தலைவர் அவர்களே! சகோதரர்களே!!

நான் நேற்று ஈரோட்டிலிருந்து புறப்பட்டு மதுரைக்குப் புறப்பட்டு செல்லும்பொழுது ஸ்ரீ திருமலைசாமி செட்டியார் ஸ்டேஷனில் வற்புறுத்தலுக்கிணங்கி இங்கு பேசுவதாக ஒப்புக்கொண்டேன்.

periyar and kamarajarநான் இன்று பேசுவதாகக் குறிப்பிட்டுள்ள விஷயம் ‘சட்ட அங்கத்தினரும் மந்திரிகளும்’ என்பதாகும். நான் இப்பொழுது மந்திரிகளைப் பற்றி பேசுகிறேன். பின்னர் முன்னைய பொருளை விளக்குவேன். சென்ற தேர்தலில் அதிக அங்கத்தினரைக் கொண்டதாக வெற்றி பெற்றது சுயராஜ்யக் கட்சி. அவர்கள் பொது மக்களிடத்திலே ஓட்டு பெற்ற காலத்தில் என்ன வாக்குறுதி செய்தார்கள்? நாங்கள் அதிகார வர்க்கத்தை ஒரேயடியாய் எதிர்ப்போம், மந்திரிசபையை எந்த காரணத்தை முன்னிட்டும் ஒப்புக்கொள்ள மாட்டோம், இரட்டையாட்சியைக் கலைப்போம், சுயராஜ்யத்தை விரைவில் வாங்கித் தருவோம் என்று ‘கர்ச்சித்து’ உட்புகுந்தார்கள். எனவே, இவர்கட்கு மந்திரிசபையில் வேலையில்லாது போய்விட்டது.

இரண்டாவதாக விளங்கிய ஜஸ்டிஸ் கட்சியார் முழு ஓட் பலமின்மையால் ஒப்புகொள்ள மறுத்து விட்டனர். இவர்கள் எங்களுக்கு ஓட் வழங்கி பெரும்பான்மையாய் அனுப்பினால் மந்திரி சபையை ஒப்புக்கொண்டு அதனால் பார்ப்பனரல்லாதாருக்குச் செய்யக்கூடிய எல்லா நலன்களையும் செய்வோம் என்று உறுதியிட்டு வெற்றி பெற்றார்கள்.

எஞ்சி நின்றது சில்லரை கக்ஷிகள். அவைகளிடத்தில் பேரம் பேசிச் சுயேச்சைக் கட்சியென்று உற்பத்தி செய்து மந்திரிசபையை நியமிக்க இரட்டையாட்சியைக் கலைக்கும் வீரர் நிறைந்த சுயராஜ்யக் கட்சி ஆதரவு தந்தது. இந்த உண்மையை அறியாத பொது மக்கள் சந்தேகங் கொண்டனர். உண்மையை வெளிப்படுத்தும் பொருட்டு ஜஸ்டிஸ் கட்சியார் நம்பிக்கையில்லாத தீர்மானங் கொண்டு வந்தனர். காங்கிரஸ் கக்ஷியார் அதை எதிர்த்து தங்கள் யோக்கியதையை வெட்ட வெளிச்சமாக்கினர். இதனால் எங்கும் அவர்கள் மீது பெரும்புகார் ஏற்பட்டது. எவரும் சுயராஜ்யக் கட்சியை இழித்துக் கூறுவாராயினர். இந்த இழிவை நிவர்த்தித்துக் கொள்ள சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட மட்டில் ஜஸ்டிஸ் கட்சியாரை ஒழிக்கவே காங்கிரஸ் மந்திரி சபையை உடைக்குந் தீர்மானத்தை நிறைவேற்றியதாகவும் அந்த வேலையை சென்னை சுயராஜ்யக் கட்சியார் செய்து முடித்ததற்கு அவர்களை பாராட்டுவதாகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டனர்.

ஏன் சுயேச்சை கட்சியை ஆதரிக்க வேண்டுமென்ற கேள்வி எழும்போது ‘தாங்கள் அப்படி’ செய்யாது போயின் ஜஸ்டிஸ் கட்சியினர் மந்திரி பதவி ஒப்புக்கொள்ளுவர், என்று சொல்லி ஏமாற்றி வந்தனர். ஜஸ்டிஸ் கட்சியினர் கூட்டம் கூட்டி ஒப்பு கொள்ளுவதில்லை என்று உறுதி கூறினர். அதில் நம்பிக்கை இல்லையென்று காங்கிரஸ்காரர் ஏமாற்றி வந்தனர். முடிவில் கோயம்புத்தூரில் ஜஸ்டிஸ் கட்சியின் மாகாண மகாநாடு கூட்டப்பட்டது. அங்கு ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமான கொள்கையையுடைய மந்திரிகளை எதிர்க்க வேண்டுமென்றும் சட்ட மெம்பர் பார்ப்பனராயிருப்பதால் மந்திரிகள் தங்கள் வேலைகளை சுதந்திரமாய் செய்ய முடியவில்லை யாதலாலும், பல இடையூறுகள் நேருகின்றமையாலும் மாகாண சுயாட்சி வரும் வரையில் (இரட்டையாட்சி ஒழியும் வரை) மந்திரிசபையை ஏற்றுக் கொள்ளுவதில்லை என்ற தீர்மானம் ஒன்று நிறைவேறியிருக்கிறது.

பார்ப்பன சட்டமெம்பர் சொன்னபடியெல்லாம் கவர்னர் நடந்தமையால் கவர்னர் மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது. ராயல் கமிஷன் சம்பந்தமான தீர்மானம் சட்டசபையில் வந்தமையால் மந்திரிகட்குள் பிளவேற்பட்டது. எனவே, ஒத்துழைப்பதாகச் சொன்ன டாக்டர் சுப்பராயன் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் சுயராஜ்யக் கட்சியார் கொண்டு வந்து தோல்வியுற்றனர். இந்த காரணங்கொண்டு ஏனைய இரண்டு மந்திரிகளையும் கவர்னர் விலகுமாறு உத்திரவிட்டு விட்டார். உடனே இந்த பதவிகளை ஜஸ்டிஸ் கட்சியினர் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கவர்னர் வற்புறுத்தினார். தங்கள் கோயம்புத்தூர் தீர்மானத்திற்கிணங்க சட்ட மெம்பர் தங்கள் கட்சியைச் சார்ந்தவராய் இருந்தாலொழிய ஒத்துழைக்கவும் முடியாதென்று கூறிவிட்டனர். இவர்கள் சட்ட மெம்பர் பதவியினால் இடையூறு விளைவதற்கு முதற் காரணமாயிருந்ததென்று சொல்லப்பட்ட இலாக்காக்களை வழக்கப்படி வேறு மந்திரிகளிடம் கவர்னர் ஒப்படைத்தார். அந்த சட்ட மெம்பர் பதவிக்கு நியமிக்கப்பட்டு இரண்டு நாட்கள் வேலை பார்த்த ஸ்ரீ வெங்கிட்டராம சாஸ்திரி உடனே விலக நேரிட்டது.

பிறகு அரசாங்கத்திற்கு புத்தி வந்து இப்பதவியை பார்ப்பனரல்லாதாருக்கு கொடுக்க வேண்டியதாயிற்று. அதன்பேரில் தாங்கள் மந்திரி பதவி ஒப்புக் கொள்ள முடியாது என்றும் பார்ப்பனரல்லாதாருக்கு பெருந் துன்பம் விளைவித்து வந்த இந்த பதவி தம் வசப்பட்டதால் சுயேச்சைக் கட்சியினர் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு இடையூறு இல்லாத மந்திரி சபை நியமித்தால் தாங்கள் அதை எதிர்ப்பதில்லை என்று ஜஸ்டிஸ் கட்சியார் கூறினர். அதுபோல் மந்திரி சபையும் நியமிக்கப்பட்டது. இவைகளினின்று ஜஸ்டிஸ் கட்சியினர் நியாய நெறியினின்றும் தவறிவிட்டதாக எவராவது கூற முடியுமா? மெய்ப்பிக்க முடியுமா? காங்கிரஸ்காரர் பொறாமை கொண்டு நம்மை குட்டிக்கரணம் என்று கத்தினால் அறிவுடைய உலகம் ஒப்புக் கொள்ளுமா?

சட்ட மெம்பர் பதவிக்கு நமது கிருஷ்ணன் நாயர் அவர்கள் நியமிக்கப்பட்டவுடன் பார்ப்பனர்கள் நம்மை தேசத்துரோகம் என்று பூச்சாண்டி காட்டுகின்றனர். அவர்கள் யோக்கியதையை கவனியுங்கள். சென்ற பதினெட்டு வருடங்களாய் வழக்கமாகவோ, நிர்பந்தமாகவோ சட்ட மெம்பர் பார்ப்பனரே நியமிக்கப்பட்டு வந்தனர். அந்த காலத்தில் அவர்கள் நமது சமூகத்திற்கு இழைத்த அநீதிகள் அளவற்றன. ஆறு பார்ப்பனர் அந்த பதவியிலிருந்து நம்மை தலையெடுக்க வொட்டாமல், அரசாங்கத்தார் மக்களைக் கொடுமைப்படுத்திய காலத்தில் ஸ்ரீமான்கள் கிருஷ்ணசாமி அய்யர், சிவசாமி அய்யர், சீனிவாசய்யங்கார், ராமசாமி அய்யர் முதலியவர்கள் மாப்பிள்ளை போல அந்த பதவியில் உட்கார்ந்திருந்தனர்.

ஒத்துழையாமை காலத்திலே ஆயிரக்கணக்கான மக்கள் ஜெயில் வாசம் செய்த காலத்திலே மாப்பிள்ளை போல் சர். சி.பி. ராமசாமி அய்யர் அந்த பதவியை ஒப்புக்கொள்ளவில்லையா? 144-வது தடையுத்தரவை அந்த காலத்தில் அநுஷ்டித்து வந்த அக்கிரமத்தை ஒப்புக்கொள்ளவில்லையா? பாலக்காடு தெருவில் நடக்கும் தீர்மானத்துக்கு அக்கிரம வியாக்கியானம் செய்யவில்லையா? இப்பொழுது சுயமரியாதைக்காக விலகியதாக புழுகும் அதே ஸ்ரீ வெங்கட்ராம சாஸ்திரி அவர்கள் அந்த காலத்தில் அட்வகேட் ஜெனரல் பதவியினின்றும் ஏன் இராஜீனாமா செய்யவில்லை? தேசாபிமானிகட்கு அப்பொழுது அவமானம் எங்கு சென்றிருந்தது என்று கேட்கின்றேன்.

சட்ட மெம்பர் பதவிக்கு இன்ன இலாக்காக்களை கொடுக்க வேண்டுமென்று இந்தியா கவர்ன்மெண்டில் சட்டம் கிடையாது. அப்படியிருக்க ஜனாப் உஸ்மான் என்ற மகமதிய கனவானுக்கு புதிதாக சில இலாக்காக்களை மாற்றிய உடன் ஏன் இவ்வளவு பொறாமைப் படவேண்டும். இப்பொழுது இவ்வளவு பெரும் சப்தம் போடும் பார்ப்பனர்கள் அக்காலத்தில் நமக்கு செய்த தீங்குகளை ஒருவாறு எண்ணி பார்க்கட்டும். அவர்களால் நீதி இலாக்காவில் நமக்கு நேர்ந்த துன்பங்கள் சொல்லி முடியாது. சென்னை ஹைகோர்ட்டில் ஒரு மகமதிய கனவான் காலியான அந்த ஸ்தானத்திற்கு ஒரு மகமதியரை நியமிக்க சட்டசபைத் தீர்மானம் செய்து கூட ஒரு ஐயங்கார் நியமிக்கப்பட்டார். அந்த பதவியில் இருக்க வேறொரு மகமதியருக்கு உரிமை இல்லையா? பார்ப்பன சட்ட மெம்பர்கள் மகமதியர்களுக்கோ மற்றவர்களுக்கோ வேலை கொடுக்காதொழிந்தாலும் கவலை இல்லை. லாயக்கு இல்லை என்று நம்மைச் சொன்னால் இதை யார் பொருத்துக் கொள்ள முடியும். இதைவிட வேறு என்ன அயோக்கியத்தனம் அவர்கள் செய்ய வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்.

நாம் உத்தியோகம் பெறுவதை உத்தியோக வேட்டை என்றும் தேசத் துரோகம் என்றும் சொல்லிக் கொண்டு தாங்களே எல்லா உத்தியோகங்களிலும் இருக்க ஆசைப்படுவது “சரீரம் அநித்தியம் உன்சொத்தை எனக்கு கொடுத்துவிடு” என்பதைப் போன்ற அயோக்கியத்தனம் அல்லவாவென்று கேட்கின்றேன். இப்பொழுது ஆயிரக்கணக்கான மக்கள் ஆங்கில அடிமைக் கலாசாலைகளில் படிக்கின்றனர். படிக்கின்றவர்கள் எல்லாம் உத்தியோகப் பைத்தியம் பிடித்து அலைவதும் தொழிலில்லாது பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் வருந்துவதும் நாம் கண்ணால் நாடோறும் பார்க்கின்ற காட்சிகளாகும். இதற்கு முதற்காரணமாயிருந்தது காங்கிரசு. காங்கிரசு சபைதான் உத்தியோகங்களை பெருக்க வேண்டும் என்று மன்றாடியது. அதுதான் சுயராஜ்யம் என்று இப்போதும் கருதி வருகிறது.

உத்தியோகம் பார்ப்பது தேசசேவை என்று பார்ப்பனர் கருதி படித்து விட்டு எவ்வளவோ இழித் தொழில்களைச் செய்து பெரிய பெரிய உத்தியோகங்களை எல்லாம் பெற்று நமக்கு தீங்கிழைத்து வருகிறார்கள். நம்நாட்டில் ஒவ்வொரு மனிதனுடைய ஜாதகமும் உத்தியோகம் கிடைக்குமா கிடைக்காதா என்பதைப் பற்றித்தான் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு நாளும் எத்தனையோ பள்ளிக் கூடங்கள் எதற்காக புதுப்பித்து வருகின்றார்கள்? உத்தியோகங்கட்கு ஆட்களை திரட்டுவதற்காகவா அல்லவா?

பள்ளிக்கூடங்களில் எல்லோருமே பிள்ளைகளும் படிக்கின்றார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் யார்? பார்ப்பனர்கள் என்பதை எவர் மறுக்க முடியும்? அவர்கள் எதற்காக படிக்கின்றார்கள்? சங்கராச்சாரியாகவா? ஜீயர்களாகவா? மாதம் மூன்று மழை பெய்யச் செய்யவா? ஆற்றோரத்தில் உட்கார்ந்து கொண்டு மூக்கைப் பிடித்துக் கொள்ளவா? இல்லவே இல்லை. அது உத்தியோகம் பெறுவதற்கென்பதை விளையாட்டுப் பிள்ளையும் அறியும். உத்தியோகம் பெறுவதற்கென்று படிக்கும் அவர்களெல்லாம் ஜஸ்டிஸ் கட்சியாருக்கா பிறந்தார்கள்? ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக வேட்டையாடுகிறதென்பதற்கு பொருள்தான் என்ன?

சைமன் கமிஷன்

சைமன் கமிஷனை பகிஷ்கரிக்க வேண்டுமென்ற காங்கிரஸ் அது நாட்டைவிட்டு செல்லுவதற்கு முன்னேயே ஒரு சுயராஜ்யத் திட்டம் தயாரித்தனுப்பியிருக்கிறது. அந்த திட்டப்படி உத்தியோகங்கள் ஒன்றுக்கு பத்தாக ஆவதைத்தவிர வேறு பயன் பெற முடியாது.

130 அங்கத்தினர்கள் உள்ள சட்டசபைக்கு 400 அங்கத்தினர்கள் வேண்டுமாம். 150 பேர் உள்ள டெல்லி சட்டசபைக்கு 700 அங்கத்தினர்களாக்க வேண்டுமாம். இதுவா சைமன் கமிஷன் பகிஷ்காரம்? மாஜி காங்கிரஸ் தலைவர்களான ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் திட்டம் தயாரித்து புத்தக வடிவில் வெளியிட்டு 8 அணாவுக்கு கடைதோறும் விற்கிறது. ஸ்ரீ விஜயராகவாச்சாரியார் ஸ்ரீ அனிபெசண்டு ஸ்ரீ நேரு முதலியவர்கள் திட்டத்தை பார்லிமெண்டுக்கு சமர்ப்பித்திருக்கிறார்கள். தற்கால காங்கிரஸ் தலைவர் டாக்டர் அன்சாரி சர்வ கட்சி மகாநாடு கூட்டி சைமன் கமிஷனிடம் திட்டத்தை அனுப்பப் போகிறார். வீடு வேகிற சமயத்தில் பிடுங்கினது லாபம் என்பதாக வீட்டிலுள்ள சாமான்களை வேடிக்கை பார்க்க வந்தவர் பங்கிட்டுக் கொள்வது போல் காங்கிரஸ்காரர்கள் நடந்து வருவார்களானால் அவர்களுடன் ஜஸ்டிஸ் கட்சியார் எப்படி ஒத்துழைக்க முடியும்?

தங்கள் பரம்பரை வழக்கம்போல் ஏமாந்தவன் துடையில் கயிறு திரிப்பது என்ற தத்துவத்தை பார்ப்பனர்கள் கையாண்டு வருகிறார்கள். இந்த நிலையில் சுயராஜ்யம் என்பது எதுவாயிருக்க முடியும்? இந்த கேள்விகளுக்கெல்லாம் எந்த காங்கிரஸ்காரராவது பார்ப்பனராவது சமாதானம் சொல்லுகிறார்களா? சொல்லுவதேயில்லை. இதற்குக் காரணம், நம்மை பொருட்படுத்தவில்லை என்று அவர்கள் சொல்லலாம். நாம் உத்தியோகம் ஒப்புக் கொள்ளுவதை மட்டும் ஏன் அவர்கள் பொருட்படுத்தி குலைத்துக் கொண்டிருக்க வேண் டும்? சட்ட மெம்பர் வேலையை நாம் ஒப்புக் கொண்டதால் உண்டாகும் தீமையை யாராவது சொன்னார்களா? உலகத்தாரெல்லாம் பைத்தியக்காரர்கள் என்று எண்ணி தேசத்துரோகம் என்பதன் மூலமாக அவர்களுடைய பொறாமைச் செறிவைக் காண்பித்து வருகிறார்கள். இவைகளிலிருந்து உத்தியோகம் ஏற்பது தேசத் துரோகமல்லவென்றும், அதுதான் தேசத் தொண்டு, அதுதான் சுயராஜ்யம் என்றும் பார்ப்பனர்கள் கருதி வேலை செய்து வரும் உண்மையை நாம் ஒவ்வொருவரும் அறிந்து நன்னிலை யடைவோமாக.

(குறிப்பு: 02.04.1928 ஆம் நாள் திருச்சி டவுன்ஹாலின் முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 08.04.1928)

Pin It