பிரபஞ்சத்தின் ரகசியத்தை கண்டறிய என்று இந்தியாவில், ஓர் ஆராய்ச்சி ஓசையில்லாமல் அரங்கேறிவருகிறது. தேனி மாவட்டம் போடி மேற்கு மலைப் பகுதியில் உத்தமபாளையம் தாலுகாவில், தேவாரம் - பொட்டிபுரம் கிராமத்திற்கு அருகில் உள்ள அம்பரப்பர் மலை/அம்பரசர் கரடு எனப்படுகிற 1300 மீட்டர் உயரமுள்ள குன்றில் 1 கி.மீ. அடியில் மலையைக் குடைந்து ஒரு பாதாள ஆய்வுக் கூடம் அமைக்கப்படுகிறது. இந்திய அணுசக்தி துறை அமெரிக்க உதவியுடன் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைப்பதற்கான சாலைகள், வேலிகள், அமைக்கும் பணியை துவங்கிவிட்டது. கேரளாவில் எதிர்ப்புகளை உருவாக்கி இருக்கும், நீலகிரி ஊயிர்ச்சூழல் மண்டலத்திலிருந்தும் துரத்தப்பட்ட இத்திட்டம் தற்போது தேனி மாவட்ட மக்களை அச்சத்திற்குள் தள்ளியுள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்சனையில் நீதி கோரி கொந்தளித்து எழுந்த விவசாய சமூகம், இந்திய நியூட்ரினோ ஆய்வுக் கூடம் வடிவில் ஒரு பேராபத்தை எதிர் கொண்டுள்ளது.       

நியூட்ரினோ என்றால் என்ன? ஆய்வு  எதற்காக?:

நியூட்ரினோக்கள் என்பது எலக்ட்ரான்களைப் போல அடிப்படைத் துகள்களாகும். இனால் இவை அணுவின் பகுதி இல்லை; இவை பிரபஞ்சத்தில் பெருமளவு உள்ளன. இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான பெரு வெடிப்பின் பொழுது மிகப் பெரிய அளவில் இத்துகள்கள் வெளிப்பட்டன. மேலும், காற்று மண்டலத்துடன் காஸ்மிக் கதிர்கள் உறவாடும் பொழுது தொடர்ந்து நியூட்ரினோக்கள் உருவாக்கப்படுகின்றன; மிகமிக எடைக் குறைந்த கதிர்களாக இவை பல்லாயிரக் கணக்கில் அன்றாடம் நமது உடலைக் கடந்து செல்கின்றன. இதைப் பற்றிய ஆய்வு என்பது இயற்கையின் இயங்காற்றல் பற்றி  பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி அறிந்து கொள்ள உதவும். இது முழுக்க முழுக்க வெறும் விஞ்ஞான நோக்கம் மிக்க ஆய்வே ஆகும். மானிடத்திற்கு இதனால் எந்த பாதிப்பும் கிடையாது. - இவையே இந்திய அரசாங்கத்தின் கருத்தாகும். நவீன (துகள்) இயற்பியல், ஏற்கனவே பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய அடிப்படை உண்மைகளைக் கண்டறிந்துள்ளது. பிரபஞ்சத்தின் இரகசியத்தைத்  தெளிவு படுத்தியதற்காக என்றே இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர், பெருவெடிப்பின் (பிக் பேங்க்) விளைவாக பிரபஞ்சம் தோன்றிய பொழுது, அணுவின் பல துகள்களையும் ஒன்று சேர்க்கிற ஒட்டுப் பொருளான "கடவுள் துகள்'/ ‘ஹிக்ஸ் போஸன்’ என்பதை கண்டறிந்தது; பிரபஞ்சத்தின் எளிய தன்மையை, அணு துகள்கள் எப்படி நிறையைப் (Mass) பெருகின்றன என்பதை ஆய்வு மூலம் நிறுவியது போன்றவற்றிற்காக பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பிரான்கோயிஸ் ஆங்லெர் ஆகிய விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிக்ஸ் போசான் துகள் பிரபஞ்ச பாகு போல, புலமாகச் செயல்படுகிறது; நாம் கண்ணால் காண  முடியாத காற்று போல, காந்தப் புலம் போல நிலவுகிறது.  அணுத்துகள்கள் இந்த ஹிக்ஸ் புலத்துடன்  உறவாடும்போதுதான் நிறையைப் பெறுகின்றன. இப்படியாக, நிறையைப் பெறுகின்ற எலெக்ட்ரான், அணுக்களின் உருவாக்கத்திற்கும், அணுக்களை ஒன்றுபடுத்தி வைத்திருப்பதிலும்  முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றது. பிரபஞ்சமானது துல்லியமான, எளிமையான, இயற்கை விதிகளுக்கு உட்பட்டு இயங்குவதை ஹிக்ஸ் புலம் / ஹிக்ஸ் போஸான் துகள் விளக்கியதால்தான், ஊடகங்கள் ‘கடவுள் துகள்’ எனப் பெயரிட்டு பிரபலப்படுத்தின. இதற்கு மேலும் ஏன் நியூட்ரினோ பற்றிய ஆய்வு என்ற கேள்வி எழுகிறது.

போடி மலையில் ஆய்வுக் கூடம் எதற்காக?

கடந்த 2005ல் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷினால் கையெழுத்திடப்பட்ட இந்திய-அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தின் ஓர் அங்கமே இந்த நியூட்ரினோ ஆய்வுக்கூடத் திட்டமாகும். அணு சக்திக்கு அடிப்படையான நவீன ‘துகள்’ அறிவியலில் அமெரிக்கா வல்லமை பெற முயற்சிக்கிறது. சிகாகோவில் ஃபெர்மி லேப் என்ற இயற்பியல் கூடத்தை அமைத்து வருகிறது. ஆய்வுக் கூடம் அமெரிக்க அணு சக்தி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற ஆற்றல் மிக்க நியூட்ரினோ கற்றைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, புவி உருண்டையின் நேர் எதிர் பக்கத்தில்  மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆய்வுக் கூடம் தேவைப்படுகிறது. ஃபெர்மி லேப்பிற்கு பங்களிப்பு செய்வதே  இந்திய நியூட்ரினோ ஆய்வுக் கூடமாகும். இதன் அதிகாரபூர்வ பேச்சாளர் N.K. மோண்டல், சர்வதேச நியூட்ரினோ கமிட்டி உறுப்பினராவார். ஃபெர்மி லேப்பின் வழிநடத்தும் குழு உறுப்பினரும் ஆவார். யாருக்காக இவர் பணியாற்றுவார்?

மேலும், இத்திட்டமானது, புவியியல் ரீதியாக, உயிரியல் ரீதியாக, கதிரியக்க ரீதியாக மானுடத்திற்கும், இயற்கைக்கும் கேடானதாகும்.   இத்திட்டத்திற்கு, புதியதொரு ஆயுதத்தை-அணு ஆயுதத்தை விடக் கொடியதான ஆற்றல்மிக்க அழிக்கமுடியாததொரு ஆயுதத்தை உருவாக்கும் வல்லமை உள்ளது. இத் திட்டத்திற்காக 4 ஆண்டுகளில் அகற்றப்படும் 8 லட்சம் டன் பாறைகள், வெடிவைத்து தகர்க்கப் பயன்படுத்தப்படும் 1 லட்சம் கிலோ ஜெல்லட்டின்கள், சுற்றுச் சூழலியல் ரீதியாக எளிதில் சேதமுறுகிற மண்டலமான மேற்கு மலைத் தொடரிலே நில நடுக்கங்களை தூண்டும், மாசுபடுத்தும். 400 கோடி கன மீட்டர் தண்ணீரை தேக்கி வைத்துள்ள கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள 12 அணைகளைப் பாதிக்கும்; 2018ல், திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், அமெரிக்காவின் சிகாகோ ஆய்வுக் கூடத்திலிருந்து (ஃபெர்மி லேப்) தயாரிக்கப்பட்டு போடி ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் உயர் சக்திமிக்க நியூட்ரினோ கற்றையானது இந்திய ஆய்வகத்தின் சுற்றுப் புறத்தில் கதிர் வீச்சையும், கழிவுகளையும் ஏற்படுத்தும்;  50 லட்சம் தமிழக, கேரள மக்களின் வாழ்வுரிமையில் பாதிப்பை ஏற்படுத்தும், பல்லுயிர் பெருக்கத்திற்கும், தாவரங்களுக்கும், காட்டு உயிர்களுக்கும், கேடுகளை உருவாக்கும். மேற்குத் தொடர் மலைகளை பேராபத்திற்குள் தள்ளிவிடும் - என்பதெல்லாம்   அபாயங்களாகும்.

நியூட்ரினோ திட்டத்தின் அபாயகரமான பாதை:

2008ல் நீலகிரி மலையில் அமைக்கப்படுவதாக திட்டமிடப்பட்டது. முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு அருகில் உள்ள சிங்காரா என்ற இடம் குறிவைக்கப்பட்டது. இது யானைகளின் முக்கியமானதொரு வழித்தடமும் ஆகும். பெரியளவிலான கட்டுமானப் பணிகள், அன்றாடம் நூற்றுக் கணக்கான சரக்கு வாகனங்களின் செயல்பாடு, வன விலங்குகளின் இயற்கை வாழிடத்திற்கு அச்சுறுத்தலாக மாறும் என்ற சுற்றுச் சூழல் அமைப்புகளின் எதிர்ப்பினால், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை மத்திய அமைச்சரகம் அனுமதி  மறுத்தது.  எனவே, இத் திட்டத்தை டாடா நிறுவனம் ஊள்ளிட்ட ஏழு விஞ்ஞான நிறுவனங்களின் சங்கமான "நியூட்ரினோ கூட்டுக்குழு' தேனி மாவட்டம் சுருளிக்கு மாற்றுவது என முடிவெடுத்தது. இப்பகுதியில் சுருளியாறு அணையும் மிக அருகாமையில் முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை, ஆனை இறங்கல் அணை போன்ற பல அணைகளும் மேக மலை வனச் சரணாலயமும் இருந்ததாலும், யானைகள் நடமாடும் பகுதியாக இருந்ததாலும் கைவிடப்பட்டது. சுமார் 30 கி.மீ. வடக்கில் உள்ள போடி மேற்கு மலைப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. தேனி மாவட்டமும், கேரளாவின் இடுக்கி மாவட்டமும் சந்திக்கும் மலைப்பகுதி இதுவாகும்.

ரூ.1350 கோடி செலவாகும் என மதிப்பிடப்படுகிற இத்திட்டத்திற்கானத் தொகையை இந்திய அரசின் அணுசக்தி துறையும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும் தருகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மலைக்குன்றிற்குள் காஸ்மிக் கதிர்கள் நுழையாதவாறு பாதாள ஆய்வுக் கூடமானது சுற்றிலும் சுமார் 1 கி.மீ. அளவிற்கு மலைப்பகுதி இருக்குமாறு அமைக்கப்படுகிறது. சுமார் 2.5 கி.மீ. நீளமுள்ள 16,235 ச.மீ பரப்பளவுள்ள, 3,18,181 கன மீட்டர் கொள்ளளவு மிக்க நான்கு குகைகள் உருவாக்கப்படுகின்றன. 8 லட்சத்திற்கும் அதிகமான டன் எடையுள்ள பாறைகள் அகற்றப்பட உள்ளன. குகை ஆய்வகத்திற்குள் 50,000 டன் எடையுள்ள காந்த சக்தியூட்டப்பட்ட இரும்புக் கலோரி மீட்டர் கண்டுபிடிக்கும் அளவுமானி அமைக்கப்பட உள்ளது. இது 10,000 கி.மீ. தொலைவில் இருந்து வரும் நியூட்ரினோ துகள்களையும் கண்டறியக்கூடியது.

ஆய்வுக் கூடத்தை அமைக்க 1லட்சம் டன் இரும்பு, 35,000 டன் சிமெண்ட், மணல், உலோகங்கள் போன்ற கட்டுமானப் பொருட்கள் தேவைப்படுகின்றன. வேட்டு வைத்து குகையைக் குடைவதால் உருவாகும் பாறை இடிபாடுகளை அகற்றுவதற்கும், கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் 95,000 லாரிகள் நான்காண்டுகளில் இயக்கப்படவிருக்கின்றன. அதாவது, நாளொன்றுக்கு 130 லாரிகள் சாலையில் ஓடப் போகின்றன. பாறைகளை அகற்றி எடுத்துச் செல்லும் பணி தமிழக அரசாங்கத்திற்கு வழங்கப் பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறையானது இதற்கான சாலைகளை அமைத்திடும் பணிகளை செய்து வருகிறது.

2006ல் முன்வைக்கப்பட்ட (அய் என் ஓ) திட்ட அறிக்கையின்படி, நியூட்ரினோ ஆய்வு கூடமானது 2012ல் செயல்படத் துவங்கும். முதற்கட்டமாக 2012-17ல், காற்று மண்டலத்திலுள்ள நியூட்ரினோத் துகள்களிலிருந்து விபரங்களை சேகரிப்பது மேற்கொள்ளப்படும். 2018ல் இரண்டாம் கட்டம் துவங்கும். வெளிநாட்டு நியூட்ரினோ ஆலையில் தயாரிக்கப்படும் நியூட்ரினோக்கள் கற்றையாக இங்கு அனுப்பப்படும். நியூட்ரினோ ஆலை என்பது அமெரிக்காவின் எரிசக்தி துறையின் திட்டமாகும். இந்தியாவின் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்திற்கு, புவி உருண்டையின் நேர் எதிர்ப்பக்கத்தில் உள்ள அமெரிக்காவின் சிகாகோ பகுதியின் உயர் சக்தி வாய்ந்த ஃபெர்மி இயற்பியல் பரிசோதனைச் சாலையிலிருந்து, பூமியின் நடுக் கண்டப் பகுதியையும் கடந்து வரும் நியூட்ரினோத் துகள்கள் பரிசோதிக்கப்படும்.

இந்தியாவின் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் தான் உலகிலேயே 7000 கி.மீ.க்கும் கூடுதலான தொலைவில் உள்ள ஆலைகளில் தயாரித்து அனுப்பப்படும் நியூட்ரினோக்களை பரிசோதிக்கும் ஆற்றல் மிக்க ஒரே ஆய்வுக் கூடம் ஆகும். பூமியின் நடுப்பகுதியை, அச்சைக் கடந்து ஒரு திசையிலிருந்து மற்றொரு பகுதிக்கு கற்றையாக நியூட்ரினோக்கள் வந்து சேர முடியுமென்றால்..., நவீனத் ‘துகள்’ இயற்பியல் மற்றும் அணு விஞ்ஞானத்தின் அடிப்படையில் சிக்கலான நவீன ஆயுதங்கள் உருவாக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகளை அறிவியல் ரீதியாக மறுப்பதற்கில்லை. இந்தியாவிலும், அமெரிக்காவிலும், நியூட்ரினோ ஆராய்ச்சிகளை இரு நாட்டு அரசாங்கங்களுடைய அணு ஆயுதம் தயாரிக்கும் துறைகள் தான் கட்டுப்படுத்துகின்றன என்பது கவனத்திற்குரியதாகும். அமெரிக்காவுடன் அதிகரித்துவரும் இந்திய அணு, ஆயுத ஒப்பந்தங்கள் என்ற கவலையிலிருந்தும் இந்த திட்டத்தை அணுக வேண்டியுள்ளது.

இயற்கை பொக்கிஷத்திற்கு நேரிடும் பேராபத்துகள்:

2010 நவம்பரில், கோவை-சலீம்அலி பறவைகள் மய்யத்தினால், அவசர கதியில், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆய்வுக் கூடத்திலிருந்து வெறும் 5 கி.மீ. தூரத்தை மட்டுமே ஆரமாகக் கொண்ட வட்டப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வை மேற்கொண்டது. உத்தமபாளையம்  தாலுக்காவின் பொட்டிபுரம், சங்கராபுரம், தேவாரம், ராசிங்கபுரம் மற்றும் கேரளாவின் தேவிகுளம், உடும்பன் சோழா தாலுக்காக்களின் சில பகுதிகளில் நிலவுகிற உயிரியியல் பன்மையை மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. ஆய்வகமானது 120 ஆண்டு காலம் செயல்படும் தன்மை வாய்ந்தது. நில அதிர்வுகளை தாக்குப்பிடிப்பது முக்கியமானதொரு காரணியாகும். அடிக்கடி நில அதிர்வுகளை எதிர்கொள்ளும் இடுக்கி மாவட்ட எல்லையில் ஆய்வகம் அமைகிறது என்பதைப் பற்றியும், குகைகளைக் குடைவதற்கு பயன்படுத்தப்படும் 1 லட்சம் கிலோ ஜெல்லட்டின் வெடிகளால், ஆய்வகப் பகுதியில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ள இடுக்கி அணை, 49 கி.மீ. தொலைவில் உள்ள முல்லைப் பெரியார் அணை பாதிக்கப்படுமா என்பதைப் பற்றியும் அறிக்கையானது பரிசீலிக்கவில்லை. மாறாக, மலைக்காடுகளைக் கொண்ட அப்பகுதியை ஆண்டிற்கு 1000 மி.மீ. குறைவான மழைப் பொழிவை மட்டுமே கொண்டதாகவும், குட்டையான புதர்காடுகளை மட்டுமே கொண்டதாகவும் சித்தரிக்க முயற்சிக்கிறது.

மேற்கு மலைத் தொடர் நமது நாட்டிற்கு கிடைத்த இயற்கை பொக்கிஷமாகும். இது இமாலய மலைத் தொடரைவிட புவியியல் வரலாற்றில் முந்தையது ஆகும். குஜராத்-மகாராஷ்ட்ரா எல்லையில் தொடங்கி குமரி வரை 1600 கி.மீ. நெடுக, பரவியிருக்கும் இத்தொடரை, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய கமிட்டியானது, பாரம்பரிய சின்னமாக 2012ல் தேர்வு செய்தது. தொடரின் 39 இடங்களை பாரம்பரிய சின்னங்களாகவும் அறிவித்தது. மேற்கு மலைத் தொடரானது பல்வேறு வகைப்பட்ட தனிச் சிறப்பான இயற்கை கூறுகளையும், தாவரங்களையும், பூச்சிகளையும், பறவைகளையும், காட்டு உயிர்களையும் கொண்டுள்ளது. இந்தியாவின் வானிலைத் தன்மையை மாற்றுகிற அளவிற்கான உயர்ந்த மலைகளையும், அடர்த்தியான காடுகளையும் கொண்டுள்ளது. அரிய வகையிலான உயிரினங்களையும், தொல் பழங்குடிகளையும் உலகின் பிற பகுதிகளில் காணக்கிடைக்காத, அருகி வருகிற உயிர்களையும், தாவரங்களையும், சந்தன மரங்கள், உட்டி மரங்கள் என பலவற்றையும் கொண்டிருக்கிறது. மேற்கு மலைத் தொடரின் கேரளா, தமிழ் நாட்டிற்கு இடைப்பட்ட நீலகிரி, ஆனைமலை, பெரியார், அகஸ்திய மலை வனங்கள் மற்றும் (யானைகள், புலிகள், மான்கள், பறவைகள், அணில்கள்) வனச் சரணாலயங்கள் முக்கியத்துவம் மிக்கவையாகும்.

உலகிலேயே பல்லுயிரியம் அடர்த்தியாக உள்ள பதினெட்டு இடங்களில், மேற்கு மலைத் தொடரும் ஒன்றாகும். இதன் உயர் பகுதியில் மழைக்காடுகளும், அடிவாரத்தில் புதர்காடுகளும், மற்ற இடங்களில் இலையுதிர் காடுகளும், ஆங்காங்கே புல்வெளி பகுதிகளும் உள்ளன. மழைக்காடுகள் பல நதிகளின் தாயகமாகும். வெப்ப நாடுகளில், மழை நன்கு பெய்யும் பகுதிகளில், பல ஆயிரம் ஆண்டுகள் செழித்து வளர்ந்து நிற்கும் அடர்ந்த வனங்களே மழைக்காடுகள் எனப்படுவதாகும். மூன்றடுக்குகளாக அமைந்துள்ள இக்காடுகளில் உச்சாணிக் கிளைகளில், மத்தியில் உள்ள பகுதிகளில், தரைகள், புதர்களில் என வெவ்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. மழைக்காட்டில் வாழ்வதற்கான தகவமைப்புக் கொண்ட சிங்கவால் குரங்கு, இலையுதிர் காடுகளில் உள்ள கருங்குரங்கு(நீலகிரி லங்கூர்), புல்வெளிகளில் வாழும் வரையாடுகள்(நீலகிரி தார்) போன்ற மூன்று அரிய காட்டுயிர்களின் உறைவிடமாகும்.

தேனி-இடுக்கி மாவட்டங்களில், தேயிலைத் தோட்டப் பயிர்களுக்காகவும், அணைகளுக்காகவும், மர வியாபாரத்திற்காகவும் மரங்களை வெட்டி அகற்றியதால் மழைக்காடுகள் பெரிதும் அழிக்கப்பட்டன. உறைவிடங்களை இழந்ததாலும், நாட்டு வைத்தியத்திற்காகவும் இந்த அரிய விலங்குகள் வேட்டையாடப்பட்டு அழிவின் விளிம்பில் உள்ளன. பலவகை பறவைகள், பாலூட்டிகள், மீன்கள், பூச்சிகள் தாவரங்கள் என இயற்கையின் கண்கவர் காட்சியாக இப்பகுதி திகழ்கிறது. தேனி வனச்சரக மண்டலத்தில் மட்டும் 30 யானைகளும், 360 வரையாடுகளும், பல்வகை விலங்குகளும், பறவைகளும் இருப்பதாக பட்டியல் உள்ளது. இந்தப் பின்னணியில் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்திற்காக மலையடிவாரத்தில் 23 ஹெக்டேர் பரப்பளவில் காடுகளை அழிப்பது, வெடிகளை வெடித்து குகைகளை குடைவது, எடுக்கப்படும் பாறை இடிபாடுகளை கொட்டிக் குவிப்பது, அகற்றுவது, இடைவிடாத வாகன செயல்பாடுகளால், காற்று மாசுபடுத்தப்படுவது என இயற்கையை சீரழிக்கும் நடவடிக்கைகள் வரவுள்ளன; மொத்தத்தில், அப்பகுதியின் விவசாயம் அழிவைச் சந்திக்கப் போகிறது.

உலகின் உயிரிப் பல்வகைமையின் வனமான, மேற்கு மலைத் தொடர் என்ற இந்த இயற்கை மணியாரத்தை பாதுகாப்பது, பராமரிப்பது நாட்டின், இயற்கை அறிவியலின் கடமையும், கடப்பாடும் ஆகிறது. வனத்துறை மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சரகத்தால் 2011ம் ஆண்டு அமைக்கப்பட்ட "மேற்கு மலைத் தொடர் சுற்றுச் சூழலியல் வல்லுனர் குழு மேற்கு மலைத் தொடரின் அபாயகரமான நில நடுக்க பகுதிகளையும், வகைகளையும் பட்டியலிட்டது. கோவாவில் நடைபெறுகிற கண்மூடித்தனமான சுரங்க செயல்பாடுகளையும், கர்நாடகாவின் குண்டியா மற்றும் கேரளாவின் அதிரப்பள்ளி நீர் மின் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதியை அளிக்க வேண்டாம் எனவும் பரிந்துரைத்தது. மேற்கு மலைத் தொடர் மொத்தமுமே சுற்றுச் சூழல் பதட்ட பகுதியாக சித்தரித்தது. இயற்கையின் சுற்றுச் சூழல் எளிதாக பாதிக்கப்படும் பகுதியே “சுற்றுச் சூழலியல் எளிதில் சேதமுறுகிற மண்டலம்” எனச் சொல்லப்படுகிறது. இப்படியாக (இஎஸ்இசட் - 1) என வரையறுக்கப்பட்டுள்ள பகுதியில் தான் உத்தமபாளையம் தாலுக்காவும், இடுக்கி மாவட்டத்தின் உடும்பன் சோழா, தேவிகுளம் தாலுக்காக்களும் வருகின்றன. இங்கு தான் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமையவுள்ளது.

எதிர்ப்புகளும், போராட்டங்களும்:

2008-09ல், சுற்றுச் சூழல் மற்றும் மக்கள் அமைப்புகளின் எதிர்ப்புகளின் காரணமாக, நீலகிரி மலை-சிங்காரா வனப்பகுதியில் இத்திட்டம் அனுமதியை பெறமுடியவில்லை. பிறகு, தேனி மாவட்டம்-சுருளியாறு மலைப் பகுதியை தேர்ந்தெடுத்தனர். பல்வேறு அணைகளுக்கு அருகாமையில் திட்டப் பகுதி இருந்ததால் அங்கும் அனுமதி கிடைக்கவில்லை. மேற்கு போடி மலைப் பகுதியை 2010ல் தேர்ந்தெடுத்தனர். சுற்றுச் சூழல் - வனத்துறை அமைச்சகத்திடமும் அனுமதி பெற்றனர். ஆய்வு கூடத்திற்கு நெருக்கமான நான்கு ஊராட்சிகளை(பொட்டியபுரம், தேவாரம், சங்கராபுரம், ராசிங்கபுரம்) சேர்ந்த 28,600 மக்களின் பெரும்பான்மையினர் விவசாயத்தை நம்பி உள்ளனர். விவசாயத் தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தினசரி ஜீப்புகள் மூலமாக வேலைக்குச் சென்று வருகின்றனர்.

கிராம மக்கள் ஆடுமாடுகளை மேய்ப்பதற்கும், புற்களை அறுப்பதற்கும், காய்ந்த விறகுகளை சேகரிப்பதற்கும் இந்த மலைப் பகுதிகளை சார்ந்தும் இருந்தனர். தற்போது ஆடுமாடுகளை, மனிதர்களை மலைப்பகுதிக்குள் அனுமதிப்பதில்லை. 2011ல் திட்டத்திற்காக நிலத்தை சர்வே செய்தபோது மக்கள் அணிதிரண்டு முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தேவாரம் போலீஸ் வழக்கு போடப்பட்டுள்ளதாக மக்களை தொடர்நது மிரட்டி வருகிறது. நியூட்ரினோ திட்டத்தில் அபாயம் கிடையாது என்ற தொடர் பிரச்சாரத்தை அனைவருக்கும் கல்வி இயக்கம் (சர்வ சிக்ஷ அபியான்) செய்து வருகிறது.  அணுக்கழிவுகளை புதைப்பதற்கான சுரங்கம் தோண்டப்படுகிறது என்ற அய்யமும் மக்களிடம் எழுந்துள்ளது. எதிர்ப்பு தெரிவித்த நான்கு ஊராட்சித் தலைவர்களும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு மிரட்டப்பட்டனர். 2012ல் ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மீதும் பணிகளை தடுத்ததாக வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு கேரளாவில் கடந்த 2012ன் இறுதியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. எதிர் கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் மற்றும் அணுசக்தி விஞ்ஞானி வி.டி.பத்மநாபனும் செய்தி ஊடகங்கள் வாயிலாக திட்டத்தை அம்பலப்படுத்தினர். இடுக்கி மாவட்டத்திற்குள்ளும் ஆய்வுக் கூடம் அமைகிறது, கேரள அணைகளுக்கு பெரிதும் ஆபத்து ஏற்படும்- என்ற கோணத்தில் எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள சிபிஎம் கட்சியினரோ இத்திட்டத்தை ஆதரிக்கின்றனர்.

நாசகரமான நியூட்ரினோ திட்டத்தை முறியடிப்போம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல், மக்களின் ஆரோக்கியம், மேற்கு மலைத் தொடர் இயற்கையை, உயிரினங்களை பாதுகாத்தல், சுற்றுச்  சூழலியல் எளிதில் சேதமுறுகிற மண்டலத்திலுள்ள அணைகளை பாதுகாத்தல் என்பதெல்லாம் ஒரு சில விஞ்ஞானிகளின் கையில் வழங்கப்பட்டுவிட்டது. தாங்கள் பணியாற்றும் ஆய்வு கூடப் பகுதியின் புவிச் சூழலைப் பற்றி அறியாதவர்களாக, அவர்கள் கையாள உள்ள துகள்களின் ஆபத்தான பண்புகளைப் பற்றிக் கூட அறியாதவர்களாக, இந்திய அரசின் கைப்பாவையாக, இந்த விஞ்ஞானிகள் மாறிவிட்டனர். உலகமயம், தனியார்மயம், தாரளாமயம் என்ற மத்திய அரசின் பொருளாதாரப் பாதையானது, ஏகாதிபத்தியங்களின், பெருங்குழும நிறுவனங்களின் நலனுக்காகவே இருக்கிறது. ஏகாதிபத்திய சார்பு விஞ்ஞானமா? மக்கள் சார்பு விஞ்ஞானமா? - என்ற பிரச்சனையில் நாட்டிலுள்ள விஞ்ஞானிகள் சமூகம் மக்கள் பக்கம் நிற்க வேண்டும். மக்கள் நலன், மக்கள் ஆரோக்கியம், மக்கள் வாழ்வுரிமை மக்கள் சார்பு வளர்ச்சித் திட்டங்களுக்காகவே பணியாற்ற வேண்டும். 

இந்தப் பிரச்சனை சுற்றுச் சூழல் மட்டும் சார்ந்த பிரச்சனையாகவோ, தேனி மாவட்ட விவசாயிகள் பிரச்சனையாகவோ மட்டும் புரிந்துகொள்ளப்பட்டுவிடக் கூடாது. பல்வேறு அணுசக்தி, ஆயுத, பொருளாதார கூட்டு ஒப்பந்தங்கள், திட்டங்கள் மூலமாக மன்மோகன் சிங் தலைமையிலான அய்முகூ அரசாங்கம் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக மாறுவதற்கு துடிக்கிறது. ஆயுதங்கள், அணு போன்ற கேந்திரமானத் துறைகளில் அமெரிக்கா நுழைவதற்கு பல வாய்ப்புகளை வழங்கி வருகிறது; அமெரிக்காவின் அணு ஆயுத வகைப்பட்ட ஒரு ரகசிய திட்டத்திற்கு, இந்திய நியூட்ரினோ ஆய்வுக் கூடம் வாயிலாக ஆபத்தான பாதையை அமைத்து தருகிறது; மக்களின் வாழ்வோடும் தேசத்தின் இறையாளுமையோடும் விளையாடுகிறது என்ற செய்தி விரிவாக எடுத்துச் செல்லப்பட வேண்டும். நியூட்ரினோ ஆய்வுக் கூட நாசகர திட்டத்திற்கு எதிராக தேனி மாவட்ட விவசாய சமூகத்தோடு, சனநாயக, நாட்டுப் பற்றுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்; முறியடித்திட வேண்டும்.

-           சந்திரமோகன் (தொலைபேசி எண் : 9443243734   e mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It