நவீன மருத்துவத்தின் பக்க விளைவுகளையும் தீமைகளையும் வேறு துறையைச் சார்ந்த யாராவது எடுத்துச் சொன்னால் நாம் என்ன செய்வோம்?    

1.                 ஒரு காதில் வாங்கி இன்னொரு காது வழியே விட்டு விடுவோம்.

2.                விஷயம் தெரியாமல் ஏதோ கூறுகிறார் என்று அலட்சிப்படுத்தி விடுவோம்.

3.                பாவம், எந்த அரைகுறை மருத்துவரிடம்  மாட்டிக்கொண்டு அவதிப்பட்டாரோ

     என்று பரிதாபம் தெரிவிப்போம். 

                   ஆனால், அப்படி விஷயங்களைப் புட்டுப்புட்டு வைத்தவர் சாதாரண மனிதரல்ல. முன்னாள் மணிபால் பல்கலைக்கழகத் துணைவேந்தர். இங்கிலாந்தின் மிடில்ப்ஸக்ஸ் மருத்துவமனையில் இதய நோய்ப் பிரிவு பேராசிரியர். முதலமைச்சர்கள் உட்பட பல வி.ஜ.பி.களுக்கு மருத்துவ ஆலோசகர். பீகார் மாநில சுகாதார மருத்துவக் குழுவின் தலைவர். ஜர்னல் ஆஃப் சயன்ஸ் அன்ட் ஹீலிங் இதழின் முதன்மை ஆசிரியர். மருத்துவ சேவைக்காக இந்த ஆண்டு பத்மபூஷன் விருது பெற்றவர் டாக்டர் பி.எம். ஹெக்டே 

                   கசப்பு மருந்தைச் சர்க்கரையில்  தோய்த்துக் கொடுப்பதுபோல அவர் இதய பைபாஸ் சர்ஜரியையும், பிற தேவையற்ற அறுவைச் சிகிச்சைககையும் பற்றி சிரிக்கச் சிரிக்கச் உரையாற்றினார். நம் உடலிலேயே சில மாற்றங்கள் இயற்கையாக உண்டாகி, சில கோளாறுகளைத் தானாகவே சரி செய்து கொள்கிறது என்றார். 

                   மருத்துவர்கள்  ஸ்ட்ரைக் செய்த காலத்தில், இறப்பு விகிதம் மிகக் குறைவாகவே இருந்தையும், அவர்கள் முழு மூச்சோடு பணியில் ஈடுபட்ட போது இறப்புகள் விகிதம் ஜிவ்வென்று அதிகரித்தாகவும் புள்ளிவிவரங்களுடன் அவர் குறிப்பிட்ட போது சிரிப்பலை எழுந்தது. 

                   ஹோமியோபதி மருந்துகளின் தன்மையை சிலாகித்துப் பேசிகார். சில சித்த மருத்துவ முறைகளும், நீண்ட நாள் நோய்களிலிருந்து விடுதலை பெற்றுத் தந்திருப்பதைச் சுட்டிக் காட்டினார். பிராணாயாமம், தியானம் முதலியவை எவ்வாறு மனிதர்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவுகின்றன என்று விளக்கினார். மருந்து தயாரிப்பு  நிறுவனங்களின் நிர்ப்பந்தம் காரணமாக  மருத்துவர்கள் சில மருந்துகளை பிரிஸ்கிரிப்ஷனில் எழுதிவிடுவதும், அதன் தீவிர விளைவுகள் மக்களை பாதிப்பதையும் எடுத்துச் சொன்னார்  டாக்டர் ஹெக்டே. 

                   (அவரை அறிமுகம் செய்து வைத்துப் பேசியவர், சர்க்கரை நோய் சிகிச்கை நிபுணர் டாகடர் சி.வி. கிருஷ்ணசாமி) பிழைக்க வாய்ப்பு இல்லாத நோயாளிகளை எப்படி மெஷின்களில் பிணைத்து, வாட்டி வதைத்த பின், எங்களால் முடிந்தவரை பார்த்துவிட்டோம் என்று பில்லோடு ஆசாமியை ஒப்படைப்பதை நாடகம் போல விவரித்தார் டாகடர் ஹெக்டே. 

                   மனத்தில் உள்ள வெறுப்புகளை அகற்றினால பாதி நோய் பறந்துவிடும் என்றார். பாஸிட்டிவ் நினைப்புகள் ஆரேக்கிய வாழ்வுக்கு அவசியம் என வலியுறுத்தினார். சொற்பொழிவை விஎச்எஸ் மையமும், டேக் மையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

 (தினமணி ஞாயிறு கொண்டாட்டம், 21.02.2010)

Pin It