அண்மைப் படைப்புகள்

கீற்றில் தேட

 

ஆத்மா என்கின்ற விஷயத்தைப் பற்றி யார் என்ன சொல்லி இருந்தாலும், உலகமே என்ன கருத்துக் கொண்டிருந்தாலும் அதை லட்சியம் செய்யாமல், நாம் நம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லுகின்றோம். அதாவது, ஆத்மா என்பது ஒரு பொருள் அல்ல. அது சுதந்திரம், அறிவு, உணர்ச்சி ஆகியவைகளை உடையதல்ல என்பதோடு, அது பெரிதும் அர்த்தமற்ற ஒரு வார்த்தை என்றே நமக்கு காணப்படுகிறது. இங்கிலீஷ் – தமிழ் அகராதியில் பார்த்தாலும் ஆத்மா என்பதற்கு இங்கிலீஷில் (Soul) ‘சோல்' என்றும், ‘சோல்' என்றால் அறிவு – யோசனை – ஆசை பிறக்குமிடம், ஊக்கம், உள் சக்தி, மனித வர்க்கம், உயிர் என்ற பொருள்கள் காணப்படுகின்றன.

தமிழ் அகராதிகளிலும் அதுபோலவே ஆத்மா அல்லது ஆன்மா என்றால் காற்று, அறிவு, உடல், உயிர், பிராணன், மூளை, முயற்சி, பிரம்மன், சுபாவம் என்கின்ற பொருள்கள் காணப்படுகின்றன. இந்த வார்த்தைகளில் இருந்து விளக்கப்பட வேண்டியது ஒரே ஒரு வார்த்தைதான் ஆகும். பிராணன் அல்லது உயிர் என்பதற்குதான் அர்த்தம் விளங்க வேண்டியிருக்கின்றது. மற்ற வார்த்தைகள் எல்லாம் தானே அர்த்தம் புரியும்படியாயிருக்கின்றன. ஆகவே, பிராணன் என்பது என்னவென்று பார்த்தால், அது ஒரு காற்று – பிராண வாயு, இருதயத்தில் இயங்கிக் கொண்டிருப்பது என்பதாகத்தான் அகராதியில் காணப்படுகிறது.

இது இங்ஙனமிருக்க, இப்போது புழக்கத்தில் ஆத்மா என்றால், அது சரீரத்திற்குள் இருக்கும் ஒரு நித்திய வஸ்து என்றும்; அது சூட்சும வஸ்து என்றும்; அதற்குப் பிறப்பு, இறப்பு இல்லை என்றும்; அது மனிதன் இறந்த பின்பு வெளிப்பட்டு மறுபடியும் சரீரம் எடுப்பது என்றும்; மற்றும் அது சரீரத்தில் இருக்கும்போது செய்த காரியங்களுக்காக அதன் பயனை – சரீரத்தை விட்டுப் பிரிந்து பின்பு கடவுள் மூலம் அனுபவிக்கிறதென்றும்; மற்றும் எத்தனையோ விதமாக அதைப் பற்றிப் பல மதங்களில் பலவிதமாய்ச் சொல்லப்பட்டிருக்கின்றதாய் அறிகின்றோம்.

உதாரணம் என்னவென்றால், அது மனிதனுக்குள் இருந்து மனித சரீரத்திற்கு வேறாய் ‘என் சரீரம்' என்று சொல்வதன் மூலம் – சரீரத்திற்கும் வேறுபட்டதென்றும் சொல்லுவது போன்ற ஏதேதோ பிரிவுகள் காட்டி, அந்த ஆத்மா சரீரம் விட்டுப் பிரிந்த பிறகு அடைய வேண்டிய, அடையக்கூடிய பலன் ஆகியவைகளைப் பிரதானமாகக் கருதி அதற்குத் தகுந்தபடி, அதற்காகவே மனிதன் வாழ வேண்டியது அவசியமென்று சொல்லப்பட்டு – அந்த மாதிரி ஆத்மாவுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையே மதங்கள் போதிக்கின்றன என்றும், அதற்காகவே உலகத்தில் மனித கோடிகளுக்கு அவசியமென்றும் சொல்லப்படுகிறது.

ஆகவே பவுத்தம், இஸ்லாம், கிறிஸ்து, இந்து ஆகிய மதங்களில் பவுத்தம் தவிர மற்ற முக்கியமான மூன்று மதங்களும் ஏறக்குறைய ஒரே கொள்கையில்தான் ஆத்மாவையும், ஆத்மாவுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் பற்றிய விஷயங்களை வைத்துக் கொண்டிருக்கின்றன.

மனிதன் என்பதின் தன்மை விளக்கம் ‘தான்' ‘நான்', ‘என்' என்கின்ற குறிப்பு உணர்ச்சிகளேயாகும். அக்குறிப்புகளில் ஒரு மனிதன் தன்னை – ‘நான்' என்று சொல்லிக் கொள்ளும்போதும், ‘எனக்கு', ‘என்னுடைய' என்று சொல்லிக் கொள்ளும்போதும் ஏற்படுகின்ற உணர்ச்சி எப்படிப்பட்டது? அது எப்படி உண்டாகிறது? என்பதைக் கவனித்தால், ஆத்மத் தன்மை என்பது தானாகவே விளங்கும்.

அதாவது ஒரு மனிதன் ‘நான்' என்பதில் அந்த மனித சரீரத்தின் எந்தப் பாகம் தனித்து இருந்து நான் என்கின்றது? அல்லது, அந்த உடல் மொத்தமுமா அல்லது சரீரமில்லாமலா? சரீரத்தில் எதுவரை ‘நான்' என்கின்ற உணர்ச்சி இருக்கிறது? சரீரத்திலிருந்து எது போய்விட்டால் ‘நான்' என்பது போய்விடுகின்றது? என்கின்ற கேள்விகளுக்குப் பதில் கிடைத்தால் ஒழிய ‘நான்' என்பது விளங்காது.

இந்த முறையில் நான் என்பதைக் கவனிக்கும் போது என் சரீரம், என் உயிர், என் ஆத்மா, என் ஆவி, என் ஜீவன், என் மனம், என் அறிவு, என் புத்தி, என் எண்ணம், என் சித்தம், என் கடவுள், என் ஆண்டவன், என் பிராணன், என் பிராணவாயு, என் சூட்சம சக்தி என்பன போன்ற – அதாவது, மனிதன் அல்லது ஆத்மா அல்லது ஜீவன் என்பவைகளாகிய எது எதை நாம் மனிதனாக, ஆத்மாவாக இருக்கக்கூடும் என்று கருதுகின்றோமோ அவைகளை எல்லாந் தன்னில் இருந்து தனிப்படுத்தி அவைகளோடுகூட ‘என்' என்பதைப் பேசுவதைப் பார்க்கின்றோம். ஆகவே, என் (நான்) வேறு, மேற்கண்ட மற்றவைகள் எல்லாம் வேறு என்பதாக நினைக்கும்படியாக இருக்கின்றது. ஆதலால், இவைகள் எல்லாம் மனிதனுடைய தன்மை உணர்ச்சி ஆகிய ‘நான்' என்பது அல்ல என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது.

இந்த நிலையில் மனிதனாகிய நான் என்னும் தன்மை உணர்ச்சி செய்த காரியங்களுக்காக – நான் அல்லாத அதாவது என் ஆத்மா என்பதாகிய ஒரு வஸ்துவோ, ஒரு ஜீவனோ, ஒரு சக்தியோ, ஆகிய சூட்சும ஜீவன் என்பது எப்படி அந்தப் பயனை அனுபவிக்க முடியும்? அனுபவிப்பதுதான் எப்படி நியாயமாகும்? நான் செய்த காரியத்திற்கு ஆத்மாவைத் தண்டிப்பதோ, கண்டிப்பதோ, சன்மானமாகியவைகளைக் கொடுப்பதோ எப்படிக் கடவுளின் நீதியாகும்? என்கின்றதான விஷயம் மிகவும் யோசிக்கத்தக்கதாகும்.

‘குடி அரசு' கட்டுரை – 21.4.1945

 

Pin It

 

புத்தர் வணக்கம்.

பவுத்தர்கள் தங்கள் வணக்கத்தில் கூறுகிற, கூறி வணங்குகிற விஷயங்கள் மூன்று. அவை

1. புத்தம் சரணம் கச்சாமி

2. தர்மம் சரணம் கச்சாமி

3. சங்கம் சரணம் கச்சாமி

என்பனவாகும். இவற்றை முதலிலும், கடைசியிலும் சொல்லித்தான் அவர்களது சமய காரியங்களைத் துவக்கவும் முடிக்கவும் செய்வார்கள். இவ்வாக்கியங்களின் தத்துவம் என்னவென்றால் புத்தம் (தலைவன்), தர்மம் (கொள்கை), சங்கம் (ஸ்தாபனம்) ஆகிய மூன்றுக்கும் வணக்கம் செலுத்துகிறேன் என்பதாகும்.

இது பவுத்தர்களுக்கு மாத்திரமல்லாமல் மற்றும் உலகிலுள்ள யோக்கியமான எந்த ஸ்தாபனத்திலுமிருக்கும் யாருக்குமே உண்மையான இன்றியமையாத கடமையாகும். எந்த ஒரு ஸ்தாபனத்திலும் ஈடுபட்டிருக்கிற ஒருவன் அதன் தலைவரைப் பின்பற்றி நல்லவண்ணம் சிந்தித்துத் தன்னை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு அந்தத் தலைவனை, அந்த ஸ்தாபனத்திலிருந்து விலகுகிறவரை தனக்குக் குருவாக, ஆசானாகக் கருதவேண்டும்.

தலைவனைப் பெருமைப்படுத்துவதன் மூலம் ஸ்தாபன இலட்சியத்திற்கும், ஸ்தாபனத்திற்கும் தான் உண்மையான தொண்டு செய்தவனாகிறான்.

தலைவனிடம் மரியாதை, அன்பு, கீழ்ப்படியும் தன்மை இல்லாமல் ஒரு ஸ்தாபனத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுவது ஈடுபட்டவனின் வயிற்றுப் பிழைப்பிற்கும், வாழ்விற்கும், சுயநலத்திற்கும் தெரிந்தெடுக்கப்பட்ட வியாபார, தொழில்முறை என்பதாகத்தான் பொருள்படும், அதனால்தான், புத்த சரணம் என்று சொல்லிக் காரியம் துவக்குவதாகும்.

அதுபோன்றே அடுத்த வணக்கமாகிய தர்மம் (புத்த தர்மம்) சரணம் கச்சாமி என்பதுமாகும். அதாவது ஒருவன் தான் ஈடுபட்டுள்ள ஸ்தாபனத்தில் இலட்சியங்களுக்கு நிபந்தனையற்ற அடிமையாகப் பின்பற்றுபவனாக இருக்க வேண்டும். கொள்கைகளில் ஒரு சிறிது தனக்கு ஒத்துவரவில்லையானாலும், அவன் யோக்கியனாக இருந்தால் உடனே ஸ்தாபனத்தை விட்டு விலகிவிட வேண்டும். விலகிவிடச் சம்மதிக்கிறேன் என்று சொல்வது போன்ற பிராண மொழியேயாகும், இது.

மூன்றாவதான சங்கம் சரணம் கச்சாமி என்பது ஒரு ஸ்தாபனத்தின் தலைவருக்கும், இலட்சியங்களுக்கும் எவ்வளவு ஆட்படத்தக்கதோ அதேபோன்று சங்கத்திற்கும் (ஸ்தாபனத்திற்கும்) அடிமையாய் இருந்து, சங்கத்தைப் பாதுகாக்க வேண்டியதென்பதாகும். ஸ்தாபனத்திற்கு அடிமையாய் இல்லாமலும் பக்தி விஸ்வாசம் இல்லாமலும் ஸ்தாபனத்திற்கு அங்கத்தினனாக இருப்பது என்பது அந்த ஸ்தாபனத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகமேயாகும்.

இம்மூன்று தத்துவங்களையும் முக்கியமானவையாகக் காட்டுவதற்காகவே பவுத்தக் கொள்கைகளை முதன்மையானவையாகவும், முக்கியமானவையாகவும் ஆக்கி, பக்தி விஸ்வாச வணக்கத்தோடு ஏற்பாடு செய்து வந்த எல்லாப் பவுத்தர்களாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே,

புத்தம் சரணம் கச்சாமி,

தர்மம் சரணம் கச்சாமி,

சங்கம் சரணம் கச்சாமி,

என்ற வணக்கங்களின் தத்துவம் இதுதான் என்பது எனது கருத்தாகும்.

யார் புத்தன்?

பெரியோர்களே! தோழர்களே! தாய்மார்களே! சுவாமிஜீ அவர்களே! மூன்று நாட்களாக இவ்விழாவைச் சிறப்போடு நடத்தி வருகிறீர்கள். மூன்றாவது நாளான இன்று நான் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்துள்ளது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். பொதுவாகப் புத்தர் விழாவை ஏன் கொண்டாடுகிறோம் என்பதை ஆராய்ச்சி செய்யவே இங்குக் கூடியுள்ளோம். இங்கு 2, 3 அறிஞர்கள் பல விஷயங்களை எடுத்துச் சொன்னார்கள்.

புத்தர் விழா என்கிறபோது ஏதோ தேங்காய், பழம் வைத்து கும்பிடுவது என்பதல்ல; புத்தர் விழாக் கொண்டாடுகிறோம் என்றால், அதன் மூலம் ஏதாவது ஒரு படிப்பினைப் பெறவேண்டும்.

நான் முன்னுரையிலேயே சொன்னேன் நாஸ்திகன் என்பதாக, நாஸ்திகன் என்றால் வேத சாஸ்திர புராண இதிகாசங்களுக்கு மாறான கருத்துள்ளவன். இப்போது இருந்துவரும் மதத்திற்கு மாறான கருத்துடையவன். இப்படி இருந்தால்தான் புத்தரைப் பற்றிச் சரியாகப் பேசமுடியும். அப்படியில்லாமலே பேசலாம் என்றால் அதற்கு மிகவும் சாமர்த்தியம் வேண்டும். அதாவது மக்களை நன்கு ஏமாற்றப் பழகியிருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு சாரார் புத்தரை ஏதோ ரிஷிகள், மகான்களைப் போல ஒருவராகவே பேசுகிறார்கள்.

புத்தர் மகானோ, ரிஷியோ அல்லர்; இந்தத் தன்மையை எதிர்த்தவர். அந்தக் காரணத்தினால்தான் நாம் இன்று புத்தரைக் கொண்டாடும்படியான நிலை இருக்கிறது. புத்தர் எப்படி மகானோ, ரிஷியோ இல்லையோ அதேபோல் பவுத்தம் என்பதும் ஒரு மதமல்ல. பலபேர் பவுத்தம் என்பதைத் தவறாக ஒரு மதம் என்றே நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு மதம் என்றால் கண்டிப்பாக அதற்கு ஒரு கடவுள் வேண்டும்; மோட்சம், நரகம் வேண்டும்; ஆத்மா, பாவ புண்ணியம், அவற்றிற்கு ஏற்றாற்போல் தண்டனை இவையெல்லாம் வேண்டும். இன்னும் சிறந்த மதம் என்பதற்கு ஒரு கடவுள் போதாது. பல கடவுள்கள் வேண்டும். அவற்றிற்குப் பெண்டாட்டி, பிள்ளைகுட்டி, வைப்பாட்டி இவையெல்லாம் வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால்தான் அது மதமாகும்.

ஆனால் புத்தர் முதலில் கடவுளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்; மனிதனைப் பற்றிக் கவலைப்படு என்று சொல்லிவிட்டார். மோட்சம், நரகம் இல்லை; ஒழுக்கம்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டார். இன்னும் அறிவுதான் முக்கியம் என்றார் ரிஷி சொன்னார், மகான் சொன்னார் என்று நம்பாதே; யார் எதைச் சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு தர்க்கம் செய்து மிஞ்சுவதை எடுத்துக்கொள் என்று சொல்லிவிட்டார்.

ஆகவே பவுத்தம் என்பது மதமல்ல; அதுபோல உள்ள காரணத்தால்தான் இன்று நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். அவர் இதையெல்லாம் சொன்னதால்தான் அவரை எதிர்த்து அழிக்க முனைந்தார்கள். அவர் வாழ்ந்த காலம் இன்றைக்கு 2500 ஆண்டுகட்கு முற்பட்ட காட்டுமிராண்டித் தனமான காலமாகும்.

அக்காலத்திலேயே பலத்த எதிர்ப்பு இருந்திருக்கிறது. இதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தவர்களின் பிரச்சாரமே இதற்குச் சாட்சியாகும். அவருக்குப் பின்னால் அவரையும் அவரது கொள்கைகளையும் ஒழிக்க எழுதப்பட்ட நூல்கள் ஆதாரமாகும். ராமாயணத்தில் புத்தரைக் கேவலமாக எழுதிக் கண்டித்துள்ளார்கள். புத்தருக்குப் பின்னால்தான் இராமாயணத்தை இவ்வளவு பெரியதாக எழுதியிருக்கிறார்கள். புத்தருக்கு முன்னால் இராமாயணம் உண்டு என்றால் அது சிறியதாகவே இருந்திருக்கும். நாலாயிரப் பிரபந்தம், தேவாரம் முதலிய நூல்களிலெல்லாம் ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்பவர்கள் புத்தரையும், பவுத்தத்தையும் கேவலமாகக் கண்டித்துள்ளார்கள்.

மக்கள் அசல் காட்டுமிராண்டிகளாகவே வாழ்ந்தார்கள். அந்தக் காட்டுமிராண்டி காலத்திலேயே அவர் அந்தக்கால நிலைக்கு ஏற்றவழிகாட்டினார் என்பதனாலேயே அவரை மகான் என்கிறோம். அதுபோலவேதான் ஏசுநாதர். இவர்களையெல்லாம் பெரிதாகப் பேசக் காரணம் மக்களிடம் மூடநம்பிக்கையும், அறியாமையும், காட்டுமிராண்டித்தன்மையும் நிறைந்திருந்த காலத்தில் சொன்னார்கள் என்பதனால்தான்.

மத சாஸ்திரக்காரர்கள் வண்டி வண்டியாக அளப்பார்கள். ஆனால் சரித்திரத்தைப் பற்றிப் பேசினால், எவனோ வெள்ளைக்காரன் சொன்னதை நம்புகிறாயா? என்பார்கள். இவர்களெல்லாம் உள்ளபடியே மனச்சாட்சியை மறைத்துப் பேசுபவர்கள். மக்களும் வாதாடத் தெரிந்த அளவு படித்து விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதில்லை. எதையெடுத்தாலும் சண்டப் பிரசண்டமாகப் பேச வேண்டும் என்பதைத் தவிர சரித்திரம், உண்மை, தத்துவம் படித்து விஷயங்களை உணர்ந்து பேச வேண்டும் என்று நினைப்பதேயில்லை. மதம் என்றால் மடமைதான். வெள்ளைக்காரன் சொன்ன சரித்திரத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

வடநாட்டில் பாரத இதிகாச சமீதி என்று ஒரு ஸ்தாபனம் உள்ளது. பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் அதில் முக்கியஸ்தர்களாக உள்ளார்கள். கவர்னர் முன்ஷி ஒரு முக்கியஸ்தர். உபஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒரு முக்கியஸ்தர். பிர்லாதான் செலவுக்குப் பணம் கொடுக்கிறவர். மாஜி வெங்கட் ராம சாஸ்திரி இன்னும் பல ஆராய்ச்சிக்காரர்கள் உள்ள அந்த ஸ்தாபனத்தில் வேதகாலம் என்ற ஒரு புத்தகம் எழுதியுள்ளார்கள். அதில் ஆராய்ச்சி செய்து முன்ஷி எழுதியிருக்கிறார், அதில் பல விஷயங்களை எழுதுகிறார்கள். அதற்கும் அர்த்தம் மாத்திரம் வேறு சொன்னாலும் பல உண்மைகள் எழுதப்பட்டுள்ளன.

அதில் அந்தக் காலம் காட்டுமிராண்டித்தனமான காலம்! புராண இதிகாசங்கள் என்பவை சரித்திரங்கள் அல்ல; நடந்த விஷயங்களைப் பற்றியவையுமல்ல. அவை ஒரு கற்பனைக் கதை. வியாசன் என்றாலே வியாசம், கதை, கற்பனை எழுதுகிறவன் என்று அர்த்தம். இவை ஒரு கருத்தைப் பிரச்சாரம் செய்யவே ஏற்பட்டவை என்று எழுதுகிறார். வேதிக் ஏஜ் என்ற புத்தகத்தில் முன்னுரையாக எழுதும்போது புராணம் புகுந்து மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டது. அதுதான் எங்களுக்குக் கஷ்டமாகி விட்டது என்று எழுதப்பட்டுள்ளது. 100க்கு 75 புராணங்கள் பின்னால் எழுதப்பட்டவை.

புத்தர் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவர். புராண காலம் என்பது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும். (அதாவது புத்தர் காலத்திற்குப் பிற்பட்ட காலமாகும்) என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளார்கள். புத்தர் ஏற்பட்டு அறிவும் ஒழுக்கமும் ஏற்பட்டதை ஒழிக்கவே அவதாரக் கதைகள் - அவற்றுள் முக்கியமாகக் கிருஷ்ண அவதாரம், அதிலும் சிறப்பாகக் கிருஷ்ணனின் திருவிளையாடல்கள் சிருஷ்டிக்கப்பட்டன. அதாவது, மூட நம்பிக்கைக்கு ஆக கிருஷ்ணனும் ஒழுக்கக் கேடு ஏற்பட அவனது திருவிளையாடல்கள், லீலைகள் ஆகியவையும் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவும் செய்துவிட்டு அவை கடவுள் நடத்தை - வாக்கு என்பதற்கு ஆக கீதையும் வெகு நாளைக்குப்பின் எழுதிச் சேர்க்கப்பட்டது.

சாதாரண அறிவுடன் பார்த்தாலே தெரியும்; ஒரு கடவுளை இவ்வளவு கேவலமாகச் சிருஷ்டி செய்து பாட்டில், பஜனையில், நடனத்தில், கூத்தில் மற்றும் சகலவிதமான முறையிலும், அதையே பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமென்ன? சினிமாவில் கோபிகைகளிடம் மாற்றான் கைதட்டுபவன் தன் வீட்டில் கிருஷ்ணன் வந்து லீலை நடத்த ஒத்துக் கொள்வானா? தன் அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராத நிகழ்ச்சிகளைக்கூட வெறுத்து ஒதுக்கவில்லையென்றால் என்ன அர்த்தம்? அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டும்! ஒரு சாதாரண கீழ்த்தர மனிதன் செய்ய மனம் இடம் தராத ஆபாசங்களையெல்லாம் கடவுள் பெயரால் நடத்தப்படுவதை வெறுத்து ஒதுக்காமல் அதற்கு ஆதரவளிப்பதும் அதைப் பண்டிகையாய்க் கொண்டாடுவதும் என்ன நியாயம்?

கீதை எழுதியதும், இராமாயணம் பாரதம் எழுதியதும் புத்தருக்குப் பின்னால் தான். புத்தர் அறிவும், ஒழுக்கமும் வளர வேண்டுமென்றார். அவை வளர்ந்து விட்டால், இவர்கள் கதி என்னாவது? அதற்காகத்தான் புத்தர் தோன்றியதால் எவை எவை மழுங்கிப் போய்விட்டனவோ அவற்றை மீண்டும் பலப்படுத்தவே இவற்றை எழுதினார்கள். முன்ஷி எழுதியிருக்கிறார். ராமனையும், கிருஷ்ணனையும் பற்றி; இவர்களால் ஆரியத்திற்கு அதிகமான பிரசாரம் ஏற்பட்டதாலேயே அவர்களை அவதாரமாக்கிவிட்டார்கள் என்று. இது பாரத இதிகாச சமிதிக்காரர்களே சொல்வது. இதையெல்லாம் யாரும் சிந்திப்பதில்லை. எடுத்துப் போட்டு உட்கார்ந்து பேச ஆரம்பித்தால் இந்தக் கற்பனைகள் வடிகட்டின மடமை என்பது தெரியும்.

இன்று சாதியை ஒருவரும் ஆதரிப்பதில்லை. சாதி வேண்டும் என்று சொல்ல யாருக்கும் தைரியமில்லை. (ஆச்சாரியார் ஒருவர்தாம் சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்கிறார்) அவரையும் கிட்ட நெருங்கிக் கேட்டால், நான் வேறு அர்த்தத்தில் சொன்னேன் என்று சொன்னாலும் சொல்லிவிடுவார்.

எதற்குச் சாதி இருக்க வேண்டும்? எப்படிச் சாதி இருக்கிறது? வேத சாஸ்திர புராணங்களை உபயோகப்படுத்தாமல் சாதி எங்கிருந்து வந்தது? அதையடுத்துப் பித்தலாட்டம் என்று சொல்லாமல் சாதி ஒழிப்புக்கு வேறு வழி என்ன இருக்கிறது? நான்காவது அய்ந்தாவது சாதியாக்கிப் பார்ப்பனரல்லாத மக்களை மடமையில் அழுத்திவைக்கவே வேத புராண மதம் வழி செய்கிறது. இதைக் கொஞ்சம் எடுத்துச் சொல்ல, திருத்த முயற்சித்தாலும் நாஸ்திகன் மதத் துவேஷி, வகுப்பு துவேஷி என்று சொல்லித் தலையில் கல்லைத் தூக்கி வைத்து விட்டால் என்ன அர்த்தம்?

இங்கு புத்தரைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமென்ன? இதுவும் என்ன ஆழ்வார் நாயன்மார் திருநட்சத்திரமா? புத்தரை வைத்து அவருக்குத் தேங்காய், பழம் வைத்துப் பூசை செய்வதோடு சரி என்றால், அப்படிப்பட்ட புத்தர் என்ற வார்த்தை அகராதியிலேயே இல்லாமல் இருந்தால் நல்லது என்றுதான் சொல்வேன். புத்தர் நாள் வைதீகர்களுக்குப் பகை நாளாகும். அதைப் பத்திரிகைக்காரர்கள் சரியாய்ப் போடமாட்டார்கள்.

ஆனால், பிரபல பத்திரிகை ஒன்றில் இன்றைய நிகழ்ச்சிகள் என்று என்று 60 போட்டிருப்பான். அதில் 50, 58 அங்கு இராமாயணம், இங்கு விபீஷணன் சரணாகதி, அங்குப் பாரத உபன்யாசம், இங்கு அனுமார் விஸ்வரூபம் என்று போட்டிருப்பான்! அங்குப் போய்த்தான் இந்தப் பத்திரிகைக்காரனும் காத்திருந்து சொட்டுவிடாமல் எடுத்து வந்து 3, 4 காலம் போட்டுப் பிரச்சாரம் செய்வான். இவர்கள் மத்தியில் மனிதன் எப்படி உருப்படியாக முடியும்?

உலகத்தில் இந்த நாட்டை விட வேறு எங்கு நாட்டுக்குள் இத்தனை கடவுள்கள் உள்ளன? இங்கு உள்ளதைப் போன்ற கடவுள்களின் அயோக்கியத்தனம் வேறு எங்கு இருக்கிறது? அணுகுண்டு, ரேடியோ காலத்திலா நம் மக்கள் முழுக்காட்டுமிராண்டிகளாக வாழ்வது? கடவுள் இருக்கட்டும்; ஆனால் ஒழுக்கமில்லாத கடவுள் எதற்கு இருக்கவேண்டும்? புத்தரையும் கும்பிட்டுவிட்டு இதையெல்லாம் இப்படியே வைத்திருந்தால் என்ன நியாயம்? இதை ஒழித்துக்கொண்டே வந்தால், என்றாவது எல்லோரும் பவுத்தராகி விடுவார்கள்.

ஆ.... கடவுள் என்கிறார்களே என்ன கடவுள்? இந்த ஆரியர்களுக்கு வேதத்தில் கடவுள் உண்டா? ஒரு கடவுள் இருந்ததாகச் சொல்லட்டும் ஒத்துக்கொள்ளுகிறேன். வேதத்தில் கடவுள் இல்லை; நான் ஒன்றும் புளுகுபவனல்லன். அதில் எங்கே இருக்கிறது என்று எடுத்துக்காட்டட்டும்; ஒத்துக்கொள்ளுகிறேன். வேதத்தில் கடவுள் இல்லை. அதுவும் தமிழனை (திராவிடனை)ப் பொறுத்த வரையில் கடவுளே கிடையாது. இன்று இருப்பது ஏதாவது கடவுள் ஆகுமா?

கடவுள் உண்டு, கடவுள் இல்லை என்று சொல்வதற்குத் தமிழில் என்ன வார்த்தையிருக்கிறது? கடவுள் உண்டு என்பதற்குத் தமிழில் என்ன சொல்? கடவுள் இல்லை என்பதற்கு என்ன வார்த்தை? வடமொழியில் பிச்சை கேட்காமல் தமிழில் வார்த்தை என்ன இருக்கிறது என்று சொல்ல முடியுமா? எல்லாவற்றிற்கும் வார்த்தைக்குப் பஞ்சமில்லாத தமிழில் இதற்கு வார்த்தை இல்லாமலா இருக்கும்? தமிழில் அந்தப் பேச்சுக்கே இடமில்லை. இன்று தமிழன் கும்பிடும் எந்தக் கடவுளுக்குத்தான் தமிழ்ப்பெயர் இருக் கிறது? அல்லது தமிழனைப்போல் இருக்கிறது? வேதத்தில்தான் ஏது கடவுள்? இன்னதைக் கடவுள் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா?

இங்கு இருப்பதில் முக்கியமான கடவுள் மூவர். பிரம்மா, விஷ்ணு, சிவன். இவர்கள் கடவுளர்களா? விஷ்ணு கடவுளா? வேதத்தில் உள்ளவர்கள் தேவர்கள். தேவர்கள் என்றால் மேலே இருப்பவர்கள். அவர்கள் சூரியன், சந்திரன், வருணன் இப்படி 7-8 உருப்படிகள். தேவர்களில் சில பேர்கள் பூதேவர்கள்! சில பேர்கள் வானதேவர்கள்! இவர்களைத் தவிர கடவுள் என்று எதைச் சொல்ல முடியும்? இப்படிப் பெரிய புளுகுகளைத் தூக்கிப் போட்டுவிட்டு என்னடா புளுகுகிறாய் என்றால் நாஸ்திகன் என்று தூற்றினால் என்ன நியாயம்?

வேதத்தில் கடவுள் என்பதாக ஒன்றையும் கடவுள் தன்மையோடு கற்பிக்கவேயில்லை. கடவுளாகக் கற்பிக்கப்பட்டிருப்பதெல்லாம் மனிதர்கள்தாம். மனிதர்களுக்குள்ள குணங்கள்தாம் அவர்களுக்கும்! திருடுதல், பெண்டாட்டிக் கட்டிக்கொள்ளுதல், கொலை, விபச்சாரம் இன்னும் மற்றமற்ற காரியங்கள் செய்தல் எல்லாம்! இன்னும் சாதாரண மனிதத்தன்மையைவிட ஒழுக்கக்கேடாகத் தேவர்கள் என்பவர்களைக் கற்பித்திருக்கிறார்கள்! சிவன், பிரம்மா, விஷ்ணு இந்த மூவரும் முக்கியமான தேவர்கள்கூட அல்லர். இந்த மூன்று பேர்களும் எந்த இடத்தில் ஒழுக்கத்தோடு இருந்திருக்கிறார்கள்?

கடவுளென்று கற்பித்தவனையே கேட்கிறேன். ஒழுக்கங்கெட்ட தன்மைக்கும் ஓர் அளவு வேண்டாமா? தாயைக் கட்டிக் கொண்டவன், தங்கையைக் கட்டிக் கொண்டவன், ஆணும் ஆணும் கூடிப் பிறந்தவன், நினைத்தபோது அவர்களே ஆண் பெண்ணாக மாறிக் கூடிப் பிறந்தவன். இப்படியா ஒவ்வொன்றும்? இன்னும் (இயற்கைக்கு விரோதமாக) மீனுக்குப் பிறந்தவன்; மிருகத்திற்குப் பிறந்தவன்; இப்படி ஏதேதோ சொல்லுகிறான். யாருக்கு இந்த இழிகுணங்களைக் கற்பிக்கிறோம் என்றுகூடச் சிந்திக்க வேண்டாமா? இதைச் சொல்லிப் பிழைக்கிறவனைப் பற்றிக்கூடச் சொல்லவில்லை. அரசாங்கத்திலும் பொதுநல வேஷம் போட்டுச் செல்வாக்குப் பெற்றவர்களே இதைப் பிரச்சாரம் செய்துகொண்டு புத்தர் விழாவிலும் வந்து பேசினால் என்ன அர்த்தம்?

நம்மில் பெரிய அறிவாளி என்பவர்களிடம்தாம் பெரிய அழுக்கு, பெரிய நாற்றம் இருக்கிறது. புத்தர் எதற்கு வேண்டும்? எந்தக் காரியத்தையும் அறிவைக்கொண்டு ஆராய்ந்து அனுபவத்திற்கு ஒத்துக்கொண்டு வந்தால்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதற்குத்தான் புத்தர் வேண்டும். சிலபேர் அணுகுண்டு செய்து உலகத்தை அழிக்கிறார்கள் என்று விஞ்ஞானிகள் மீது கோபப்படுகிறார்கள். அவர்கள் இந்த நாட்டுக்கு வரக்கூடாதா? மனிதனைக் கொல்கிறான்; மனிதன் சாகட்டுமே என்ன நஷ்டம்! என்றைக்கு இருந்தாலும் சாகிறவன் 4 நாளைக்கு முன் சாகட்டும்; நட்டமில்லை. இங்கு உயிரோடு இருப்பவனை நடைபிணமாக இருக்க விடுகிறார்களே! அறிவையே கொல்கிறார்களே!

ஒரு மனிதன் தர்மவான் ஆக வேண்டுமானால் கோயில் கட்டினால்தான் அவன் தர்மவான்! ஒருவன் பக்தனாக இருக்கவேண்டுமென்றால் கல்லில் முட்டிக்கொண்டால்தான் பக்தன்! இதுபோன்ற அறியாமையைப் புகுத்தி மக்களைக் காட்டுமிராண்டித் தன்மையில் வைத்துவிட்டார்கள். இதை வெறுத்துக் கண்டித்து எழுத வேண்டாமா?

வியாசர் விருந்து என்ற புத்தகம் போட்டு இப்போது எதற்கு பரப்பவேண்டும்? அதில் என்ன உப்பா சப்பா? ஒரு லட்சம் காப்பி விற்றிருப்பார்கள்! நம் நாட்டில் இத்தனை மடையர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்க, கேஜ் (அளவு கருவி) ஆகத்தானே அந்த விற்பனை பயன்பட்டது? மக்களுக்கு உண்மையான அறிவு வந்துவிட்டால் இராமாயணத்தையும் பாரதத்தையும் விட்டு வைப்பார்களா? என்ன இருக்கிறது, அவற்றில்? எடுத்ததுமே விபசாரம்! அடடா, அந்தப் பாரதத்தில் (வியாசர் விருந்தில்) ஒருவனாவது தகப்பனுக்குப் பிறந்தவன் இல்லையே! இன்னும் சொல்லப்போனால் மனிதனுக்குப் பிறந்தவனே கொஞ்சம்தான்! மீனுக்குப் பிறந்தவன் ஒருவன்! பாம்புக்குப் பிறந்தவன் ஒருவன்! குதிரைக்குப் பிறந்தவன் ஒருவன்! இப்படித்தான் பாரதப் புத்திரர்கள் அய்ந்து பேர்களும். அந்த அய்ந்து பேர்களுமே சொந்த அப்பனுக்குப் பிறக்கவில்லை. இராமாயணத்தில்தான் என்ன? ஒரு இடத்திலாவது ஒழுக்கம் என்பதில்லை. துரோகம், சூது, மடமைக்களஞ்சியம் அது!

உத்தமபுத்திரன் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஓர் ஆள் வேண்டும். அவன்தான் ராமன் என்கிறார்கள். ஓர் இடத்திலாவது ராமன் ஒழுக்கமாக இருக்கிறான் என்று காட்ட முடியுமா? என்ன உத்தமபுத்திரனுக்கு உதாரணம்! மக்களை வளர்ச்சிக்கு ஏற்றவகையில் அறிவைக்காட்டி மேலே தள்ளிவிட வேண்டிய சந்தர்ப்பத்தில் காட்டுமிராண்டித்தனத்திற்குக் காலைப் பிடித்து கீழே இழுத்துத் தள்ளினால் என்ன அர்த்தம்?

எதுவானாலும் அறிவைக்கொண்டு ஆராய்ந்து பயமில்லாமல் தர்க்கரீதியாக விவாதிக்க வேண்டும். அவன்தான் புத்தன். அதுதான் பவுத்தம்.

ஏதோ காட்டுமிராண்டிக்காலத்தில் அவர்கள் தகுதிக்கு, அறிவுக்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்தனவாக இருக்கலாம். அவை இப்போது நடப்புக்கு, காலத்திற்கு ஒவ்வாதவை, அறிவுத் துறையில் இன்று மக்களுக்குள்ள நிலை வேறு பக்கம் திரும்பிப் பார்க்கும்படி செய்துவிட்டது. சமுதாயத்தில் இப்போது உயர்ந்த சாதி என்றால் ஒரேயடியாக உயர்ந்தசாதி, கீழச்சாதி என்றால் ஒரேயடியாக கீழ்ச்சாதி உள்ளதேன்? சாதியில் மக்கள் கொடுமையும் துன்பமும் அடைகிறார்கள். காட்டில் பலவற்றை அடித்துத் தின்னும் சிங்கம் இருந்தால் அதை ஜீவ காருண்யத்தை முன்னிட்டுக் கொல்வதில்லையா?

சமுதாயத்தில் நலம் ஏற்பட வேண்டுமானால் சாதி ஒழிக்கப்பட வேண்டும். சாதியை ஒழிக்கக்கூடிய ஆட்சி வரவேண்டும். இன்றைய ஆட்சி சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லத் தைரியமுள்ள ஆட்சியே தவிர, சாதியை ஒழிக்கத் தைரியமுள்ள ஆட்சி அல்ல.

டாக்டர் ராதாகிருஷ்ணன் கூடப் பேசியிருக்கிறார்,

ராஜாக்களை ஒழித்துவிட்டோம், ஜமீன்தார்களை ஒழித்துவிட்டோம். இருப்பினும் சாதி ஒழிந்தால்தான் பயன் உண்டு. ஆதலால் சாதியை ஒழிக்க இரும்பு உள்ளம் படைத்த தைரியமான தலைவர் வேண்டும் என்று. எல்லாப் பத்திரிகைகளிலும் இந்தச் செய்தி வந்துள்ளது. அரசாங்கத்திற்குச் சாதியை ஒழிக்க வேண்டும் என்ற உணர்ச்சி இருக்கிறது. அது காரியத்திற்கு வரவேண்டும். சாதி ஒழியவேண்டுமென்றால் ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் வேலையில்லை. புராணங்களும் இதிகாசங்களும் ஒழியவேண்டும். அப்போதுதான் சாதி இல்லாத சமுதாயம் ஆகமுடியும்.

கடவுள் இல்லாத சமுதாயம் உண்டாக வேண்டும் என்று இங்கு சொல்ல வரவில்லை; ஆனால் அறிவுள்ள சமுதாயம் உண்டாக வேண்டும் என்பதையே வற்புறுத்துகிறேன்.

(15.5.57ஆம் தேதி மாலை சென்னை, எழும்பூர் மகாபோதி சங்கத்தில் நடந்த 2501ஆம் ஆண்டுப் புத்தர் விழாவின்போது தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய தலைமைப் பேருரை. - நூல்:- "புத்தநெறி")

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா

 

Pin It

உலகில் உள்ள மக்கள் அனைவரையும் பீடித்திருக்கும் ஒரு பெரும் வியாதி கடவுள்கள், மதங்கள் என்னும் இரு தொத்து நோய்களேயாகும். இவற்றுள் கடவுள்கள் நோயைவிட மதங்கள் நோய் என்பது மிகமிகக் கொடியதாகும்.

உண்மைக் கடவுள் என்கிற தத்துவத்தால் மக்கள் பிரிக்கப்பட்டிருக்கவில்லை; ஆனால், எப்படிப்பட்ட மதத்தாலேயும் மக்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன் இப்படிச் சொல்லுகிறோம் என்றால், கடவுளைப் பற்றிய ஒரே கருத்துள்ளவரும் மதத்தால் வேறுபட்டவராகப் பிரிக்கப்பட்டவராக இருந்துவருகிறார்கள். ஆனால், கடவுளைப் பற்றிய இரு வேறு கருத்துள்ளவர்களும் மதத்தால் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.

உதாரணமாக, ஒரே கடவுள் அதுவும் உருவமற்ற கடவுள் என்கின்ற எண்ணமுள்ள முஸ்லீம், கிருஸ்துவர், பிரம்ம சமாஜத்தார் முதலிய ஏகத் தெய்வ கொள்கைக்காரர்களும் மதம் காரணமாக வேறுபட்டிருக்கிறார்கள். பலவிதமான கடவுள் தன்மை கொண்டவர்களும், கடவுளே இல்லை என்பவர், மாயாவாதி, சூனியவாதி, உலகாயதவாதி, இயற்கைவாதி, சாரவாகன், வேதாந்தி முதலிய பலரும் மதம் காரணமாக இந்துக்களாகவே இருந்து வருகிறார்கள். எனவே, மக்களைப் பிரித்து வைத்திருப்பதற்குக் கடவுளைவிட மதமே முக்கியக் காரணமாக இருந்து வருகிறது.

கடவுள் உணர்ச்சி வேறுபல காரணங்களுக்குக் கேட்டை விளைவிப்பதாக இருந்தாலும், உலகப் பொது நலனுக்கும் ஒற்றுமைக்கும் கேடு உண்டாக இடம் தந்து மக்களுக்கு ஒன்றுபோல் கேடு செய்து வருவன மதங்களேயாகும்.

கடவுள்கள் திருத்தத்திற்கு உட்பட்டவைகளாகலாம். ஆனால், மதம் திருத்தப்பாட்டுக்கு இடம் கொடுப்பதில்லை. மதத்தின் அழிவுதான் திருத்தம் என்று சொல்லவேண்டி இருக்கிறது.

மதம் பெரிதும் சடங்கையும், காரியத்தையுமே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆதலால், மதம் என்பது ஒரு மனிதனின் செய்கை, நடப்பு ஆக இருக்கவேண்டி இருப்பதால், வெளிப்படையாகப் பிரிந்திருக்க வேண்டியதாகிறது. கடவுளைப் பற்றிய கருத்து ரகசியமாக-வேறு யாருக்கும் தெரியாததாக இருக்கலாம். ஆதலால் கடவுளைப்பற்றி ஒருவருக்கொருவர் மாற்று அபிப்பிராயம் கொண்டவர்கள் ஒன்றாக இருக்கலாம். அதனால்தான் மனிதன் கடவுளை ஏமாற்றுகிறான். ஆனால், மதம் வெளிப்படையாய் வேஷம் போட்டு நடித்துத் தீர வேண்டியதாகவே இருக்கிறது. ஆதலால், ஒரு மனிதன் மதத்தை ஏமாற்ற முடியாது. ஏமாற்றினால் தெரிந்துவிடும்.

ஆகவே, மனித சமுதாயத்தை ஒன்றுபடுத்தவும், சமதர்மம் தழைத்து ஓங்கவும் மதங்களே முதலில் அழிக்கப்படவேண்டும். ஏனெனில், கடவுள் முன்னிலையில் மக்கள் யாவரும் ஒன்று என்று சொல்லி எந்தக் காரியத்தையும் துவக்கலாம். ஆனால், மதங்களின் முன்னிலையில், எல்லா மத மக்களும் ஒன்று என்று சொல்லிவிட முடியாது. மதங்களாலேயே மக்கள் வேறுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். எனவே, மக்கள் யாவரும் ஒன்று, சரிசமம் என்றால் மதங்கள் அழிய வேண்டி வந்துவிடுமாதலால், மதங்கள் மக்களை ஒன்றுபடுத்தச் சம்மதியா.

இந்தியாவில் அநேக மதங்கள் இருக்கின்றன. அநேகமாக இந்தியாவின் பூர்வகுடிகளே இன்று எல்லா மதக்காரர்களாகவும் இருந்து வருகிறார்கள். ஆரியர்களும், மங்கோலியர்களும் சில மதங்களில் கலந்து இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையுடையவர்களாகத்தான் இருக்கக்கூடும். ஆனாலும், இந்தியப் பூர்வக்குடிகளுக்கு என்ன மதம், என்ன கொள்கை இருந்தது என்று காட்டும் ஆதாரம் எதுவுமே காணக்கிடைப்பதில்லை. விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஆரியர் இந்நாட்டிற்கு வருவதற்கு முன் இங்கு என்ன மதம் இருந்தது என்பது இதுவரை யாராலும் தெளிவாக்கப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆரியர் இந்நாட்டுக்கு வரும் முன் நிலம், இடம் காரணமாக மக்கள் பழக்கவழக்க இயற்கைத் தன்மைகளில் பேதம் இருந்ததாகக் காணப்படுவதல்லாமல், மதம், மதத்தின் காரணமாக ஏற்பட்ட வேஷம், சடங்கு, ஜாதி என்பவைகள் காரணமாக பேதம், பிரிவு இருந்ததாகச் சொல்லுவதற்கு அறிகுறிகளைக் காண முடியவில்லை.

மதங்கள் பிரிவினைக்கும், பேதத்திற்கும் காரணமாய் இருப்பது மாத்திரமல்லாமல், மடமைக்கும், மூடநம்பிக்கைக்கும் காரணமாக இருக்கின்றன. பயத்தின் அஸ்திவாரத்தின் மீது கடவுள் இருக்கிறார் என்றாலும், மூடநம்பிக்கை, மடமை என்கின்ற அஸ்திவாரத்தின் மீதே மதங்கள் இருக்கின்றன. இம்மாதிரி மதங்களேதான் கடவுளையும் சிறுமைப்படுத்திவிட்டன என்பது மாத்திரமல்லாமல், எதற்காகக் கடவுள் தேவை என்று சொல்லப்படுகின்றதோ, எதற்காகக் கடவுள் இருக்கிறார் என்று எண்ண மக்கள் செய்யப்படுகின்றார்களோ, அதற்கு மாறான பயன் உண்டாகும்படி மதங்கள் செய்துவிடுகின்றன.

மற்றும், எந்த மதமும் மக்களுடைய இயற்கைக் குறைபாடுகளுக்குப் பரிகாரம் செய்யவில்லை என்பது மாத்திரமல்லாமல், மதங்களால் மக்களுக்குப் பல செயற்கைக் குறைபாடுகளும் உண்டு பண்ணப்படுகின்றன. எனவே, மனித தர்மவாதி, மனித சமதர்மவாதி, (மனித) ஜீவகாருண்யவாதி, மதங்களால் பாதிக்கப்பட்டவனாகி, மதங்களில் இருந்து வெளிவந்து அல்லது மதங்களுக்கெல்லாம் மேம்பட்டவனாக இருந்துகொண்டு தொண்டாற்ற வேண்டியவனாகிறான்.

(தந்தை பெரியார் "குடி அரசு" 27-7-1946)

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா

Pin It

தென்னாட்டில் பிராமணர்களின் கொடுமைகளை வெளிப்படுத்தி அவர்களால் அழுந்திக் கிடக்கும் பிராமரணல்லாதார் சமூக முன்னேற்றத்திற்குப் பாடுபடும் இயக்கங்களையும், தொண்டர்களையும் ஒழிப்பதற்கு தென்னாட்டு பிராமணர்கள், பிராமணரல்லாதாரிலேயே சில விபூஷணாழ்வார்களை தங்களுக்கு ஆயுதமாக உபயோகப்படுத்திக்கொண்டு வந்தது நமக்குப் புதிய சங்கதியல்ல.

சரித்திர காலம் எப்படியிருந்தாலும், நம் கண்ணெதிராகவே சென்ற 10 வருஷங்களாக நடந்த காரியங்களைக் கவனிப்போம். பிராமணரல்லாதார் நன்மைக்கென்று சந்தேகமற்ற தேசபக்தரான டாக்டர் நாயர் போன்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட, ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க, சில பிராமணரல்லாதாரைக் கொண்டே சென்னை மாகாணச் சங்கமென ஒன்றை உண்டாக்கச் செய்து, அதற்கு வேண்டிய செலவுகளுக்குத் தாங்களே பணம் கொடுத்தும், இந்தியாவில் மாத்திரமல்லாமல், இங்கிலாந்திலும் போய் சிறீமான் டி.எம். நாயர் அவர்களுக்கு விரோதமாக பிராமணரல்லாதாரைக் கொண்டு எதிர்ப்பிரசாரம் செய்வித்தும் உண்மைக்கு விரோதமாக சாட்சியம் சொல்லும்படி செய்ததுமில்லாமல், ஜஸ்டிஸ் கட்சியார் பிராமணரல்லாதவர்களுக்குப் பிரதிநிதிகளல்லவென்றும் நாங்கள்தான் சரியான பிரதிநிதிகளென்றும் சொல்லச்செய்து பணத்திற்கும், விளம்பரத்திற்கும் ஆசைப்பட்ட பல பிராமணரல்லாதாரை தங்களிஷ்டம்போல் ஆட்டுவித்துவரும் சூழ்ச்சிகளையும் நாம் நேரிலேயே பார்க்கிறோம்.

ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாக ஏற்படுத்தப்பட்ட சென்னை மாகாணச் சங்கத்திற்கு முக்கிய கொள்கைகள் மூன்று. அவை, ராஜீய விஷயங்களில் காங்கிரஸைப் பின்பற்றுவது. தென்னிந்தியாவில் பிராமணரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
அடைவது. பிராமணரல்லாதாருடைய முற்போக்குக்கான காரியங்களைச் செய்வது ஆகியவைகளே. இக்கொள்கைகளே தென்னாட்டு தேசீய பிராமணர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டு தாங்களும் பக்கத்திலிருந்து நிறைவேற்றி வைத்த தோடல்லாமல், தாங்களும் அதற்கு அனுகூலமாயிருப்பதாகச் சொல்லி நமது கூடவேயிருந்து ஜஸ்டிஸ் கட்சியின் செல்வாக்குக் குறைந்ததாக மதித்துக் கொண்டு, இப்போது " மீக்கு பெப்பப்பே, நீவு தாத்தாக்கு பெப்பப்பே" என்பது போல் அடியோடு பழைய சங்கதிகளை மறந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசத்திற்குக் கெடுதியென்று, ஞானோபதேசம் செய்ய வந்துவிட்டதோடு, இதற்கும் சில பிராமணரல்லாத விபூஷணாழ்வார்களை சுவாதீனமாக்கிக் கொண்டு, அவர்களைக் கொண்டே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசத்திற்குக் கேடு என்று சொல்வதோடல்லாமல், சத்தியத்தையும், மனசாட்சியையும் கூட மறக்கும்படி செய்து அவைகளைப் பலி கொடுத்து விட்டார்கள். ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டிய அவசியத்திற்காக சென்னை மாகாணச் சங்கத்தின் மூலம், பிராமணரல்லாதாருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுப்பது சிறீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் உட்பட பல தேசிய பிராமணர்களுக்கு அவசியமாயும் நாட்டுக்கு நன்மை பல பயப்பதாயும் பட்டது.

ஆனால், சென்னை மாகாண சங்கத்தின் மூலமாய் தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் சாதித்துக் கொண்டதாய் நினைத்துக் கொண்டவுடன், நமது பிராமண சகோதரர்களுக்கு, இப்போது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுப்பது நாட்டுக்குக் கேடு விளைவதாய்ப் போய்விட்டது.

ஈரோட்டில், சென்னை மாகாண சங்க மகாநாடு நடைபெற்ற காலத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானம் உட்பட சகல தீர்மானங்களும், விஷயாலோசனைக் கமிட்டியில் சிறீமான்கள் சேலம் சி.விஜயராகவாச்சாரியாரவர்களாலும், திரு.வி.கலியாண சுந்திர முதலியாராலும், டாக்டர் வரதராஜுலு நாயுடுவாலும், வி.ஓ. சிதம்பரம் பிள்ளையாலுமே முக்கியமாய் தயார் செய்யப்பட்டது. அடுத்த நாள் மகாநாட்டிலும் சிறீமான் வரதராஜுலு நாயுடுவாலேயே பிரேரேபிக்கப்பட்டு நிறைவேறியது.

சிறீமான்கள் முதலியாரும், நாயுடுவும்தான் சென்னை மாகாணச் சங்கத்தின் பிரமுகர்கள். இவர்களை நம்பித்தான் பிராமணரல்லாதாரில் பலர் ஜஸ்டிஸ் கட்சியை விடுத்து சென்னை மாகாணச் சங்கக் கட்சியில் சேர்ந்தது.

பிராமணரல்லாத பாமர ஜனங்களும், தங்களது முன்னற்றத்திற்கு இவர்களைத்தான் எதிர்பார்த்திருந்தார்கள். இப்படியிருக்க இன்றையதினம் இவர்களின் நிலை என்னமாயிருக்கின்றதென்று யோசித்துப் பார்த்தால் எழுதவே கை நடுங்குகின்றது. தலைக்கு மேல் வெள்ளம் போகும்போது ஜாண் போனாலென்ன ? என்கிற தைரியம் நமது முதலியாருக்கு வந்துவிட்டது.

சிறீமான் நாயுடு அவர்களாவது, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்காவிட்டாலும், அதை எதிர்க்காமல் சும்மாவாவது இருக்கிறார்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்குப் பதிலாக வேறு ஏதாவது மார்க்கமுண்டாவென்று யோசிக்கிறார். வேறு மார்க்கம் கிடைக்கா விட்டால், முடிவாய் அவர் என்ன செய்வாரென்கிற விஷயம் நமக்குத் தெரியும்.

நமது முதலியாரோ, துணிந்து " வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சென்னை மாகாணச் சங்கத்தார் தற்கால நிலைக்கென கேட்டார்கள்; அந்தப் படியே கிடைத்தது. அதன் பயனை நாடு அடைந்து வருகிறது; தற்கால நிலைக்கென கேட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை என்றும் கேட்டுக் கொண்டிருத்தல் நியாயமாகுமா?" என்று சிலம்பொலியில் தர்மநியாயம் பேசுகிறார்.

சிறீமான் முதலியார் சென்னை மாகாணச் சங்கத்தின் மூலமாய் கேட்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நமக்குக் கிடைத்துமாய் விட்டது போலும். நாம் அதை அனுபவித்தாய்விட்டதுபோலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எதை உத்தேசித்துக் கேட்டோமோ, அவைகள் சரிப்பட்டாகிவிட்டதுபோலும், இன்னமும் அது இருந்தால் நாட்டுக்குக் கெடுதி விளைவிக்குமென்பதுபோலும், ஆதலால் அதைக் கேட்கக் கூடாதென்பது போலவும் உபதேசிக்கிறார்.

இவ்வுரைகள், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் விடுதலையுரிமையையும் அடைய உத்தேசங் கொண்டு ஆரம்பித்த "தேசபக்தன்" ஆசிரியரும், தொழிலாளர் நன்மைக்கென்று ஆரம்பித்த "நவசக்தி" ஆசிரியருமான சிறீமான் திரு.வி.கலியாணசுந்திர முதலியாருக்குத் தகுமா ? இது தருமந்தானா ? என்று கேட்கிறோம்.

ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டியதற்கு மாத்திரம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டியிருந்தது. இப்போது வேண்டாமற் போய்விட்டது! இவ்வித நம்பிக்கைத் துரோகத்தில் நமது திரு.வி.கலியாண சுந்திர முதலியாரவர்களுக்கு ஏன் பங்கு இருக்க வேண்டும்?

பிராமணர்கள் சம்மதித்தால் தனக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும். அவர்கள் சம்மதிக்காவிட்டால் தனக்கு வேண்டாம் என்கிற கொள்கை நமது முதலியாருடைய கொள்கையாகலாமா ?

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதில் நமது முதலியாருக்கு இப்போது உள்ள ஆட்சேபனைகள் அதற்கெனவே ஓர் சங்கத்தை ஸ்தாபித்த காலத்தில் எங்கே மறைந்து கிடந்தது? இவற்றையெல்லாம் கொஞ்சமும் நினைத்துப் பாராமல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், உரிமைப் போருக்கு விரோதமென்று சொல்கிறார். அவனவன் உரிமை, அவனவனுக்கு வழங்கப்படாமல் வஞ்சித்துக் கையில் பலத்தவன் காரியமாக்குவதுதான் உரிமைப் போரின் தத்துவம் போலும்.

சிறீமான் முதலியாரவர்களே இந்துக்களுக்குள் இதுபோழ்து மூன்று பிரிவுகள் இருக்கிறதாகவும், அவை பிராமணர், பிராமணரல்லாதார், ஆதி திராவிடர் ஆகிய இவர்களென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். இவ்வகுப்புகள் அதனதன் உரிமையை ராஜரீகத்திலாவது, சமூக விஷயத்திலாவது, பிரஜா தர்மத்திலாவது சமமாய் அடைந்திருக்கிறதா ? என்று முதலியாரை வணக்கத்துடன் கேட்கிறோம். இவைகளுக்கில்லாத உரிமைப்போர் வேறு எதற்கு? மற்றும் யாருக்கு ?

துறவறத்திற்கு காவி வேஷ்டி உடுத்தி கொள்வது ஜனங்களை ஏமாற்ற எப்படி ஒரு சாதனமாயிருக்கிறதோ, அதுபோல் ராஜீயத்திலும் உரிமை - சுயராஜ்யம் என்கிற வார்த்தைகள் ஏழை மக்களை வஞ்சிக்கவும், மற்றும் பாமரர்களை ஏமாற்றவும் மற்றும் பல காரியங்களுக்கு உபயோகப்படுத்தக்கூடிய சாதனமாகப் போய்விட்டது. இப்பொருள் கொண்ட சாதனங்களை சிறீமான் முதலியார் ஏன் உபயோகப்படுத்த வேண்டும்? இவற்றை நினைக்கும் போது நமது நாட்டின் பிற்கால வாழ்விலும், பிராமணரல்லாத சமத்துவத்திலும் நம்பிக்கையைவிட அவநம்பிக்கையே வலுத்து வருகிறது.

ஆனால், நமது கடமையை நினைக்கும்போது சும்மாயிருக்க முடியவில்லை.

- தந்தை பெரியார் - " குடி அரசு " 20.12.1925

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா

 

Pin It

நாடு பிரிவினைக் கமிட்டி அறிக்கையைப் பார்த்தேன். இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிக்கை பற்றிய சேதிகளின் சுருக்கம் ஒருவாறு எனக்குத் தெரியவந்தது. பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால் - சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது. என்ன காரணம் என்றால், ஒன்று - கன்னடியனுக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றி இழிவோ, வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது. மத மூடநம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள். இரண்டு - அவர்கள் இருவரும் மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாக இருப்பது பற்றியும் அவர்களுக்குச் சிறிதும் கவலை இல்லை. ஆகவே, இவ்விரு துறையிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணங் கொண்டவர்கள் - எதிரிகள் என்றே சொல்லலாம்.

மூன்றாவது - இவர்கள் இருநாட்டவர்களும் பெயரளவில் இருநாட்டவர்கள் ஆனாலும், அளவில் எஞ்சிய சென்னை மாநிலம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக்காரர்கள் ஆவார்கள். 1. சென்னை, 2. செங்கல்பட்டு, 3. வட ஆர்க்காடு, 4. சேலம், 5. கோவை, 6. நீலகிரி, 7. திருச்சி, 8. மதுரை, 9. ராமநாதபுரம், 10. திருநெல்வேலி, 11. தஞ்சை 12. தென்னார்க்காடு, 13. தென் கன்னடம், 14. மலபார். அப்படி 14-ல் 7-ல் ஒரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு, தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்யோகம் முதலியவைகளில் 3-ல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்து இருப்பதால் நம் நாட்டை தமிழ்நாடு என்றுகூட சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இதை நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாக பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால் நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்.

இந்தப் பிரிவினை நடப்பதில் சேர்க்கை சம்பந்தமாக ஏதாவது சிறு குறைபாடு இருந்தாலும் அதை, மேற்கண்ட பெரும் நலத்தை முன்னிட்டு கூடுமானவரை ஒத்துப் போகலாம் என்றே எனக்குத் தோன்றிவிட்டது. மற்றும் இந்தப் பிரிவினை முடிந்து தமிழ்நாடு தனி நாடாக ஆகிவிட்டால் - நமது சமய, சமுதாய, தேசிய, சுதந்திர முயற்சிக்கும் அவை சம்பந்தமான கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும் நமது நாட்டில் எதிர்ப்பு இருக்காதென்றும், இருந்தாலும் அதற்கு பலமும், ஆதரவும் இருக்காதென்றும் கருதுகிறேன். நிற்க, இந்தப் பிரிவினை அமைப்பு ஏற்பாட்டில் எனக்கிருக்கும் சகிக்க முடியாத குறை என்ன இருக்கிறது என்றால், நாட்டினுடையவும், மொழியினுடையவும் பெயர் அடியோடு மறைக்கப்பட்டுப் போய்விடுகிறது என்கின்ற குறைபாட்டு ஆத்திரம்தான்.

நம் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு, இனத்திற்கு திராவிடம் என்று இருந்த பெயர், அது தமிழல்ல என்பதனாலும், நமக்கு அது ஒரு பொது குறிப்புச் சொல்லும், ஆரிய எதிர்ப்பு உணர்ச்சிச் சொல்லுமாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன். அதை ஆந்திர, கர்நாடக, கேரள நாட்டு மக்கள் அல்லாமல் தமிழ் மக்களில் சிலரும் எதிர்த்தார்கள். பின்னவர்கள் என்ன எண்ணம் கொண்டு எதிர்த்தாலும், அவர்களுக்கு மற்ற மூன்று நாட்டார் ஆதரவு இருந்தால் அதை வலியுறுத்துவதில் எனக்குச் சிறிது சங்கடமிருந்தது. அவர்கள் மூவரும் ஒழிந்த பிறகு அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவை இல்லை என்றாலும், திராவிடன் என்று சொல்லை விட்டுவிட்டு, தமிழன் என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப் பிரிக்கலாம் என்றால், அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து, நானும் தமிழன் தான் என்று கூறிக் கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான்.

இந்த சங்கடத்திற்கு - தொல்லைக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கும்போது, இப்போது மற்றொரு மாபெருந் தொல்லை நெஞ்சில் இடிவிழுந்தது போன்று வந்து தோன்றியிருக்கிறது. அதுதான் திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புங்கூட, மீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் இடமில்லாத தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்ற பெயர்கூட இருக்கக் கூடாது என்று பார்ப்பானும், வடநாட்டானும் சூழ்ச்சி செய்து, இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்து பிரிவினையில் சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருக்கிறதாகத் தெரிகிறது.

இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும் - எந்தத் தமிழனும் அவன் எப்படிப்பட்ட தமிழனனாலும் இந்த அக்கிரமத்தை சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். இதைத் திருத்த தமிழ்நாட்டு மந்திரிகளையும், சென்னை, டில்லி, சட்டசபை, கீழ் - மேல் சபை அங்கத்தினர்களையும், மிக மிக வணக்கத்தோடு இறைஞ்சி வேண்டிக் கொள்கிறேன். தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடுமானால், பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும்? என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த காரியம் மாபெரும் அக்கிரமமான காரியம் என்பதோடு, மாபெரும் சூழ்ச்சி மீது செய்யப்பட்ட காரியம் என்றே கருதுகிறேன். “நம்நாடு எது நமது மொழி எது? நமது இனம் எது? என்பதையே மறைத்து விடுவதென்றால், பிறகு தமிழன் எதற்காக உயிர் வாழ வேண்டும்? என்பது எனக்குப் புரியவில்லை. ஆகவே இக்கேடு முளையிலேயே கிள்ளப்பட்டு விடும்படி முயற்சி செய்யும்படியாக எல்லாத் தமிழர்களையும் உண்மையிலேயே வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.

- பெரியார், ‘விடுதலை’ 12.10.55

Pin It