கொளத்தூரில் மே24 ஆன்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் மகளிர் அணி நாத்திகர் விழாவை நடத்துகிறது. உலகிலேயே நாத்திக பெண்கள் நடத்தும் விழா வேறு எங்கும் நடந்தாகக் குறிப்புகள் இல்லை. மாநாட்டுச் சிந்தனையாக பெரியார் கருத்துக்களின் தொகுப்பு...
'கடவுள்' எதற்கு?
கடவுள் என்பது அர்த்தமும் குறிப்பும் அற்ற வார்த்தையாய் இருந்து வந்த போதிலும், அது, மனித சமூகத்தில் 100-க்கு 99 மக்களைப் பிடித்துத் தன்வயப்படுத்தி, மடமையாக்கி ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. கடவுள் என்ற வார்த்தை கற்பிக்கப்பட்டுப் பல ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகியிருந்த போதிலுங்கூட, 'கடவுள் என்பது இன்னது' என்று குறிப்பாக, குளறுபடி இல்லாமல்-தெளிவுபட உணர்த்தியவர்களோ, உணர்ந்தவர்களோ, இதுவரையில் காணக் கிடைக்கவில்லை. பொதுவாக, அந்தப்படி ஒரு உணர்ச்சியை மக்களுக்குள் எப்படியாவது புகுத்தி, அவர்களைப் பயப்படுத்தி வைக்க வேண்டும் என்கின்ற அவசியத்தியனால் அதற்கு என்று வேறொரு (மானச) உலகத்தையும், பாவ புண்ணியத்தின் பயனையும்,மோட்ச நரகத்தையும், கற்பித்து அதைப் பரப்பப் பலவித ஸ்தாபனங்களையும் உண்டாக்கி-அதன் பிரச்சாரத்தின் பேரால் பிழைக்க ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்து, அக்கூட்டத்திற்கு அதிலேயே பிழைத்துத் தீர வேண்டிய தான நிலைமையையும் ஏற்படுத்திவிட்டதால் வெகு சுலபமாகவும் செல்வாக்காகவும், அதன் பிரச்சாரம் நடக்கவும் மக்களைத் தன்வயப்படுத்தவும் ஆன காரியங்கள் நடந்துகொண்டே வருகின்றன. 'கடவுள் என்றால் என்ன?' என்பதை உணருவதற்கில்லாமல் - உணர வேண்டும் என்று நினைப்பதற்கில்லாமலும் இருந்து வருகிறது.
(குடிஅரசு 20.11.1932)
பாவச்சீட்டுகளின் கதை
மனிதன் செய்கிற பாவ புண்ணியம் என்பதைப் பற்றி சிந்தித்தால் யோக்கியதையும் வெளிப்படும். புண்ணியம் செய்தவன் தான் மோட்சமடைய முடியும். பாபம் செய்தவன் மோட்சமடைய முடியாது. ஆனால் பார்ப்பான் சொல்லுகிறபடி கேட்டால் மோட்சமடையலாம். எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம் செய்தாலும் பாதகமில்லை. பார்ப்பானுக்குத் தானதர்மம் செய்தால் அதுவே பெரிய புண்ணியம் என்று நம்பும்படி செய்து விட்டனர்.
இப்படி இம் மதத்தில் மட்டும் இல்லை, கிறிஸ்தவ மதத்திலும் இருந்திருக்கிறது. பாதிரிகள் கூறுகிறபடி கேட்டால் பாபம் மறைந்து போகுமாம். அதாவது பாவ மன்னிப்புச் சீட்டு வாங்குதல் என்ற முறை ஒன்று உண்டு. அதன்படி பாதிரியிடம் அதற்கான கட்டணத்தைச் செலுத்தி பாப மன்னிப்பு சீட்டு வாங்கினால் பாபம் போய் விட்டதாகப் பொருள் | இப்படியே பாதிரிகள் பாமர மக்களிடம் பொருளை வாங்கிக் கொண்டு, "நான் உங்கள் பாபத்தைப் போக்க மன்னிப்புச் சீட்டுக்கள் கொடுக்கிறேன்" என்று மக்களிடம் பணம் சுரண்டிக்கொண்டு வந்தான். இதனால் நாட்டில் நல்லவன் கூட அயோக்கியத்தனம் செய்துவிட்டு மன்னிப்புச் சீட்டு வாங்கினான். எந்தவிதமான அயோக்கியத்தனம் பொய்ப்புரட்டு, கொலை பாதகம் செய்துவிட்டும் கலபமாக மன்னிப்புச்சீட்டு வாங்குவதன் மூலம் அப்படிச் செய்த பித்தலாட்டங்களின் கொடுமையெல்லாம் மறைந்து போய் விடுகிறதாம்! இந்தத் துணிவின் பேரில் எவனும் சர்வசாதாரணமாகக் கெட்டுப் போக முடிகிறது.
இதைக் கண்ட ஒரு ஆராய்ச்சிக்காரன் அந்தப் பாதிரிக்குப் புத்தி கற்பிக்க முற்பட்டான். அவனும் இரண்டொரு நாள் பாபமன்னிப்புச் சீட்டு வாங்கி வந்தான். வழக்கம்போல் வாங்கி வந்து ஒரு நாள் பாதிரியிடம் ''இதுவரை செய்த பாபத்துக்கு மட்டும்தான் மன்னிப்புச் சீட்டுக் கொடுப்பீர்களோ?" என்று கேட்டான். அதற்கு பாதிரி "செய்த பாபம், செய்கிற பாபம், செய்யப்போகிற பாபம் இப்படி முக்காலத்திலும் செய்யப்படும் பாபம், அனைத்துக்கும் மன்னிப்புச் சீட்டுக் கொடுப்போம். அதுவும் பாபத்தின் தரம் இவ்வளவு என்பது மட்டும் இல்லை. திருடினாலும், கொள்ளை யடித்தாலும், விபசாரம் செய்தாலும், கொலை செய்தாலும், இன்னும் எப்படிப்பட்ட பாதகத் தொழில் செய்தாலும், அவைகள் அத்தனைக்கும் மன்னிப்புச் சீட்டு உண்டு" என்றான். பாதிரிக்குக் காசு, அதற்காக இப்படிக் கூறிவிட்டான். "அப்படியானால் நான் ஒரு இடத்தில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அப்படிக் கொள்ளையடிப்பதால் உண்டாகும் பாபத்திற்கு மன்னிப்புச் சீட்டு முன்பே கொடுக்க வேண்டுகிறேன்" என்று அவன் கேட்டான்.
பாதிரியும் சரியென்று அதற்கென்று கட்டணத் தொகையைக் கொஞ்சம் அதிகமாகவே வாங்கிக் கொண்டு மன்னிப்புச் சீட்டு கொடுத்துவிட்டான். மறுநாள் இரவு அந்த மன்னிப்புச் சீட்டுடன் பாதிரியின் வீட்டிலேயே புகுந்து கொள்ளையடிக்கச் சென்றான். பாதிரியைக் கட்டி இழுத்து உதைத்து நீ சேர்த்து வைத்த பொருளை எல்லாம் கொடு என்று கேட்டு துன்புறுத்தவும். அதற்குப் பாதிரி “அடபாவி! மாபாதகம் செய்கிறாய்; நீ செய்யும் தொழில் மிகப் பாபம் நிறைந்தது இதற்கு நரக வேதனைதான் அடையவேண்டும்' என்று ஏதேதோ தான் உதைப்பட்ட வேகத்தில் உளறிக் கொட்டினாள். ஆனால் கொள்ளையடிக்க வந்தவன் "பாதிரி சாமிகளே நான் இதற்கு முன்பே பாப மன்னிப்புச் சீட்டு வாங்கி வைத்திருக்கிறேன். இதோ பாரும்" என்று பாக்கெட்டில் இருந்த சீட்டை எடுத்துக் காட்டினான்.
உடனே பாதிரி "என்ன முட்டாள்தனமான காரியத்தைச் சிறிதும் யோசிக்காமல் செய்து விட்டோமே. நம்முடைய பித்தலாட்ட மூட்டையை அவிழ்த்துக் கொட்டி விட்டானே! இச்செய்தி எங்கிலும் பரவினால் நம் கதி என்ன ஆகும்" என்று பயந்து அந்தக் கொள்ளைக்காரனிடம் "நீ இரவில் கொள்ளையடிக்க வந்தாய், நான் பகலில் கொள்ளையடிக்கிறேன் இதுதான் வித்தியாசம்'' என்று கூறி, "நாம் இருவரும் நண்பர் களாக வேண்டும். இனி நான் இத்தொழிலை விட்டுவிடுகிறேன். என்னை மன்னித்துக் கொள்" என்று வேண்டினானாம்.படிமை
அப்படிப் பாதிரிகளின் பித்தலாட்டம் வெளுத்தது. அது முதல் அப்படிப்பட்ட பாபமன்னிப்புச் சீட்டைக் கொண்டே கிறிஸ்தவ மதத்தில் சீர்திருத்தம் செய்யப் பட்டது. ஒரு சிலர் திருந்தினார்கள். மற்றவர்கள் இன்னமும் முட்டாள்களாக இருக் கின்றனர். அதைப் போன்றுதான் இந்து மதத்தின் பாபம் செய்த மனிதனை மேல் உலகில் தண்டிக்கிறார்கள்.
உலகிலேயுள்ள கோடானுகோடி யானை முதல் கிருமி ஈறாக உள்ள ஜீவராசிகளில் மனிதனைத் தவிர, அதுவும் மனிதரிலும் பல பேர்களைத் தவிர, மற்ற எந்த ஜீவராசிக்கும், கோடிக்கணக்கான மனித ஜீவனுக்கும் கடவுள் நம்பிக்கை என்பது அறவேயில்லை. மனிதரிலும், உலகில் பகுதிப்பட்ட மனிதருக்கும் கடவுள் நம்பிக்கை புகுத்தப்படுகிறது, கற்பிக்கப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும்.
ஏனெனில், கடவுள் நம்பிக்கை உள்ள மக்கள் எல்லோருமே ஒரே மாதிரியான கடவுளிடம் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர். எப்படியெனில், சுடவுள் நம்பிக்கைக்காரர்கள் ஒரே மாதிரியான, ஒரே பெயருள்ள, ஒரே மாதிரியான எண்ணிக்கை கொண்ட, ஒரே மாதிரி குணங்கொண்ட கடவுள் நம்பிக்கைக்காரர்களும் அல்லர்; ஒரே மாதிரியான கடவுள் தன்மை, ஒரே மாதிரியான கடவுள் சக்தி, ஒரே மாதிரியான கடவுள் செயல் என்ற நம்பிக்கை கொண்டவர்களுமல்லர்.
இதற்குக் காரணமென்ன? கடவுள் நம்பிக்கையும், அதன்மேல் சொல்லப்பட்ட பலவாறான தன்மைகளும் மனிதனுக்கு இயற்கையாய்த் தானாகத் தோன்றாமல், மற்றவர்கள் கற்பிப்பதாலும், கற்பிக்க நேருவதாலும், சூழ்நிலையாலும், தான் அனுசரிக்கும் - தான் கட்டுப்பட்ட மதத்தாலும் மத ஆதாரங்களாலும், மதக் கற்பனை, மதக் கட்டுப்பாடு என்பவை களாலுமே ஏற்படுவதால்- இவை பற்றிய விஷயங்களில் ஒன்றுபோல் நம்பிக்கை கொள்ள முடிவதில்லை.
(கடவுள் ஒரு கற்பனையே நூலிலிருந்து-1971.)
நாத்திகம் என்றால் நடுங்குவது ஏன்?
எவ்வளவுக்கெவ்வளவு கடவுள் கருத்து ஆழமாகப் பதிகிறதோ -உடைத்தானவனாய் இருக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவன் ஆயுள் பரியந்தம் துக்கமும் கவலையும் கொண்டவனாகத் தான் இருப்பான்; பேராசைக்காரனாகத்தான் இருப்பான். பொதுவாகவே இன்று பார்ப்போமேயானால், கடவுள் பக்தன், கடவுளை வணங்குகிறவன்- அவன் முட்டாளானாலும், அறிவாளியானாலும் எதற்காக வணங்குகிறான்? என்ன எண்ணத்தில் வணங்குகிறான்? ஏதோ ஒரு வேண்டுகோளின் மீது தானே - எதையோ எதிர்பார்த்து, ஆசைப்பட்டுத் தானே வணங்குகிறான்?
'எனக்கு ஒன்றுமே வேண்டாம்' என்று சொல்பவனாய் இருந்தாலும், 'உன் பாதாரவிந்தம் வேண்டும்' என்றாவது சொல்லித்தானே கும்பிடுவான்? இவன் யாருக்குச் சமம் என்றால், 'எனக்குப் பின்புறம் -பிடரியில் ஒரு கண் இருக்க வேண்டும்' என்று கடவுளை வணங்குகிறவனுக்குச் சமமானவன்தானே!
ஏதாவது ஒன்றை வேண்டித்தானே பக்தி, வணக்கம், பூசை, தொழுகை பிரார்த்தனை முதலியவை எல்லாம்? ஒன்றும் வேண்டாதவனுக்குக் கடவுளிடம் என்ன வேலை?
அதிலும் தவறு செய்தவன்,மோசடி செய்தவன், செய்கிறவன், பேராசைக்காரன் ஆகியவர்களுக்குத்தான்-கடவுள் பக்தி, பூசை முதலியவை அதிகமாக இருப்பதைக் காண்கிறோம்.
இலஞ்சம் வாங்கும் சைவன், இலஞ்சம் வாங்கும் வைணவன், இலஞ்சம் வாங்கும் முஸ்லிம், இலஞ்சம் வாங்கும் கிறிஸ்தவன் முதலிய இவர்கள் - பெரிதும் பூசை, வணக்கம், தொழுகை, பிரார்த்தனை இவைகளில் மிகக் கண்டிப்பாக தவறாமல் நடந்து கொள்கிறார்கள்.
(கடவுள் ஒரு கற்பனையே நூலிலிருந்து-1971)
ஒருவன் உண்மையாகவே மதம் இல்லாமல் இருப்பது நாஸ்திகம் என்று கருதிக் கொண்டு ஏதாவது ஒரு மதத்தின் பேரால் உயிர்வாழ வேண்டியவனாய் இருக்கிறான்; ஆதலால், எப்படியாவது தான் நாஸ்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க வேண்டும்; மற்றபடி மதக் கொள்கைகள் எவை, எப்படி இருந்தாலும் தான் இலட்சியம் செய்வதில்லை என்கின்ற கருத்தின்மீதே தனக்குள் எவ்விதக் கொள்கையும் இல்லாமல், ஒரு மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு, ஏதோ ஒரு மதவேஷத்தைப் போட்டுக் கொண்டு இருக்க வேண்டியவனாக இருக்கிறான்.
(பகுத்தறிவு மார்ச்-1936)