நலம் காண்படரேஷன் முன்முயற்சியில் 2009 ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 18 ம் நாள் சென்னை ஆஷா நிவாஸ் ல் கூடிய அடிப்படை மருத்துவப் பாதுகாப்பு மாநாடு, நமது சம கால அவசர அவசிய தேவை கருதி அடிப்படை மருத்துவத்தை பாதுகாக்க வளர்த்தெடுத்த வேண்டி அனைத்து ஆட்சியாளர்கள், அரசியலாளர்கள், அறிவுத் துறையினர், மருத்துவத்துறையினர், மற்றும் பொது சமூகத்துக்கு விடுத்த வேண்டுகோள்

பின்வருமாறு :                                                          I

உலக அரங்கில் முதல்முறையாக மருத்துவ நல ஒப்புரவு (Health equity) வை பேசு பொருளாக்கிய ஆரம்ப சுகாதார நலமே அடிப்படை மருத்துவ நலம் என அடையாளம் காட்டிய 1978 - ம் ஆண்டின் அல்மா ஆட்டா பிரகடனத்தில் ஒப்பமிட்ட 134 நாடுகளில் நமது நாடும் ஒன்று. ஆல்மா ஆட்டா பிரகடனத்தின் ஒவ்வொரு உருபையும், வரியையும், ;>சொல்லையும், சொல்லிடை பொருளையும், சொல்லிடை அமைதியையும் கூட முழுமையாய் ஏற்றுக்கொண்டவர்கள். நாம். இந்தப்பிரகடனம் உருக்கொள்வதற்கு 32 ஆண்களுக்கு முன்பாகவே சர் ஜோசப்ஃபோர் அவர்கள் தலைமையிலான ஃபோர் கமிட்டி அறிக்கையின் ஊடாக அடிப்படை மருத்துவ நலத்தின் அவசியத்தை முன்னுணர்ந்து நடைமுறைப்படுத்த முயன்றவர்கள் நாம்.

II

ஃபோர் கமிட்டியைத் தொடர்ந்து முதலியார் கமிட்டி (1962) ஜங்கல்வாலா கமிட்டி (1967), கர்டர்சிங் கமிட்டி (1973), ஸ்ரீ வாஸ்தவ் கமிட்டி (1975) அனைவருக்கும் மருத்துவ நலத்துக்கான இநநத & ஐஇஙத குழு (1980) முதல் தேசிய மருத்துவ நல அறிக்கை (1983) தேசிய மருத்துவ நலக்கொள்கை (200) இரண்டாவது தேசிய மருத்துவநலக்கொள்ளை (2002) .... என நமது ஆட்சியாளர்களும் அரசுகளும் இடைவிடாது மக்கள் நல மேம்பாட்டுக்காக ஆய்வுகளையும், முயற்சிகளையும் மேற்கொண்டவாறேதான் உள்ளனர்.

என்னவொன்று மருத்துவத் துறையில் நாம் சாதித்திருக்க வேண்டிய அளவுக்கு சாதிக்கவில்லை என்பதே உண்மை”. என சண்டிகரிலுள்ள மருத்துவ மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 30 வது பட்டமளிப்பு விழாவில் 3.11. 2009 அன்று நமது இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு பிரதமரின் சொற்களில் இதைவிட கூடுதலாய் எதிர்பார்க்க இயலாது. அவர் குறிப்பிட்ட போதாமை எவ்வளவு என்பதை நாமாகவேதான் உணர்ந்து கொள்ளவேண்டும்.

அதற்கு கீழ்வரும் புள்ளிவிவரங்கள் ஒரு சோற்றுப்பதமாக உதவக்கூடும்.

- நாட்டில் 55% குடியிருப்புக்கள் கழிப்பிடம் இல்லாதவை.

- மாசுபட்ட குடிநீர் காற்றால் ஆண்டுக்கு ஒன்பது லட்சம் பேர் மரணமடைகின்றனர்.

-      6 மாதத்திலிருந்து 5 வயது வரையிலான குழந்தைகளில் 70% இந்தியக் குழந்தைகள் இரத்த சோகையுடையோராய் உள்ளனர். இதில் உலக முதலிடம் நமக்கு.

- இந்தியாவில் எட்டு பேருக்கு ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். பெண்களில் 29 பேரில் ஒருவருக்கு மார்பக புற்று நோயும். 39 பேரில் ஒருவருக்கு கருப்பையில் புற்றுநோயும் உள்ளது.

- காசநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடம் பெறுவதும் இந்தியாதான். தினமும் 1000 பேர் இந்நோய்க்கு பலியாகின்றனர். 1997 ல் போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3047. 2006ல் 31,973

- உலகில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 90 லட்சம் பேர் ஆண்டு தோறும் இறக்கின்றனர்.  இவர்களில் 5 ல் 1 இந்தியக் குழந்தையாக உள்ளது. இதற்கு காரணம் வயிற்றுப்போக்கு, நிமோனியா, இரத்தசோகை.

- இந்திய மக்களில் 230 மில்லியன் பேர் ஊட்டச்சத்து குறைந்த உணவை உட்கொள்கின்றனர். இதில் 46% குழந்தைகள்.

- உலக அளவில் இதயநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 பேர் இந்தியர்கள். இந்தியாவில்  உயிரிழப்போர் 30% பேர் இதயத்தொடர்பிலான நோய்கள் காரணமாக இறக்கின்றனர்.

133 நாடுகளைக் கொண்ட பட்டியல் ஒன்றை உலக பொருளாதார அமைப்பு தயாரித்துள்ளது. அந்தந்த நாடுகளின் பல்வேறு துறைகளில் உள்ள வசதிகளைப் பொறுத்து, ஒவ்வொரு       நாட்டுக்கும் ரேங்க் வழங்கப்பட்டிருக்கிறது. சுகாதாரம் மற்றும் தொடக்க கல்வி ஆகிய துறைகளில் இந்தியா அந்த பட்டியலில் 101 வது இடத்தில் இருக்கிறது

- இந்திய கர்ப்பிணி தாய்மார்களில் 10ல் 9 பேர் சத்துப்பற்றாக்குறையாலும், ரத்த சோகையாலும் சோர்ந்துள்ளனர்

-      10 கோடி இந்தியர்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

- உலகிலேயே தனி நபர் கைப்பணம் அதிகம் புழங்குவது இந்தியாவில் தான். மொத்த            பணப்புழக்கத்தில் 72% சுமார் 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலானது அது.

500 : 1 என்ற விகிதச்சாரத்தில் இருக்க வேண்டிய மக்கள் - மருத்துவர் விகிதம்

500 : 0. 3 என்பதாக உள்ளது. இந்த விகிதமும் 29% கிராமப்புற மக்களுக்கு எட்டாக்கனியாகும்.

நமது நாடு இன்னமும் பல விவசாய நாடுதான். பொரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். சரிபாதியினருக்கு விவசாயப் பொருளாதாரமே வாழ வழி அமைக்கிறது. கிராமப்புறங்களோ எந்தவிதமான அடிப்படை சுகாதார வசதியும் இன்றி உள்ளன. ஒவ்வொரு மழையும். வெயிலும் கிராமப்புற வாழ்வை அடியோடு தலைகீழாக புரட்டிப்போடுகின்றன. கிராமப்புற மருத்துவ வசதியோ மிகவும் கீழானநிலையில் உள்ளது. கழிப்பிடங்கள் இல்லை. சாக்கடை இல்லை. பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை. மழைநீர் வடிகால் இல்லை. மருத்துவமனைகள் இல்லை. மருந்து இல்லை.

நகர்புறங்களில் விரிவாக்கப்பட்ட பகுதிகளிலும், ஏழை எளிய மக்கள் வாழும் பகுதிகளிலும் ஏறக்குறைய இதே நிலைமைதான். போதாதற்கு கொசுத்தொலை. மூட்டைப்பூச்சி துயரம், குடிக்க தகுதியற்ற நீர்வசதி அதுவும் அதிக கட்டணம் செலுத்தி, வாழ்நிலை இப்படியென்றால் மருத்துவ வசதி பற்றி சொல்லி மாளாது, அரசு மருத்துவமனைகள் நலமாக்குகிறதோ, இல்லையோ? நோய் பரப்புவது மட்டும் உண்மை. அவ்வளவு சுகாதார கேடு! மருத்துவதுறையினர் கவனக்குறைவு! அல்லோபதியின் பின் விளைவுகள் பற்றி பேசாமாலே விளங்கும் அத்துனை பிரசித்தம்!

இதுமட்டுமா, பெண்களின் உரிமைக்காக, போராடும் எவ்வளவோ அமைப்புகள் உள்ளன. வன்புணர்ச்சியை விட மோசமான கொல்லுணர்ச்சியை அன்றாடம் நமது பெண்கள் எதிர்கொள்வது அடக்கி வைத்து அடக்கி வைத்து, அடிக்கடி எழுந்தமார்ந்து கடன் கழிக்கும் சாலையோர கழிப்பிடங்களில் தான். அதற்கும் இருள்கவிய வேண்டும். மழைக்காலங்களிலோ பூச்சிப்புழுக்களோடு போராட வேண்டும். என்ன கொடுமை இது! சோறிடத்தான் வழியில்லை - கழிப்பிடங்களுக்குமா? நாட்டின் எல்லா இருப்புப் பாதையோரங்களுமே கழிப்பிடங்களாய்த் தான் உள்ளன. நகரங்களிலோ சுகாதாரக் கேடான பொது கழிப்பிடங்களுக்கு இரண்டு ரூபாயும் மூன்று ரூபாயும் கட்டணம். இப்படி நமது பொது சுகாதாரம் நாறிக் கிடக்கிறது.

III

அரசும் ஆட்சியாளர்களும் தொடர்ந்து முயன்ற போதும் மருத்துவத்துறையில் அடைய வேண்டிய உயரத்தை அடைய முடியாமல் போனது ஏன் என்ற கேள்வி இப்போது ஆழ்ந்த பரிசீலனைக்குரியது. ஆட்சியாளர் போதுமான முயற்சியும் விருப்புறுதியும் இல்லாதவர்கள் எனவும் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை எனவுமான இன்ஸ்டன்ட் பதில்கள் இக்கேள்விகளுக்கான விடையிருப்பில் போதுமானதில்லை. முழுமையான விடையைத் தேடுவதற்கு முன்னால் இது தொடர்பான எடுத்துக்காட்டொன்றை கவனத்தில் கொள்வது பொருத்தமாய் இருக்கக்கூடும்.

நம்மைப்போலவே அல்மா ஆட்டா பிரகடனத்தில் கையொப்பமிட்ட நாடு வரலாற்றிலும் பூகோளத்திலும் நம்மை ஒத்தவர்கள் மக்கள் தொகையிலோ நம்மிலும்அதிகம் - இவையெல்லாம் சீனாவை நினைவூட்டுகிறதா? ஆம் அதேதான்.

அல்மா ஆட்டா பிரகடனம் வெளியிடப்பட்ட 30ம் ஆண்டை முன்னிட்டு அதே இடத்தில் உலக மருத்துவ நல நிறுவனம் (WHO) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பிரகடனத்தின் 30 ஆண்டுகால வழிகாட்டுதல் குறித்து மறுமதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சீனா இப்பிரகடனத்தைப் பயன்படுத்தி அடிப்படை மருத்துவ நலத்தில் முழுமையையும் தன்னிறைவையும் பெற்றதைக் குறிப்பிட்டு முன்னுதாரண நாடென ஆல் பாராட்டுப் பெற்றுள்ளது.

இவ்வாறு சீனா பாராட்டத்தக்க அடிப்படை மருத்துவ நலத்தில் தன்னிறைவைப் பெற காரணமாக இருந்தது அந்நாட்டு அரசின் விருப்புறுதி மட்டுமே அல்ல. அவர்கள் மேற்கொண்ட வழி முறையும் முக்கிய காரணமாகும். அங்கு மருத்துவம் தொடர்பாக ரூல் 57 என்றொரு சட்டவழிமுறை ஏற்படுத்தப்பட்டது. இதன்படி (1)ஆங்கில மருத்துவம் பயின்ற ஒவ்வொருவரும் கட்டாயமாக உள்நாட்டு மருத்துவமான அக்குபஞ்சர் உள்ளிட்ட ஆறு அங்கங்களை உள்ளடக்கிய பாரம்பரிய சீன மருத்துவ (TCMத்தை பயின்றால் மட்டுமே மருத்துவப் பதிவு வழங்கப்படும் (2) வெளிநாட்டிலிருந்து ஆங்கில மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ள போது அது சுதேசி மருந்துகளை விட சிகிச்சையளவில் உயர்வானதென நிரூபித்தால் மட்டுமே உரிமம் கிடைக்கும் (3) கிராமப்புறங்களிலும் தொழிலமைப்புகளிலும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டு வெறுங்கால் மருத்துவர்கள் என அங்கீகரிக்கப்பட்டு பகுதி நேரமாக மருத்துவப் பணியாற்ற பணிக்கப்பட்டனர். வெறுங்கால் மருத்துவர்கள் தொடர் பத்தாக்கப் பயிற்சிகளின் ஊடாக தங்களை ஊரக மருத்துவ நல பயிற்சியாளர் (Rural Health Practitioner) களாக வளர்த்துக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டனர். இப்படி படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்ட வெறுங்கால் மருத்துவர்களில் ஒருவர் தான் தற்போதைய சீனாவின் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சூ.சென்.

இந்த மூன்று மந்திரக்கோல்களையும் உள்ளடக்கிய இருகால்களால் நடப்போம் என்ற பிரபல சொலவடையின் மூலம் உலகறிய வழி நடத்தியவர் அப்போதைய மக்கள் சீனத்தின் சேர்மன் மா சே துங் அவர்கள்.

IV

நமது நாட்டில் அடிப்படை மருத்துவத்தைப் பாதுகாக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் ஃபோர் கமிட்டி முதலாகவே அனைத்து திட்டமிடுதலிலும் தாயக மருத்துவர்களும் மருத்துவர்களும் புறக்கணிக்கப் பட்டே வந்துள்ளனர். உள்ளபடியே சொல்வதானால் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்பட்டனர் என்பதே உண்மை. இது தொடர்பான வேறு சில விபரங்கனையும் இங்கு கவனத்தில் கொள்வது அவசியம்.

இந்தியாவில் ஆங்கில மருத்துவம் நீங்கலாக சித்தா, ஆயுர்வேதம் யுனானி, இயற்கைமருத்துவம், யோகா, ஹோமியோபதி, அக்குபஞ்சர், ஹிப்னோதெரபி என எட்டு மாற்றுமுறை மருத்துவங்கள் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவை. தொழிலாளர் நலத்துறையில் ஆங்கில மருத்துவம் நீங்கலாக வேறு எந்த மருத்துவத்திற்கும் அங்கீகாரமில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தேசிய ஊரக மருத்துவ நல இயக்கத்திலும் மாற்றுமுறை மருத்துவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டாலும் ஆங்கில மருத்துவ நெறிமுறையிலேயே செயலாற்ற நடந்தாக வேண்டும். இறுதீத்தீர்ப்பை ஐ.சி. எம்.ஆர். எழுதும், இதுதான் இந்தியாவில் தாயக மருத்துவர்களின் தலையெழுத்து. ஆரம்ப சுகாதாரம் எனப்படும் அடிப்படை மருத்துவ நலம் இந்தியாவில் முழுமை பெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இதுவரை நமது ஆட்சியாளர்கள் ஆங்கில மருத்துவத்தை நம்பியிருந்தது தான். அடிப்படை மருத்துவ நலத்தில் செயல்படுவதற்கு தடையாக மூன்று காரணங்களை உள்ளடக்கமாகவே ஆங்கில மருத்துவம் கொண்டுள்ளது.

முதலாவது அதன் உயர்தொழில் நுட்பம், நோயறிதலுக்கும், சிகிச்சைக்கும் ஆங்கில மருத்துவம் அடிப்படையிலேயே பெருங்கருவிகளை கொண்ட பெருங் கட்டுமானங்களையும் தொழில் நுட்ப ஊழியர்கள் உள்ளிட்ட ஆட்படையையும் மக்கள் வசிக்குமிடமெல்லாம் நிறுவுதல் இயலாது. ஆகவே தான் அவர்களால் ஊரகப்பகுதிகளில் செயலாற்ற முடிவதில்லை ஆங்கில மருத்துவம் நகர்மயமாதலோடும் குவிமயமாதலோடும் நேரடியாகத் தொடர்புடையது.

இரண்டாவது இவ்வளவு பெரிய கட்டுமானம் பெரும் மூலதனத்தை செரித்து உருக்கொள்வது, இதற்குரிய பலனை எளிய சிகிச்சைகளை உள்ளடக்கிய அடிப்படை மருத்துவம் மீட்டுத்தராது. ஆகவேதான் உலகிலேயே அதிக தனிநபர் பணப்புழக்கமுடைய இந்திய மருத்துவத்துறை லாபமில்லாத ஆரம்ப சுகாதாரத்தை கைவிட்டுள்ளது. ஆங்கிலமருத்துவம் அடிப்படையில் லாபநோக்ககோடும் மூலதனச்சந்தையோடும் தொடர்புடையது.

மூன்றாவது ஆங்கில மருத்துவத்தின் கல்விமுறையும் ஆராய்ச்சி முறையும் பாவ்வேலாஃபிரையர் (Paulo Freir) இவான் இலிச் (Ivan Illich) சயந்தானி தாஸ்குப்தா(Sayantal Dasgupa) ஜான் பெர்கர் போன்ற கல்வியாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்களின் கண்டனத்துக்குரிய எதேச்சதிகார, மேட்டிமை மனோபாவமுடையது. இம் முறையில் தொடர்புடைய மக்களின், மாணவர்களின் சமூக நிகழ்வுகளை, அறிவியல் கண்டுபிடிப்புகளை வெறும் தகவல்களாக அறிவை தருதல் என்ற பெயரில் திணிக்கின்றனர். இதனைப் பயில்பவர்கள் தனக்குத் திணிக்கப்பட்டதை எவ்வித படைப்பூக்கமுமின்றி தன்னிடம் வரும் நோயாளிகளிடம் திணிக்கின்றனர். அகப்பொருத்தமற்ற அத்திணிப்பு ஒவ்வொமையைத்தான் உருவாக்கும், இத்தகைய ஒவ்வாமையின் வெளிப்பாடே இன்றைக்குப் பெருகிப்போயிருக்கும் கேன்சர், கிட்னிஃபெய்லியர் அடினாய்ட், டான்சிலிட்டிஸ் .... யாவும், பிரைமரி ஹெல்த் கேர் என்பதை தமிழில் ஆரம்ப சுகாதார சேவை எஎன அழைக்கும் வழக்கம் நிலவி வருகிறது. இந்த மொழியாக்கத்தில் தமிழும் பொருளும் இல்லை பிரைமரி என்பது அடிப்படையானது, முதன்மையானது ஆதாரமானது என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. எனவே இங்கும் இனியும் பொருளும் தமிழும் விளங்கும்படியாக அடிப்படை மருத்துவம் என்றே அழைக்கலாம்.

அடிப்படை மருத்துவமானது மருத்துவத்தின் மற்றைய நிலைகளைப் போல உயர் தொழில் நுட்பம் மற்றும் அதிகம் படித்த மருத்துவர்களைத் தேவையாய் கொண்டதல்ல. மக்கள் பங்கேற்பும் எளிய நுட்பங்களும் சாமான்ய அறிவும் சாதாரண பொருட்களும் கொண்டே முழுமையாக, அடிப்படை மருத்துவத்தை மேற்கொள்ளலாம்.

குடிநீர் பாதுகாப்பு, பொதுசுகாதாரம், வருமுன் காத்தல், சாலை பாதுகாப்பு, தொழில் இட பாதுகாப்பு ஊட்டச்சத்து, தொற்றுநோய்களை கட்டுப்படுத்துதல், தாய் சேய் நலம், மனநலம், மது போதை மீட்பு, பற்களை பேணுதல், கண்பாதுகாப்பு முதலுதவி, அவசரகால உதவி, நலவாழ்வுக்கல்வி போன்றவற்றை உள்ளடக்கியது அடிப்படை மருத்துவம்.

இந்த அடிப்படை நிலையைச் சரியாக நிறைவேற்றாவிட்டால் சாதாரண நோய்களே கூடப் பெருநோய்களாக பேருருக்கொள்ளும். இன்றைக்கு ஏற்பட்டுள்ள பெரு நோய்களில் 70% அளவிலானது அடிப்படை மருத்துவத்தை புறக்கணித்ததால் ஏற்பட்ட விளைவே என்றும் மருத்துவ செலவுகளால் ஆண்டுதோறும் 10 கோடி பேர் வறுமைக்கோட்டின் வாசலை வந்தடைகின்றனர் என்றும் உலக மருத்துவ நல அமைப்பு தெரிவித்துள்ளது, இதனை உணர்ந்தே WHO தனது 2008 ஆண்டின் உலக நல அறிக்கையை முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது முக்கியத்துவம் பெறும் அடிப்படைமருத்துவ நலம்என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. அடிப்படை மருத்துவ நலத்தில் உள்ளபடியே முழுமையும், தன்னிறைவும் அடைய வேண்டுமானால் தாயக மருத்துவங்களையும், மருத்துவர்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவத்தால் மட்டுமே சாத்தியமாகும். இதனை அல்மா ஆட்டா பிரகடனத்தின் உறுவு - 7 உட்பிரிவு 7 தெளிவுற காட்டியுள்ளது. இந்த புரிதலோடு கீழ்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றினால் நமது இலக்கு எட்டப்படக் கூடியது தான்.

1. அடிப்படை மருத்துவ நல (Health Practice) த்தை மருந்து மற்றும் அறுவை சார்ந்த மருத்துவ சிகிச்சை (Medical Practice) யிலிருந்து பிரித்து தனிப்பிரிவாகவும், தனித்துறையாகவும் கட்டமைக்க வேண்டும்.

2. இந்திய அரசியல் சாசனம் உறுபு 47 Public Health எனச் சொல்லப்படும் இப்புதிய பிரிவை சாசனத்தின் அட்டவணை - 7 பதிவு எண் - 6 ன்படி மாநில அரசின் முற்றாளுமைக்குபட்ட துறையாக கையளிக்கப்பட வேண்டும்.

3. இந்தப் புதிய பிரிவில் சேவையளிப்போரை Health Practitioner என அழைக்க வேண்டும்.      தகுதிவாய்ந்த பதவிலா மாற்றுமுறை மருத்துவர்கள், இயன் முறை மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் போன்றோருக்கு புத்தாக்க பயிற்சியளித்து, ஹெல்த் ப்ராக்டிசனர் பதிவளிக்க வேண்டும். இதற்கென மாநில அளவில் ஹெல்த் போர்டு ஒன்றை அமைக்கலாம்.

4. அடிப்படை மருத்துவ நலம் தொடர்பான பயிற்சி, ஆராய்ச்சி ஆவணப்படுத்ததல் யாவும் தாய்மொழியில் உள்ளுர் சூழல்களுக்கேற்ப நடைபெற வேண்டும்.

5. அடிப்படை மருத்துவ நலத்துறைக்கு அடிப்படை பொருளாதார கட்டமைப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்.

6. அடிப்படை மருத்துவ நலத்துறைக்கான மருத்துவமுறையாக ஒருங்கிணைந்த மருத்துவம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

7. அடிப்படை மருத்துவ நலத்துறையில் செயலாற்றும் ஹெல்த் ப்ராக்டிசைனர்கள் குஜராத்தில் உள்ளது போல களை அமைத்து செயலாற்ற ஊக்கமளிக்க வேண்டும்.

8. கல்விக்கட்டணம் போல மருத்துவக் கட்டணத்தை நெறிப்படுத்த சட்டமியற்ற வேண்டும்.

9. எந்தவொரு மருத்துவ முறையிலும் தர்க்கப் பொருத்தமற்று தொழில் கூடங்களில் கலவை மருந்துகளை உருவாக்கத் தடை விதிக்க வேண்டும். அடிப்படை பெயர்களில் மருந்து விநியோகம் செய்யப்பட்டு மருத்துவர்களாலேயே தேவைக்கேற்ப கலந்தளிக்கப்பட வேண்டும்.

10. மருந்து கம்பெனிகள், மருத்துவமனைகள் வணிக விளம்பரமளிப்பது தடை செய்யப்பட வேண்டும்.

Pin It