப்ப செட்டியார், ஓமந்தூரார் ஆகிய இருவரிடையே நடந்த உரை யாடலைப் பதிவு செய்யும் (பக்கம் 61) முதல் பத்தி நிறைவுறாமல் இருக்கிறது. இதனைத் தவிர்த்து நோக்கு கையில் ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘பாரதி: கவிஞனும் காப்புரிமையும்’ எனும் இந்நூல் பாரதியியல் வரலாற்றில் சிறப்பான நூல் எனலாம்.

ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டின் பதிப்புரிமை இன்றுவரை இடதுசாரி மார்க்சியக் கம்யூனிஸ்டு கட்சி யிடமே இருக்கிறது. இதற்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவளிக் கின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் வேங்கடா சலபதி, அதனை நாட்டுடைமை ஆக்குவதில் உள்ள சிக்கலையும் ஒருங்கே சிந்தித்தல் வேண்டும். பெரியார், அம்பேத்கர், நம்பூதிரிபாட் போன்ற சமூகச் சிந்தனை யாளர்களின் எழுத்துகளைப் பொதுவுடைமை யாக்கினால், அவற்றை மக்கள் அவரவர் விருப்பத்திற் கேற்றப் பகுதிகளை மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற வற்றை தூக்கியெறியும் அவலநிலை ஏற்படும். ஆ.இரா.வேங்கடாசலபதியின் இந்நூலைப் படிப் பவர்கள், ஹரிகிருஷ்ணன் எழுதிய ‘பாரதியும் ஏவிஎம்மும் - சில உண்மைகள்’ எனும் நூலையும் ஒருங்கே படித்தால் மேலும் சில தெளிவுகளை ஏற்படுத்தும்.

பாரதி: கவிஞனும் காப்புரிமையும்

ஆ.இரா.வேங்கடாசலபதி

வெளியீடு:

காலச்சுவடு பதிப்பகம்

669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001

விலை: 120/-

Pin It