periyar 431மதுராந்தகத்தில் சமீபத்தில் நடந்த நாடகத்திற்காக போடப்பட்ட ஒரு துண்டு விளம்பரத்தின் அடியில் ‘பஞ்சமர்களுக்கு டிக்கட்டு கொடுக்கப்பட மாட்டாது பிராம்மண ஸ்திரீகளுக்கு தனி இடம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் அந்த ஊர் சேர்மன் இந்த நிபந்தனையின் பேரிலேயே நாடகக் கொட்டகைக்கு லைசென்சு கொடுத்திருக்கிறாராம். துண்டு விளம்பரம் நமது பார்வைக்கு வந்திருக்கிறது. கூத்தாடிப் பெண்களும் கூத்தாடி ஆண்களும் கூடி கூத்தாடுகிற இடத்தில் கூட ஆதிதிராவிடர்கள் போகக் கூடாது என்பதும், அங்கு கண்ணே பெண்ணே என்று பேசிக் கொண்டு மூக்கையும் காதையும் கன்னத்தையும் கடித்துக் கொண்டு விளையாடுவதைப் பார்க்கப் போகும் பார்ப்பனப் பெண்களுக்கும்கூட தனி இடம் ஒதுக்கித் தருவது என்பதும், பார்ப்பன ஆதிக்கத்தை காட்டுகின்றதா இல்லையா என்று கேட்பதோடு, இது சைமன் கமிஷனுக்கு தெரியவேண்டாமா? என்று கேட்கின்றோம்.

(குடி அரசு - செய்திக் குறிப்பு - 12.02.1928)

சங்கராச்சாரி மடத்து ஸ்ரீமுகம்

பொட்டுக் கட்டுவதை ஒழிக்க வேண்டும் என்று ஸ்ரீமதி முத்துலக்ஷிமி அம்மாள் அவர்களால் கொண்டுவரப்பட்ட மசோதாவானது இந்து மதத்திற்கு விரோதமென்றும், அதை இந்துக்கள் நிறைவேற்ற விடக் கூடாது என்றும் ஸ்ரீசங்கராச்சாரியார் மடத்தில் தீர்மானம் செய்து சிஷ்ய கோடிகளுக்கு வினியோகிக்கப்பட்டு இருக்கின்றதாம். இந்த மாதிரியான இந்து மதத்தின் பெருமையை கமீஷனுக்கு தெரிவிக்க வேண்டாமா?

(குடி அரசு - 12.02.1928)

Pin It