அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பூவுலகின் நண்பர்கள்
- பிரிவு: சுற்றுச்சூழல்
கடந்த மாதம் 18ம் தேதி மரபணு மாற்று மதிப்பீட்டுக் குழு – GEAC, உணவுப் பயிர்கள் உள்ளிட்டு, 13 மரபணு மாற்றுப் பயிர்களை, பாதுகாப்பானதா என்பது உறுதி செய்திடாத முன்பே, வயல் வெளிகளில் சோதிக்க அனுமதி அளித்துள்ளது. மரபணு மாற்றுப் பயிர்கள் உடல் நலத்தையும், சுற்றுச்சூழலையும், இந்திய வேளண்மையையும் பல வகைகளில் பாதிக்கும் என்பதால் விவசாயிகளான நாங்கள் இந்த வயல் வெளி சோதனைகளை எதிர்க்கிறோம்.
1. தொலை நோக்குடன் மரபணு மாற்றுப் பயிர்களுக்கும், மரபணு மாற்றுப் பண்டங்களுக்கும் தமிழகத்தில் தடை விதித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
2. மரபணு மாற்றுப் பயிர்களை வயல் வெளிகளில் சோதிக்க அனுமதிக்கக் கூடாதென ஒற்றைக் குரலில் மத்திய அரசை வலியுறுத்திய அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
3. வயல் வெளி சோதனைகள் என்பது திறந்த வெளியில் செய்யப்படும் சோதனைகள் என்பதால் மனிதர்களின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத சக்திகளான காற்று, தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகள் போன்றவைகள் மூலம் மரபணு மாற்றுப் பயிர்களின் மகரந்தத் தூள்கள் பிற உறவுப் பயிர்கள், செடிகளில் கலப்படம் ஆவதைத் தடுக்க இயலாது.
4. இத்தகு மரபணுக் கலப்படங்கள் திறந்த வெளி வயல் வெளி சோதனைகளின் போது உலகின் பல பகுதிகளிலும் நடந்துள்ளது. அமெரிக்காவில் மரபணு மாற்று நெல் மற்றும் கோதுமை சோதனைகள் நடந்து முடிந்து பல ஆண்டுகள் கழித்து மரபணுக் கலப்படும் நடந்துள்ளதைக் கண்டறிந்ததும் அதனால் அந்தப் பகுதி விவசாயிகள் பெருத்த அளவில் நட்டப்பட்டதும் உலகு அறிந்த செய்தி.
5. இந்தியாவில் வயல் வெளி சோதனைகளுக்காக தற்போது அனுமதிக்கப்படுள்ள பயிர்களும் இனி வரவுள்ளவைகளும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், பிற உயிரினங்களுக்கும் இயற்கைச் சூழலுக்கும் பாதிப்பில்லாதவை என்பது உறுதி செய்யப்படாதவைகள்.
6. உச்ச நீதிமன்றம் தன் முன் உள்ள மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்த வழக்கில் தனக்கு ஆலோசனை அளிக்க அமைத்த தொழில் நுட்ப வல்லுனர் குழு அளித்த அறிக்கையில் இந்தியாவில் மரபணுமாற்றுப் பயிர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்குரிய ஆய்வுக் கூடங்கள் இல்லை, அத்தகு ஆய்வுகளை செய்திடும் அறிவியல் வல்லுனர்களும் இல்லை. அத்தகு ஆய்வகங்களும், வல்லுனர்களும் உருவாக்கிய சோதனைகள் நடத்தி பாதுகாப்பானது என்பதை அறிந்த பின்னரே இத்தகு வயல் வெளி சோதனைகளை அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
7. கடந்த நாடாளுமன்றத்தின் வேளாண்மைக்கான நிலைக் குழுவானது ஒருமித்த குரலில் இந்தியாவிற்கு மரபணு மாற்றுப் பயிர்கள் தேவையில்லை என்றும் வயல் வெளி சோதனைகளைத் தடை செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசிற்குத் தெரிவித்துள்ளது
8. மரபணு மாற்றுப் பயிர்களில் திணிக்கப்பட்டுள்ள மரபணுக்கள் அந்தந்த நிறுவனங்களின் சொத்து என்று காப்புரிமை பெறப்பட்டவைகள். அத்தகு மரபணுக்கள் விவசாயிகளில் பயிர்களுடன் மரபணுக் கலப்படம் நடந்துவிட்டால் இந்திய விவசாயிகளின் விதைத் சுதந்திரமும், உரிமையும் அந்த விதை வணிக நிறுவனங்களிடம் சிக்கிவிடும். தார்வாட் விவசாயப் பல்கலைக் கழகம் உருவாக்கிய பி.ட்டி, பிகநேரி பருத்திப் பயிரில் மான்சான்டோவின் மரபணு எப்படியோ கலப்படம் ஆனது. இப்படி தனக்குச் சொந்தமான மரபணு பி.ட்டி பிகநேரில் இருப்பதை எதிர்த்து வழக்கும் தொடுத்தது. அந்தத் திட்டம் இறுதியில் நிறுத்தப்பட்டது.
9. ஏற்கெனவே இந்தியாவின் பருத்தி விவசாயத்தில் உள்ள பருத்தி விதையில் 96% மான்சான்டோவின் காப்புரிமை விதைகளாகவே உள்ளது. விவசாயத்தின் ஆணிவேராக இருக்கும் விதைகள் ஒரிரு விதை நிறுவனங்களிடம் சிக்கிக் கொள்வது இந்திய விவசாயத்திற்கு ஆபத்தானதாகும். மேலும் இப்படி இந்திய பருத்தி முழுதும் மான்சான்டோவின் பருத்தியாக மாறியதால், சுதேசியத்தின் அடையாளமாக உருவாக்கப்பட்ட இந்திய தேசியக் கொடி இன்று மான்சான்டோவின் பருத்திக் கொடியாக மாறிவிட்டது.
10. பி.ஜே.பி கட்சி 2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில், ‘மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கைச் சூழலுக்கும் எவ்வித பாதிப்பும் இருக்காது என்பதை முழுமையான அறிவியல் ஆய்வுகள் மூலம் அறிந்த பின்னரே மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்,’ என்று உறுதியளித்திருந்தது. தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தில் மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி கொடுத்தார். அவர் தனது வாக்குறுதியை செயல்படத்திக் காட்டியுள்ளார். பி.ஜே,பி. செய்யுமா?
11. ஆனால் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் மாண்புமிகு.பிரகாஷ் ஜவடேகர் அவர்களின் ஆழ்கிணற்று மௌனம் மரபணு மாற்றுப் பயிர்கள் வயல் வெளி சோதனைகள் பிரச்சனை குறித்து முந்தைய சுற்றுச் சூழல் அமைச்சர்களான திரு. ஜெய்ராம் ரமேஷ் மற்றும் திருமிகு. ஜெயந்தி நடராஜன் அறிவு மற்றும் அறிவியல் பூர்வமாக அனுமதி அளிக்க மறுத்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட்ட கதி அவரது வாயை பூட்டிவிட்டதோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.
12. இந்தியாவில் இதற்கு முன்பு நடந்த பல்வேறு வயல் வெளி சோதனைகளின் போது அந்தச் சோதனைகளை நடத்திய விதமும் அதில் ஏற்பட்ட பல விதி மீறல்களையும் சுட்டிக் காட்டிய பின்னரும் மரபணு மாற்று அனுமதிக் குழு எவ்வித நடவடிக்கையும் தவறு செய்யதவர்கள் மீது எடுக்கவில்லை.
இது போன்ற பல காரணங்களால், அறிவியல் உண்மைகள் தெரிவிக்கும் அதிர்ச்சியான உண்மைகளால் இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு வயல் வெளி சோதனைகள் நடத்தவும், மரபணு மாற்றுப் பண்டங்களை இறக்குமதி செய்யவும் அனுமதி அளிக்கக் கூடாதென மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு.
தமிழக இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு.
பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு
தாளாண்மை உழவர் அமைப்பு,
ஐக்கிய விவசாயகள் சங்கம்,
இந்திய விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பு
தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் உழவர் உழைப்பாளர் கட்சி,
தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி,
தமிழக விவசாய சங்கங்கள்
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு
மற்றும் பல அமைப்புகள்.
- விவரங்கள்
- இராமியா
- பிரிவு: சுற்றுச்சூழல்
இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் விட, புவி வெப்ப உயர்வுப் பிரச்சினை தான் அதிகமாக அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது என்றுஅறிவியல் அறிஞர்கள் மட்டும் அல்லாது ஐக்கிய நாட்டு அவைத் தலைவர்களும் தெளிவாகக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.
அண்டார்டிகா பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னால் உருகிக் கொண்டு இருந்த பனியின் அளவை விட, இவ்வாண்டில் உருகுதல் வேகம் இரு மடங்கு ஆகி இருக்கிறது என்று 2010ஆம் ஆண்டு ஏவப்பட்ட செயற்கைக் கோள் அனுப்பிய தகவல்களை ஆராய்ந்து அறிவியல் அறிஞர்கள் கூறி உள்ளனர். இதைப் பற்றி 20.5.2014 அன்று இலண்டனில் கருத்து கூறிய டேவிட் வாகன் (David Vaughan) என்ற அறிவியல் அறிஞர், இப்பனி உருகுதல் கடல் மட்டத்தை உயர்த்தும் என்றும் இதைத் தடுப்பதற்கு மனித குலம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
நேபாளத்தில் உள்ள பனிப் பாளங்கள் கடந்த 30 ஆண்டுகளில் 24% உருகி மறைந்து போய் உள்ளதாக, அந்நாட்டு பனிமலைப் பாளங்கள் பகுதியைப் பற்றி ஆராயும் அறிவியலாளர் சம்ஜ்வால் ரத்ன பஜ்ராச்சார்யா (Samjwal Ratna Bajracharya) 23.5.2014 அன்று காட்மாண்டுவில் கூறினார்.
புவி வெப்ப உயர்வினால் பனி மலைகளும், பனிப் பாளங்களும் உருகி, கடல் மட்டம் உயர்ந்து இருப்பதால், அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் (National Aeronautics and Space Administration - NASA), விண் வெளி ஆராய்ச்சிக்காகக் கட்டிய கட்டிடங்கள் நீரில் அமிழ்ந்து கொண்டு இருப்பதாக 24.5.2014 அன்று அந்நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதனால் கோடிக் கணக்கான அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்கள் பயன் படுத்த முடியாமல் போகும் நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது.
இமயமலைப் பகுதி, புவி வெப்ப உயர்வினால் பாதிக்கப் படுவதைப் பற்றி ஆராயும் ஆர்த்தூர் லட்ஸ் (Arthur Lutz) எனும் அறிவியல் அறிஞரின் ஆய்வு முடிவுகள் 1.6.2014 அன்று திருவனந்தபுரத்தில் வெளியிடப் பட்டு உள்ளது. இமயமலை உருகுவதால் சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா, சல்வீன், மெகாஸ் நதிகளில் வெள்ளப் பெருக்கு அதிகமாகி உள்ளதாக அவ் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்டு உள்ள, அறிவியல் ஆய்வுகளினால் மட்டுமே அறிந்து கொள்ள முடியக் கூடிய, இப்பிரச்சினைக்குத் தீர்வு என்ன? இதைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்களும் தன்னார்வத் தொண்டர்களும் கூறி வருகிறார்கள். அப்படியே ஏற்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள். இது நல்ல பலனையும் அளித்து இருக்கிறது. மக்களிடையே புவி வெப்ப உயர்வு பற்றிய விழிப்புணர்வு பற்றி ஆராய்ந்த ஆற்றல் மற்றும் சாதன நிறுவனம் (The Energy and Resource Institute - TERI) 95%க்கும் அதிகமான மக்கள் இதைப் பற்றிய விழிப்புணர்வைப் பெற்று இருக்கிறார்கள் என்று 4.6.2014 அன்று புது தில்லியில் தெரிவித்து உள்ளது. அவ்வாறு விழிப்புணர்வு பெற்ற மக்கள் புவி வெப்பத்தினால் உலகம் அழியாமல் பாதுகாப்பதற்கு எடுத்து உள்ள நடவடிக்கைகள் என்ன தெரியுமா?
உலகச் சுற்றுச் சூழல் நாளை 5.6.2014 அன்று கொண்டாடி இருக்கிறார்கள். அன்று சென்னையில் முதலாளியக் குழுமங்களும், அரசு ஊழியர்களும், தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து ஊர்வலம் நடத்தி இருக்கிறார்கள்; மரக் கன்றுகளை நட்டு இருக்கிறார்கள். (அம்மரக்கன்றுகள் வளர்வதற்கும் நிலைப்பதற்குமான ஏற்பாடுகள் எதுவும் செய்து இருப்பதாக எந்த விமான தகவலும் இல்லை.) அண்ணா பல்கலைக் கழக ஊழியர்கள் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி இருக்கிறார்கள். திருவனந்தபுரத்தில் 12,000 மாணவர்கள் ஒன்றிணைந்து ஒருமித்த குரலில் பாட்டு பாடி இருக்கிறார்கள். மும்பையில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் புவி வெப்பத்தால் சுற்றுச் சூழல் எவ்வளவு கெடுகிறது என்று கணினிமயப் படுத்திக் கணக்கிடும் முறையை வடிவமைத்து இருக்சிறார்கள்.
யாரும் புவி வெப்பம் உயர்வதைத் தடுப்பது எப்படி என்றோ, ஏற்கனவே உயர்ந்து உள்ள வெப்பத்தை எப்படிக் குறைப்பது என்றோ விவாதித்ததாக (நினைத்ததாகக் கூட)த் தெரியவில்லை.
இன்று புவி வெப்ப உயர்வுப் பிரச்சினை ஏன் ஏற்பட்டு உள்ளது? கரி வளியை (Carbon di oxide) உமிழ்ந்து, புவி வெப்பத்தை உயர்த்தும் புகையை வெளியிடும் வாகனங்கள், ஆயுதங்கள் போன்ற பண்டங்களை அதிகமாக உற்பத்தி செய்வதாலும், கரி வளியை உள் இழுத்து உயிர் வளியை (Oxigen) வெளியிட்டு, புவி வெப்பத்தைக் குறைக்கும் மரம் வளர்த்தல் வேளாண்மை போன்ற தொழில்கள் நசிந்து வருவதாலும் தான். இந்நிலையை மாற்றி, புவி வெப்ப உயர்வுப் பொருட்களின் உற்பத்தியை வெகுவாகக் குறைக்கவும், புவி வெப்பத்தைக் குறைக்கும் பொருட்களின் உற்பத்தியை வெகுவாக அதிகரிக்கவும் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் ஏன் பேச / சிந்திக்க மறுக்கின்றனர்? ஏனெனில் இது அறிவியல் பிரச்சினை அல்ல; அரசியல் பிரச்சினை. அதுவும் ஒரு நாட்டு அரசியல் பிரச்சினை அல்ல. உலக நாடுகள் அனைத்துக்கும் பொதுவான அரசியல் பிரச்சினை.
புவி வெப்ப உயர்வுப் பொருட்களின் உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்றால் முதலாளித்துவப் பொருளாதார முறையில் அது முடியவே முடியாது. ஏனெனில் அவை தான் மிகுந்த இலாபத்தை அளிக்கும் பண்டங்களாக உள்ளன. ஏற்கனவே உள்ள பொருளாதார நெருக்கடியால் முதலாளிகள் தங்கள் மூலதனத்தை இலாபகரமாக ஈடுபடுத்தும் தொழில்கள் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் வாகனங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை உறபத்தி செய்யக் கூடாது என்றால் மூலதனத்தை வைத்துக் கொண்டு முதலாளிகள் என்ன செய்வார்கள்?
அடுத்ததாக மரம் வளர்த்தலிலும் வேளாண்மையிலும் மூலதனத்தை ஈடுபடுத்த முடியுமா? அவற்றில் இலாபம் குறைவு என்பது மட்டும் அல்ல; பல சமயங்களில் அவை இழப்பை அல்லவா ஏற்டுத்தி விடுகிறது? அப்படிப்பட்ட தொழில்களில் மூலதனத்தை ஈடுபடுத்த முடியுமா?
அப்படி என்றால் தீர்வு இல்லவே இல்லையா? நிச்சயமாகத் தீர்வு இருக்கிறது. அது உலக அரசியல் மாற்றத்தில் இருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையைக் காவு கொடுப்பது தீர்வின் முதல் கட்டம். நிகரமை (சோஷலிச) உற்பத்தி முறையை ஏற்பது இரண்டாவது கட்டம்.
முதலாளித்துவ உற்பத்தி முறையைக் காவு கொடுப்பதன் மூலம் புவி வெப்ப உயர்வுப் பொருட்களின் (அதாவது மனித குலத்தின் பெரும்பாமையோருக்குப் பயன்படாத, மிக மிகச் சில மனிதர்களின் அயாக்கியத்தனமான திடீர் ஆசைகளுக்குத் தீனி போடும் பொருட்களின்) உற்பத்தியைத் தடுத்து நிறுத்த முடியும். நிகரமை உற்பத்தி முறையை ஏற்பதன் மூலம் புவி வெப்பத்தைக் குறைக்கும் (மனித குலத்தின் பெரும்பான்மையோர் பசி பட்டினி இல்லாமல் வாழ்வதற்குத் தேவையான) பொருட்களை மிகப் பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடியும்.
இதை அறிவியல் அறிஞர்களால் செய்து முடிக்க முடியாது. மக்களால் தான் செய்து முடிக்க முடியும். இன்றைய முதலாளித்துவ அரசியலை ஒழித்து விட்டு சோஷலிச அமைப்பை உருவாக்குவதால் மட்டுமே அது முடியும். உலக மக்கள் அனைவரும் இத்திசையில் ஒன்றிணைய நாம் அனைவரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுவதற்கு இதைப் பற்றிய புரிதல் ஒன்றே போதுமானது. புவி வெப்பம் உலகை அழிவுப் பாதையில் கொண்டு செல்கிறது என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டு விட்டது; முதலாளித்துவ அமைப்பைக் காவு கொடுப்பதும் சோஷலிச அமைப்பை ஏற்பதும் தான் இப்பிரச்சினைக்குச் சரியான தீர்வு எனும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அடுத்த பணி ஆகும்.
- இராமியா
(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.6.2014 இதழில் வெளி வந்துள்ளது)
- விவரங்கள்
- பாரி
- பிரிவு: சுற்றுச்சூழல்
இரண்டாம் உலகப் போருக்குப் பின் பன்னாட்டு வல்லரசுகள் புதிய காலனியக் கொள்கையைப் பல துறைகளிலும் புகுத்தி வருகின்றன. வல்லரசு நாடுகள் தேசிய இன மக்களின் மரபு சார்ந்த உணவு, மருத்துவம், வேளாண்மை, தட்ப வெட்பம் போன்ற அனைத்து நிலைகளிலும் மாற்றம் செய்கின்றன. அதன்மூலம் இவற்றுக்கெல்லாம் தம்மைச் சார்ந்திருக்கும் நிலையை அவ்வரசுகள் தோற்றுவிக்கின்றன.
தமிழக மக்கள் தங்களது சொந்த மருத்துவ முறையான சித்தா, யோகா, வர்மம் ஆகியவற்றினை இழந்து அலோபதி மருத்துவத்தைச் சார்ந்து இருப்பதாலேயே பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டுள்ளனர். காரணம், அம்மருத்துவம் நோய் நாடி நோய் முதல் நாடி எனும் அடிப்படையிலானது அன்று. அது நோயினை அப்போதைக்கு தணிக்கும், தள்ளிப் போடுமே தவிர அடியோடு களைவதில்லை என்பது இன்று புரிய வைக்க வேண்டிய செய்தியும் அன்று.
இந்திய அரசு பசுமைப் புரட்சி எனும் பெயரில் இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தப்படாத ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் செறிவூட்டி வேதி உரங்கள் எனும் பெயரில் திணித்து நம் நிலத்தை நஞ்சாக்கியது. மரபணு மாற்றுப் பயிர் என்பதன் மூலம் நமது விதைகளை அழித்துப் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்திவிட்டது. இதனால், தமிழக மக்களில் 80 விழுக்காட்டினர் தொடர்ந்து நோயுடன் வாழும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதில் வெற்றி கண்ட பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய வல்லாதிக்கத்துடன் தொடர்ந்து இணைந்து தமிழர்களது நிலத்தினை முற்றுகை இட்டுள்ளன. அவை கட்டுப்படுத்தப்படாத தொழிற்சாலைகள், கெய்லின் எரிவாயுக் குழாய் பதிப்புத் திட்டம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், ஆற்று மணல் எடுப்பு, மலைகளை உடைத்து கிரேனைட் எடுத்தல், தாது மணல் எடுத்தல், கனிம வளங்கள் வெட்டி எடுத்தல், மலைகளைச் சுற்றுலாத் தலங்களாக மாற்றுதல், கூடங்குளம் அணுஉலை என்று தொடர்கிறது. இதற்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் வான்வழியாகத் தமிழகத்தில் நிறைந்துள்ள கனிம வளங்களை அடையாளம் கண்டுள்ளன. இவற்றின் ஒரு பகுதிதான் மீத்தேன் எரிவாயுத் திட்டம்.
தமிழகத்தில் மீத்தேன், பழுப்பு நிலக்கரி, இருப்பு!
தமிழ்நாடு புதுச்சேரி கடலோரப் பகுதியான பாகூரில் தொடங்கி நெய்வேலி, திருமுட்டம் (சிறிமுஷ்ணம்), ஜெயங்கொண்டம் வழியாக மன்னார்குடிக்குத் தெற்குப் பகுதி வரையான காவிரிப் படுகையில் பழுப்பு நிலக்கரியும் அத்தோடு சேர்ந்து மீத்தேன் என்ற எரிவாயுவும் இருக்கிறது. பழுப்பு நிலகரியின் மதிப்பீடு 27,389 மில்லியன் டன்னும், மீதேன் வாயுவின் மதிப்பீடு 98,000 கோடி கன அடியும் உள்ளன.
இந்திய தமிழக அரசுகளின் திட்டம்
மனித விலங்குக் கழிவுகள், அழுகிய காய்கறி, சாக்கடை, சகதி, குப்பைகள், நுண்ணுயிரிகளால் சிதைக்கப்படும் போது மீத்தேன் கிடைக்கிறது. தஞ்சாவூர் சாத்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திலும், நெல்லை மாவட்டம் சலவை சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலையிலும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் இவ்வாறான மீத்தேன் தயாரித்து மின்சாரமும் சமையலும் செய்கின்றனர். இது நிலத்திற்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் கேடில்லாத முறையாகும்.
இப்படி மீத்தேன் தயாரிக்கும் முறையினால் பன்னாட்டு நிறுவனங்களோ, இநதிய அரசியல் அதிகார வர்க்கங்களோ கோடிகோடியாகக் கொள்ளையடிக்க முடியாது. எப்படி மின்சாரம் தயாரிக்கப் பல முறைகள் இருந்தும் மக்களுக்குக் கொடிய ஆபத்தை உண்டுபண்ணும் அணுமின் நிலையங்களைத் திறக்கிறார்களோ அதேபோலத்தான் காவிரியை பாலைவனமாக்கப் போகும் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளனர். அணுமின் நிலையங்களில் பல இலட்சம் கோடி புரள்கிறது என்றால் மீத்தேன் எரிவாயுத் திட்டத்திலும் இதே நிலைதான். அதனால்தான் மக்களின் போராட்டங்களைப் பற்றி கவலைப்படாமல் இத்திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கின்றனர்.
இந்திய அரசின் பெற்றோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 27.07.2010 அன்று “கிரேட் ஈஸ்டேர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிட்டெட்’ என்ற நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியுள்ளது. அதற்கான வேலைகளைத் தொடங்குவதற்கு திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினுடன் 04.01.2011 அன்று ஒப்பந்தமிட்டது.
மீத்தேன் எரிவாயுவின் குறைந்தபட்ச மதிப்பு ரூ 6 இலட்சம் கோடி.. இந்திய அரசு பெற்றுக்கொள்ளும் தொகையோ வெறும் ரூ. 5,000 கோடி மட்டுமே. முதற்கட்டமாக தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் சில பகுதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மொத்த நிலப்பரப்பு 691 சதுர கிலோமீட்டர். இதில் 24 ச.கி.மீ பரப்பு பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காகவும், 667 ச.கி.மீ பரப்பு மீத்தேன் எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.
மீத்தேன் எடுக்கும் முறையும் அவற்றினால் ஏற்படும் விளைவுகளும்
நிலக்கரிப் படுகை மீத்தேன் வாயு ஒரு குறிப்பிட்ட பகுதியில் அடர்த்தியாக இருப்பதில்லை. நிலக்கரி படிமத்தில் அதன் நுண்துளைகள், வெடிப்புகளில் நிலக்கரிப் பாறைகளின் தளப்பரப்பில் ஒட்டியிருக்கும். மன்னார்குடி பகுதியில் நிலக்கரி படிமங்கள் தரைமட்டத்திற்கு கீழே 500 அடிமுதல் 1650 அடி ஆழம் வரை காணப்படுகிறது. தற்போதுள்ள நிலத்தடி நீர் இந்தப் படிமங்களை அழுத்திக்கொண்டுள்ளது. இந்த அழுத்தத்தினால் அடர்த்தியற்றற மீத்தேன் வாயு நிலக்கரி பாறைகளிலிருந்து வெளியேற முடிவதில்லை. நிலக்கரிப் பாறையில் அழுத்தம் கொடுக்கும் நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்றிய பின்னரே மீத்தேன் வாயு வெளியேற முடியும்.
“நீரியல் விரிசல்” (Hydraulic fracturing) பயன்படுத்தப்படுகிறது. பூமியில் 2000 அடிவரை துளையிட்டு குழாய் அமைத்து அதிலிருந்து பக்கவாட்டில் பூமிக்கு அடியிலேயே இரண்டு கி.மீ தூரத்திற்கு எல்லா திசைகளிலும் குழாய் பதிக்கப்படுகிறது. நிலக்கரி படிமத்தை நொறுக்க நீரும் மணலும் 600 வகை வேதிப்பொருட்களும் கலந்த ஒரு கலவை அழுத்தத்துடன் உள்ளே செலுத்தப்படும். அப்போது நிலக்கரி படிமங்கள் நொறுங்கி இடுக்கில் உள்ள மீத்தேன் எரிவாயு நீரோடு உறிஞ்சப்பட்டுப் பிரிக்கப்படுகிறது. பூமியில் செலுத்தப்பட்ட வேதிக் கலவையில் 30 விழுக்காடு மட்டுமே வெளியே எடுக்க முடியும். மீதி பூமிக்குள்ளேயே தங்கி நீரினை நஞ்சாக்குகிறது. வெளியேற்றப்படும் நீர் கடல் நீரை விட 5 மடங்கு உப்பானது. இது பாசனக் கால்வாய் மூலம் வெளியேற்றப்பட உள்ளது. அக்கழிவுகளால் நீர் பாயும் நிலப்பகுதி விளைய முடியாத பொட்டல் காடாகும். மேலும் 500 முதல் 1,650 அடிவரை குழாய் வழியாக நீர் வெளியேற்றும் போது அதனை சமப்படுத்த கடல் நீர் உள்வாங்கப்படும். மேலேயுள்ள நன்னீரும் உள்வாங்கப்படும். 80 ஏக்கருக்கு ஒரு கிணறு வீதம் சுமார் 2,000 கிணறுகள் தோண்ட உள்ளனர். ஒரு கிணற்றிலிருந்து ஒரு நாளைக்கு 75,000 லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்படும். இது 40 ஆண்டுகள் நடைபெறும். அடுத்து 100 ஆண்டுகள் நிலக்கரி எடுக்கப்படும்.
இதனால் இந்தப் படுகை மட்டும் பாதிக்கப்படப்போவதில்லை. சுற்றியுள்ள மாவட்டங்களின் நீர்த்தொகுப்புகள் (Aquifers) வறண்டு போகும். மேலும் நிலநடுக்கம், மண் உள்வாங்குதல் ஏற்பட்டு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், வீடுகள் விரைவில் பாதிக்கப்படுவதுடன் அழிந்தும் போகும். மக்களுக்கு புற்றுநோய், மரபணு மாற்றக் கோளாறுகள், மூளை,நரம்புக் கோளாறு, நாளமில்லாச் சுரப்பிகள் பாதிப்பு, தோல் நோய், கண் பார்வை இழப்பு, தொடு உணர்வு அழிவு, ஈரல் பாதிப்பு, சுவாசக் கோளாறு இவைகள் தொடர்பான பல்வேறு நோய்கள் ஏற்படும். மொத்தத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நிலமாக மாறிவிடும்.
காவிரிப் படுகையைப் பாதுகாப்போம்!
மத்தியிலுள்ள காங்கிரசு அரசும், மாநிலத்திலிருந்த திமுக அரசும் மக்கள் மீது துளியும் இரக்கமின்றி இத்திட்டத்திற்கு அனுமதி அளித்தன. இத்திட்டத்திற்கு எதிரான மக்களின் எழுச்சியைக் கண்ட அதிமுக ஓர் ஆய்வுக் குழுவை அமைத்தது. இக்குழு மூன்று மாதக் காலத்திற்குள் அறிக்கை தயாரித்து அரசுக்கு அளிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஏறக்குறைய ஒரு வருடம் ஆன பிறகும் அறிக்கை வந்தபாடில்லை. விவசாயிகளுக்கு ஒரு சிறு பாதிப்பு என்றாலும் இத்திட்டத்தை செயல்பட விடமாட்டோம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா 17.07.2013 இல் உறுதியளித்தார். நாகப்பட்டின தேர்தல் வாக்குறுதியிலும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
மீத்தேன் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் தொடங்கிய போது திருவிடைமருதூர் வட்டத்தைச் சேர்ந்த நரசிங்கன்பேட்டை மற்றும் மதுக்கூர் வட்டத்தில் பாவாகி கோட்டை ஆகிய இடங்களில் மக்கள் திரண்டு முதல் கட்டப் பணியைத் தடுத்துள்ளனர். பல்வேறு வடிவிலானப் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றன. தற்போது மத்திய அரசுக்கான நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும், அதிகாரிகளும் நயவஞ்சகமாக நாடகமாடுகிறார்கள். இதில் மக்கள் மதிமயங்கிவிடக் கூடாது.
“வேட்டைக்காரனைப் போலன்றி, ஓநாய் தனக்கு அடுத்த ஆண்டிற்குக் குட்டிகளை உணவாக அளிக்கும் பெண்மானை விட்டு வைப்பதில்லை” என ஏங்கெல்ஸ் பொருளாதாரம் பற்றி வர்ணிப்பார். அதுபோல் எதிர்கால மக்களின் தேவைகளைக் கருதிப் பார்க்காமலும், நிலங்கள் பாலைவனமாகப் போவதைப் பற்றிய கவலை இல்லாமலும் இந்திய வல்லாதிக்க அரசு தனது சொந்த இலாப நோக்கத்திற்காக மக்களின் வாழ்வைச் சூறையாடுகின்றது.
நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு ஆகியவற்றுக்கான இயற்கைச் சமநிலை பாதுகாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இயற்கை நம்மை அழித்துவிடும். இயற்கையில் பயனில்லாப் பொருள் என்று ஏதுமில்லை. அனைத்தும் மறுசுழற்சிக்கு உள்ளாகும் வகையிலானொரு சுழல் வட்டக் கட்டமைப்புடன் இயங்குகிறது. அத்தொடர்புகள் அழிந்தால் நாம் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை தமிழ் மக்களாகிய நாம் உணர வேண்டிய தருணமிது.
இன்றைய உலக அரசியல் சூழலில் இந்திய, பன்னாட்டு சுரண்டல் இரக்கமற்ற நிலையில் இருப்பதை உலக நடப்புகள் உணர்த்துகின்றன. எந்த ஒரு அரசியல் கட்சியையும் நாம் நம்பி இருக்க வேண்டியதில்லை. மலையை உடைத்து, கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்கு எதிரான போராட்டம், நந்தி கிராம மக்களின் போராட்டம், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு தேசிய இனங்களின் போராட்டம், கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் என இந்தியாவெங்கும் நடைபெற்று வரும் போராட்டங்களை இந்திய அரசு அடக்குமுறை கொண்டு நசுக்கி வருவதை நாமறிவோம்.
உள்ளாட்சி, மாநகராட்சி தேர்தல் வரும்போது கூடங்குளம் மக்களிடம் “உங்களில் ஒருத்தியாய் இருப்பேன்” எனக் கூறிய ஜெயலலிதா பிறகு தனது நிலையை மாற்றிக் கொண்டு அம்மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவிவிட்டதை நாமறிவோம். அதே போல் இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாகப்பட்டினத்தில் “மீத்தேன் திட்டத்தை நாங்கள் பங்குபெறும் ஆட்சி வந்தால் தடுப்பேன்” என ஜெயலலிதா கூறியது மக்களை ஏமாற்றுவதற்கே!
தமிழக மக்களே, தமிழகம் பல்வேறு நிலையில் இந்திய, பன்னாட்டு வல்லரசுகளால் முற்றுகை இடப்பட்டுள்ளது, இதனை எந்த ஒரு தேர்தல் அரசியல் கட்சியும் முறியடிக்க சக்தியற்றதே. தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் ஒன்றுபட்டப் போராட்டமே வெற்றி தரும். அத்திசைவழியில் முன்னேறுவோம்.
(தமிழ்த் தேசம் - மே 2014 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- ச.பாலமுருகன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
மேற்குத் தொடர்ச்சி மலையானது குஜராத்தின் தென் பகுதியில் தப்தி நதிக்கரையில் துவங்கி மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் குமரி மாவட்டம் வரை 1600 கிலோ மீட்டர் நீளம் நீண்டுள்ளது. அது மொத்தத்தில் 129037 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் உலகின் பள்ளுயிர்ப் பெருக்கம் உள்ள 34 பாரம்பரிய மிக்க முக்கிய இடங்களில் (Bio diversity hot spot) மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று என அறிவித்துள்ளது. சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கோண்டுவனா எனற பெருங்கண்டத்திலிருந்தும் ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் பகுதியிலிருந்து உடைந்து வந்து ஆசிய நிலப்பரப்பில் மோதியதால் இந்தியாவின் மேற்கு பீடபூமி பகுதியில் ஏற்பட்ட ஏற்றத்தால் இம் மலைத்தொடர் உருவாகியிருக்கும் என மியாமி பல்கலைக்கழக புவியியல் ஆய்வாளர்களான பேரன் மற்றும் ஹரிசன் கருதுகின்றனர். இதனால் மலைகளுக்குண்டான புவியல் விதிகளின் கீழ் இதனை மலை என அவர்கள் ஏற்பதில்லை. இம் மலைத்தொடர் தன்னகத்தே 39 பல்வேறுபட்ட கானுயிர் காப்பகங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் மகாராஷ்டிராவில் 4, கர்நாடகாவில் 10, கேரளாவில் 20, தமிழகத்தில் 5 என கானுயிர் சரணாலயங்களும், தேசிய பூங்காக்களும் இம் மலைத்தொடர்ச்சி முழுதும் விரிந்துள்ளது. இம் மலைத்தொடர் தனக்கே உரிய சுமார் 5000க்கும் மேற்பட்ட அபூர்வ தாவரங்கள், 134 வகையான பலூட்டிகள், 508 வகையான பறவை இனங்கள், 325 வகையான அரிய உயிரினங்கள் வாழும் பகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்தியாவின் ஜீவாதாரமாக விளங்கும் கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, வைகை, குந்தியா போன்ற நதிகளின் பிறப்பிடமாகவும் இது உள்ளது.

அறிஞர் மாதவ் காட்கில் தனது அறிக்கையில் குறிபிடுவது போன்று, அகஸ்திய மலையினைத் தலையாகவும், நீலகிரியினையும், ஆனைமலையினையும் மார்புகளாகவும், கனரா முதல் கோவா வரை நீண்ட உதடுகளையும் கொண்டும், வடக்கு சகயதிரியினை கால்களாகவும் கொண்ட பெண் இம் மலைத்தொடர். ஒரு காலத்தில் பளபளக்கும் பச்சை உடையுடன் செழுத்திருந்த அவள் உடைகள் சுயநல சக்திகளால் கிழித்தெறியப்பட்டு அவமரியாதைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணாக இன்று காட்சி தருகின்றாள்.
கோவா மாநிலத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டும் தொழிலில் சுமார் ரூபாய் 6,500 கோடி மதிப்புள்ள வளத்தினைத் திருடியுள்ளதாக அரசு கூறிய போது, இது குறித்து ஆய்வு செய்த ஷா கமிசன் இந்த திருட்டு ரூபாய் 35,000 கோடி என மதிப்பிட்டது. மகாராஷ்ட்ராவின் ரத்தனகிரி மாவட்டத்தில் லோட்-பரசுராம் தொழிற் பேட்டையின் ரசாயன தொழிற்சாலைக் கழிவினால் போஜ்ரா அணை நீர் செந்நிறமாகிப்போனது. கேத் நகரின் குடிநீர் ஆதாரமான அது, இன்று குடிக்க அருகதையற்றதாக மாறியுள்ளது. இதனால் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களின் வாழ்வாதரத்தை இழந்தார்கள். கேராளாவின் பாலக்காட்டில் பிளாச்சிமடாவில் கோக கோலா கம்பெனியால் உண்டான நிலத்தடி நீர் பாதிப்புக்கு எதிராக அங்கு மக்கள் போராடினர். அப் பகுதி பஞ்சாயத்து கோக கோலா ஆலையை மூட முடிவு தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தை எதிர்த்து கம்பெனி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் பஞ்சாயத்துக்கு அந்த அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. அதிகார வர்க்கம் மற்றும் ஆட்சியாளர்களின் அக்கறையின்மை மற்றும் ஊழல் காரணமாக சட்டங்களுக்கும் விதிகளுக்கும் புறம்பாக மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏராளமான சுரங்கப் பணிகள் நடைபெற அனுமதிக்கப்பட்டது. இது பெரும் இயற்கை சீர்கேட்டுக்கு வித்திட்ட நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையினைப் பாதுகாக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவியல் அறிஞர் மாதவ் காட்கில் தலைமையில் 13 நபர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. இது மேற்குத்தொடர்ச்சி மலை சூழல் அறிஞர்கள் குழு(Western Ghats Ecology Expert Panel) என அழைக்கப்பட்டது.
இக் குழுவின் முக்கிய நோக்கமானது மேற்குத்தொடர்ச்சி மலைச் சூழல் குறித்து முழு தகவல்களை ஒருங்கிணைப்பது, இம் மலையில் உள்ள சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய,அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் (Ecologically Sensitive Zone) பகுதிகளை வரையறுப்பது, ஆட்சியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், சூழல்வாதிகள் மற்றும் கிராம சபையின் ஒத்துழைப்புடன் இம் மலையினை காக்க வழி வகுப்பது ஆகியவையாக இருந்தது. இக் குழு மேற்குத் தொடர்ச்சி மலையினை ஒட்டி பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொண்டு, 2011 ஆகஸ்ட் மாதம் தனது அறிக்கையினை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்திடம் சமர்பித்தது. ஆனால் மத்திய அமைச்சரகம் அந்த அறிக்கையினை வெளியிடவில்லை. இதன் தொடர்ச்சியாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணா என்ற ஒருவரால் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஒரு போராட்டத்திற்குப் பின் டெல்லி உயர்நீதிமன்ற உத்திரவினை அடுத்து இந்த அறிக்கையானது மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியானது.
மேற்குத்தொடர்ச்சி மலை சூழல் அறிஞர்கள் குழு (WGEEP) அல்லது மாதவ் காட்கில் குழு அறிக்கை
மாதவ் காட்கில் தலைமையிலான குழுவானது முழு மேற்குத்தொடர்ச்சி மலையினை அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் (Ecologically Sensitive Zone) கொண்ட பகுதிகளாக கருதியது. அதன் சூழல் முக்கியத்துவம் கருதி மேற்குத்தொடர்ச்சி மலையினை மூன்று அதி நுட்ப சுற்றுச்சூழல் மண்டலங்களாகக் கருதியது. இதனை அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1, அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 2, அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 3 என பிரித்தது. மேற்குத்தொடர்ச்சி மலையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும் மேலும் புதிய கோடை வாழ்விடங்கள் அமைப்பதற்கும் தடை செய்தது. இம் மலைகளில் விவசாயம் சாராத செயல்களுக்கு நிலம் பயன்படுத்தப்படுவதற்கு தடை விதித்தது. ஆனால் மலைப்பகுதியில் உள்ள கிராம மக்களின் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப வசிப்பிட தேவைக்கு நிலம் எடுக்கும் செயல்களுக்கும், வன உரிமைச்சட்டம் 2006 கீழ் நிலம் பயன்படுத்தும் செயல்களுக்கு நிலம் எடுக்க அனுமதித்தது.
தண்ணீர் மேலாண்மை
தண்ணீர் மேலாண்மையினைப் பொருத்து அடுத்த 20 ஆண்டுகளுக்குள் உள்ளாட்சி அளவில் திட்டமிட்டு நீர் பகிர்மானம் செய்து கொள்ளும் நிலையினை ஊக்கப்படுத்தவும் தண்னீர் பகிர்மானங்களில் எழும் பிரச்சனைகளை எளிய முறையில் தீர்த்துக்கொள்ளும் வழி வகைகளை உருவாக்க வேண்டியது; மலைப்பகுதிகளில் பாரம்பரிய முறையில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் முறையில் கசிவு நீர்க் கிணறுகள், சுரங்ககள் அமைப்பது; மலைச் சரிவுகளில் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பது; மலைப்பகுதி மக்கள் அப் பகுதியில் நடைபெறும் மணல் அள்ளும் மையங்களை சமூக தணிக்கை செய்யவும் மேலும் அதன் அடிப்படையில் மணல் எடுக்கும் செயல்களுக்கு விடுமுறை வழங்கி விடுவது என்றும், மக்கள் இயற்கையினைப் பாதுகாக்க இணைந்து செயல்படவும் வலியுறுத்தியது. சுரங்கப்பணிகள் நடைபெறும் பகுதிகளில் அந்த கம்பனிகள் மற்றும் முகாமைகள் தண்ணீர் ஆதாராங்களைப் பாதுகாத்திட சிறப்பு கவனம் எடுக்க வேண்டும் என்றது. தேயிலை, காப்பி மற்றும் ஏலக்காய் பெருந்தோட்ட மலைச்சரிவுகளில் உள்ள பகுதிகளில் நீரோடைகளை உயிர்ப்பிப்பது மேலும் வன செயல்பாடுகளை உள்ளாட்சி நிர்வாகம், வனத்துறை மற்றும் தோட்ட அதிபர்களின் ஒத்துழைப்புடன் உருவாக்க வேண்டியது. நீர்ப் பிடிப்பு பகுதிகளில் உள்ள நீர் மின் திட்டங்கள், நீர் பாசனத் திட்டங்களின் வாழ் நாட்களை நீட்டிக்க நடவடிக்கை எடுப்பது. மக்கள் சமூகத்தின் ஒத்துழைப்புடன் அறிவியல் செயல்பாடுகள் வழி தண்ணீரைப் பாதுகாப்பது. மேலும் நதியினை சார்ந்து வாழும் மக்களின் நீர் பகிர்வுக்கு உத்திரவாதப்படுத்துவது. தண்ணிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய தொழில் நுட்ப வடிவில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி செயல்படுத்துவது. மேற்குத்தொடர்ச்சி மலையில் நதிகளின் இயற்கையான போக்கை தடுத்து வேறு பகுதிககு திசை திருப்புவதை தடை செய்வது. நதி நீர் திட்டங்களில் அரசின் உரிய பல்வேறு துறையினர் ஒத்துழைப்பை பெற்று நிறைவேற்றுவது அல்லது அவர்களுக்கு தனித்தனி பொறுப்பு வழங்குவது. மலைப்பகுதிகளில் உள்ள காலாவதியாகி விட்ட அணைக்கட்டுக்களையும், தரமற்ற அணைகளையும் முழுதாக கைவிட்டுவிடுவது என்றும் பரிந்துரைத்தது.
விவசாயம்
இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்துவது. அதனை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது, பாரம்பரிய விவசாய முறையினை ஆதரிப்பது, மரபீனி மாற்றுப்பயிர்களை முற்றிலுமாக தடை செய்வது, மலையின் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1ல் அனைத்து இரசாயன பூச்சிக் கொல்லிகளையும், களைக்கொல்லிகளையும் மற்றும் இரசாயன உரங்களையும் ஐந்து ஆண்டுகளுக்குள் முற்றிலும் தடை செய்துவிடுவது, இதனை அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 2ல் எட்டு ஆண்டுகளுக்குள் நடைமுறைக்கு கொண்டு வருவது, அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 3ல் இதை பத்து ஆண்டுகளுக்குள் நடைமுறைக்கு கொண்டுவந்து விடுவது.
மீன் வளம்
மீன்களை வெடி வைத்து பிடிப்பதற்கு தடை விதிப்பது, மீனவர்கள் பாரம்பரிய மிக்க மீன் இனங்களை உற்பத்தி செய்ய ஊக்கத் தொகை வழங்க பரிந்துரைப்பது, அது போன்ற மீன்களை மீன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இயற்கை மேலாண்மை குழு வழி விற்பனை செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்துவது என பரிந்துரைத்தது.
வன உரிமைச்சட்ட பலன்கள்
வன உரிமைச்சட்டத்தின் படி பழங்குடி மக்கள் மற்றும் மூன்று தலைமுறைக்கு மேல் வனம் சார்ந்து வாழும் பழங்குடி அல்லாத மக்களின் நலன்களைப் பாதுகாப்பது. தற்போது நடைமுறையில் உள்ள எல்லா வன மேலாண்மை திட்டங்களையும் வன உரிமைச்சட்டம் படி மாற்றுவது. மலையின் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1ல் யூக்லிபிட்டஸ் மரங்கள் உள்ளிட்ட ஒற்றைத் தாவர வகைகளை தடை செய்வது, மருந்து தாவரங்களை சேகரிப்பதை முறைப்படுத்துவது. வன விலங்குகள் விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவதிலிருந்து விவசாயிகளைக் காக்க உரிய இழப்பீடு வழங்க பரிந்துரை செய்வது.
சுரங்கங்களுக்கு தடை
மலையின் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1ல் சுரங்கத் தொழில் தடை செய்யப்படுகின்றது. புதிய சுரங்க அனுமதி கிடையாது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுரங்கங்களை 2016க்குள் முற்றிலும் தடை செய்வது. சட்ட விரோத சுரங்கங்கள் உடனடியாக தடை செய்யப்படுவது. பிற அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 2ல் புதிய சுரங்கங்களுக்கு அனுமதி கிடையாது. நடைமுறையில் உள்ள சுரங்கங்களை தீவிரமாக கண்காணிப்பது. அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 3ல் உரிய கவனத்துடன் புதிய சுரங்கங்களை அமைக்க அனுமதிப்பது. உள்ள சுரங்கங்களை முறையே கண்காணிப்பது.
தொழிற்சாலைகள்
சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை வாய்ந்த தொழிற்சாலைகளை வகைப்படுத்த பயன்படுத்தும் சிகப்பு, ஆரஞ்சு, நீலம், பச்சை வண்ணங்களில் சிகப்பு மற்றும் ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளை மலையின் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1 மற்றும் 2ல் நிறுவ தடை விதிக்க பரிந்துரைத்தது. தற்போது இப் பகுதியில் உள்ள இவ் வகை தொழிற்சாலைகள் 2016க்குள் நிறுத்திவிட முடிவு செய்தது. அதே சமயம் சூழல் பாதிப்பு குறைந்த நீலம், பச்சை வண்ண வகைப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளை உரிய கண்காணிப்புக்கு பின் அனுமதிக்கலாம் என முடிவு செய்தது.
மின் நிலையங்கள்
அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1 மற்றும் 2ல் புதிய பெரும் அணைக்கட்டு மின் நிலையங்களுக்கு தடை விதிப்பது. மேற்கண்ட சூழல் பகுதியில் கேரளாவின் சாலக்குடி மின்சாரத் திட்டம் மற்றும் கர்நாடகாவின் குண்டியா நீர் மின் திட்டம் வருவதால் இத் திட்டங்களுக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. அதே போன்று இப் பகுதியில் பெரும் காற்றாலைகள், சூரிய சக்தி திட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுகின்றது. சிறு மின் திட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றது. மேலும் மின்சாரத் திட்டங்கள் சிறு அளவில் ஆங்காங்கே நிறைவேற்ற ஊக்கப்படுத்த பரிந்துரைத்தது.
போக்குவரத்து
அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1ல் புதிய இரயில் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள் அமைக்க தடை செய்கிறது. அதே சமயம் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 2 மற்றும் 3 ஆகிய இடங்களில் தேவையினை கருதியும், சூழல் பாதிப்பை கணக்கில் கொண்டும், சமூக தணிக்கைக்குப் பின் சாலைகள், இரயில் பாதைகளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்தது.
சூழல் சுற்றுலா
அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1ல் எல்லாவகை சுற்றுலாக்களும் தடை விதிப்பது. சுற்றுலா குறித்து ஏற்கனவே சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழி முறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டியது. அதே சமயம் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 2 மற்றும் 3ல் உரிய கண்காணிப்புக்கும், சமூக தணிக்கைக்கும் பின் அனுமதி வழங்குவது.
கழிவுகள் மேலாண்மை
மலையின் எல்லா பகுதிகளிலும் பிளாஸ்டிக் தடை செய்யப்படுகிறது. பிற திடக் கழிவுகளை உரிய கவனத்துடன் அப்புறப்படுத்த வேண்டும். இதற்காக ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஆபத்தான கழிவுகளை உற்பத்தி செய்யும் செயல்பாடுகளுக்கு தடை விதிப்பது.
சூழல் கல்வி
மலைப்பகுதி குழந்தைகளையும், இளைஞர்களையும் சூழல் காக்க ஊக்கப்படுத்தும் கல்வி அறிமுகப்படுத்த வேண்டும். நதி உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் "நதி மன்றங்கள்" உருவாக்கி சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பகுதி மக்களிடம் சூழலை கண்காணிக்கும் ஆற்றலை வளர்க்கும் கல்வியை வழங்கி, சூழல் காப்பு பணியில் மக்களின் பங்கேற்பையும் உத்திரவாதப்படுத்தப்பட வேண்டும்.
சூழல் பாதிப்பு ஆய்வு
புதிய திட்டங்கள் எல்லாவற்றிக்கும் சூழல் பாதிப்பு குறித்த சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் படி, உரிய நிபுணர்களைக் கொண்டு ஆய்வு நடத்திய பின்னரே அனுமதி வழங்க வேண்டும். இந்த ஆய்வில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள் மற்றும் பகுதி மக்கள் பங்கு அவசியம். புதிய திட்டங்களுக்கு கிராம சபை ஒப்புதல் அவசியம்.
தகவல் மேலாண்மை
மேற்குத் தொடர்ச்சி மலை குறித்த உரிய அறிவியல், தொழில் நுட்ப தகவல்களை வெளிப்படையாக வழங்கும் அமைப்பு உருவாக்கப்படவேண்டும். மாணவர்கள் மற்றும் பகுதி பொது மக்கள் இணைந்து இதில் செயல்பட ஊக்கப்படுத்த வேண்டும். நதி நீர் குறித்த தரவுகள், அணைகளின் நீர் அளவுகள் மற்றும் தண்ணீரில் உள்ள மீன் வகைகள் பற்றிய தகவல்கள், தண்ணீர் மற்றும் மண்ணில் உள்ள உப்புத்தன்மை குறித்தும், நீர்ப் பாசன நிலை குறித்தும் தகவல்கள் வழங்கும் மேலாண்மை தேவை என வலியுறுத்தியது.
மேற்குத்தொடர்ச்சி மலை ஆணையம்
உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நாடு முழுவதம் மேற்குத் தொடர்ச்சி ஆணையம் அமைப்பது, அதே போல உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் மாநில அளவில் ஓர் ஆணையம் மற்றும் மாவட்ட அளவில் ஓர் ஆணையம் ஏற்படுத்தவும் பரிந்துரை செய்தது. இந்த ஆணையங்கள் மனித உரிமை ஆணையங்களைப் போல சுதந்திரமாக செயல்பட்டு மேற்குத்தொடர்ச்சி மலைச் சூழலை பாதுகாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இந்த அறிக்கை 2011 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இது முழுவதும் அரசியலாக மாற்றப்பட்டது. குறிப்பாக கேரளாவின் மலைப்பகுதி விவசாயிகள் என அறியப்பட்ட சிரியன் கிருஸ்துவர்கள் மற்றும் கத்தோலிக்க திருச்சபையும், ரியல் எஸ்டேட் அரசியலும் இப் பிரச்சனையினை ஊதிப் பெரியதாக்கியது. அரசியல் இயக்கங்கள் இந்த ஓட்டத்தில் அரசியல் ஆதாயத்தை தக்கவைக்க மாதவ் காட்கில் அறிக்கையினை ஏற்க மறுத்தது. அறிக்கையின் முழு தரவுகளும் பொது மக்கள் முன் வைக்கப்படவில்லை. ஆறு மாநிலம் சார்ந்த பிரச்சனையான இது, அந்தந்த மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடக்கூட மத்திய, மாநில அரசுகள் முன் வரவில்லை. இந் நிலையில் கேரளா சட்டமன்றத்தில் ஏகமனதாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் மாதவ் காட்கில் தலைமையிலான அறிக்கையை முற்றிலும் நிராகரிப்பதாக அமைந்தது. கர்நாடகத்திலும் அரசு இக் கமிட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. கமிட்டியின் அறிக்கை பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், வன உரிமைச்சட்டத்திற்கு முக்கியம் தருவதாக இருந்த போதும், பழங்குடி மக்கள் வனத்திலிருந்து வெளியேற்றப்படக்கூடும் என்ற கருத்தும் அதனால் அச்சமும் கட்டமைக்கப்பட்டது. வனத்துறையின் கடந்த கால அத்துமீறல்களும் மக்கள் விரோத செயல்பாடுகளும் அவ்வாறு நடக்க வாய்ப்புள்ளதாக கருத துணை நின்றது. இறுதியில் அரசியலாக மாற்றப்பட்டு எல்லோரும் கூத்தாடி கூத்தாடி இக் கமிட்டியின் வழிகாட்டுதல்களை போட்டுடைத்தனர்.
அதன் பின் மேற்குத்தொடர்ச்சி மலை உயர் மட்ட பணிக்குழு (High level working group on western ghat) என்ற ஒரு குழுவை முன்னால் இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 17.8.2012ல் அமைத்தது.இக் கமிட்டியின் முக்கிய நோக்கம் என்பது மேற்கு மலைத்தொடர்ச்சி மாநிலங்கள் மாதவ் காட்கில் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு வழங்கிய எதிர் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலையினைப் பாதுகாக்க ஒரு செயல் திட்டத்தை முன் வழங்குவதாக இருந்தது.
கஸ்தூரிரங்கன் கமிட்டி அறிக்கை
ஒட்டு மொத்த மேற்குத்தொடர்ச்சி மலையினையும் இயற்கை சூழல் மண்டலமாக கருத வேண்டியதில்லை. இம் மலையின் 40% மலைப்பகுதி மட்டுமே இயற்கை சூழல் பகுதிகளாக கருதலாம். 60% பகுதிகள் சுமார் 5 கோடி மக்கள் வாழும் கலாச்சார சூழல் பகுதிகளாகும். மேற்குறிப்பிட்ட 40% இயற்கை சூழல் பகுதியில் 37% மட்டுமே அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் ஆக கருத வேண்டும். இப் பகுதியில் வளர்ச்சித் திட்டங்கள் கட்டுப்படுத்தப்படவேண்டும். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இப் பகுதி குறித்த வரைபடத்தை பொது மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இப் பகுதியில் சூழலுக்கு தீங்கிழைக்கும் செயல்பாடுகள் தடுக்கப்படவேண்டும். புதிய திட்டங்கள் உரிய சூழல் பாதிப்பு ஆய்வுக்கு பின் அனுமதிக்க வேண்டும். இப் பகுதியில் சுரங்கப் பணிகள் மற்றும் மணல் அள்ளுவது தடை செய்யப்பட வேண்டும். தற்போது அனுமதி பெற்று செயல்பட்டு வரும் சுரங்கங்கள் ஐந்து ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும்.
இப் பகுதியில் அனல் மின்சார நிலையங்களை அனுமதிக்கக் கூடாது. ஆனால் நீர் மின்சாரத் திட்டங்களுக்கு உரிய பரிசீலனைக்குப் பின் அனுமதி வழங்கலாம். ஆற்றின் நீரோட்டத்தை 30% பாதிக்கக்கூடிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் சமயம் நதி மற்றும் வனத்திற்கு ஏற்படும் பாதிப்பு பரிசீலிக்கப்பட வேண்டும், ஆறுகள் உள்ள பகுதியில் அனுமதிக்கப்படும் திட்டங்கள் ஆற்றிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தள்ளி இருப்பது அவசியம். மேலும் 50% ஆற்றின் படுகையினை பாதிக்கின்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது.
இப் பகுதியில் அமைக்கப்படும் காற்றாலை மின் திட்டங்களுக்கும் சூழல் பாதிப்பு அறிக்கை(Environment Impact Assessment ) கட்டாயம் பெற வேண்டும்.
சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிகப்பு வகைப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. ஆனால் ஆரஞ்சு வகைத் தொழிற்சாலைகளில் உணவு மற்றும் பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கலாம். எனினும் இவையும் சூழல் பாதிப்பு ஏற்படுத்தாதது என்பது உறுதி செய்யப்பட வேண்டும். கட்டுமானப்பணிகள் 20,000 சதுர மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும். நகரிய திட்டங்கள், பகுதி வளர்ச்சித் திட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும். எல்லாவகை வளர்ச்சி திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2006ல் அறிவித்தது போல சூழல் பாதிப்பு ஆய்வு அவசியமானது.
வனப்பகுதியிலிருந்து நிலம் வேறு திட்டங்களுக்கு எடுக்கப்படும் போது, அந்தத் திட்டம் குறித்த முழு விபரங்களையும் (அனுமதி கேட்டு விண்னப்பத்திலிருந்து திட்டம் அனுமதிக்கப்படும் வரை பல்வேறு கட்ட செயல்பாடு விபரமும்) மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணையத்தில் வெளியிட்டு பொது வெளியில் திறந்த விவாதத்துக்கு வழி வகுக்க வேண்டும்.
அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பாதுகாப்பு செயல்களில் முடிவு எடுப்பதில் தற்போது நடைமுறையில் உள்ள அதிகார அமைப்புக்களுடன் கூடுதலாக சூழல் தகவல்களை திரட்டுவதும் மேலும் இப் பகுதி வாழ் பொது மக்களை இச் செயல்பாடுகளை தீர்மானிக்கும் சக்தியாக வளர்ப்பதும், இப் பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பை உறுதி செய்வதும் அவசியம்.
அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் அமையப்பட்ட பகுதியில் வரும் கிராமங்களின் கிராம சபைகள் திட்டங்களை(project) அனுமதிப்பதை முடிவு செய்யும் அதிகாரம் பெற்றதாக உள்ளது. ஒரு திட்டத்திற்கு முன் இக் கிராம சபை ஆட்சேபனை இல்லை என அனுமதித்தால் மட்டுமே திட்டப்பணி செயல்படுத்த முடியும். அதே போல வன உரிமைச் சட்டம் உத்தரவாதப்படுத்தியுள்ளது போன்று திட்டங்களுக்கு முன்னரே கிராம சபை அனுமதி பெறுவதும் கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மாநில அரசுகள் வன விலங்கு வலசைப்பாதை குறித்த திட்டங்கள், செயல்பாடுகளின் போது அப் பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் செய்யப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
வெறும் வன விலங்குகளின் வாழிடமாக மட்டுமின்றி மக்கள் வாழும் உயிர் சூழல் பகுதியான இந்த மலையில் மாநில அரசுகள் உடனடியாக சூழல் பாதுகாப்புக்கும் வளர்ச்சிப் பணிகளை கட்டுப்படுத்தவும் ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். மலைகளையும், ஆறுகளையும், பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்கும் திட்டங்கள் அவசியமானது.
மாநில அரசுகள் மத்திய அரசிடம் மலையினைப் பாதுகாக்க கூடுதல் நிதி பெற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இயற்கை வனத்தைப் பாதுகாக்க போதிய கடன் மற்றும் நிதி உதவி அவசியம். இந்த நிதி, சூழல் பாதுகாப்புக்காக செலவிடப்பட வேண்டும். மேலும் வனப் பொருள் சேகரிப்புக்கும், இயற்கையுடன் இணைந்த வாழ்வுக்கும் உதவ வேண்டும். இதற்காக 13வது நிதி கமிசன் நிதி ஒதுக்க வேண்டும். 14வது நிதி கமிசன் வனத்தைப் பாதுகாக்க மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி வழங்க முன் வரவேண்டும். மேலும் நிதி நேரிடையாக அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி மக்களுக்கு சேர வழிவகை செய்ய வேண்டும்.
இயற்கை சூழல் சேவையின் பலன்களைப் பெறும் மேற்குத்தொடர்ச்சி மலையின் வேறு பகுதி பஞ்சாயத்துகள், உள்ளாட்சி அமைப்புகள் அதற்காக சூழல் சேவைக் கட்டணத்தை (Eco system service) வழங்க பரிந்துரைக்கின்றது.
திட்டக் கமிசன் தனியே மேற்குத் தொடர்ச்சி மலை வளர்ச்சி நிதி என்ற ஒன்றை உருவாக்கி அந்த நிதி அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதியில் சூழல் மேம்பாட்டுக்காக பயன் படுத்தப்பட வேண்டும்.
திட்ட கமிசன் சூழல் பாதுகாக்கும் மாநிலத்திற்கு கூடுதல் நிதி உதவி வழங்குகின்றது. மலையின் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதியில் அது போன்ற சூழல் நடவடிக்கைக்கு கூடுதல் தொகை (plus payment) நேரிடையாக கிராம சமூகத்திற்கு கிடைக்க வழி காண வேண்டும்.
12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் மக்களின் ஒத்துழைப்புடன் சூழல் பாதுகாப்பு வடிவில் நடைமுறைபடுத்தப்பட வேண்டும். அதற்காக நிதியானது ரூ 1000 கோடியாக உயர்த்தப்பட வேண்டும். சிறப்பு திட்ட செயல்பாடுகளுக்கு மத்திய அரசு 90% பணமும் மாநில அரசு 10% பணமும் வழங்குவது தொடர வேண்டும். இதற்காக இக் குழுக்களில் மாநில முதல்வர்கள் பங்கு பெற வேண்டும். மேலும் மாநில அளவில் மேற்குத்தொடர்ச்சி மலை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு மாநில சுற்றுச்சூழல் நிர்வாகம், மாநில வனத்துறை மற்றும் மத்திய வனத்துறை மண்டல அலுவலகங்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
வன நிர்வாகம் என்பது பகுதி மக்களை உள்ளடக்கியதாகவும் மக்கள் பயன் பெறும் அளவிலும் இருக்க வேண்டும். வன உரிமைச்சட்டம் மக்களுக்கு சிறு வன மகசூல் பெற உரிமை வழங்கியுள்ளது. அதில் மூங்கிலும் அடக்கம் என்பதை உறுதி செய்கின்றது. எனவே வனம் சார்ந்த பொருளாதாரம் கட்டமைக்கப்பட வேண்டும்.
இயற்கை சார் விவசாயத்திற்கு உதவி வழங்கப்பட வேண்டும். மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் விளையும் பொருட்களுக்கென தனி முத்திரை (brand) உருவாக்கி, உலக சந்தையில் இப் பொருள்களுக்கென தனி இடம் பெற்றுத் தர வேண்டும்.
இப் பகுதியில் சுற்றுலா செயல்பாடுகளைப் பொருத்து சூழல் பாதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இப் பகுதியில் உள்ள மக்கள் பயன் பெறும் வகையில் சுற்றுலா நிர்வாகம் அமைய வேண்டும். சுற்றுலா கட்டுமானங்கள் என்பது இப் பகுதியில் உள்ள வளர்ச்சி கட்டுப்பாடுகளை மீறியதாக இருக்கக் கூடாது.
மேற்குத் தொடர்ச்சி மலை சூழல் பாதுகாப்புக்காக மாநில அரசுகள் மத்திய அரசுகளின் ஒத்துழைப்புடன் அறிவியல் தொழில்நுட்ப உதவிகள் மூலம் பயன் பெறும் வகையில் Decision Support and Monitoring Center for Western Ghats என்ற அமைப்பை உருவாக்கி பயன் பெற வேண்டும்.மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையில் நிகழும் காலநிலை மாற்றங்கள், உலக காலநில மாற்றம் மற்றும் பகுதிகளில் நிகழும் காலநிலை மாற்றங்கள், மழை அளவு, வெப்ப அளவு, காட்டுத் தீ பிடிக்கும் நிலை ஆகியவை உரிய கவனத்துடன் கண்காணிக்கப்பட வேண்டும். ஒரே பயிரினை நிலத்தில் பயிர் செய்வதற்கு பதில் பல பயிர்களைக் கலந்து பயிர் செய்வது மற்றும் நிலத்தடி நீரை உரியும் செடிகளைத் தவிர்ப்பது, தீ பரவலை தடுக்க முன் கூட்டியே செயல்திட்டங்களை வகுப்பது போன்றவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
கேரளாவின் அதிரப்பள்ளி சாலக்குடி நீர் மின் திட்டத்தினை உரிய சூழல் கவன நடவடிக்கையுடன், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். கர்நாடகாவின் குண்டியா நீர்மின் திட்ட பகுதியில் மீண்டும் சூழல் பாதிப்பு குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு அதன் பின் செயல்படுத்த வேண்டும். அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதியில் நீர் மின் நிலையங்கள் கட்ட எந்தத் தடையும் விதிக்கவில்லை. ஆனால் சூழல் பாதிப்பை கணக்கில் கொண்டு செயல்படவேண்டியது அவசியம். கோவாவின் சுரங்கங்கள் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. மகாராஷ்டிராவின் சித்திர துர்க் மற்றும் ரத்தினகிரி மாவட்ட சூழல் பாதிப்பு பிரச்சனையினைப் பொருத்து மேற்குத்தொடர்ச்சி மலையின் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் அமைந்துள்ள பகுதியில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்லா திட்டங்களுக்கும் சூழல் பாதுகாப்பு அனுமதி அவசியம். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதனை கண்காணிக்க வேண்டும்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தப் பரிந்துரைகளை சட்டப்பூர்வமாக notify வெளியிட வேண்டும். மாநில அரசுகள் இப் பரிந்துரைகளை நிறைவேற்ற உரிய நடைமுறைப்படுத்தும் துறை மற்றும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். திட்டக்குழு மற்றும் அமைச்சகங்கள் மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக்காக உரிய நிதி ஒதுக்க வேண்டும். மேற்கண்டவை கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளாகும்.
அரசியலாக்கப்பட்ட பரிந்துரைகள்
இப் பரிந்துரைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கொள்கையளவில் 19.10.2013ல் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தது. சுற்றுச்சூழல் அமைச்சகம் சூழல் மண்டலப் பகுதியில் புதிய சுரங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. இந்த அறிக்கை குறித்து மாநில அரசுகள் கருத்து கூறவும் மற்றும் பொது அரங்கில் விவாதிக்க உள்ளதாகவும் கூறியது. முன்பு மாதவ் காட்கில் அறிக்கையினை எதிர்த்து அதனை ரத்து செய்ததால் கஸ்தூரி ரங்கன் அறிக்கையினை ஏற்பதாக அறிவித்த கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரும்பவும் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளையும் எதிர்த்து பந்த் நடத்தியது. இடுக்கி மாவட்டத்தில் கத்தோலிக்க தேவாலயம் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டது. கேரள அரசு இப் பரிந்துரைகளை ஆய்வு செய்ய மூவர் கொண்ட குழுவை அமைத்தார். கோவா மாநில அரசும் கேரளாவைத் தொடர்ந்து குழு பரிந்துரைகளை நிராகரித்தது. இப் பின்னணியில் 20.12.2013 தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மாநில அரசுகளின் உரிய ஒப்புதல் பெற்றே சூழல் மண்டல எல்லைகள் நிர்ணயிக்கப்படும் என்றும் அதன் பின்பு மீண்டும் அமைச்சகம் அறிவிக்கும் என்றும் கூறியது. பத்திரிக்கையில் கால வரையறை இன்றி பரிந்துரைகளை நிறுத்தி வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. தமிழகத்தின் ஊட்டி, கொடைக்கானல் விடுபட்டதன் மர்மம் குறித்து கேரளாவில் அரசியல் சர்ச்சை கிளப்பப்பட்டது.
ஏற்கனவே சூழல் மண்டலப்பகுதியில் நடைமுறையில் உள்ள சூழல் பாதிப்பு திட்டங்கள் பற்றி குறிப்பிட்டு கூறவில்லை. பெருந்தோட்டங்களுக்கு இது எந்த பெரிய தடைகளையும் வழங்கவில்லை என விமர்சிக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின் 63% பகுதியினை சூழல் பாதிக்கும் சுரங்கம் உள்ளிட்ட பணிகளுக்கும் அனுமதித்ததும், 7% மட்டுமே அடர் வனப் பகுதியாக உள்ள நிலையில், பிற செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதித்தும் மேலும் கட்டுமானப் பணிகள் 20,000 m2 (2, 15,000 sq feet) வரை அனுமதித்ததன் மூலம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெரும் கட்டிடங்கள் உருவாகி மலை பாதிக்கப்படுவதும் விமர்சனத்திற்கு உரியது. மேலும் ரயில்வே தடங்களுக்கு நிலம் எடுக்கப்படுவதற்கு இக் குழு குறிப்பாக தடை விதிக்கவில்லை எனவும் சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பினர். மொத்தத்தில் கஸ்துரிரங்கன் அறிக்கையானது மாதவ் காட்கில் குழு பரிந்துரையின் ஒப்பிடும்போது ஒரு நீர்த்த வடிவம், ஆனால் அதைக்கூட நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு இல்லை என்பதையும், சுரங்க முதலாளிகள், பணக்காரர்கள், நில ஆக்கிரமிப்பு ரியல் எஸ்டேட் சக்திகள் தங்களுக்கு சாதகமாக மேற்குத் தொடர்ச்சி மலையினை காக்க எடுக்கும் எல்லா நடவடிக்கைகளையும் தடுக்கும் வல்லமை வாய்ந்தவர்கள் என்பதையே தற்போதைய நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த பரிந்துரைகளையாவது நிறைவேற்ற குரல் கொடுப்பது சனநாயக சக்திகளின் கடமை.
மேற்குத் தொடர்ச்சி மலை வெறும் சூழல் மண்டலம் மட்டுமல்ல, அதன் நதிகளும், அது தரும் மழையும், காற்றும், சூழலும் நாடும் சமூகம் அமைதியாக இயங்க உதவுகிறது. மக்களின் வாழ்வாதாரத்தின் மையமாகவும் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை இரக்கமற்ற சுரண்டல்வாதிகளின் சூறையாடலால் பாதிக்கப்படும்போது நாட்டின் பொது ஒழுங்கும், அமைதியும் குலைந்துவிடும் என்ற எச்சரிக்கை ஆட்சியாளர்களுக்குத் தேவை. அந்த பாதிப்பு ஈடு செய்ய முடியாத இழப்புக்கு இட்டுச்சென்று விடும்.
- ச.பாலமுருகன் (
- அணுத் தீமையற்ற தமிழக நாள் - டிசம்பர் 21, 2013
- மேற்கு மலைத் தொடரின் அடிவயிற்றில்... பிரபஞ்சம் பற்றிய ஆய்வா? அணு ஆயுதத் திட்டமா?
- மீத்தேன் எரிவாயு திட்டத்தின் முழு அபாயம்
- கொல்லத் துளை(டி)க்கும் அரசு
- வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை ஏன் விரட்டப்பட வேண்டும்?
- உலக மயமாக்கலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளும்
- தாவரங்களின் எதிரி - பார்த்தீனியம்
- ஆபத்தை விளைவிக்கும் ஆஸ்பெஸ்டாஸ்!
- ஞெகிழியினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள்!
- மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்!
- வெறும் தண்ணீருக்கோ வரப்போகுது பஞ்சம்!
- அணுமின்சக்தி அழித்த உயிர்களின் வரலாறு
- புவி வெப்பமயமாதலும், முதலாளித்துவ அரசியலும்
- புவி வெப்பமயமும் தேசங்களின் இறையாண்மையும்
- இயற்கை வளங்களின் சூறையாடலும் ஆந்திர மக்களின் போராட்டமும்
- சுற்றுச்சூழல் வழக்குகள்/ஆராய்ச்சிகள் - நிபுணர்களும் விஞ்ஞானிகளும் யார் பக்கம்?
- பூமியைக் காப்பாற்றுவோம்!
- கூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா? எதிர்ப்பதா?
- பருவநிலை மாற்றம்
- உயிர் வாழும் உரிமைக்கு உலை வைக்கும் மரபணு தொழில்நுட்பம்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.